13 (என்னவளே)



விடியலின் பூபாளமாய் பறவைகள் சத்தமிடவும் துயில் கலைந்தான் சர்வேஸ்வர். கையில் பட்ட காயம் சுருக்கென்ற வலியை உண்டாக்க ஒரு நிமிடம் கண் மூடி படுக்கையில் அமர்ந்திருந்தான். சஹானா அவனுக்கு முன்னரே எழுந்திருந்தாள் போல.

அவன் எழுந்து நிற்கும் போதே வெளியே கார்கள் வரிசையாக வரும் சத்தம் கேட்கவும் தனது அறையின் சாளரம் வழியே எட்டிப் பார்த்தவனுக்கு தனகு முழுக்குடும்பமும் கோவிலில் இருந்து திரும்பி விட்டனர்.

இனி இவர்களைச் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அப்போது குளித்து உடை மாற்றிவிட்டு திரும்பிய சஹானாவை கண்டதும் அவனது விழிகள் ரசனையைப் பூசிக் கொண்டன.

குளித்து ஈரக்கூந்தலும் சிவந்த நுனி நாசியுமாக வந்தவள் பனியில் நனைந்த மலரை போல கொள்ளை அழகுடன் இருக்க அவன் உதட்டைக் குவித்து அவனுக்குப் பிடித்த பாடல் ஒன்றை சீட்டியடித்தான்.

பச்சைவண்ண காட்டன் சில்க் சேலையில் ஆரணங்காக நின்ற அவனது மனைவிக்கு அவனது சீட்டியொலி உவப்பாக இல்லை. அதை முறைப்பில் வெளிப்படுத்தி நின்றாள் அவள்.

"கீழே எல்லாரும் வந்துட்டாங்க. இப்ப உன்னோட கை காயத்துக்கு என்ன காரணம் சொல்லி தப்பிப்ப?"

"அத யோசிக்காம இருப்பேனா பேப்? கொஞ்சம் வெயிட் பண்ணு"

அவளுக்கு பதிலளித்தபடி தனது மேல்சட்டையின் பொத்தான்களைக் கழற்றியவனுக்கு கையை வெளியே எடுக்கும் போது வலி உயிர் போனது. முகத்தைச் சுளித்தபடி கைகளை சட்டையிலிருந்து உருவ முயன்றவனை காணும் போது சஹானாவுக்கு அவளை அறியாது இரக்கம் சுரந்தது உள்ளத்தில்.

அவனருகே சென்று கொஞ்சம் பொறுக்குமாறு சைகை காட்டியவள் அவனது கரத்தை அசைக்காது சட்டையை மெதுவாக கழற்றினாள். அவனது புஜத்தில் போடப்பட்டிருந்த கட்டினை பார்த்தவள்

"கைய நனைக்காம குளிச்சு முடி. டாக்டர்ட போறப்ப கட்டை பிரிச்சிக்கலாம்" என்று முணுமுணுத்தாள்.

சர்வேஸ்வர் அவளது உதட்டின் அசைவை வைத்து அவள் சொல்வதை புரிந்து கொண்டவன் அவளருகே குனிந்து காதை காட்டினான்.

"கொஞ்சம் லவுடா பேசுனா நல்லா இருக்கும் பேப். இந்த அமைதியான பேச்சு உனக்கு சூட் ஆகல"

"உனக்கு நான் சொன்னது காதுல விழுந்துடுச்சுனு எனக்கு தெரியும். சீக்கிரமா குளிச்சிட்டு வா. தாத்தாவ நீ தான் சமாளிக்கனும்"

"நான் குளிச்சிட்டு வர வரைக்கும் இங்கயே இரு சனா"

அவள் புருவம் சுருக்கி ஏறிடவும் "எனக்கு பைசெப்ஸ்ல பெயினா இருக்கு. அதனால டிரஸ் சேஞ்ச் பண்ணுறதுக்கு உன்னோட ஹெல்ப் எனக்கு தேவைப்படுது" என்றவனின் குரலில் வழக்கம் போல கட்டளையிடும் பாணி இருக்கவே சஹானா விட்டேற்றியாக தலையாட்டி வைத்தாள்.

சர்வேஸ்வர் குளித்துவிட்டு உள்ளே வைத்தே கையற்ற பனியன் மற்றும் ஷார்ட்சுக்கு மாறியவன் தனக்காக அவள் காத்திருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் சீட்டியடித்தபடி அவளை நோக்கி வந்தான்.

"எனக்காக வெயிட் பண்ணியா பேப்? ஆனா நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டேனே"

தன்னை வீணாக காக்க வைத்து வேடிக்கையாக பேசுபவனை எரிப்பது போல முறைத்துவிட்டு எழுந்த சஹானா அறையை விட்டு வெளியேற முயன்று அவன் பிடிக்குள் வழக்கம் போல மாட்டிக் கொண்டாள்.

"என்ன வேணும் உனக்கு? என்னை பாத்தா நக்கலா இருக்குதா? அடிபட்டிருக்குனு பரிதாப பட்டு உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சா நீ என்னை ஜோக்கராக்குற. என்ன அசிங்கப்படுத்துனாலும் இவளுக்குப் போக்கிடம் வேற கெடயாதுனு தானே இப்பிடிலாம் என்னை இன்சல்ட் பண்ணி வேடிக்கை பாக்குற. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் சர்வா?"

"உன்னோட பரிதாபமோ இரக்கமோ எனக்கு தேவையில்லனு அர்த்தம். எனக்கு வேண்டியது உன்னோட காதல் மட்டும் தான் சனா. நீ பாத்து இரக்கப்படுறதுக்கோ பரிதாப படுறதுக்கோ நான் ஒன்னும் நாய்குட்டி இல்ல. உன் புருசன். எனக்கு வேண்டிய காதலை அடாவடியா எடுத்துக்காம பொண்டாட்டிய மதிச்சு நடந்துக்கிற புருசன். இப்ப சொல்லு. உன்னோட காதலை எனக்கு குடுப்பியா?"

அவனது பேச்சை கேட்டு சஹானாவின் வதனத்தில் ஒரு ஏளனப்புன்னகை உதயமானது.

"பிச்சைக்காரங்களால தேர்ந்தெடுக்க முடியாதுனு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா? என் நிலமை அதுக்கு கொஞ்சம் கூட குறைஞ்சது இல்ல. நீ நில்லுனு சொன்னா நிக்குறேன். நீ நடனு சொன்னா நடக்குறேன். நீ கோவப்பட்டா பதிலுக்கு ஊமையா உன் கோவத்த பொறுத்துக்க பழகிக்கிறேன். நாளைக்கே நீ உன் கூட வந்து ...." என்றவளின் வாய் தானாகவே பூட்டு போட்டுக் கொண்டது.

ஏனெனில் "ஏய்" என்று ரௌத்காரத்துடன் கையை ஓங்கியபடி சுட்டெரிக்கும் விழிகளால் அவளை எரிக்கத் தொடங்கியிருந்தான் சர்வேஸ்வர். முகம் கொள்ளா சினத்தில் சிவந்திருந்த அவனது முகம் சஹானாவுக்குள் குளிரை பரப்பியது.

பயத்தில் அவளது தொண்டைக்குழி ஏறி இறங்குவதைப் பார்த்தபடி அவளது மோவாயை தனது ஆட்காட்டிவிரலால் தூக்கியவன் வார்த்தைகளைக் கோவத்துடன் கடித்து துப்ப ஆரம்பித்தான்.

"ஏய்! ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி படுக்கைல வீழ்த்துறவன் ஆம்பளயே இல்லடி. எனக்கு வேண்டியது உன்னோட உடம்பு இல்ல. உன்னோட மனசு. அந்த மனசுக்கு நான் தான் என்னிக்கும் மகாராஜாவா இருக்கனும். அப்டி உன்னோட உடம்பு தான் முக்கியம்னு நான் நெனைச்சிருந்தா இப்ப நீ இவ்வளவு தெனாவட்டா என் முன்னாடி பேசிருக்க மாட்ட. இன்னொரு தடவை இந்த வார்த்தை உன் வாய்ல இருந்து வரக்கூடாது. அண்டர்ஸ்டாண்ட்?"

சிம்ம கர்ஜனையாய் ஒலித்த அவனது குரலில் அதிர்ந்து உடல் தூக்கி வாரிப் போட சரியென தலையாட்டினாள் சஹானா.

இது வரை அவளிடம் கை ஓங்கும் எண்ணம் அற்றவனுக்கு அவளது வார்த்தைகள் சூட்டுக்கோலை பழுக்க காய்ச்சி அவனது இதயத்தில் சூடு போட்டதை போல இருந்தது.

இன்னும் சினம் அடங்காமல் சிகையை அழுந்த கோதிக் கொண்டு "உன்னோட லக்கேஜை பேக் பண்ணு. நம்ம மறுபடியும் சென்னைக்குப் போறோம்" என கட்டளையிட்டவனை ஆச்சரியம் மேலிட நோக்கியவள் அவனது கட்டளைக்கு அடி பணிந்தாள்.

அதற்குள் கீழே வந்தவனின் புஜத்திலிருந்த கட்டு அவனது குடும்ப உறுப்பினர்களை கதி கலங்க செய்துவிட்டது.

சர்வலோகேஸ்வரய்யா பேரனும் அவனது புது மனைவியும் கோவிலில் இருந்து இல்லத்துக்குத் திரும்பியதற்கு ஏதேதோ காரணங்களை யோசித்திருந்தவர் அவனது கட்டை கண்டதும் பதறிப் போனார்.

அனைவரையும் சமாதானம் செய்தவன் தனது உருக்காலையில் முக்கியமான ஆர்டர் ஒன்று கையெழுத்தாகி இருப்பதால் அது முடிவடையும் வரை தானும் சஹானாவும் சென்னைக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொள்ளப் போகிறோமென தகவல் சொல்லிவிட்டான். எப்படியும் அவர்கள் இங்கே நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்துடன் வரவில்லையே!

அன்னை, பெரியன்னை, அண்ணி மற்றும் பாட்டியின் கண்ணீரை தனது ஆதுரமான வார்த்தைகளால் நிறுத்திவிட்டு அனைவரையும் சமாதானம் செய்து தங்களின் சென்னை பயணத்துக்கு அவர்களைச் சம்மதிக்க வைத்தான்.

இந்த அமளி துமளி எல்லாம் முடிந்த பின்னர் சாவகாசமாக ஹாலுக்கு வந்த சஹானாவுக்கு அனைவரும் சென்னை பிரயாணத்துக்கு ஒப்புக்கொண்டது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சர்வேஸ்வரின் பேச்சு சாமர்த்தியம் அவள் ஏற்கெனவே அறிந்த ஒன்று தானே!

எனவே அங்கிருந்து கிளம்பும் வரை அவர்களின் பாசமான வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் கொடுத்த ஊறுகாய், பொடிவகைகள் அடங்கிய பாட்டில்களைத் தனது லக்கேஜுடன் எடுத்து வைத்துக் கொண்டாள்.

அவர்கள் பேசும் மொழி புரியவில்லை தான், ஆனால் உண்மையான அன்புக்கு மொழி தேவையில்லையே. காலையுணவுக்கு பின்னர் இருவரும் சென்னைக்குக் கிளம்பினர்.

சென்னைக்கு வந்து சேர்ந்ததும் களைப்பும் காயத்தின் வலியும் சேர்ந்து கொள்ள சர்வேஸ்வர் துயிலில் ஆழ்ந்துவிட்டான்.

வீட்டின் தலைமை பணியாளான வீரா சஹானாவிடம் "ஈவினிங்க் உங்களுக்கு காபியா டீயா மேடம்?" என கர்மச்சிரத்தையுடன் விசாரித்துக் கொண்டிருந்தான். வீட்டின் எஜமானியின் மனதைக் குளிர வைக்க அவனது முதல் முயற்சி.

அவனுக்கு முடிந்தளவு இன்முகத்துடன் பதில் சொல்லியனுப்பியவள் மற்ற பணியாட்களிடம் தண்மையாக நடந்து கொண்டாள். அவர்களுக்கு அலட்டலற்று தங்களிடம் இனிமையாகப் பழகும் எஜமானியைப் பிடித்துவிட அவள் எள் எனும் முன் எண்ணெய்யாக நின்றனர்.

வீட்டைச் சுற்றி பார்த்தவள் சர்வேஸ்வருடன் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்ட இடத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் பெருமூச்சு ஒன்று அவள் நெஞ்சை பிளந்து கொண்டு எழுந்தது.

வீடும் அதைச் சூழ்ந்துள்ள தோட்டமும் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட்டு ஒரு காய்ந்த இலை சருகு கூட இல்லாமல் துப்புரவாக காட்சியளித்தது.

அதைப் பார்த்துக் கொண்டு நின்றவளை செல்போனில் அழைத்தார் அவளது மாமியார் கங்கா. தாங்கள் இருவரும் பாதுகாப்பாக சென்னைக்கு வந்து விட்ட தகவலை சொன்னவளிடம் அவர் இன்னும் சில நாட்களில் பத்ராசலத்தில் இராமநவமி நடைபெறவிருப்பதால் அதில் கலந்து கொள்ள இருவரும் கட்டாயம் வந்துவிட வேண்டும் என அன்புக்கட்டளையிட்டார்.

அன்பான அந்த பெண்மணியை மறுக்க மனமின்றி கட்டாயம் வந்துவிடுவோமென வாக்களித்தவள் வீட்டுக்குள் நுழைந்தாள். வீடு என்னவோ மாளிகை தான். இரண்டாவது தளத்திலிருக்கும் சர்வேஸ்வரின் அறைக்குச் செல்ல அமைத்திருந்த மின் தூக்கியின் உதவியால் அங்கே வந்தடைந்தாள்.

அவள் சென்ற நேரம் அவன் துயில் கலைந்து அலுவலக விசயங்களை பேசிக் கொண்டிருந்தான். அறைவாயிலில் நிழலாடியதைக் கவனித்துவிட்டான்.

"டூ வாட் சே. வில் கால் யூ லேட்டர்" என்று சொன்னபடி போனை வைத்தவன் மலர்ந்த முகத்துடன் தனது மனையாளைப் பார்த்தபடி படுக்கையிலிருந்து எழுந்தான்.

"உன்னோட சொந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் எப்பிடி ஃபீல் பண்ற பேப்?" என்று கேட்டபடி அவளருகில் வந்தவன் அவளைத் தோளோடு அணைத்தபடி சிட்டவுட்டில் கிடக்கும் சொகுசு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

சஹானா பதில் பேசாமலிருக்க அவனே அவளுக்கும் சேர்த்து பேசத் தொடங்கினான்.

"உனக்கு வீட்ல போர் அடிக்காது சனா. இதே ஃப்ளோர்ல பெரிய லைப்ரரி இருக்கு. உனக்கு புக் படிக்க பிடிக்கும்னா அங்க படிச்சுக்க. அதுவும் பிடிக்கலனா டிவில வேணுங்கிற சேனல வச்சு சீரியலோ சாங்கோ பாரு. நாளைக்கு உனக்கு கிரெடிட் கார்ட் வந்துடும். அதனால ரொம்ப போர் அடிச்சா ஷாப்பிங் போய் டைம் பாஸ் பண்ணு"

அவன் அவளது பொழுது போக்குக்காக அடுக்கிக் கொண்டே செல்ல நிறுத்துமாறு சைகை செய்த சஹானா அவனை தீர்க்கமாக பார்த்துவிட்டு மனதிலுள்ளதை கேட்க ஆரம்பித்தாள்.

"எனக்காக நீ என்ன வேணாலும் செய்வியா சர்வா?"

"கண்டிப்பா செய்வேன். நீ கேக்குறது நம்ம ரெண்டு பேரோட பிரிவா இருக்காத வரைக்கும் கண்டிப்பா செய்வேன் சனா" என்றான் அவன் கவனமாக.

"நான் பழையபடி வேலைக்கு போலாம்னு நெனைக்கிறேன் சர்வா. உன்னோட கன்சர்ன்ல என்னோட பழைய டெசிக்னேசனை கண்டினியு பண்ணலாம்னு நெனைக்கிறேன்"

சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க அதில் நூறு சதவிகிதம் அலட்சியமும் அசட்டையும் ஏளனமும் மட்டுமே கொட்டிக் கிடக்க சஹானா எரிச்சலுற்றாள்.

"நான் உன்ன என் சாம்ராஜ்யத்தோட ராணியா ஆக்கிருக்கேன் சனா. ஆனா உனக்கு இப்பயும் வேலைக்கு போய் மாதச்சம்பளக்காரிய வாழுற மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு போல. ஹூம்! அது சரியா வராது சனா. நீ எங்கயும் வேலைக்குப் போக வேண்டாம். ஸ்டே இன் திஸ் ஹவுஸ்" என்று ஆணையிடும் குரலில் சொல்ல அந்த எரிச்சல் கோபமாக உருவெடுத்தது.

"நீ என் ஹஸ்பெண்ட் தான். கடவுள் இல்ல. நான் என்ன பண்ணனும், பண்ணக் கூடாதுனு ஆர்டர் போடற உரிமை உனக்கு இல்ல. நான் வேலைக்கு போவேன். அது உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் எனக்கு அத பத்தி கவலை இல்ல"

முகம் சிவக்க சொன்னவளை மெல்லியதாக துளிர்த்த சினத்துடன் ஏறிட்டான் சர்வேஸ்வர்.

"என் அனுமதி இல்லாம உன்னோட மூச்சுக்காத்து கூட இங்க இருந்து வெளிய போக முடியாது சஹானா. நீ எங்கயும் வேலை பாத்து கஷ்டப்படுறது எனக்கு பிடிக்கல. இதோட இந்த பேச்சை விடு" என்று முடிவாகச் சொல்லிவிட்டு அவன் அகல சஹானாவின் கோபம் இப்போது இயலாமையாக உருவெடுத்தது.

சுயபச்சாதபத்தால் அழுகை பீறிட்டுக் கொண்டு வர அங்கேயே கண்ணீர் தாரை தாரையாக வழிய அமர்ந்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்பதை அவள் அறியாள்.

வீரா கொண்டு வந்து வைத்த தேநீர் ஏடு கட்டி ஆறிப் போய் அவள் அருகே இருக்க அதை ஏறிட்டும் பாராதவளாக இலக்கின்றி வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

வாழ்வில் ஒரு பெண்ணுக்கு உண்டாகும் மிகப்பெரிய வலியே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழப்பது தான். அந்த சுதந்திரத்தை இழந்தவள் தானே சஹானாவும். அந்த நொடியில் உலகில் மிகப் பெரிய துர்பாக்கியசாலியாக தன்னை உணர்ந்தாள்.

"எதுக்கு என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனிங்கம்மா? என்னையும் உங்களோடவே அழைச்சிட்டு போயிருந்தா இந்த கஷ்டம் எனக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நிமிசமும் ஜெயில்ல இருக்குற மாதிரி தோணுதும்மா. இப்டியே போனா என்னால ரொம்ப நாள் உயிரோட இருக்க முடியும்னு தோணல. மூச்சு விட கூட முடியலம்மா. வாண்ட் டு டை"

வாய் விட்டு சொல்லி கதறியழுதவளுக்கு இந்த சிறையிலிருந்து மீளும் மார்க்கம் புலப்படவில்லை. இனி அவளுக்கு அது தேவையும் இல்லை. வாழ்நாள் முழுமைக்கும் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டு மூச்சு முட்டி சாவது தான் அவளது தலையெழுத்து என அவளைப் படைத்தவன் எப்பொழுதோ எழுதி வைத்துவிட்டான்.

அதை அவளால் மட்டும் மாற்றவா முடியும். நினைக்க நினைக்க சுருக்கென்ற வலி தனக்குள் பரவுவதை உணர்ந்தவளுக்குக் கண்ணீர் மட்டும் ஆறாக பெருகி வழிந்தது.

எவ்வளவு நேரம் அழுதாள் என்பதை அவள் அறியவில்லை. ஆனால் இடைவிடாது அழுதால் இரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவள் பிரக்ஞையிழந்து மூர்ச்சையாகி விடுவாள் என்பதை சுத்தமாக மறந்துவிட்டாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து சர்வேஸ்வர் சிட்டவுட்டுக்கு வந்த போது இருக்கையில் சாய்ந்து கண் மூடியிருந்த சஹானாவும் அவளருகே கிடந்த சிறிய மேஜையில் ஏடு கட்டியிருந்த தேநீர்க்கோப்பையும் தான் அவனது கண்ணில் பட்டது.

"சனா இன்னுமா அத பத்தியே யோசிக்குற? கம் ஆன் பேப்" என்றபடி அவள் கரத்தைப் பிடித்து இழுத்தவன் அவன் இழுத்த வேகத்தில் அவள் வேரற்ற மரமாகச் சரியவும் அவளது தலை மேஜையில் மோதிக் கொள்ளும் முன்னர் அவளைப் பிடித்துக் கொண்டான்.

அப்போது தான் அவள் இன்னும் விழி திறக்கவில்லை என்பதை கண்டுகொண்டான் சர்வேஸ்வர்.

"என்னாச்சி சனா? கண்ணை முழிச்சி பாரு" என பதறியவனாய் அவளது கன்னத்தை தட்டிப் பார்த்தான். ஆனால் அவள் கண் விழித்தால் தானே!

ஒரு கணம் உலகம் இருண்டுவிட்டதை போல உணர்ந்தவன் அவளது கரத்தைப் பிடித்து பார்க்க நாடித்துடிப்பு இயல்பாக தான் இருந்தது. அப்போது தான் அவளது கன்னத்தில் பதிந்திருந்த கண்ணீர்க்கோடுகளைக் கண்டான்.

அழுது ஓய்ந்து மூர்ச்சையாகி விட்டாள் என்பதை அறிந்தவன் உடனே அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்துவிட்டு மருத்துவருக்கு அழைத்தான்.

அவர் வரும் வரை சர்வேஸ்வரின் உயிர் அவன் கையில் இல்லை. மருத்துவர் வந்து சஹானாவுக்கு இரத்த அழுத்தத்தில் உண்டான மாறுபாட்டால் வந்த மயக்கம் தான் என்பதை உறுதி செய்த பின்னர் தான் அவனுக்கு நிம்மதியானது.

"லேடிஸ் ரொம்ப சென்சிடிவ் ஆனவங்க சர்வா. ஓவர் திங்கிங், ஓவர் இமேஜினேசன் இது ரெண்டும் அவங்களுக்கு இருக்குற மிகப்பெரிய பிரச்சனை. இதுல உங்க ஒய்புக்கு என்ன பிரச்சனைனு அவங்க கண் முழிச்சதும் கேட்டு பாருங்க. முடிஞ்சா அவங்கள அமைதியா வச்சுக்க டிரை பண்ணுங்க. இப்டி அடிக்கடி நடக்குறது அவங்களுக்கு நல்லது இல்ல"

மருத்துவர் தனது கடமையைச் செய்ததோடு அவனுக்கும் அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

அவர் சென்ற பிற்பாடு படுக்கையில் கசங்கிய ஓவியம் போல படுத்திருந்தவளின் முகத்தில் மயக்கமாகி இருந்த நேரத்தில் கூட வலியின் ரேகைகள் அப்பட்டமாக தெரிந்தது.

கண்ணீர்க்கோடுகள் படிந்த அவளது கன்னத்தை மென்மையாக வருடியவன் "ஐயாம் சாரி சனா. நான் இந்த தடவை உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என்று வேதனையுடன் முணுமுணுத்தான்.

அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கேயே அமர்ந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனைகள்.

அவள் திடீரென கண் விழிக்கவும் வேகமாக அவளைத் தாங்கி படுக்கையில் அமர வைத்தவன் அதை விட அவசரமாக "நீ மறுபடியும் வேலைக்குப் போறதுல எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல சனா. ஆனா என்னோட ஆபிஸ்ல என் கண்பார்வைல இரு. ப்ளீஸ்" என்று சொல்ல சஹானா அவனது இந்த திடீர் மனமாற்றத்தில் திகைத்தாலும் முகம் இறுகி போனாள்.

"அப்ப ஒவ்வொரு தடவையும் அழுது மயக்கம் போட்டு விழுந்தா தான் நான் நெனைக்கிறது நடக்குமா? என்னால முடியல சர்வா. உன்னோட குருட்டுத்தனமான காதலால எனக்கு மூச்சு முட்டுது. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அதே காதலால நான் செத்துப் போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல" என வெடித்தவளுக்குக் கேவலுடன் அழுகையும் வந்துவிடவே அவள் அடிக்கடி அழுவது நல்லதல்ல என்ற மருத்துவரின் அறிவுரை நினைவுக்கு வரவே சர்வேஸ்வர் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

சஹானா அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் பெருக்க அவள் முதுகை தட்டிக் கொடுத்த சர்வேஸ்வர் "அழாத சனா. இனி இப்டி நடக்காது. என்னால உன்னோட சுதந்திரத்துக்கு எந்த பாதிப்பும் வராது. பிராமிஸ். நான் சொன்ன வார்த்தைய காப்பாத்துவேன் பேப். பிலீவ் மீ" என்று இறைஞ்ச இது வரை அவனது கோபத்தையும் ஆணவத்தையும் அலட்சியத்தையும் மட்டுமே பார்த்து பழகியிருந்தவளுக்கு அவனது ஆதுரமான பேச்சு மிகவும் புதிது.

அதிலும் அந்தப் பேச்சில் அவளது மனம் ஆறுதலாக உணர்ந்தது வேறு அவளுக்குப் புரியாத புதிராக இருக்க கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். மெதுவாக அவனது அணைப்பில் இருந்து விடுபட்டாள் சஹானா.

"நான் உன்னோட ஒய்ப்னு அந்த ஆபிஸ்ல யாருக்கும் தெரிய வேண்டாம்"

இந்த பேச்சில் அவனுக்குள் இருந்த இளக்கம் மறையத் துவங்க "ஏன் இந்த ராட்சசன் தான் என்னோட புருசன்னு சொல்ல உனக்கு அவமானமா இருக்கா?" என்று கேட்டவனின் குரலில் இருந்த மறைக்கப்பட்ட கோபம் சஹானாவுக்குப் புலனாகவும் தலையாட்டி மறுத்தாள் அவள்.

"நான் அந்த அர்த்தத்துல சொல்லவே இல்ல. எம்.டியோட ஒய்ப்னு அங்க யாரும் வித்தியாசமா நடத்த வேண்டாம்னு நெனைக்கிறேன். நான் வெறும் சஹானாவா அங்க வேலை பாக்கனும்னு நெனைக்கிறேன் சர்வா"

அவளது கோணத்தில் யோசித்தவனுக்கு அதுவும் சரி தான் என புரிந்தது. இது நாள் வரை அவர்களின் திருமணம் பற்றி வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் தெரியாத போது திடுமென சஹானாவைத் தன் மனைவியென அறிமுகம் செய்து வைத்தால் அது மீண்டும் சஹானாவை மற்றவர்கள் அவதூறு பேசுவதற்கு தானே வழி வகுத்து கொடுத்தது போல ஆகிவிடும். எனவே இன்னும் சில நாட்களுக்கு, அவர்களின் திருமணம் பற்றி வெளியுலகத்துக்கு முறையான அறிவிப்பு வெளியாகும் வரை அவளும் அவனும் யாரோவாகவே அலுவலகத்தில் பழகுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தவன் சஹானாவிடம் அதற்கு சம்மதமும் சொல்லிவிட்டான்.

அவன் சொன்னதற்கு அவள் ஒன்றும் கட்டியணைத்து அவளின் நன்றியைத் தெரிவிக்கவில்லை. அவள் அப்படி சொல்லவேண்டுமென அவனும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நேரம் வருத்தம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்த விழிகளில் நன்றியுணர்ச்சி புதிதாய் பூத்திருந்தது.

இப்போதைய நிலைக்கு அதுவே சர்வேஸ்வருக்கு நிம்மதியளிக்க என்னவளே இனி நீ என்னால் இன்னொரு முறை வருந்த மாட்டாயடி என மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான் சர்வேஸ்வர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8