3 (மாயவனின் காதல்)

 



சென்னையின் உயர்மட்டத்தினர் வசிக்கும் பகுதியில் விரைந்து சென்றது அந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபாக். ஒரு பிரமாண்டமான பொன்வளையமிட்ட கிரில் கேட்டுடன் கூடிய பரந்து விரிந்த நிலத்தில் அழகிய தோட்டம் சூழ்ந்த பங்களாவுக்குள் நுழைந்தது அந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபாக். 

காரை நிற்கவும் அதிலிருந்து இறங்கினான் சர்வேஸ்வர்.  சட்டையில் மாட்டியிருந்த கருப்புக்கண்ணாடியை கண்ணில் மாட்டிக்கொண்டான். வீட்டை நோக்கி வேகநடை எடுத்து வைத்தவன் காதில் ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டு அலுவலக விசயத்தைப் பேசியபடி வீட்டுக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் வீட்டின் பணியாட்கள் பம்மியடி அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.

"அம்மாவும் தாத்தாவும் கால் பண்ணுனாங்களா வீரா?" என்று கேட்டபடியே தனது அறையை நோக்கிச் சென்றவனுக்கு பதிலளித்தபடியே அவனது வேகமான எட்டுகளுக்கு ஈடு கொடுத்து ஓடினான் வீரா என்ற அந்த பணியாள்.

பின்னர் பேசிவிட்டு வெளியே வந்தவன் சமையலறை பொறுப்பாளரிடம் "இன்னைக்கு சாருக்கு லஞ்ச் வேண்டாம்னு சொல்லிட்டார். நைட் பார்ட்டிக்குப் போறதால எல்லாரும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுங்கனு சொல்ல சொன்னார்" என்று அறிவித்துவிட்டு அவனது வேலையைக் கவனிக்க சென்றான்.

சர்வா அவனது அறைக்குச் சென்றவன் தனது சட்டையைக் கழற்றிவிட்டு அதைக் கையில் வைத்து பார்த்தான். சஹானாவின் ஐவிரல்களும் அழகாய் வண்ணத்தை தீட்டியிருக்க அதில் அவளது வாசம் வீசுவதை போன்று இருந்தது.

அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவனுக்கு தன் அணைப்பில் சஹானாவே அடங்கியிருப்பதை போன்ற எண்ணம். அதே நேரம் தானா இப்படி ஒரு பெண்ணின் மீது பித்து பிடித்து நிற்பது என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றவன் "என்ன தான் மாயம் பண்ணுன சனா? ஒரே பார்வையில சின்ன சிரிப்புல என்னை இப்டி பைத்தியம் ஆக்கிட்டியே. சீக்கிரமா என் கிட்ட வந்துடு சனா. உனக்காக நான் எதுவும் செய்ய தயாரா இருக்கேன். முதல்ல உன்னை பத்தி தெரிஞ்சுக்கனும் சனா. அதுக்கு நான் ஈவினிங் வரைக்கும் காத்திருக்கனுமே" என்று ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டான்.

அவன் சொன்னபடி விவேக் சஹானாவை பற்றிய விவரங்களை சர்வாவின் மெயிலுக்கு அனுப்பிவைத்தான். அதை திறந்ததும் அவனது தேவதையின் புகைப்படம் தான் முதலில் வந்தது. 

சஹானா, 23 வயது இளம்பெண். பி.இ கடைசி வருட மாணவி. அவளுக்குப் பெற்றோர் இல்லை. தாய்மாமன் ஆதரவில் இருக்கிறாள். அவளது தாய்மாமா மகளும் சஹானாவும் ஒரே வயது. இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் தான் படிக்கின்றனர். அவளது அத்தைக்கு அவளை அவ்வளவாக பிடிக்காது. கணவரை எதிர்த்து பேச இயலாததால் அவளை தன் வீட்டில் வைத்திருக்கிறார். 

விவரங்களை படிக்க படிக்க தனது வழியில் தடையென்று பெரிதாக எதுவும் இல்லை என்று தோணியது. அப்படி தடைகள் வந்தாலும் அதை நொறுக்கித் தள்ள அவன் தயாராக இருந்தான். பின்னர் அவளுக்குப் பிடித்த விசயங்கள் பற்றிய ஒரு பட்டியல் இருந்தது. அதைக் கவனமாக வாசித்தான்.

வாசிக்கும் போதே தன்னவள் எவ்வளவு ரசனைக்காரியாக உள்ளாள் என்று மெச்சவும் தவறவில்லை அவன் மனது. அனைத்து விவரங்களையும் வாசித்துவிட்டு விவேக்கிற்கு போன் செய்தான் சர்வா.

"சஹானா எங்க போறா என்ன பண்ணுறா யாரை மீட் பண்ணுறா அவ பின்னாடி யாராவது சுத்துறாங்களா இதெல்லாம் கண்காணிக்க ஆள் ஏற்பாடு பண்ணு விவேக். என்னோட சனாவ என் கிட்ட இருந்து பிரிக்கிற மாதிரி எவனும் வந்துட கூடாது. நான் முன் ஜாக்கிரதையா இருந்துக்கனும்னு நினைக்கிறேன்"

அவன் சொன்னபடி சஹானாவின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்தான் விவேக். அவன் அன்றாட நிலவரங்களை சஹானாவின் புகைப்படத்தோடு சர்வாவுக்கு சமர்ப்பித்தான். ஒவ்வொரு தினமும் வரும் சஹானாவின் புகைப்படங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் சர்வா.

அவ்வாறிருக்கையில் ஒரு நாள் சஹானாவின் வீட்டுக்கு பூங்கொத்துக்களை பரிசாக அனுப்பி வைத்திருந்தவன் வீட்டின் முன்னே ஒரு ஒதுக்குபுறமாக காரை நிறுத்திவிட்டு காத்திருந்தான். சஹானா கதவைத் திறந்து பார்த்தவள் வீட்டின் முன்னே குவித்து வைக்கப்பட்டிருந்த பூங்கொத்துக்களை பார்த்துவிட்டு சுவாசிக்க மறந்து நின்றாள்.

பூக்களின் அழகு எங்களை கையில் எடுத்துக்கொள் என்று அவளை தூண்டினாலும் யார் அனுப்பியது என்று தெரியாது எப்படி கையில் எடுப்பது என்று யோசித்த வண்ணம் உதடு கடித்தபடி நின்றவளை அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல ஏங்கியவனுக்கு சற்று பொறுக்குமாறு அவனது மனம் அறிவுறுத்தியது,

அதை கேட்டு அமைதியாக இருந்தவனின் கண்கள் சஹானாவை ரசித்துக் கொண்டிருந்தது. அப்போது வீட்டினுள் இருந்து வெளியே வந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. வந்தவர் சஹானாவிடம் பேச ஆரம்பிக்க அவர்கள் உரையாடல் கேட்கவில்லையென்றாலும் சஹானா பேசும் அழகை ரசித்தபடி காரினுள் அமர்ந்திருந்தான் சர்வா.

சஹானா புருவம் சுருக்கியபடி பூக்களைப் பார்த்துக் கொண்டிருக்க வீட்டினுள் இருந்து வந்து வெளியே வந்த பெண்மணி கலாவதி (சஹானாவின் அத்தை) அவளிடம்

"இதென்ன ஒரு பூக்கடை வைக்கிற அளவுக்கு இவ்வளவு பொக்கே இருக்கு? மொத்தமா கொண்டு வந்து இங்க வச்சிட்டு போனது யாரு?" என வினவ

"தெரியல அத்த. நான் காலிங் பெல் அடிக்கவும் வெளியே வந்து பாத்தேன். ஆனா இங்க யாரும் இல்ல" என்று உதட்டைப் பிதுக்கினாள்.

"ஹூம் ஒரு ஆப்பிளோ ஆரஞ்சோ வாங்கி குமிச்சிருந்தா கூட ஜூஸ் போட்டு குடிக்கலாம். இந்த பூவை வச்சிட்டு என்ன பண்ணுறது? எல்லாத்தையும் தூக்கி குப்பைத்தொட்டியில போட்டுட்டு வா சஹா" என்று விட்டு வீட்டிற்கு செல்ல திரும்பியவரை சஹானாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

"அழகான ஃப்ளவர்ஸ் அத்த. தூர வீசுறதுக்கு மனசே வரல" 

"இவ்வளவு பூவையும் உன் தலைல வச்சிக்க போறியா சஹா? இல்ல வச்சிக்க தான் முடியுமா? எதுவுமே அளவா இருந்தா தான் அழகு. அளவுக்கு மீறுனா அது நமக்கு சங்கடம் தான். சீக்கிரம் எல்லாத்தையும் கூட்டி ஒரே இடத்துல வை. கார்பரேசன் குப்பைவண்டி வரும். அள்ளிட்டு போயிருவான்"

விசயம் அவ்வளவு தான் என்பது போல சொல்லிவிட்டுக் கிளம்பினார் கலாவதி. சஹானாவின் தாய்மாமா தயானந்தனின் மனைவி. விசாகாவின் அன்னை.

சஹானா ஒரு பெருமூச்சுடன் அந்த மலர்களை நோக்கியவள் வீட்டின் முன்னே ஒரு இடத்தில் அனைத்தையும் அடுக்கி வைக்க குப்பைவண்டி வரவும் அவர்களை அள்ளிக்கொண்டு போகச் சொல்லிவிட்டாள். இவையனைத்தையும் காரில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த சர்வேஸ்வருக்கு உள்ளுக்குள் இரத்தம் கொதித்தது.

அந்த மலர்களை சஹானா துச்சமாய் ஒதுக்கிவிட்டாளென எண்ணி கொதித்தவன் கைகளை ஸ்டீயரிங் வீலில் குத்தி கோபத்தைத் தணித்துக் கொண்டான். 

"இந்த பொக்கேவை தூக்கி வீசிட்டா நான் உன்னை விட்டுருவேனா சனா? நெவர். நீ என்னிக்குமே சர்வாவோட சனா தான். வேற யாருக்கும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன்"

உறுதியுடன் சொல்லிக் கொண்டவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். நேரே கடற்கரையோரத்தில் அவனுக்கு இருக்கும் பங்களாவை அடைந்தவன் ஸ்காட்சுடன் அமர்ந்தான். ஒவ்வொரு சிப் அருந்தும் போதும் சஹானாவுடன் பேசிய அத்தருணத்தில் அவள் பேசிய அழகே கண்ணுக்குள் வந்து சென்றது.

மொத்த அழகும் இந்தக் காதலனுக்கு சொந்தமாவது என்று தானோ என்ற பெருமூச்சுடன் அமர்ந்தவன் அடுத்தடுத்து சஹானாவை தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து காதல் எனும் கயிறால் அவளைத் தன்னோடு சேர்த்து பிணைத்துக் கொள்ள திட்டமிட்டான்.

அவள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடைபெறும் சமயம். சஹானாவின் தேர்ச்சி சதவீதம் நல்ல முறையில் இருந்ததால் அவளும் விசாகாவும் கண்டிப்பாக நல்ல நிறுவனத்தில் பணியிலமர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் நேர்முகத்தேர்வை சந்தித்தனர்.

ஆனால் அனைத்துக்கட்ட தேர்வுகளும் முடிந்து நேர்க்காணல் சமயத்தில் சஹானாவை இண்டர்வியூ செய்த நபருக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் அவர் எதுவும் சொல்லாமல் சஹானாவை அனுப்பி விட்டார். சஹானாவும் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வீட்டுக்குச் சென்றவள் தயானந்தனிடம் கண்டிப்பாக தனக்கு வேலை கிடைத்துவிடும் என்று உரைத்துவிட்டாள்.

ஆனால் அழைப்புக்கடிதம் விசாகாவுக்கு மட்டும் தான் வந்தது. இதைக் கண்டதும் விசாகாவும் தயானந்தனும் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் சஹானாவின் மதிப்பெண் விகிதாச்சாரம் விசாகாவை விட அதிகம். ஆனால் கலாவதி "க்கும், இப்போ என்ன படிச்சா மட்டும் போதுமா? கேக்குற கேள்விக்கு சரியா சமயோசிதமா பதில் சொல்லனும். உங்க தங்கச்சி பொண்ணுக்கு அதெல்லாம் வருமா என்ன?" என்று நொடித்துவிட்டு மகளுக்கு வேலை கிடைத்த சந்தோசத்தை அண்டைவீட்டாரிடம் தண்டோரா போட சென்றுவிட்டார்.

விசாகாவும் தயானந்தனும் அவரது செய்கையில் முகம் சுளித்தவர்கள் சஹானாவை சமாதானம் செய்ய முற்பட்டனர்.

"இப்போ என்ன ஆச்சு? கேம்பஸ்ல தான நீ செலக்ட் ஆகல. விடு சஹா. உனக்கு இத விட பெஸ்ட் ஆபர்சூனிட்டி காத்துட்டிருக்குது போல. அதனால தான் இந்த வேலை கிடைக்கல" என்று அவளுக்கு நம்பிக்கையூட்டினர் இருவரும்.

அவர்கள் கொடுத்த நம்பிக்கையோடு விசாகாவிற்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டு சஹானாவை நிம்மதியடைய செய்தது.

அவ்வாறிருக்க சஹானாவை நேர்க்காணல் செய்த அதிகாரி சர்வாவிடம் 
"
நீங்க சொன்ன பொண்ணை எங்க கம்பெனி செலக்ட் பண்ணல சார். அவங்கள மாதிரி ஒரு எம்ப்ளாயி எங்களுக்கு கிடைக்க கூடாதுனு இருந்திருக்கு போல. நீங்க சொன்ன மாதிரி அவங்கள ரிஜெக்ட் பண்ணிட்டேன்" என்று சொல்லி இழுக்க சர்வா அவரை ஒரு ஏளன உதட்டுவளைவுடன் ஏறிட்டான்.

விவேக்கை அழைத்து அவருக்கு கொடுக்க வேண்டிய தொகையைச் சொல்ல அந்த அதிகாரிக்கு மயக்கம் வராத குறை தான். அவரது நிர்வாகத்துக்குத் தெரியாமல் ஒரு தகுதியான பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய வேலையில் சர்வாவின் பேச்சை கேட்டு ஏமாற்றுவேலை செய்ததற்கு கிடைத்த சன்மானம் தான் அது.

இதனால் இவனுக்கு என்ன இலாபம் என்று எண்ணியவருக்கு செல்பேசியின் திரையில் தெரிந்த சஹானாவின் புகைப்படத்தை வருடிக் கொடுத்த சர்வாவின் விரல்களும் அவளை என்றுமே விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற உறுதி மின்னும் விழிகளும் அவனது காதலின் தீவிரத்தை உணர்த்த சர்வாவுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்ற பின்னர் விவேக்கை அழைத்தவன் "சனா என் கிட்ட தான் வரனும். வேலை விசயத்துல கூட அவ மேல யாரோ ஒருத்தனோட பார்வை விழுறது எனக்கு பிடிக்கல விவேக்"என்று ஆணையிட்டுவிட்டு

"நாளைக்கு நான் விஜயவாடா கிளம்பனும் விவேக். இந்த தடவை தாத்தாவை ஏமாத்த முடியாது. மத்த எல்லாரும் அங்க போய் ரொம்ப நாளாகுதுல்ல" என்றபடி எழுந்தவன் அவன் திரும்பிவருவதற்குள் செய்து முடிக்கவேண்டிய காரியங்களை பட்டியலிட விவேக் திகைத்தான்.

"சார் அவங்க இதுக்கெல்லாம் சரினு சொல்லுவாங்களா?" என்று கேள்வியாய் நோக்க 

"அவங்கள சொல்ல வை விவேக். எப்டி சொல்ல வைக்கனும்னு நான் உனக்கு கத்து தரனுமா?" என்று கேட்டுவிட்டு சர்வா பார்த்த பார்வையில் விவேக்குக்கு அகிலமே அதிர்ந்த்து போன்ற உணர்வு.

"சனா எனக்கு கெடைக்கனும்னா நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன். புரியுதா?" என்று சொன்னவன் விவேக்கின் கன்னத்தில் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

விவேக் பெருமூச்சுடன் செல்பவனை பார்த்தபடி நின்றான். இளம்வயதிலிருந்தே நினைத்ததை நடத்திக் காட்டிப் பழகியவன். சஹானாவின் விசயத்திலும் அதையே எதிர்பார்க்கிறான். ஆனால் சஹானா சாதாரணப்பட்டவளாக விவேக்குக்கு தெரியவில்லை.

சர்வா அவன் நினைத்த காரியத்தை எந்த வழியில் வேண்டுமானாலும் செய்து முடிக்கும் குணமுடையவன். ஆனால் சஹானா நியாய அநியாயம் பார்க்கும் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கத்து பெண். எதையும் நேருக்கு நேர் பேசி பழகியவள். அனைவரையும் தன் பேச்சை கேட்க வேண்டும், எதிர்த்து கேள்வி கேட்டால் பிடிக்காது என்று சொல்பவன் சர்வா. இந்த இரு துருவங்களும் வாழ்வில் எப்படி தான் ஒன்று சேருமோ என்ற எண்ணத்துடன் சர்வா வகுத்த திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினான் விவேக்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8