12 (நிஜம் தானா)



கொடப்பகண்டாவுக்கு வந்த தினத்தன்று சொன்னபடியே சிவராத்திரி என்பதால் திரிகூடபர்வதம் என்று அழைக்கப்படும் மூன்று குன்றுகள் இருக்குமிடத்தில் உறைந்த பரமேஸ்வரனுக்கு விழா எடுக்கப்பட்டது. சர்வலோகேஸ்வரய்யாவின் குடும்பம் தான் வழக்கம் போல பூஜை புனஸ்காரங்களுக்கு ஆன செலவை ஏற்றுக் கொண்டது. 

பிரளயத்தின் போது உலக உயிர்களைக் காக்க பரமேஸ்வரனை வேண்டி பார்வதி தேவி தியானித்த நேரம் தான் கிருஷ்ணபக்ஷ சதுர்த்ததியில் வரும் மகாசிவராத்திரி. அன்றைய தினம் சிவாலயங்களில் விடமுண்ட கண்டனுக்கு நான்கு யாமங்களிலும் பூஜைகள் நடத்தப்படும். 

அன்றைய தினம் சர்வலோகேஸ்வரய்யாவும் அவரது புதல்வர்களும் விரதம் இருப்பர். நான்கு யாமங்களிலும் பூஜை முடிந்து மறுநாள் விடியலில் கோயிலில் பூஜைகள் முடிவடைந்த பின்னர் வீட்டுக்கு வந்து குளித்து முடித்து அதன் பின்னர் தான் போஜனம் அருந்துவர். பேரன்கள் இதையெல்லாம் கடைபிடிப்பதில்லை. 

அதனால் அவர்களுக்கும் சேர்த்து பெரியவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள். இன்றைய தினம் முழுக்குடும்பமும் கோயிலுக்குச் செல்லத் தயாராயினர். சஹானாவுக்கு அவள் அணிய வேண்டிய ஆடை அணிமணிகளைக் கொடுக்க வந்த கங்கா அவள் முகம் களைத்திருப்பதை பார்த்துவிட்டு இன்னும் பிரயாணக்களைப்பு தீரவில்லை என்று எண்ணிக் கொண்டார். 

"நீ வேணுனா ரெஸ்ட் எடும்மா. நாங்க கோயிலுக்குப் போயிட்டு காலையில வந்துடுவோம்" 

அதைப் பணிவுடன் மறுத்த சஹானா "பரவால்ல. எனக்கு ஒரு சிரமமும் இல்லம்மா" என்று சொல்லவும் அவளை உச்சு முகர்ந்து முத்தமிட்டவர் சீக்கிரம் தயாராகும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

அவரது இந்தச் சின்னச்செய்கை சஹானாவை உருகச் செய்தது. தாயாரின் மறைவுக்குப் பின்னர் இந்த அன்புச்செய்கைகள் எதையும் அனுபவிக்கவில்லை அவள். அத்தைக்கு அவளைக் குறை கூற மட்டுமே நேரம் இருக்கும். சொல்லப் போனால் விசாகாவை மட்டும் அவர் கொஞ்சவா செய்தார்? அவளையும் குறை சொல்வது வழக்கம் தான். 

மொத்தத்தில் தன்னை மட்டுமே எண்ணிப் பார்க்கும் அப்பெண்மணி கடைசியாய் சர்வேஸ்வர் ரூபாய் நோட்டுக்கற்றையை நீட்டும் போது கலங்கியது இப்போது நினைவுக்கு வந்தது சஹானாவுக்கு. அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருந்திருக்கிறதே என்று பெருமூச்சுடன் புடவையை மாற்ற ஆரம்பித்தாள். 

எளிமையான பட்டுப்புடவையில் எளிமையான ஆனால் விலையுயர்ந்த அணிமணிகள் அணிந்து தயாரான சஹானா இன்னும் கூந்தலை மட்டும் வாரிப் பின்னலிட்டால் தயாராகிவிடுவாள். அந்நேரம் தான் சர்வேஸ்வர் வேஷ்டி சட்டையில் அவர்களின் அறைக்குள் பிரவேசித்தான். 

பொற்சிலையாய் அலைபாயும் கூந்தலுடன் நின்றிருந்த மனைவியின் அழகில் ஒரு வினாடி மெய்மறந்து நின்றவன் பின்னர் உற்சாகமாய் சீட்டியடிக்க சஹானா கண்ணாடி முன்னே நின்றிருந்தவள் கையில் கிடைத்த ஏதோ ஒரு லோசன் பாட்டிலை அவன் மீது வீசியெறிந்தாள். 

அவளை முறைத்தபடியே அதை லாவகமாய் கேட்ச் செய்தவனது பார்வை அனலைக் கக்குமோ என மெல்லிய அச்சம் அவளுள் முகிழத் தொடங்கிய நேரம் அவனது இதழில் குறுநகை ஒன்று மலர்ந்தது. 

எப்போதும் கோபம் கக்கும் விழிகளில் இன்று சாந்தம் குடிகொண்டிருக்க இறுகிக் கிடக்கும் இதழ்களை இளகச் செய்து கொண்டிருந்த இளம்புன்னகையுடன் சிகையைக் கோதியபடி நின்றவனை தன்னை மறந்து பார்த்தவள் பின்னர் இப்படி சிரித்தால் மட்டும் இவன் மாறிவிட்டான் என்று எண்ண வேண்டுமா என உதட்டை அலட்சியமாய் சுழித்துக் காட்டிவிட்டு கூந்தலை ப்ரெஞ்ச் ஃப்ரைடாக கட்டிக் கொண்டாள். 

அவளின் அலட்சியம் கூட அவளைப் பேரழகியாக தான் காட்டுகிறது என எண்ணிக் கொண்டவன் செல்பேசியை எடுத்துக் கொண்டான். அவளைக் கையோடு அழைத்துச் சென்றவன் கீழே பெரியவர்கள் அவர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தத்தைக் கண்டு மெச்சிக்கொண்டதும் சஹானாவை பழைய படி மாயப்புன்னகையுடன் நோக்க எங்கே அப்புன்னகையில் இதயம் நழுவி விடுமோ என பயந்தவளாய் அவள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. 

காரில் வந்து கோயிலில் இறங்கும் வரை சர்வேஸ்வர் பக்கம் கூட திரும்பாதவள் அலங்காரவிளக்குகளால் ஜொலித்த கோயிலைக் கண்டதும் பக்திபரவசத்தில் மூழ்கிவிட்டாள். 

மாமியாரும், பெரியத்தையும் பேசும் கொஞ்சுதமிழை ரசிக்கப் பழகிக் கொண்டவள் அனுபமாவுடன் சேர்ந்து உமாதேவி சொன்ன ஸ்தலபுராணத்தைக் கேட்க ஆரம்பித்தாள். 

சர்வேஸ்வருக்குச் செல்பேசியில் அழைப்பு வரவும் அவன் மட்டும் வெளியே நின்றுவிட குடும்பம் மொத்தமும் கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கே ஈஸ்வரனுக்கு அலங்கார ஆராதனைகள் நடப்பதைக் கண்ணுற்றவாறே அனைவரும் அங்கேயே அமர்ந்துவிட பூஜை நடந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. 

முதல் யாமம் முடியும் தருவாயில் பூஜை ஆரம்பிக்கும் நேரம் சர்வலோகேஸ்வரய்யா இளையபேரனைத் தேட லோகேஸ்வரன் தான் சென்று அவனை அழைத்து வர எழும்ப சஹானா அவனை அமரச் சொல்லிவிட்டுத் தானே அவனை அழைத்துவரக் கிளம்பினாள். 

கோயிலின் வெளியே இருந்த கூட்டத்தில் அவனைத் தேடிப் பார்த்துச் சலித்தவளுக்கு அவன் எங்கே சென்றிருப்பான் என்ற கேள்வி மனதில் உதயமானது. 

அவன் மீது பெரிதாய் அக்கறை ஒன்றும் இல்லாதவள் தான். இருந்தாலும் காரிகையின் மார்பில் மோதிய மாங்கல்யம் அவளுக்குள் வினோதமான முறையில் அவனது இந்த திடீர் கண்மறைவுக்கு என்ன காரணமோ என்ற பரிதவிப்பை உண்டாக்கியது. 

அவனைத் தேடிப் பார்த்தவளின் கண்ணில் தூரத்தில் ஜனசந்தடியற்ற இடத்தில் நெடுநெடுவென்ற உயரத்துடன் முதுகு காட்டியபடி நின்ற ஆடவன் ஒருவனைக் கண்டதும் அது சர்வேஸ்வர் தான் என உறுதி செய்தபடி அவன் அருகே விரைந்தாள். 

அவளது எண்ணம் சரி என்பது போல அங்கே அவனும் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவனிடம் சிக்கியிருந்த இரு ஆண்களையும் கொலைவெறியுடன் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். 

சஹானாவுக்கு எங்கே அவன் மீண்டும் யாரையும் கோபத்தில் தாக்கிவிடுவானோ என்ற அச்சம் தோன்ற வேகமாக அவனருகில் சென்றவள் அவனது புஜத்தைப் பற்றி தன்னை நோக்கி திருப்பினாள். 

"என்ன பண்ணுற சர்வா? இது கோயில். இங்கயும் வந்து சண்டை போடுறியே? இவங்க என்ன பண்ணாங்கனு புடிச்சி வச்சிருக்கடா?" 

பரிதவிப்புடன் கேட்டவளை அவன் புருவம் சுருக்கி விழிக்க சஹானா அமைதியானாள். 

"உன்ன யாரு இங்க அனுப்புனாங்க? முதல்ல இங்க இருந்து கெளம்பு" 

பற்களைக் கடித்தபடி வார்த்தைகளை கோபத்துடன் உச்சரித்தது அவனது நாவு. அவனது விழிகளோ இவ்வளவு நேரம் எதிரில் நின்ற இருவரையும் கோபத்தில் எரித்துக் கொண்டிருந்ததை மறந்து இப்போது சஹானாவை பரபரப்புடன் பார்த்தது. 

அப்போது சர்வேஸ்வரின் எதிரில் நின்றிருந்த இருவரில் ஒருவன் மற்றொருவனுக்குச் சைகை காட்ட அந்த மற்றொருவன் வேகமாகப் பாய்ந்து சஹானாவின் கழுத்தை வளைத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை அவளது கழுத்தில் வைக்க நொடிப்பொழுதில் நடந்த இந்நிகழ்வில் சஹானா செய்வதறியாது திகைத்தாள். 

சர்வேஸ்வரோ "சனாஆஆஆ..." என்றபடி அவளருகே வர முயல 

"அங்கயே நில்லுங்க சர்வா சார். இல்லனா இந்த பொண்ணோட கழுத்தை வெள்ளரிக்கா சீவுறது போல சீவிடுவேன்" என்று கர்ணகொடூரமான குரலில் எச்சரித்தான். 

அவனது கையிலிருக்கும் கத்தியின் கூரியமுனை சஹானாவின் ஏறியிறங்கும் தொண்டைக்குழியைத் தொட்டுக் கொண்டிருக்க அவளைக் காப்பதற்காக அசையாது நின்றான் சர்வேஸ்வர். 

ஆனால் அவளது முகம் பயத்தில் வெளிறியதைக் கண்டவனுக்கு அதற்கு காரணமானவனை கண்டம் துண்டமாக்கும் வெறி எழ அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை நெருங்கி அவன் முகத்தில் தன் கைமுஷ்டியால் தாக்கினான். 

அந்த எதிர்பாரா தாக்குதலில் முகத்தில் ஏதோ ஒரு எலும்பு உடையும் சத்தமும் கூடவே வலியில் அந்த மனிதன் அலறும் சத்தமும் தெளிவாய் சஹானாவின் காதில் விழுந்தது. 

அவன் சரிந்த இடைவெளியில் சஹானாவைத் தன்னருகே இழுத்துக் கொண்டவன் மற்றொரு கையால் அந்த மனிதனின் கத்தியை எடுத்து இன்னொருவனின் முகத்தில் கோடிழுக்க இரத்தம் பீறிட்டெழ அவன் முகத்தை மூடிக் கொண்டு சரிந்தான். 

சஹானா அந்தக் கத்தியில் வழியும் உதிரத்தை அதிர்ந்த வண்ணம் நின்றவள் வேகமாக அவனிடம் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள். 

அந்த இருமனிதர்களின் வேதனையால் உண்டான ஓலத்தைக் கேட்டுவிட்டு "இவங்கள ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வை சர்வா" என்று சொல்ல அவன் மறுப்பாய் தலையசைத்தான். 

"என்னை யாரும் நெருங்கணும்னு நெனைச்சா கூட நான் அவங்கள உயிரோட விட மாட்டேன். இவனுங்க என்னைக் கொல்லணும்னு நெனைச்சு இங்க வந்தது முதல் தப்பு. உன்னை வச்சு என்னை மிரட்டுனது ரெண்டாவது தப்பு. இந்தத் தப்புக்கு இவனை நான் உயிரோட விடமாட்டேன்" 

சொன்னவனின் விழியில் மின்னிய பழிவெறியில் ஒரு நிமிடம் சஹானா பயந்தே போனாள். ஆனால் இது போன்ற பாவத்தை அடிக்கடி பார்த்து பழகிவிட்டாள் அல்லவா! எனவே சுதாரித்துக் கொண்டாள். 

"நீ பிசினஸ்மேனா? இல்ல மூனாந்தரமான ரவுடியா? உன்னோட வேலை பிசினஸ்ல ஒன்னை பத்தாக்குறது தானே தவிர இப்பிடி கண்ணுல பட்டவங்கள கொன்னு குவிக்குறது இல்ல" 

"இவனுங்கள நான் கொல்லப் போறேனு சொன்னேன். என் கையால தான் கொல்லப் போறேனு சொல்லவே இல்லையே. யூ ஆர் ரைட். ஐ ஆம் அ பிசினஸ்மேன். இதை நான் தான் செஞ்சாகணும்னு ஒரு கட்டாயமும் இல்ல. காசை விட்டெறிஞ்சா இவனுங்கள பரலோகம் அனுப்புறதுக்கு ஆயிரம் பேர் கியூவுல நிப்பாங்க" 

அவன் அப்படி சொல்லிவிட்டுக் கத்தியைத் தரையில் வீசிவிட்டு தனது சட்டையை இழுத்துச் சரி பண்ணிக் கொண்டான். சஹானா வழக்கம் போல இவனைத் தன்னால் பேச்சிலோ வாழ்க்கையிலோ ஜெயிப்பது கடினம் என புரிந்தவளாய் வெறுத்துப் போனாள். 

அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவள் கீழே விழுந்து கிடந்தவனில் ஒருவன் வேகமாக சர்வேஸ்வர் எறிந்த கத்தியை எடுத்து அவனைத் தாக்க வருவதைக் கண்டதும் "சர்வாஆஆஆஆ" என்ற கூவலுடன் கணவனைத் தன்னருகே இழுக்க அந்த மனிதன் கத்தியைச் சர்வேஸ்வரின் புஜத்தில் இறக்கினான். 

சட்டையைக் கிழித்துக் கொண்டு அந்தக் கத்தியின் கூரிய உலோக பாகம் அவனது தசைக்குள் இறங்கிய வேதனையில் முகம் சுளித்த சர்வேஸ்வர் மற்றொரு கரத்தால் அந்த மனிதனின் கழுத்தை நெறிக்க அதற்குள் சஹானாவின் கூச்சல் கேட்டு ஓடி வந்தவர்கள் சர்வேஸ்வரின் நிலையைக் கண்டதும் ஆவேசமாகி விட்டனர். 

அவர்களிடம் அந்த இருவரையும் ஒப்படைத்தவன் கத்தியை வெளியே எடுத்தவன் சஹானாவிடம் 

"நான் சொன்னது நடந்துடுச்சு பாத்தியா? இவனுங்கள நான் என் கையால கொல்லனும்னு அவசியம் இல்ல. என் உடம்புல கீறல் விழுந்தா கூட இவனுங்க இன்னைக்கு உயிரோட இந்தக் கிராமத்து எல்லைய தாண்டிருக்க முடியாது. இப்ப கத்தியால இவ்வளவு பெரிய காயம் ஆனதுக்கு அப்புறம் சும்மாவா விடுவாங்க? நான் அவனுங்கள அட்டாக் பண்ணுனது கூட இப்போ செல்ப் டிபென்ஸ்ல தான் சேரும்" என்று சொல்லவும் 

"அப்போ கத்திய கீழ வீசுனது அவங்க எடுத்து உன்னை அட்டாக் பண்ணணும்னு தானா?" என விழி விரித்துக் கணவனை நோக்கியவள் அவனது காயத்திலிருந்து உதிரம் வழிவதைக் கண்டதும் இது விவாதம் செய்யும் நேரமல்ல என்பதைப் புரிந்து கொண்டாள். 

ஊர் மக்கள் அந்த இருவரையும் பார்த்துக் கொள்வதாக கூற சஹானா தனது ஓரகத்திக்குப் போனில் அழைத்து தனக்கு திடீரென உடம்புக்கு முடியாமல் போனதால் சர்வேஸ்வருடன் மருத்துவமனைக்குச் செல்வதாகவும், அதன் பின்னர் முடிந்தால் சிவராத்திரி பூஜையில் கலந்துகொள்வதாகவும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். 

சர்வேஸ்வரிடம் கார்ச்சாவியைக் கேட்க அவன் தயங்கவும் "ரொம்ப யோசிக்காத சர்வா. எனக்கு இந்த சைட்ல எந்த இடமும் பழக்கம் இல்ல. அதனால எங்க இவ தப்பிச்சு போயிடுவாளோனு தயங்க வேண்டாம்" என்றாள் சஹானா நறுக்கு தெறித்தாற் போல. 

அவனுக்கும் கத்தி காயத்தின் வேதனை அதிகம் என்பதால் அதற்கு மேல் யோசிக்காது கார்ச்சாவியைக் கொடுத்தவன் காரில் அமர சஹானா காரைக் கிளப்பினாள். 

காரின் டாஷ்போர்டில் இருந்து வெண்ணிற துவாலை ஒன்றை எடுத்த சர்வேஸ்வர் அதைக் காயத்தின் மீது வைத்துக் கொண்டான். அவன் வழி சொல்ல மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் சஹானா. 

அந்தப் பகுதியிலுள்ள பெரிய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அது. அதன் வாகன தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு அவனுடன் உள்ளே சென்றாள். சர்வேஸ்வரைக் கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் வணக்கத்துடன் சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றுவிட சஹானா ஓய்ந்து போனவளாய் வெளியே கிடந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள். 

கண் மூடியவளுக்கு இந்தச் சில நாட்களில் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் யோசித்தபடியே சுவரின் தலை சாய்த்துக் கொண்டாள். 

கண் மூடி திறப்பதற்குள் நடந்த நிகழ்வுகளால் எங்கே இருந்தவள் எங்கே வந்து விட்டாள்! சர்வேஸ்வரைப் பார்த்தது, அவனது திட்டங்கள் எதையும் உணராதவளாய் தன்னிச்சையாக நடந்து கொண்டது, அவனிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோற்று அவனது கைதியானது, இன்று அவனது மனைவியாக ஆயுள்தண்டனை பெற்று அமர்ந்திருப்பது என அனைத்தும் வரிசையாக நினைவடுக்குகளில் கடந்து போன சம்பவங்கள் சடுகுடு விளையாட ஆரம்பித்தன. 

அப்போது யாரோ தோளில் கை வைப்பதை உணர்ந்து கண் விழித்தவள் கையில் கட்டோடு நின்ற சர்வேஸ்வரைக் கண்டதும் எழுந்தாள். 

"டிரஸ்சிங் பண்ணிட்டாங்கனா நம்ம கிளம்பலாமா?" என கேட்டவளுக்குச் சரியென தலையாட்டியவனிடம் மருத்துவமனை பணியாள் ஒருவர் மருந்துகள் அடங்கிய கவரை நீட்ட அதை சஹானா வாங்கிக் கொண்டாள். 

வழக்கமாக எதையாவது பேசி சஹானாவை எரிச்சலூட்டுபவன் இன்று அமைதியாக இருக்கவும் அவள் அதிசயித்தாள். ஒருவேளை காயம் வலிக்கிறது போல என சிந்தித்தவாறு காரைத் தரிப்பிடத்திலிருந்து எடுத்தவள் அவனருகில் நிறுத்த சர்வேஸ்வர் ஏறி அமர்ந்தான். 

கார் சாலையில் வேகமெடுத்தது. அவனால் அதற்கு மேல் அமைதி காக்க முடியவில்லை. 

"உன்னோட வேண்டுதலை கடவுள் கேட்டுட்டார் போல பேப். அதான் என்னை இப்படி காயத்தோட உட்கார வச்சிட்டார். இப்ப உனக்கு நிம்மதியா இருக்குமே!" 

அவனது ஓரக்கண் பார்வை தனது பக்கவாட்டு தோற்றத்தில் பதிவதைக் கவனித்தவள் அதை அசட்டை செய்தபடியே காரை ஓட்டியபடி அவனது கேள்விக்குப் பதிலளித்தாள். 

"அடுத்தவங்கள காயப்படுத்தி நிம்மதியடையுறதுக்கு நான் ஒன்னும் தி கிரேட் சர்வேஸ்வர் இல்ல. என்னோட வாழ்க்கையே இங்க கேலிக்கூத்தா போயிட்டிருக்கிறச்ச நான் ஏன் உனக்கு பட்ட காயத்தை நெனைச்சு சந்தோசப்படப்போறேன்?" 

வழக்கம் போல அவளிடம் இருந்து தீப்பொறியாய் பதில்கள் வரவும் புன்னகைத்தவன் காற்றில் அசையும் கூந்தல் கற்றை அவளது முகத்தை மறைக்க முயலவும் அதை ஒதுக்கிவிட்டான். 

சஹானா கல் போல இறுகியபடியே காரை ஓட்டியவள் "டோண்ட் டச் மீ. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்" என்று சொல்ல 

"யெஸ் யூ கேன். பட் உன்னைப் பக்கத்துல வச்சு வேடிக்கை மட்டும் பாத்துக்கிட்டிருக்க என்னால முடியலயே பேப்" என்றான் அவன் ஏக்கப்பெருமூச்சுடன். 

"கையில பட்ட காயம் நியாபகம் இருக்குல்ல?" 

"கையில காயம் பட்டா கட்டுன பொண்டாட்டிய தொடக் கூடாதுனு எதாவது ரூல் இருக்குதா சனா?" 

சஹானா வெட்டுவது போல அவனை முறைத்தவள் "அவன் தப்பு பண்ணிட்டான். உன்னோட கையில குத்துனதுக்குப் பதிலா நெஞ்சுல குத்திருக்கனும். எனக்காவது விடுதலை கிடைச்சிருக்கும்" என்று வெடிக்கவும் சர்வேஸ்வரின் முகம் இறுகி கல்லானது. 

அவனது முகம் போன போக்கை கவனித்தவள் தான் சொன்ன வார்த்தையின் வீரியத்தை அப்போது தான் உணர்ந்தாள். 

ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு நினைத்திடாத இளகிய மனத்தினளான அவள் இன்று ஆறடி உயர மனிதன் இறந்துவிட்டால் நலமென எண்ணுகிறாள்! அந்த மனிதன் அவளது கழுத்தில் தாலி கட்டிய கணவன் வேறு! தான் எப்படி இவ்வாறு இரக்கமற்று சிந்திக்கத் தொடங்கினோம் என யோசித்தவளுக்கு தான் நிஜமாகவே பழைய சஹானா தானா என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. 

யோசனைகளுக்கிடையே வீட்டை நெருங்கிவிட்டது கருத்தில் தாமதமாகப் பட்டது. வீட்டின் காம்பவுண்டுக்குள் காரை செலுத்தியவள் அதை நிறுத்திவிட்டு இறங்கினாள். 

அவள் பின்னே இறங்கிய சர்வேஸ்வர் அவள் விடுவிடுவென செல்வதைப் பார்த்தவனாய் மொபைலை எடுத்து தமையனிடம் தனக்கு நேர்ந்ததைச் சொல்லிவிட்டான். பயப்படும் படி எதுவுமில்லை என்றவன் அவர்கள் வருவதற்கு காலை ஆகிவிடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். 

சமையலறையில் குளிர்பதனப்பெட்டியைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் இரவுக்கான மாத்திரைகளை விழுங்கி தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை உள்ளே வைத்து கதவை மூடினான். 

ஹாலின் விளக்குகளை அணைத்தவன் போன் டார்ச்சின் உதவியுடன் மாடிப்படியேறினான். அவர்களின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சஹானாவுக்கு இன்று உறக்கம் வராது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இளகிய மனம் கொண்ட அவனது மனைவிக்கு அவனுக்கு நேர்ந்த இந்தக் காயம் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவனாய் அவர்களின் அறைக்குள் காலடி எடுத்து வைத்தான். 

அவன் வரும் சத்தம் கேட்டதும் சாளரத்தின் அருகே நின்றிருந்தவளின் உடல் மரக்கட்டையாய் விரைத்தது. 

இத்தனை நாட்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுமோ என்ற தடுமாற்றம் மனதுக்குள் முகிழ ஆரம்பிக்க அவளது நெற்றியில் வியர்வைப்பூக்கள் விரியத் தொடங்கின. 

சர்வேஸ்வரின் மூச்சுக்காற்று உடலில் மோதவும் திடுக்கிட்டுத் திரும்பிய சஹானா தனது கைவிரல்களின் நகங்கள் உள்ளங்கையில் பதியுமளவுக்கு இறுக்கமாய் கைகளை மூடிக் கொண்டபடி நின்றாள். 

மனதுக்குள் முகிழ்ந்த தடுமாற்றம் இப்போது கோபமாய் விஸ்வரூபம் எடுக்க அவளது விழிகள் எரிமலைக்குழம்பைக் கக்க ஆரம்பித்தன. 

சர்வேஸ்வர் தனது கூர்விழிப்பார்வையால் அவளது கனல்விழிப்பார்வையை எதிர்கொண்டான். இதழில் குறுஞ்சிரிப்பு மலர அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான். 

"ஐ பிராமிஸ் யூ. உன்னோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. நான் உன்னை சீண்டுறத வச்சு நீ ரொம்ப யோசிக்குற. நீ நெனைக்குற அளவுக்கு நான் பெரிய வில்லன் இல்ல" என்றான் இலகுவான குரலில். 

சஹானாவின் விழிகள் அவனது பேச்சில் அலைபாய ஆரம்பிக்க அவளது கயல்விழிகளின் அழகை ரசித்தபடியே "அதே நேரம் நான் ஹீரோவும் இல்ல பேப். அதனால ரொம்ப நாள் என்னை வெயிட் பண்ண வைக்கனும்னு நெனைக்காத. இப்ப எனக்குத் தூக்கம் வருது. நீ இன்னும் டின்னர் சாப்பிடல. ரங்கண்ணாவ கூப்பிட்டு லைட்டா டிபன் செஞ்சு தரச் சொல்லி சாப்பிட்டிட்டு தூங்கு. குட் நைட்" என்றவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு படுக்கையில் சென்று விழுந்தான். இவன் சொன்னது எல்லாம் நிஜம் தானா என புரியாது விழித்தபடி நின்றிருந்தாள் சஹானா.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 13

1 (அவளின் சீற்றம்)

அத்தியாயம் 1