11 (மாயம் செய்தாய்)

 


அடுத்து வந்த இரு தினங்களில் சர்வேஸ்வரும் சஹானாவும் போட்டுக்கொண்ட சண்டைகள் ஏராளம். அவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் அப்படியே இருந்தன.

ஆனால் சர்வேஸ்வர் தன் இஷ்டப்படி சஹானாவை ஆட்டுவிக்க அவளது குடும்பத்தை அடிக்கடி அவளுக்கு நினைவூட்ட வேண்டியதாயிற்று. காதலைக் கடந்து அவன் மனதில் அவள் அவனை எதிர்த்து சென்னையை விட்டுச் செல்லத் துணிந்த கோபமே வியாபித்திருந்தது.

இக்கோபத்துக்கு அவ்வபோது தூபம் போடுவது போல சஹானாவின் செய்கைகளும் அமைய அவனால் இப்போது பொறுமையைக் கடைபிடிக்க இயலவில்லை.

அன்றைய தினம் இரவில் கம்பெனிக்குச் சென்றுவிட்டு களைப்பாக திரும்பினான் சர்வேஸ்வர். சஹானாவோ அவன் இரு தினங்கள் சென்னைக்குச் சென்றுவிட்ட நிலையில் இங்கே பலத்தக் காவலுடன் பாதுக்காக்கப் பட்டாள் இல்லை சிறைபிடிக்கப் பட்டாள்.

இரு தினங்கள் அவளைக் காணாத ஏக்கத்துடன் திரும்பியவனுக்கு அவளது பாராமுகம் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் பாராமல் இருந்ததே நல்லது என்ற எண்ணம் அடுத்தச் சில நிமிடங்களில் அவனுள் உதயமாகும் வண்ணம் நடந்து கொண்டாள் சஹானா.

வந்தவனிடம் முகம் கொடுத்துப் பேசாது அவர்களின் அறையை விட்டு வெளியேறியவள் அந்த மாளிகையின் உப்பரிகை போன்ற இடத்தில் நின்று தனக்கு எதிரே பரந்திருந்த கானகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அப்போது திடுமென சர்வேஸ்வரின் பெர்பியூம் நறுமணம் வரவும் அவள் முகம் கல்லாய் இறுகியது. அடுத்தச் சில நொடிகளில் அவனது கரங்கள் பின்னிருந்து அவளை அணைத்திருக்க காதருகே அவனது கன்னத்தின் ரோமங்கள் குறுகுறுப்பாய் தீண்ட அவனை விலக்கவும் முடியாது அவனிடமிருந்து விலகவும் முடியாது சிலை போல நின்றாள் சஹானா.

சர்வேஸ்வர் அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டவன் தனது முரட்டு இதழ்களை அவளது தோள் வளைவில் புதைக்க சஹானாவுக்குள் ஏதேதோ மாற்றங்கள் மொட்டவிழ்க்க தொடங்கியது

" மிஸ் யூ பேப். இனி உன்ன பிரிஞ்சு எங்கயும் போறதா இல்ல. டெரிப்லி மிஸ் யூ"

முணுமுணுத்தவனின் குரலில் இருந்த தாபம் அவளுக்குப் புரிந்தாலும் அவளால் அவனது அணைப்பில் முழுமையாக குழைய முடியவில்லை. கத்தி முனையில் மணந்தவனுக்கு காதல் ஒன்று தான் கேடு என்ற எரிச்சலுடன் அவனை விலக்க முயன்றபடி 

"லீவ் மீ சர்வா. என்னைத் தொடாத. ஹேட் யூ" என்றபடியே அவனை விட்டு விலகி நிற்க சர்வேஸ்வர் இவ்வளவு நேரம் இருந்த தாபம் அனைத்தும் கோபமாய் மாற தீக்கங்குகளாய் ஜொலித்தக் கண்களுடன் நின்றான்.

"உன்ன தொடாம வேற யாரை தொடுறது சனா?" 

"யாரை வேணாலும் என்ன வேணாலும் பண்ணிக்க சர்வா. உன் கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ கை அசைச்சா ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க"

"ஆனா எனக்கு ஆயிரத்தி ஒன்னா என்னை எதித்து நிக்கிற சனாவ தான் பிடிச்சிருக்கு. இந்த திமிர், ஆட்டிட்டியூட் வேற யாருக்கும் வராதே"

அவள் மௌனம் காக்கவும் சர்வேஸ்வர் நேரடியாக விசயத்துக்கு வந்தான்.

"நம்ம டூ வீக்ஸ் என்னோட நேட்டிவ்கு போகப் போறோம்" என்று அவன் சொன்னதும் சஹானா திடுக்கிட்டு அவனை நோக்கினாள்.

"என்ன பாக்குற? என்னடா எல்லாரும் ஹனிமூனுக்கு பாரின் ட்ரிப் கூட்டிட்டு போவாங்க. இவன் கிராமத்துக்குக் கூட்டிட்டு போறானேனு பாக்குறியா? அங்க தான் என்னோட குடும்பம் முழுசும் இருக்காங்க. அவங்க கிட்ட மருமகளை காட்ட வேண்டாமா? தட்ஸ் ஒய்" என்று சொன்னபடி அவளை கூரிவிழிகளால் ஏறிட்டவனுக்கு அவள் பதில் எதுவும் சொல்லாம நின்ற கோலம் எரிச்சல் மூட்டியது.

"எதுவும் பேசாம நின்னா என்ன அர்த்தம் சனா?"

"நீ என் கிட்ட போலாமானு ஒபினியன் கேக்கலயே. ஜஸ்ட் போறோம்னு தகவல் தான் சொல்லிருக்க. நீ சொன்னதுக்கு அப்றம் நான் வர மாட்டேனு சொன்னாலும் நீ என்னோட பேச்சைக் காது குடுத்து கேக்க போறது இல்ல. அப்போ நான் எதுக்கு தேவை இல்லாம பேசனும்?"

"குட். சிச்சுவேசனை புரிஞ்சுட்டு பேசுற இந்த சனா எனக்கு புதுசு. அஸ் யூஸ்வல் நீ ஆர்கியூ அடம் பிடிப்பேனு நெனைச்சேன். நாட் பேட்"

அவனது வஞ்சப்புகழ்ச்சியை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் கீழே சென்றுவிட்டாள் அவள்.

மறுநாள் விடிந்ததும் சர்வேஸ்வர் கிளம்பத் தயாராகிவிட்டான். சஹானாவும் தயாராகி தனது உடைமைகள் என்று அவனால் சுட்டிக்காட்டிப்பட்ட அனைத்தையும் ஒரு லக்கேஜ் பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் வர இருவரும் அதில் ஏறிக் கொண்டனர். ஓட்டுனரை இறங்கும்படி கட்டளையிட்டவன் தானே காரை ஓட்டத் தொடங்கினான். பயணநேரம் மௌனத்தில் கரைந்தன.

கொடப்பகண்டா கிராமம் அருகில் வரவுமே செல்லும் வழியெங்கும் பசுமை அவர்களை வரவேற்க ஆரம்பித்தது. சஹானாவின் ரசிகமனம் மற்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு அந்தப் பசுமையை ரசிக்க ஆரம்பித்தது.

ஓங்கியுயர்ந்த தென்னைமரங்களுடன் இரு பக்கமும் பசிய வயல்கள் பச்சைப் போர்வை விரித்திருக்க நடுவே ஓடிய சிறிய சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சாலையில் கிராம மக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்க அந்தச் சாலை கிராமத்துக்குள் நுழைந்தது.

ஓரளவுக்குப் பெரிய கிராமம் தான். அதன் வீடுகளின் கட்டமைப்பை பார்த்தபடியே வந்தவளுக்குக் கார் ஒரு பெரிய மாளிகையின் நுழைவுவாயிலுக்குள் நுழையவும் தான் கவனம் அதை ஓட்டியவனிடம் திரும்பியது.

கூடவே தன் எதிரே தெரியும் அந்த மாளிகையும் அப்போது தான் அவள் கவனத்தில் விழுந்தது. கம்பீரமான மாளிகையின் பரந்த முற்றத்தின் ஒரு பக்கம் பணியாட்கள் வேலை செய்து கொண்டிருக்க மறுபக்கம் பூஞ்சோலை ஒன்று அழகாய் மணம் பரப்பியது

சர்வேஸ்வர் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டுக் கீழே இறங்க அவனைத் தொடர்ந்து சஹானாவும் இறங்கினாள். வீட்டின் முன்னே வேலயாய் இருந்த பணியாட்கள் அனைவரின் பார்வையும் வீட்டின் சின்ன எஜமானனின் மீது தான் படிந்தது. அவனைத் தொடர்ந்து வந்த சஹானாவையும் அவர்களின் பார்வை தழுவ அவளுக்கு ஒரு நிமிடம் சங்கடமாக இருந்தது.

சர்வேஸ்வர் வேலையாட்களில் ஒருவனை தங்களது உடமைகளை எடுத்துவருமாறு கட்டளையிட்டுவிட்டு சஹானாவின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு 

"என்னாச்சி சனா? பயமா இருக்குதா? கொஞ்சம் ரிலாக்ஸா இரு. இங்க என்னோட குடும்பம் தான் இருக்காங்கனு தான் சொன்னேன். பேய் பிசாசு எதுவும் இல்ல" என்க

"அப்டியே இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. இந்த ராட்சசனையே சமாளிக்கிறேன். அதோட சேத்து அந்த பேய் பிசாசையும் சமாளிப்பேன்" துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவைப் போல பதிலடி வந்தது அவளிடமிருந்து.

சர்வேஸ்வர் வழக்கம் போல அவளை மெச்சுதலாகப் பார்த்துவிட்டு "ரொம்ப நேரம் சைலண்டா இருந்ததுல உன் நாக்கு சுளுக்கிடுச்சோனு நெனச்சேன் பேப். உன் உடம்புல ஓவர் டைம் பாக்குற ஒரே ஆர்கன் அது மட்டும் தானு நீ இப்ப ப்ரூப் பண்ணிட்ட. நாட் பேட்" என்று எள்ளலாய் உரைத்தபடி வீட்டினுள் காலடி எடுத்துவைத்தான்.

வீட்டின் பெரிய ஹாலின் தளம் முழுவதும் வெள்ளை மார்பிளும், கறுப்பு நிற மார்பிளுமாய் சதுரங்கத்தை நினைவுப்படுத்தியது. பெரிய தூண்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மரத்தினாலான கலைப்பொருட்களும், பித்தளை பூஜாடிகளும், சுவரில் பொன்வண்ணச் சட்டமிட்ட புகைப்படங்களும் அந்த வீட்டை அரண்மனையாக்க முயற்சித்தன.

ஹாலின் நடுவில் தேக்குமர டீபாயும் அதைச் சுற்றி மூவர் அமரும் சோபா இரண்டு எதிர்புதிருமாகவும், ஒருவர் அமரும் நாற்காலி நான்கும் கிடந்தன. சமையலறையில் மதிய உணவு தயாராகிக் கொண்டிருப்பதன் மணம் நாசியை நிறைத்தது.

அந்த ஹாலின் சோபாவில் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருந்தார் சர்வலோகேஸ்வரய்யா. தங்கப்பூண் போட்ட கண்ணாடி அணிந்து தன்னருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரர்களிடம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவர் வீட்டிற்குள் வந்து நின்ற பேரனையும் அவனுடன் நின்ற இளம்பெண்ணையும் பார்த்து அதிர்ந்தார். அந்த நடுத்தரவயதுக்காரர்களும் அப்படியே!

அவர்களில் ஒருவர் "சர்வா யாருப்பா இந்த பொண்ணு?" என்று கேட்க

" டாட்! இவ தான் என் ஒய்ப்" என்று சர்வேஸ்வர் பதிலளிக்கவும் தான் அந்த நடுத்தரவயதுக்காரரின் முகத்தில் சர்வேஸ்வரின் சாயல் தெரிந்ததை கவனித்தாள் சஹானா.

அவன் அவ்வாறு சொன்னதும் மற்றொரு நடுத்தர வயதுக்காரர் அதிர்ச்சியுடன் "சர்வா இது என்ன விளையாட்டு? " என்று அதட்ட

"நிஜமாவே சொல்லுறேன் பெரியப்பா. இவ என்னோட ஒய்ப் சஹானா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுனோம். தவிர்க்க முடியாத காரணத்தால திடீர்னு மேரேஜ் பண்ணிக்க வேண்டிய நிலமை. இல்லனா உங்களோட அனுமதியில்லாம நான் ஏன் இப்டி ஒரு கல்யாணத்தப் பண்ணிக்கப் போறேன்? சொல்லுங்க" என்று சாவகாசமாக பதிலிறுத்தான்.

அவர்களின் உரையாடல் தெலுங்கில் நடக்க சஹானா புரியாத மொழி படத்தை ஆங்கிலமொழிபெயர்ப்பு வார்த்தைகள் இல்லாமல் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள்.

சில நிமிடங்களில் வீட்டுப்பெண்களும் அங்கே ஆஜராக அவர்களில் மூத்தப்பெண்மணி சர்வேஸ்வரின் பாட்டியாக இருக்க கூடுமென்பது சஹானாவின் ஊகம். மற்ற இருவரில் யார் இவனது தாயார் என்று ஆராய்ந்தது அவளது கயல்விழிகள்.

வேறு எதற்கு! இவ்வளவு அற்புதமான மைந்தனை ஜனித்த அவருக்கு பாதபூஜை செய்ய தான். அவளுக்கு அதிகம் வேலை வைக்காது அவரே முன்னர் சர்வேஸ்வரால் தந்தை என விளிக்கப்பட்டவரிடம் கண்ணீருடன் அவனுக்காக வாதிட அவரால் கங்கா என்று அழைக்கப்பட்ட அப்பெண்மணி தான் அவனது தாயார் என்று தெரிந்துகொண்டாள் அவள்.

மற்றொருவர் அவனது பெரியம்மாவாக இருக்கலாம். அவள் இவ்வாறு யூகிக்கும் போதே சஹானாவை விட இரண்டு மூன்று அகவைகள் பெரியவளாக இருப்பாள் என்று கருதும்படி வந்து சேர்ந்தாள் ஒரு அழகிய இளம்பெண். சாந்தமான அழகுடன் மகாலெட்சுமியைப் போல நின்றவளின் உடலில் மின்னிய வைரங்கள் எளிமையிலும் அவர்களின் செல்வச்செருக்கை எடுத்துரைத்தது. நெற்றியின் குங்குமமும் கழுத்தின் கருகமணி தாலியும் அவள் இந்த வீட்டின் மருமகள் என்பதைச் சொல்லாமல் சொல்ல அவளைத் தேடி ஹாலுக்கு வந்தான் சர்வாவின் சாயல் உள்ள ஒரு ஆடவன். அவனைச் சர்வேஸ்வர் 'அண்ணா' என்று விளிக்கவே அவனது மொத்தக்குடும்பமும் தானாகவே சஹானாவுக்கு அறிமுகமாகிவிட்டிருந்தனர்.

அவளது விழியில் இப்போது தெரிந்த கலவரத்தை கண்ணுற்ற வீட்டின் பெரியவரான சர்வேஸ்வரின் தாத்தா என்ன கட்டளையிட்டாரா தெரியவில்லை. அதன் பின் வீட்டினர் அனைவரின் முகத்திலும் தெளிவு பிறந்தது. சர்வேஸ்வர் அவளை நோக்க சஹானா அவனருகில் செல்லவும் அவளது காதில் "தாத்தா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்"என்று முணுமுணுத்தான்.

சஹானா மறுப்பேதும் சொல்லாமல் வீட்டுப்பெரியவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அனுபமா, அவள் தான் சர்வேஸ்வரின் அண்ணி, சஹானாவைச் சினேகமாய் பார்த்தவள் தனக்கு தெரிந்த தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசியபடி இதுவரை சர்வேஸ்வரின் அறையாக இருந்து இன்றைய தினம் சஹானாவுக்கும் சொந்தமான அறையில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

"இது தான் உங்க ரூம். நீ போய் ரெப்ரெஷ் ஆயிடு. நான் மதியம் சமையல் முடிஞ்சதும் உங்கள வந்து கூப்பிடுறேன். இடைல உனக்கு எது வேணும்னாலும் அனுக்கானு ஒரு குரல் குடு. நான் ஓடி வந்துடுவேன்"என்று புன்னகை முகமாய் சொல்லிவிட்டுச் செல்ல சஹானாவுக்கு ஏனோ அவளது செய்கைகள் விசாகாவை நினைவுப்படுத்தியது.

இப்போது அவள் எப்படி இருக்கிறாளோ? மாமாவும் அத்தையும் அன்றைய தினம் சர்வேஸ்வரால் வழியனுப்பி வைக்கப்பட்ட பின்னர் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறார்களோ?

அந்த பரந்து விரிந்த அறையில் ஒரு ஊரையே அடைக்கலாம் போல. ஒரு பக்கம் அவனது வேலையைச் செய்ய அழகாய் ஒரு தடுப்பு அறை. மற்றொரு பக்கம் அங்கிருந்தபடி தோட்டத்தைக் காணும் வகையில் பெரிய சாளரம் மரக்கதவுகளுடன் மூடியிருந்தது.

குளியலறையும் அதோடு இணைக்கப்பட்டிருந்தது. சஹானா அங்கே சென்று முகம் கழுவிவிட்டு வந்தாள். நேரே சாளரத்தின் கதவுகளைத் திறக்க வீட்டைச் சுற்றியிருந்த மரம் நிறைந்த சோலையிலிருந்து வீசிய காற்று அவளது முகத்தைத் தழுவி அடங்கியது

காற்றில் அவள் கட்டியிருந்த சில்க் காட்டன் புடவை படபடக்க அங்கிருந்து பார்த்தால் தெரியும் கோசாலையையும் பூஞ்சோலையையும் மனக்கவலை மறந்து ரசிக்க ஆரம்பித்தாள் சஹானா.

அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்த சர்வேஸ்வரை அவள் கவனிக்கவில்லை. அவனோ மனைவியின் ரசிகமனதை தொந்தரவு செய்ய விரும்பாதவனாய் குளியலறைக்குச் சென்று முகம் கழுவி விட்டுத் திரும்பியவன் உடைமாற்றுவதற்கென வைத்திருந்த மரத்தடுப்புக்குள் சென்று இலகு உடைக்கு மாறினான்.

சஹானா இன்னும் தோட்டத்தின் அழகை ரசித்துக் கொண்டிருக்க சர்வேஸ்வர் அவளை ரசித்தபடி அவளருகில் நின்றிருந்தான். கைக்கெட்டும் தூரத்தில் அவளை நிறுத்தி வேடிக்கை பார்ப்பது அவனுக்குச் சிரமம்

அடுத்த நொடி அவளை அவனது கரங்கள் அணைக்கவும் சஹானா இவன் எப்போது உள்ளே வந்தான் என்ற குழப்பத்துடன் புருவம் சுருக்கினாள். சர்வேஸ்வர் தனது ஆட்காட்டிவிரலால் அவளது சுழித்திருந்த புருவத்தை நீவி விடவும் அவள் பட்டென்று அவன் கரத்தைத் தட்டிவிட்டு அவனை விலக்கி அங்கிருந்து அகன்று அந்த அறையின் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

சர்வேஸ்வர் அவளை நகைப்புடன் பார்த்தபடி படுக்கையில் விழுந்தவன் "ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணுனது கொஞ்சம் டயர்டா இருக்கு சனா. நான் இப்ப தூங்கி ரெஸ்ட் எடுத்தா தான் நைட் வசதியா இருக்கும்" என்று பூடகமாக உரைத்துவிட்டு கைகளை தலைக்கு அண்டை கொடுத்துப் படுத்துக்கொண்டான்.

சஹானாவோ நீ என்னமோ உளறிக்கொள் என்ற ரீதியில் முகத்தைத் திருப்பியவாறு வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தாள்.

"சனா நீ நான் சொன்னதுக்கு இன்னும் அர்த்தம் புரிஞ்சிக்கலனு நெனைக்கிறேன்"

இப்போது அவளுள் ஏதோ சந்தேகம் எழ திடுக்கிட்டுத் திரும்பினாள் சஹானா. சட்டென்று எழுந்தவள் அவனிடம் சென்று படபடவென பேச ஆரம்பித்தாள்.

"நீ சொல்லுறதுக்கு அர்த்தம் புரியாம இருக்கிறதுக்கு நான் ஒன்னும் குழந்தை இல்ல சர்வா. ஆனா அன்னிக்கு சொன்னது தான் இன்னிக்கும். என் மேல நீ கை வச்ச அடுத்த நிமிசம் நான் செத்துடுவேன். நான் விளையாடல. சீரியசா சொல்லுறேன்"

அவனிடம் கை நீட்டி எச்சரித்தவள் அடுத்த நொடி அவனது அணைப்பில் சிக்குண்டாள். அதிர்ச்சியுடன் அவனை உறுத்துவிழித்தவள் அவனது புஜத்தில் அடித்து தள்ள முயல அவளது முயற்சிகள் அனைத்தையும் தோற்கடித்தவன்  சுவாரசியமாய் அவளை நோக்கினான்.

"இன்னிக்கு நைட் இங்க இருக்கிற சிவன் கோயில்ல சிவராத்திரி பூஜை நடக்கும். அதுக்கு நம்ம குடும்பத்துல எல்லாருமே போறது வழக்கம். அங்க போனா விடிய விடிய முழிச்சிருக்கனும். நான் அந்த அர்த்தத்துல சொன்னேன். நீ என்ன நினைச்ச பேப்?"

கேலி விரவிய குறும்புத்தனத்துடன் அவன் கேட்க சஹானா இம்முறை தன்னை மானசீகமாக திட்டிக் கொண்டாள்.

அவன் சரியான அர்த்தத்தில் தான் உரைத்திருக்கிறான். தப்பர்த்தம் எடுத்துக் கொண்டது தனது மூளை தான்

சங்கடத்துடன் அவனை நோக்கி "அது.... நா... சாரி" என்று திக்கித் திணறி பேசியவளை ஆவலாய் நோக்கினான் அவளது கணவன்.

"ரொம்ப சங்கடப்படாத சனா. இன்னிக்கு நைட் தான் சிவராத்திரி. நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம். அதனால நீ கில்டியா பீல் பண்ணாத பேப்" என்று மையலாய் கூறிவிட்டுத் தன் முரட்டு இதழை அவள் கன்னத்தில் பதித்தான்.

சஹானா அவனை விட்டு விலகி எழுந்தவள் தலையணையை வைத்து அவனைக் கோபமாய் தாக்க அவனது இரும்புத்தேகத்துக்கு அந்த அடிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதால் புன்னகையுடன் செல்பேசியை எடுத்து விளையாட ஆரம்பித்தான் அவன்.

சஹானா கை ஓய அவனை அடித்தவள் களைத்துப் போய் அடிப்பதை நிறுத்தினாள். அவளை நிமிர்ந்து நோக்கியவன் "ஏன் நிறுத்திட்ட? இந்த ஆறடியும் உனக்கு சொந்தம். உனக்கு அடிக்கணும்னு தோணுனா அடி. கொலை செய்யணும்னு தோணுனா கூட கத்தியால குத்து. ஆனா என்னை விட்டு எங்கயும் போகனும்னு மட்டும் நெனைக்காத பேப். அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்" என்று கிட்டத்தட்ட கட்டளையாய் மொழிய அவன் வார்த்தைகளில் என்ன மாயம் செய்தானோ தெரியவில்லை. சஹானா அமைதியாய் போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவளை யோசனையுடன் பார்த்துவிட்டுக் கண்ணயர ஆரம்பித்தான் சர்வேஸ்வர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8