16 (இனி எல்லாம் வசந்தமே)

 



சில நாட்களுக்குப் பிறகு

கொடப்பகொண்டா கிராமம்

வழக்கமான கலகலப்புடன் சர்வலோகேஸ்வரய்யாவின் இல்லத்தில் அந்த காலைப்பொழுது ரம்மியமான பறவைகளின் சத்தங்களோடும், கோசாலையில் இருக்கும் பசுக்களின் 'ம்மா' என்ற குரல்களோடும் இனிதே புலர்ந்தது

வீட்டின் பணியாளர்கள் பெரிய முற்றத்தைக் கோலத்தால் அலங்கரித்திருந்தனர். மறுநாள் ராமநவமி என்பதால் சர்வலோகேஸ்வரய்யா தனது குடும்பத்துடன் பத்ராச்சலம் செல்வது வழக்கம். அவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கோயிலில் சிறப்பான உரிமையும் உண்டு.

ராமநவமியின் கோலாகலம் அந்த மாளிகையிலும் ஆரம்பித்திருந்தது. பூஜையறையில் இருந்து கேட்ட உமாதேவி பாடிய இராமகானம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

ராமா நீ நாமம் ஏமி ருசிரா?
ராமா நீ நாமம் எந்த ருசிரா?
மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?
த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?
அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?
சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?
சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?
கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?
கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?
தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?
அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?

உமாதேவியின் குரல் இனிமையும் சுந்தரத்தெலுங்கின் செம்மையுமாக இராமதாசரின் பாடலில் நெக்குருகி பக்திப்பரவசத்தில் மூழ்கியிருந்தார் சர்வலோகேஸ்வரய்யா. அவருக்குப் பின்னே அவரது மகன்கள் ஆதிலிங்கேஸ்வரனும், ருத்ரேஸ்வரனும் அவரவர் மனைவியர் சகிதம் அமர்ந்திருக்க அவர்களுடன் சர்வலோகேஸ்வரய்யாவின் மகள்களும் மருமகன்களும் கூட அமர்ந்திருந்தனர்.

கூடவே தயானந்தனும் கலாவதியும் விசாகாவுடன் கண் மூடி இராமனிடம் மனதாற வேண்டியபடி அமர்ந்திருக்க லோகேஸ்வரனும் அனுபமாவும் தங்களின் வருங்கால வாரிசுக்காக இராமபிரானின் அருள் வேண்டி பக்தியில் ஆழ்ந்திருந்தனர்.

அதே இடத்தில் இரு கரம் கூப்பி கண் மூடி இருந்த சர்வேஸ்வரின் புஜத்தைச் சுரண்டினாள் சஹானா.

"பாட்டி பாடுன பாட்டுக்கு என்ன அர்த்தம் சர்வா?"

சர்வேஸ்வர் யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தபடியே "இராமனோட நாமம் சொல்லச் சொல்ல இனிக்குதுனுங்கிற மீனிங்ல இராமதாசர் பாடுன பாட்டு அது. இந்த உலகத்துல உள்ள எல்லா ஸ்வீட்டான பொருளையும் விட இராமநாமம் ரொம்ப இனிமையானதுனு இராமதாசர் சொல்லுறார்" என்று மெதுவாக மனைவியின் காதில் முணுமுணுத்தான் அவன்.

இதை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர் அவனது அத்தை மகள்களான ரிதுபர்ணாவும் ருவந்திகாவும். 

அவனுக்காகவே அவதரித்தவளைப் போல செப்புச்சிலையாக சஹானா அவனருகில் அமர்ந்திருந்த அழகே அவர்களின் ஜோடிப்பொருத்தத்தை சொல்லாமல் சொல்லிவிட அவர்களால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

பூஜை முடிந்து இராமனுக்கு ஆரத்தி காட்டிய உமாதேவி அனைவருக்கும் பிரசாதம் வழங்க அதை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டனர் அனைவரும். 

அதன் பின்னர் பத்ராச்சலம் செல்வதற்கான ஏற்பாடுகள் ஜரூராக ஆரம்பித்தன. சர்வேஸ்வரின் குடும்பத்தினர் தயானந்தன் மற்றும் கலாவதியை தங்கள் குடும்பமாக மதித்து நடத்தியதில் அவர்களுக்கு சஹானாவை நினைத்து இருந்த கலக்கம் மறைந்துவிட்டது.

அதிலும் உமாதேவி கலாவதியையும் தனது மருமகள்கள் கௌரி மற்றும் கங்காவுக்கு இணையாக மதிப்பு குறையாமல் நடத்த அவர் புளங்காகிதமுற்றார்.

இப்போது கூட "இந்த பட்டுச்சேலை உங்க எல்லாருக்கும் ஒன்னு போல வாங்குனேன் கலா. உனக்குப் பிடிச்சிருக்கா?" என சஹானா வாயிலாக கேட்க 

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா. உங்களுக்காகவே சீக்கிரமா நான் சஹானா மூலமா தெலுங்கு கத்துக்கிறேன்" என்று சொன்னார் கலாவதி.

சஹானாவே இன்னும் முழுவதுமாக கற்றுக்கொள்ளவில்லை என்பது வேறு விசயம். அத்தோடு அவளது குடும்பத்தின் ஆண்கள் அனைவருமே படித்தது சென்னையில் என்பதால் அவர்களின் கொஞ்சுதமிழ் அவளுக்குப் பழகிவிட்டது.

ஓய்வுநேரங்களில் சர்வேஸ்வரை தொந்தரவு செய்து அடிப்படை வார்த்தைகளை கற்றுக் கொண்டவள் ஓரளவுக்குத் தயக்கமின்றி புகுந்தவீட்டாரிடம் அவர்களின் தாய்மொழியில் உரையாடப் பழகிவிட்டாள்.

உமாதேவி தனது மருமகள்களுக்கும் மகள்களுக்கும் பட்டுச்சேலை எடுத்து வைத்ததை போல கௌரியும் தங்களின் மருமகள்கள் அனுபமா மற்றும் சஹானாவோடு விசாகாவுக்கும் சேலை வாங்கியிருந்தார். கங்காவோ நாத்தனார்களுக்கும் அவர்களின் மகள்களுக்கும் வாங்கிவிட்டார்.

மொத்தத்தில் யாரும் குறை சொல்லாவண்ணம் ஆடைகள் வாங்கப்பட்டிருக்க இனி பத்ராச்சலம் கிளம்ப வேண்டியது ஒன்று தான் பாக்கி. நல்லநேரத்தில் இராமபிரானின் அருளை வாங்கிக் கொண்டு சர்வலோகேஸ்வரய்யாவின் குடும்பம் பத்ராச்சலத்துக்குப் பயணித்தது.

அன்றைய தினம் மாலையில் பத்ராச்சலைத்தை அடைந்தனர் அவர்கள் அனைவரும்.

புண்ணியநதியான கோதாவரியின் அரவணைப்பில் கம்பீரமாய் நின்றது பத்ராச்சலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திரசுவாமி கோயில். கோயிலின் இடதுகோடியில் கோதாவரி அன்னை சீறிப் பாய்ந்து கொண்டிருக்க  அவளின் கரைகள் பச்சைக்கம்பளம் போர்த்தி அவளின் அழகுக்கு அழகு சேர்த்தன.

இங்கே இராமச்சந்திரசுவாமி சங்கு சக்கரத்துடன் மடி மீது சீதாதேவியை இருத்திக் கொண்டிருந்த கோலத்தில் இடப்பக்கம் இலட்சுமணனோடு அருள் பாலிக்கிறார்.

பத்ராச்சலத்தில் சர்வலோகேஸ்வரய்யா குடும்பத்துக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கவே அனைவரும் அங்கே சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.

உமாதேவி வீட்டுப்பெண்களையும் மருமகள்களையும் ஆலயத்துக்குக் கிளம்புமாறு சொல்லிவிட்டார்.

அன்றைய தினம் வசந்தோஸ்தவமும் அதைத் தொடர்ந்து கலசபூஜையும் நடைபெறும். அனைவரும் கோயிலுக்குக் கிளம்பிவிட்டனர். 

சித்திரகூட மண்டபத்தில் கலசபூஜையும் சிறப்பு பூஜைகளும் செம்மையாக நடந்தேறியது.

அதன் பின்னர் தலம்ப்ராலு என்ற அட்சதை செய்யும் உற்சவம் ஆரம்பித்தது. தலம்ப்ராலு என்பது அரிசியுடன் மஞ்சள், குங்குமம், நெய், அத்தர் இன்னும் சில வாசனைப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் அட்சதை ஆகும்.

ஆந்திர திருமணங்களில் மாங்கல்யதாரணத்துக்குப் பின்னே மணமக்கள் ஒருவர் தலை மீது மற்றொருவர் இந்த அட்சதையைத் தூவுவது சம்பிரதாயம் ஆகும். 

சீதா இராம திருக்கல்யாணத்திலும் இந்தச் சம்பிரதாயம் நடைபெறும். அதற்கான அட்சதை அரிசியை பக்தகோடிகளே தயார் செய்வது வழக்கம். பெண்கள் மற்றும் சேர்ந்து அதைத் தயார் செய்வர்.

சஹானாவுக்கு இதெல்லாம் புதிது. ஆனால் மிகவும் சந்தோசத்துடன் அரிசிக்கலவையை மாமியாருடனும் ஓரக்கத்தியுடனும் சேர்ந்து தயார் செய்தாள். 

திம்மண்ணாவும் சேஷய்யாவும் தமது மகள்கள் இருவரும் பெடிக்யூர் செய்த நகங்கள் பாழாகிவிடுமென ஒதுங்கி நின்றதை கண்டு தலையிலடித்துக் கொண்டனர்.

"இப்டி இருந்தா என்ன அர்த்தம்? இதனால தான் நம்ம பொண்ணுங்க சர்வாவோட கண்ல படலை. அந்த சஹானாவ பாருங்க சேஷு, அவளுக்கு இது என்னனு தெரியலனா கூட ஆர்வமா கலந்துக்குறா. நம்ம பொண்ணுங்க தேற மாட்டாங்க" என திம்மண்ணா நொடித்துக் கொண்டார்.

சிவப்பு வண்ணம் ஒட்டிக்கொண்ட கையை சர்வேஸ்வரிடம் காட்டி குதூகலித்தது வேறு விசயம். 

அதன் பின்னர் இரவு விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கோபுரத்தைத் தரிசித்துவிட்டு வீடு திரும்பியவர்கள் மனம் அமைதியுற உறங்க ஆரம்பித்தனர்.

மறுநாள் விடியலில் சஹானா மாமியார் வாங்கி கொடுத்த பட்டுச்சேலையும் எளிய அணிகலன்களும் அணிந்து கோயிலுக்குச் செல்லத் தயாராகி விட்டாள்.

அவளைக் கண்டு கலாவதி முகம் வழித்து திருஷ்டி கழிக்க விஷாகாவும் புடவையில் தயாரானாள். 

தனது மேடிட்ட வயிற்றுடன் அனுபமாவும் தயாராகியிருந்தாள். சஹானா அவளுடன் அமர்ந்து கொண்டவள் குழந்தையிடம் பேசுகிறேன் என கலாட்டா செய்ய தயானந்தன் சர்வலோகேஸ்வரய்யாவுடன் பேசிக்கொண்டிருந்தவர் அக்காட்சியை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது தோளை ஆதரவாகத் தட்டிய சர்வலோகேஸ்வரய்யா "சீக்கிரமே சஹானாவும் நமக்கு நல்ல செய்தியை சொல்லுவாப்பா. நீயும் சீக்கிரம் தாத்தா பதவிக்கு புரோமோட் ஆயிடுவ" என சொல்ல

"என்னவோப்பா நீங்க சொன்னது நடந்தா சந்தோசம் தான். சஹானாவுக்கு பொறக்கப் போற குழந்தை என் தங்கச்சியோட மறுஜனனமா இருக்கனும்னு இன்னிக்கு ராமனை வேண்டிக்க போறேன்" என்றார் மனம் நிறைய கனவுகளுடன்.

கங்கா சஹானாவிடம் "சர்வா இன்னுமா ரெடியாகுறான்? நீ போய் அழைச்சிட்டு வா சஹா" என்று சொல்ல அவளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அந்த குடும்ப வழக்கப்படி வேஷ்டி சட்டையில் தயாராகி நின்றான் சர்வேஸ்வர். அப்போது போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவனை இடுப்பில் கையூன்றி முறைத்தாள் சஹானா.

"எல்லாரும் ரெடியாயாச்சு.இன்னும் சார் போன்ல யார் கூட பேசிட்டிருக்கீங்க?"

"ஒரு முக்கியமான விசயம் பேப்" என்று மட்டும் உரைத்தவன் போனை வைத்துவிட்டு அவளுடன் கிளம்ப அவன் சொன்ன முக்கியமான விசயம் என்னவாக இருக்குமென யோசித்தபடி அவனுடன் ஹாலுக்கு சென்றாள் சஹானா.

அங்கே அனைவரும் தயாராகி நிற்க கார்கள் அவர்களை கோயில் வரை சுமந்து சென்றது.

பத்து மணியிலிருந்து பன்னிரண்டு முப்பது வரை திருக்கல்யாண உற்சவமும்  இராம பட்டாபிஷேகமும் நடைபெறும். அதன் முன்னே சீக்கிரமாக கோயிலுக்கு வந்தவர்கள் அன்றைய தினம் இருந்த கூட்டத்தைக் கண்டு வியந்து போயினர்.

அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வாயிலை நோக்கி சென்ற குடும்பத்தினரை தடுத்த சர்வேஸ்வர் தன்னுடன் கோதாவரி ஆற்றங்கரை மண்டபத்துக்கு வரும்படி அழைக்க 

"இப்ப அங்க எதுக்கு போகனும் சர்வா? யாகசாலை பூஜைல கலந்துக்கலாம்ல" என்ற தந்தையிடம் முறுவலை மட்டும் பதிலாக அளித்தான்.

அவனது வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் கோதாவரி நதிக்கரை மண்டபத்தை அடைந்தனர். அங்கே ஹோமகுண்டமும் சாஸ்திரிகளும் அவர்களுக்காக காத்திருக்க சர்வேஸ்வர் சஹானாவுடன் அங்கே அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் அமர்ந்தான்.

கண் இமைப்பதற்குள் அனைத்தும் நடந்துவிட புரியாமல் விழித்த குடும்பத்தினரை அமரும்படி கூறினான்.

"எங்க மேரேஜ் உங்க யாருக்கும்  தெரியாம அவசரமா நடந்து முடிஞ்சிடுச்சு. அதுக்கு காரணம் என்னோட அகங்காரம் மட்டுமே. உங்க எல்லாருக்கும் என் கல்யாணத்தை பற்றி நிறைய ஆசைகள் இருந்துருக்கும். அதே போல சஹானா குடும்பத்துக்கும் இருந்திருக்கும். அதனால தான் மறுபடியும் நாங்க உங்க எல்லாருக்கு முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசைப்பட்டேன். என் சனாவுக்கு முறைப்படி என் மனைவிங்கிற அங்கீகாரத்தைக் குடுக்கணும்னு நினைக்கிறேன்"

அவன் சொல்லிமுடிக்கவும் பெரியவர்கள் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்ப் எரிந்தது. சஹானாவை இதை சொல்லி புண்படுத்தி வேடிக்கை பார்க்க எண்ணிய திம்மண்ணா மற்றும் சேஷய்யா பெற்ற மகள்களுக்கு இது பெரும் செருப்படியாக இருக்க அவர்களும் பொறுமலுடன் அமர்ந்திருந்தனர்.

சாஸ்திரிகள் அக்னியை வளர்த்து மந்திரங்கள் உச்சரிக்க ஆரம்பித்தார். சஹானா சந்தோசத்தில் கண்கள் நிறைய கண்ணீருடன் அவர் சொன்ன மந்திரங்களை உச்சரித்தாள். சர்வேஸ்வரும் அவ்வாறே. 

எல்லா மந்திர உச்சாடனங்களும் முடிவடைய பெரியவர்கள் ஆசிர்வதித்துக் கொடுக்க உற்றார் உறவினர் முன்னிலையில் இராமபிரானின் ஆசியுடன் அந்த புண்ணிய ஷேத்திரத்தில் சஹானாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து அவளை முறைப்படி தனது மனைவியாக அங்கீகரித்தான் சர்வேஸ்வர்.

பெரியவர்களுக்கு இருந்த பெரும் மனக்குறை அந்தக் கணம் அகன்றுவிட்டது. அதே நேரம் சஹானாவும் இறைவன் சன்னிதானத்தில் தனது கழுத்தில் ஏறிய திருமாங்கல்யத்தை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் முன்னே தடுத்த சர்வேஸ்வரை முதல் முறை காதல் ததும்பும் விழிகளுடன் பார்த்தவள் "ஐ லவ் யூ சர்வா" என்று முணுமுணுக்க அவள் நெற்றியில் இதழ் பதித்தான் சர்வேஸ்வர்.

முழுமையான சந்தோசம் என்பது இது தானே! கணவன் மனைவி இருவருமே மனம் நிறைந்த காதலுடன் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டனர் அக்கணம்.

அதன் பின்னே சாஸ்திரிகளிடம் ஆசி பெற்றுவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.  அதன் பின்னர் தனது கல்யாணம் நடந்த மகிழ்ச்சியுடன் சீதா இராம திருக்கல்யாணத்தையும் காணும் ஆவலுடன் விழா நடைபெறும் கல்யாணமண்டபம் அமைந்திருக்கும் இடத்துக்கு மனைவி மற்றும் குடும்பத்தினர் சூழ சென்றான் சர்வேஸ்வர்.

ஆயிரக்கணக்கான மக்கள்! காவல்துறை அதிகாரிகள்! உற்சவ மண்டபம் முழுவதும் எங்கெங்கு நோக்கினும் மனித தலைகளே! 

மண்டபத்தின் நடுவே சிம்ஹாசனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இராமச்சந்திரசுவாமி சீதாதேவி இருவரின் திருவுருவங்களும் மணமக்களைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அவர்கள் செல்லும் முன்னரே அக்னிபிரதிஷ்டா, த்வாஜாரோஹனா சடங்குகள் முடிவடைந்துவிட்டன. சஹானா கணவனின் கரங்களை இறுக பற்றிக் கொண்டவள் அவனருகில் அமர்ந்து உற்சவத்தைக் காண ஆவலாக இருந்தாள்.

மீதமுள்ள சடங்குகள்  ஆரம்பிக்க சர்வேஸ்வர் அதை சஹானாவுக்கு விளக்கிக்  கொண்டிருந்தான்.

அப்போது மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பாக முத்துக்களையும் பட்டுவஸ்திரங்களையும் இராமனுக்கும் சீதாதேவிக்கும் அர்ப்பணித்தார். இந்தச் சம்பிரதாயம் குதூப் ஷாகி வம்சத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் யார் ஆட்சியாளரோ அவரது சார்பில் முத்தியாலதம்ப்ராலு என்ற முத்துகளும், பட்டுவஸ்திராலு என்ற பட்டாடைகளும் ஒவ்வொரு திருக்கல்யாண உற்சவத்திலும் அளிக்கப்படுவது வழக்கம்.

அச்சடங்கு முடிவடைய அதன் பின்னர் கோயிலின் சாஸ்திரிகள் திருமாங்கல்யத்தை எடுத்து பக்தகோடிகளிடம் காட்ட மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அந்த நன்முகூர்த்தத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கும், சீத்தா பிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் இனிதே முடிவுற்றது

அதன் பின்னே தலம்ப்ராலு தூவும் நிகழ்வு ஆரம்பித்தது. மங்கல அட்சதை பக்தகோடிகள் மீது தூவப்பட்டது.

சர்வலோகேஸ்வரய்யாவும் தயானந்தனும் தங்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிவிட்ட ஸ்ரீராமனுக்கு நன்றி கூற அவர்களின் குடும்பத்தினர் மனநிறைவுடன் அமர்ந்திருந்தனர். எல்லார் மனங்களிலும் இருந்த எதிர்மறை எண்ணங்கள் அகன்று எங்கெங்கு நோக்கினும் இறைவன் அருளும், பக்திபரவசமும் மட்டுமே ஊற்றெடுத்தது.

எதற்கெடுத்தாலும் நொடித்துக் கொள்ளும் திம்மண்ணாவும் சேஷய்யாவும் கூட தங்கள் மகள்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டிக்கொண்டனர்.

கலாவதி விஷாகாவுக்காக வேண்டிக்கொள்ள லோகேஸ்வரனும், அனுபமாவும் தங்களுக்குப் பிறக்க போகும் மகவுக்காக இராமனிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டனர்.

மொத்தக்குடும்பமும் பக்திபரவசத்தில் மூழ்கியிருந்த அந்த ஆனந்த கணத்தில் சஹானாவும் சர்வேஸ்வரும் அந்த தலம்ப்ராலுவைத் தங்கள் திருமணச்சடங்காக பாவித்து இராமபிரான் சீதாபிராட்டியின் அருளோடு ஏற்றுக்கொண்டனர். அந்த நன்னாளில் சீதா இராம திருக்கல்யாணத்தோடு தங்களின் திருமணமும் பெரியவர்களின் ஆசியோடு நடந்து முடிந்த சந்தோசத்துடன் இருந்தவர்களின் வாழ்வில் இனி எல்லாம் வசந்தமே!

சுபம்!

வணக்கம் வாசக தோழமைகளே


எனது முதல் நாவலான என் அருகில் நீ இருந்தால்- இதற்கு நீங்களளித்த ஆதரவுக்கு நன்றி!  அடுத்த நாவலான 'என் தோளில் சாய்ந்திட வா' இந்த வலைப்பூவில்வாரம் ஒரு முறை பதிவிடப்படும். நீங்கள் சப்ஸ்கிரைப் கொடுத்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு நோட்டிபிகேசன் வந்துவிடும்.

என்றும் நன்றியுடன்
வைஷாலி மோகன்



Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 13

1 (அவளின் சீற்றம்)

அத்தியாயம் 1