10 (கூண்டுப்பறவை)
சர்வேஸ்வரின் குரலில் வில் நாணாய் விறைத்த சஹானா விருட்டென்று எழ அவன் குளித்து முடித்து சாவகாசமாய் வந்தவன் புதுமனைவியை உல்லாசமாய் பார்வையிட்டபடி சீட்டியடித்தான்.
"வாட் ஆர் யூ டூயிங் பேப்? என்னை தனியா விட்டுட்டு நீ மட்டும் இங்க என்ன பண்ற? கம் வித் மீ" என்று அவளது தோளில் உரிமையாய் கைபோட்டு அணைக்கவும் சஹானா சண்டைக்கோழியாய் திமிறி விலகினாள். கோப மூச்சுகளுடன் முறைத்தபடி நின்ற மனைவியின் கோபத்தைக் கண்ணாற ரசித்த சர்வேஸ்வர் இம்முறை நேரடியாக அவளது இடையை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
சஹானா மீண்டும் திமிற ஆரம்பிக்கவும் அவனது விரல்கள் அவளது இடையில் அழுத்தமாய் பதிந்து இடையை வருட ஆரம்பிக்கவும் சஹானா சிவந்து போனாள். அவளது சிவந்த முகம் அவனுக்குள் மாயாஜாலாங்கள் நிகழ்த்த ஆரம்பிக்க கரங்கள் இடையை விடுத்து அவளது வதனத்தை ஏந்தி கொண்டது.
அவனது பார்வை அவளது செவ்விதழில் நிலைத்து நிற்கவும் சஹானாவுக்குள் அபாய எச்சரிக்கை முழங்க ஆரம்பித்தது. அவனை விலக்கியத் தள்ள உயர்ந்த கரங்களை ஓர் கூர்பார்வையால் அடக்கியபடி அவளை நெருங்கியவன் அவள் இதழை வன்மையாய் சிறை செய்தான். சஹானா முதலில் எதிர்த்தவள் பின்னர் அவனுள் புதைந்து போனாள்.
வெட்டவெளியில் நிற்கிறோம் என்ற உணர்வு சர்வேஸ்வருக்கு வரவும் சஹானாவின் இதழில் தன் ஆதிக்கத்தை முடித்துவிட்டு அவளை நேருக்கு நேராக பார்த்து
"உன் மேல எனக்கு இருக்கிற கோவத்துக்கு உன்னை விட்டு விலகி இருக்கனும்னு தான் ஆசைப்படுறேன். ஆனா என்னால முடியல. உன் கிட்ட ஒரு மேஜிக் இருக்கு. என்னை அறியாம உன் வசம் வந்துடுறேன் சனா. இப்பவே உன்னை சொந்தமாக்கிக்கனும்னு மனசு அடிச்சுக்கிட்டாலும் உன் விருப்பம் இல்லாம உன்னை சொந்தமாக்கி உண்மையா உன் விசயத்துல ராட்சசனா நடந்துக்க நான் விரும்பல. அதனால டைம் எடுத்துக்க. ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. என்னோட சுயக்கட்டுப்பாட்டை ஒரு அளவுக்கு மேல என்னால மெயிண்டெயின் பண்ண முடியாது சனா. அதுவும் உன்னை மாதிரி ஒரு அழகுபொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா இருக்கிறது கஷ்டம்டி" என்று ஏக்கமாக முடித்தான்.
சஹானா எதையும் கேட்க பிடிக்காதவளாய் வீட்டை நோக்கி அடியெடுத்து வைக்க நேற்று போல இன்றும் அவளது புடவை சர்வாவின் கையில் சிக்கிக் கொண்டது. அசையாது நின்றவளை பின்னிருந்து அணைத்தவன் அவள் காதுக்குள்
"நான் பேசிட்டிருக்கிறப்ப இப்டி பாதில கட் பண்ணிட்டு போனா எனக்கு பிடிக்காது பேப். இன்னொரு தடவை இதே தப்ப பண்ண மாட்டேனு நம்புறேன்" என்று சொல்ல அவனது கன்னத்து ரோமங்களின் ஸ்பரிசத்தில் கூசிப் போன சஹானா அவனை விலக்கித் தள்ளிவிட்டு வீட்டினுள் ஓடிச்சென்று மறைந்தாள்.
அவர்களின் அறை என்று அவனால் சுட்டிக்காட்டப்பட்ட அறைக்குள் சென்று தாழிட்டவள் கதவில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள். சிறுவயதில் தன்னை அனாதையாக்கி விட்டு சென்ற தாய் தந்தையரை எண்ணி முதலில் அழுதாள். பின்னர் வளர்த்து ஆளாக்கிய மாமாவின் முன்னிலையில் காசை வீசியெறிந்த காட்சியை எண்ணி கதறி அழுதாள். இவ்வளவுக்கும் காரணமானவனுடன் தான் இனி தன் வாழ்க்கை என்ற உண்மை சுட கீழே விழுந்து அழத் தொடங்கினாள்.
சர்வேஸ்வர் தன்னை விலக்கித் தள்ளிவிட்டு ஓடிவந்தவளின் மீது உண்டான கடுஞ்சினத்துடன் மாடிப்படிகளில் ஏறியவன் கதவை வேகமாகத் தட்டினான்.
"டோர ஓபன் பண்ணு சனா"
இந்த கர்ஜனையில் சஹானாவின் உடல் தூக்கி வாரிப் போட்டது. நெஞ்சம் படபடவென்று துடிக்க எழுந்தவள் கதவைத் திறக்கவும் உள்ளே புயலென புகுந்தான் அவளது கணவன். வந்தவனின் விழிகள் வாளாய் மாறி அவளைக் கூறு போட சஹானா அவனைப் பார்க்க விரும்பாது திரும்பி நின்று கொண்டாள்.
"எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல சர்வா"
வார்த்தைகள் தெளிவான உச்சரிப்புடன் சஹானாவின் வாயிலிருந்து வேகமாய் வந்து விழுந்தன.
அதைக் கேட்டதும் சர்வேஸ்வரின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தது. அவளை நோட்டமிட்டபடியே மெத்தையில் சரிந்தவன் கடகடவென்று நகைக்க சஹானா அவனது சிரிப்பைக் கேட்டு திரும்பியவள் மீண்டும் அதே வார்த்தையை உதிர்க்க சர்வேஸ்வர் இன்னும் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
"இது பாசிபில்னு நீ நினைக்கிறியா? வீ ஆர் மேரிட் நவ். புருசனை விட்டு போறேனு சொல்லுற பொண்டாட்டிய நான் இப்ப தான் முதல் தடவை பாக்குறேன் பேப்"
"என்னை உன் பொண்டாட்டினு சொல்லாத சர்வா. நீ என்னை எப்டி கல்யாணம் பண்னுனேனு யோசி. கடத்திட்டு வந்து என் பேமிலிய காட்டி என்னை மிரட்டி நீ பண்ணுனதுக்கு பேர் கல்யாணமா? உன் பிடிவாதத்துக்கு நீ பண்ண திமிர்த்தனத்த நான் ஏன் ஏத்துக்கனும்? எனக்கு உன்ன பிடிக்கல. என்னால உன்ன மாதிரி ஒரு ராட்சசன புருசனா ஏத்துக்க முடியாது சர்வா"
சர்வேஸ்வர் பெருமூச்சு விட்டபடி "நான் அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போக நீ தான் காரணம் சனா. நான் சும்மா இருந்தேன். என்னை போன் பண்ணி சீண்டுனது நீ பண்ண தப்பு"
"தப்பு தான். நான் பண்ணனுனது தப்பு தான். உன் கிட்ட சொல்லிருக்க கூடாது" என்றவளுக்கு கழிவிரக்கத்தில் தன்னை நினைத்து அழுகை பொங்கியது. எத்தகைய துன்பத்துக்கும் அழ யோசிப்பவளின் தலையெழுத்தில் கடந்த சில தினங்களில் அழுகை மட்டுமே என்று ஆண்டவன் எழுதிவிட்டானோ என்னவோ!
அவளது அழுகை அவனது நெஞ்சை சுட வேகமாக எழுந்தவன் "நீ அழுறதால எதுவும் மாறாது சனா. இனிமே உன் வாழ்க்கைல ஒவ்வொரு நிகழ்வும் நான் நினைக்கிற மாதிரி தான் நடக்கும். என் வாழ்க்கைல உன்ன தவிர வேற எவளும் வர முடியாது. உன் வாழ்க்கைக்கும் இந்த ரூல் பொருந்தும்" என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்துவிட்டு அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான். அவளுக்கு வலிக்குமோ எனுமளவுக்கு மெதுவாக கன்னம் தீண்டிய அவனது கரங்களை வியப்பாக பார்த்தாள் சஹானா.
வழக்கமாய் அவளை வன்மையாய் பிடித்து இழுப்பதும் அனுமதியின்றி இதழணைப்பதுமாய் இருப்பவனின் இந்த சின்னச் செய்கையில் திகைத்துப் போய் நின்றவளின் ஆச்சரியம் அவனுக்குள் உண்மையாகவே முணுக்கென்ற வலியை உண்டாக்கியது.
எந்த ஆண்மகனுக்கும் தன் மனைவி தன்னை காதலுடன் நோக்கும் போது எழும் கர்வம் தனி தான். ஆனால் தன்னவளின் முகத்தில் தன்னை காணும் போதெல்லாம் காதலுக்குப் பதில் சில நேரங்கலில் வெறுப்பும் பலநேரங்களில் பயமும் மட்டுமே தென்பட சர்வேஸ்வருக்கு முதல் முறையாக தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது தவறோ என்று புத்தியில் புலப்பட்டது.
அவனுக்கும் காதலியின் கண்ணீர் வருத்தத்தை தானே கொடுக்கும். மென்மையாக அவளது தோளில் படிந்தது. தன்னை நோக்கி அவளைத் திருப்பியவன் மென்மையாய் அவள் முகத்தை நிமிர்த்தி
"நீ அழுதாலும் இனி நான் தான் உன் வாழ்க்கை. அத யாராலயும் மாத்த முடியாது சனா. போய் குளிச்சிட்டு ட்ரஸ் சேன்ஜ் பண்ணு" என்று தண்மையாய் உரைக்க அவனது வழக்கத்துக்கு மாறான அமைதியான பேச்சில் தடுமாறியவள் உடைகள் எங்கே என்று தேட சர்வேஸ்வர் வார்ட்ரோபின் பக்கம் கைகாட்டினான்.
அங்கிருந்து துவாலையும் மாற்றுடையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் ஆற அமர குளித்துவிட்டு உடைமாற்றி வெளியே வருகையில் சர்வேஸ்வர் அங்கில்லை. பூக்களும் இலைகளும் ஓடும் மல்டிகலர் க்ரேப் புடவையும், கருப்பு வண்ணத்தில் முழங்கை வரை தைக்கப்பட்ட சட்டையும் அணிந்து கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தவள் ஜன்னல் வழியே கீழே தெரியும் அசோகவனத்தை ஒத்த தோட்டத்தையும் மாடி உயரத்துக்கு வளர்ந்திருந்த மாபெரும் விருட்சங்களையும் பார்த்தாள்.
இயற்கை என்றுமே அழகு தான். யார் இல்லை என்றது. ராட்சசனின் மாளிகை என்றாலும் இதுவும் அழகு தான்.இவ்வளவையும் ரசித்தபடி நிற்கும் அந்த மாளிகையின் எஜமானியான இவளும் அழகி தான். ஆனால் சூழ்நிலை தான் மிகவும் கொடூரமாக இருந்தது. சூழ்நிலையில் கொடூரத்தால் வெளிக்காட்சிகள் எதுவுமே சஹானாவின் இதயத்தில் உள்ள ரணத்தை ஆற்ற இயலவில்லை.
கூந்தல் காற்றிலாட ஓவியமாய் நின்றிருந்தவளை ரசித்தபடி அந்த அறைக்குள் நுழைந்தான் சர்வா.
"கம் ஆன் பேப். பிரேக்பாஸ்ட் சாப்பிடுவோம்" என்று சொன்னபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சஹானா மறுத்துப் பேசாது அமைதியாக அவனுடன் சென்றாள்.
டைனிங் டேபிளில் அவளுடன் அமர்ந்தவன் தன் கையால் அவளுக்குப் பரிமாற ஆரம்பித்தான்.
"உனக்கு கீ ரோஸ்ட் பிடிக்கும்னு செய்யச் சொன்னேன் சனா. சாப்டு"
அவனது உபச்சாரத்தில் உச்சி குளிரும் நிலையில் சஹானா இல்லை. அவள் சாப்பிடாது சிலை போல அமர்ந்திருக்கவே சர்வேஸ்வர் நெய்ரோஸ்டை விண்டு ஒரு விள்ளலை அவள் வாயருகே கொண்டு செல்ல சஹானா எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சர்வேஸ்வர் அவளது தாடையைப் பற்றி தன் புறம் திருப்ப தாடை வலியில் அவள் முகம் சுழிக்கவும் கையை எடுத்தான்.
"ஒவ்வொரு விசயத்துக்கும் அடம்பிடிக்காத சனா. எனக்கு உன் கிட்ட கொஞ்சுறது மட்டும் முழுநேர வேலை இல்ல. ஐ ஹாவ் லாட் ஆப் ஒர்க்ஸ். இந்த பிசி ஷெட்யூல்ல நான் உன் கிட்ட அக்கறை எடுத்துக்கிறேங்கிறத மறந்துட்டு என்னை கோவப்பட வைக்காத"
"உனக்கு வேற வேலை இருக்குனா அத போய் பாரு. என் மேல அக்கறை காட்டுனு நான் உன் கிட்ட கேட்டேனா . ராட்சசனோட அக்கறை யாருக்கு வேணும்?"
பழைய சஹானா திரும்பியிருந்தாள். அதே அலட்சியம், அதே திமிர் திரும்பியிருந்தது. சர்வாவின் கண்ணிலும் பழைய சுவாரசியம் திரும்பியிருந்தது.
"அப்ப நீ சாப்ட மாட்ட?"
"ஆமா. உன் வீட்டுல இருக்கவோ, சாப்டவோ எனக்கு விருப்பம் இல்ல"
இவனுடன் ஒரே வீட்டில் இருப்பதே நரகம். இதில் இந்த உணவு அவளைப் பொறுத்த வரை ஆலகாலம். இதை உண்டு உயிர்வாழ்வதற்கு தான் பட்டினி கிடந்து இறப்பதே மேல். சுயமரியாதையா வயிற்றுப்பசியா என்றால் கட்டாயம் சஹானா சுயமரியாதையைத் தான் தேர்ந்தெடுப்பாள். இப்போதும் அதையே செய்தாள்.
சர்வேஸ்வர் இது வேலைக்கு ஆகாது என்று அவளைத் தன் புறம் திருப்பி வலுக்கட்டாயமாக தோசை விள்ளலை வாயில் வைக்க முயல சஹானா வாயைத் திறந்தால் தானே.
"அடம் பிடிக்காத சனா. எனக்கு கோவம் வந்துச்சுனா நான் என்ன பண்ணுவேனு தெரியாது"
மிரட்டியவனை அனாயசமாக ஏளனப்பார்வை பார்த்துவிட்டு எழுந்து செல்ல முயன்றவளின் புடவை முந்தானை வழக்கம் போல அவன் கையில் சிக்கியது. நகர முடியாது நின்றவளின் அருகே வந்தவன்
"இப்ப நீ சாப்டலனு வை, என்ன பண்ணுவேன் தெரியுமா?" என்றவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் போனின் தொடுதிரையைத் தடவியவன் யாருக்கோ வீடியோ காலில் அழைத்தான்.
தொடுதிரையில் அழைத்தவனின் முகம் பிரசன்னமானது. அது வேறு யாரும் இல்லை. வம்சி தான். அவன் நின்றிருந்த இடம் சஹானாவின் வீடு அமைந்துள்ள பகுதி. இவன் இங்கே என்ன செய்கிறான்? சஹானாவுக்குள் அவள் அறியாது ஒரு பதற்றம் பரவியது. அலட்சியத்தைப் பூசியிருந்த முகத்தில் பதற்றத்தின் சாயல் பரவத் தொடங்கியது.
சர்வேஸ்வர் அதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே "பிரிப்பேரா இருக்கியா வம்சி?" என்று கேட்க அவன் ஆமென்றான். அவனது கையில் இருந்தது துப்பாக்கி. சஹானா அதைக் கண்டு வெலவெலத்துப் போனாள்.
சஹானா விழிகள் படபடக்க சர்வாவை நோக்க அவன் "இப்ப நீ சாப்டலனா உன் பேமிலி மொத்தத்துக்கும் வம்சி சங்கு ஊதிடுவான். எப்டி வசதி?" என்று கேட்டு விட்டு புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்க்கவும் அவள் முகத்தில் வெறுப்பு அப்பட்டமாக குடியேறியது.
அதே வெறுப்புடன் விறுவிறுவென்று டைனிங் டேபிளில் நாற்காலியில் அமர்ந்தவள் மடமடவென்று தோசையைப் பிய்த்து உண்ணத் தொடங்கினாள். அவசரமாக விழுங்கியதில் விக்கலெடுக்க சர்வேஸ்வர் அவள் தலையில் தட்டி தண்ணீரைப் புகட்ட பதற்றத்தில் தண்ணீரும் சேர்ந்து புரையேறியது.
"ரிலாக்ஸ் சனா. மெதுவா சாப்டு. வம்சி பொறுமையா நின்னு வேலைய முடிப்பான்"
விலுக்கென்று தட்டிலிருந்து பார்வையை விலக்கி அவனை நோக்கியவள் "ராட்சசன்" என்று பார்வையால் அவனைச் சுட்டெரித்துவிட்டு தட்டைக் காலி செய்தாள்.
சர்வேஸ்வர் இதற்கெல்லாம் அசரவில்லை. அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை வீடியோ காலை முடிக்கவும் இல்லை. சஹானா கையலம்பி வந்தவள் சர்வேஸ்வரின் செல்பேசியில் வம்சியை முறைத்துவிட்டு
"இனிமே நீங்க அங்க இருந்து கிளம்பலாம். உங்க முதலாளியும் அதை தான் சொல்லப் போறார்" என்று வார்த்தைகளைக் கடித்து துப்பிவிட்டுச் செல்ல முற்பட்டவள் திரையில் மாமாவைக் கண்டதும் நின்றாள். அவர் எங்கேயோ கிளம்பத் தயாராய் நின்றிருந்தார். வம்சியை அவர் கவனிக்கவில்லை.
அவரைக் கண்டதும் குபுக்கென்று கண்ணில் நீர் நிரம்ப "மாமா" என்று அவள் உதடுகள் முணுமுணுக்க இணைப்பு துண்டிக்கப்பட்டது. சர்வேஸ்வர் வேலை முடிந்தது என மீண்டும் செல்பேசியை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.
சஹானா கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் "எனக்கு அத்த மாமாவ பாக்கனும் போல இருக்கு சர்வா. என்னை கூட்டிட்டுப் போ பிளீஸ்" என்று இறைஞ்ச சர்வேஸ்வரின் பார்வை தீவிரமாக மாறியிருந்தது.
"உன்ன இனி நம்ப நான் தயாரா இல்ல சனா. எப்ப நீ சென்னைய விட்டுப் போறதா டிசைட் பண்ணுனியோ அப்பவே நான் சுதாரிச்சிட்டேன். நல்லா நினைவு வச்சுக்க, இனி உனக்கு நான் தான் எல்லாமே. மாமா, அத்தை, விசாகானு யாருமே உனக்கு சொந்தமில்ல. அவங்களுக்கு செட்டில்மெண்ட் முடிஞ்சாச்சு. இனிமே அவங்கள பாக்க வேண்டிய அவசியம் உனக்கு இல்ல"
சொல்லிவிட்டு செல்பேசியைக் காதில் வைத்தபடி சென்றான்.
நிதானமாய் தெளிவாய் உச்சரித்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் மனதில் இடியை இறக்கியது. அவளுக்கென்று இருந்த ஒரு ஆறுதல் அவள் குடும்பம் மட்டுமே. இனி அவளுக்கு அதுவுமில்லை. இனி அவள் இந்த ராட்சசன் கட்டி வைத்த தங்கக்கூண்டில் அடைப்பட்டிருக்கும் கூண்டுப்பறவை மட்டுமே. சஹானாவின் நெஞ்சில் வெறுப்பு மட்டும் டன் கணக்கில் குடியேறியது.
Nice
ReplyDeletethank you💕
Delete