14 (முதல் சலனம்)



நீண்ட நாட்களுக்கு பின்னர் எஸ்.எஸ் கேம்பசினுள் காலடி எடுத்து வைத்திருந்தாள் சஹானா. சர்வேஸ்வர் எத்தனையோ முறை சொல்லியும் அவனுடன் காரில் வராமல் வழக்கம் போல அவளுக்கென ஸ்கூட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்ட சஹானா அதிலேயே வந்து இறங்கினாள்.

பல தினங்கள் கழித்து சஹானாவை பார்த்த அலுவலகத்தில் உள்ளவர்களும் அவளது குழுவில் உள்ளவர்களும் திகைப்பு பூசிய விழிகளுடன் அவளை எதிர்கொண்டனர். அவளால் அவர்களுக்குப் பதிலளிக்க இயலவில்லை.

ஹாசினி மட்டும் கோபத்தை காட்டினாள். அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என புரியாது விழித்தாலும் பின்னர் வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லிச் சமாளித்தாள் சஹானா.

"என் அம்மா குடும்பத்துல ஒருத்தர் தவறிட்டாரு ஹாசினி. நான் போகலனா நல்லா இருக்காதுனு மாமாவும் நானும் அங்க போய்ட்டோம். அதனால தான் என்னால இன்ஃபார்ம் செய்ய முடியல"

"சரி விடுடி. எனக்கும் உன் சிச்சுவேசன் புரியுது. ஆனால் இனி இப்டி சொல்லாம எங்கயும் போகாத. உனக்கு என்ன ஆச்சுனு கூட தெரியாம நான் குழம்பிட்டேன். விசாகாவும் ஊர்ல இல்ல. உன் அத்தைட்ட பேசுறதும் சும்மா இருக்குறதும் ஒன்னு தான். நான் பயந்திருந்தேன். இப்ப உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் மூச்சு வருது சஹா"

இருவரும் பேசி பழையபடி அவரவர் இருக்கையில் செட்டில் ஆன சமயம் மேலாண்மை இயக்குனருடன் திடீரென மீட்டிங் அரேன்ஜ் செய்யப்பட்ட தகவல் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. ஹாசினிக்கு அது ஏன் என்று புரியவில்லை என்றாலும் சஹானாவுக்கு தெரியுமே!

மென்பொருள் பிரிவினர் மட்டும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்த அந்த மீட்டிங் நடக்கும் கான்பரன்ஸ் ஹாலின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சர்வேஸ்வரின் கண்கள் சஹானா உள்ளே வந்ததும் கண்கள் பளிச்சிட அவள் அவனை கண்டும் காணாதது போல அமர்ந்து கொண்டாள்.

மீட்டிங்கும் நல்லமுறையில் ஆரம்பித்தது. பல்வேறு புராஜெக்ட்கள் குறித்த விவாதம், அவற்றின் செயல்பாடுகள் எந்நிலையிலுள்ளது  என்பது பற்றிய டீம்லீடர்களின் பதில்கள், வருங்கால செயல்திட்டங்கள் பற்றி விலாவரியாகப் பேசி முடித்தனர்.

மீட்டிங்கின் இடையே வழக்கமாக டீம் லீடர்களும் மேலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் மீட்டிங்கில் அன்று ஏன் மற்ற ஊழியர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து சர்வேஸ்வரின் உதவியாளனான விவேக் வந்தவர்களுக்கு விளக்கினான்.

"நம்ம புராஜெக்ட்களோட ஆரம்பப்புள்ளில இருந்து முடியுற இடம் வரைக்கும் எல்லாருமே முக்கியமானவங்க. இதுல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் இந்த புராஜெக்டோட சீரியஸ்னெசை புரிஞ்சிக்கனும்னு சர்வா சாரோட ஒபீனியன்"

அதன் பின்னர் மென்பொருள் துறையினர் அனைவரும் கலைந்து செல்லுமாறு சொல்லி மீட்டிங்கை முடித்து வைத்தான் விவேக்.

அனைவரும் செல்லவும் சஹானா ஹாசினியுடன் வெளியே செல்ல எழுந்திருக்க சர்வேஸ்வர் "மிஸ் சஹானா நீங்க மட்டும் இருங்க" என்று சொல்ல ஹாசினி திருதிருவென விழித்தாள்.

"நீங்க மிஸ் சஹானாவா? இல்ல மிசஸா? உங்க ஃப்ரெண்ட் ஏன் இப்டி முழிக்கிறாங்க?" என்று கேட்டுவிட்டு நீ போகலாம் என்பது போல ஹாசினியையும் விவேக்கையும் பார்த்து வைக்க இருவரும் விறுவிறுவென வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் சர்வேஸ்வர் சஹானாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு "சொல்லுங்க சஹானா. நீங்க மிஸ் சஹானாவா? மிசஸ் சஹானாவா?" என நக்கலாக வினவியபடியே அவளின் கழுத்தை நோட்டமிட சஹானா மறைத்து வைத்திருந்த தனது கருகமணி மாங்கல்யத்தை எடுத்துக் காட்டினாள்.

எரிச்சலுடன் "என்னை குத்திக் காட்ட ஒரு சான்ஸ் கெடச்சாலும் விட மாட்டல்ல. நான் உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆனத தான் யார்டயும் சொல்லவேண்டாம்னு சொன்னேன். அதுக்கு ஏன் இப்டி பாயிண்ட் அவுட் பண்ணி காட்டுற?" என பொங்கி விட்டாள்.

"ரிலாக்ஸ் சனா. நான் கேஸ்வலா ஜோக் பண்ணுனேன்"

"நீ ஜோக் பண்ணல. என்னை மோக் பண்ற"

சர்வேஸ்வர் மூக்குநுனி சிவக்க பேசுபவளை விழியகலாது நோக்கியபடியே அவள் அருகே வர சஹானா கண்ணில் கவனத்துடன் பின்னடைந்தாள். ஒரு கட்டத்தில் சுவரில் இடித்துக்கொள்ள அவளுக்கு அரணாக இருபக்கமும் கைகளைச் சுவற்றில் வைத்தபடி நின்றான் சர்வேஸ்வர்.

அவனது விழிகள் அவள் வதனத்தில் ஊர்கோலம் செல்ல அடுத்த நொடி தனது குடை இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள் சஹானா

என்ன பார்வை இது! விழி வழியே ஊடுருவி இதயத்தைக் கொக்கி போட்டு இழுக்கும் அந்தப் பார்வைக்குச் சொந்தக்காரனின் இதழில் அழகிய முறுவல் வேறு பூக்க கூர்நாசியும் காதல் வழியும் கண்களும் புன்சிரிப்பில் துடிக்கும் இதழ்களுமாக நின்ற சர்வேஸ்வரை முதல் முறையாக ரசிக்க ஆரம்பித்திருந்தாள் சஹானா.

என்றுமில்லாத திருநாளாக அவனது அருகாமை அவளுக்குள் மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியது. இதயத்தில் ஆரம்பித்த அச்சலனம் மெதுமெதுவாக அவளது தேகத்தில் ஊடுருவி அவளது கயல் நயனங்களில் வெளிவர ஆரம்பிக்கவும் அதை அறிந்து கொண்டான் அவள் கணவன்.

இதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல் தனது கைகளை எடுத்துக்கொள்ள படபடவென துடிக்கும் இதயத்துடன் அங்கிருந்து வெளியேறினாள் அவள்.

தனது இடத்தில் வந்து அமர்ந்த பின்னரும் சர்வேஸ்வரின் விழிகளும் அவனது அருகாமையில் தோன்றிய சலனமும் அவளை இம்சிக்க விரல்கள் தப்பும் தவறுமாக விசைப்பலகையின் எழுத்துக்களை அழுத்தியது. அன்றைய தினம் வேலையில் கவனத்தை திருப்புவதே சஹானாவுக்குப் பெரிய சவாலாக அமைந்தது.

போதாக்குறைக்கு உணவு இடைவெளி நேரத்திலும் அவனது விழிகளும் அடிக்கடி அவளை வருடிச் செல்ல அன்றைய தினம் முழுவதும் அவளுக்கு அவஸ்தையாகவே கழிந்தது.

அன்று வீட்டுக்கு வந்தவள் அவன் வரும் நேரத்துக்காக காத்திருந்தாள். அவளை ஏமாற்றாமல் அவனும் வீடு வந்து சேர்ந்தான். ஆனால் வரும் போதே புன்னகை மிளிரும் முகத்துடன் வந்து சஹானாவுக்கு இன்னும் சவாலாக மாறினான்.

வேலையாட்கள் டின்னர் செய்து வைத்துவிட்டு அவரவர் வீட்டுக்குக் கிளம்பிவிட சஹானாவும் அவனும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சர்வேஸ்வரின் கைகள் உணவை வயிற்றுக்கு ஈந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் விழிகள் சஹானா எனும் அழகுப்பதுமையின் எழிலை மனதுக்கு ஈந்து கொண்டிருந்தன.

எவ்வளவு நேரம் தான் கவனியாது போல நடிப்பது? அவளும் உணர்வுள்ள பெண் தானே. அவனது விழியெடுக்காத பார்வையில் தானாய் சஹானாவின் கன்னங்களில் சிவப்பேறியது

கைகள் சாப்பாட்டை அலைந்து கொண்டிருக்க இதற்கு மேலும் அவனது விழிகளின் வீச்சை தாங்கா முடியாதவள் தனது கயல்விழிகளால் கணை தொடுக்க ஆரம்பித்தாள்.

அதன் பின்னரும் சர்வேஸ்வர் அமைதியாக இருப்பானா என்ன

"வாட் ராங் வித் யூ பேப்? இன்னிக்கு நீ கொஞ்சம் ரெஸ்ட்லெஸா இருக்கிற மாதிரி எனக்கு மட்டும் தான் தோணுதா?"

சஹானா தன்னைக் கண்டுகொண்டானே என நுனிநாக்கை கடித்துக் கொண்டபடி தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் அமைதி அவனை இன்னும் சீண்ட வைத்தது.

"இந்நேரம் எரிமலை வெடிச்சிருக்கனும். ஆனா நீ அமைதியா இருக்கிறது எனக்கு கொஞ்சம் விசித்திரமா இருக்கு. வெக்கப்படுறியா பேப்?" 

சஹானா இதற்கு மேல் அமைதி காக்காமல் நிமிர்ந்து பார்த்து "எல்லாமே உன்னால தான்னு தெரிஞ்சும் நீ கேள்வி கேக்கிறியா? டோண்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட். உன்னோட லுக் தான் என்னை ரெஸ்ட்லெஸா மாத்துது. நீ கேசுவலா உன் வேலைய பாரு. நானும் என் வேலைய பாக்கிறேன்" என சொல்லிவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அதன் பின்னர் அவளைச் சோதிக்க விரும்பாமல் அவன் அமைதியாகி விட விட்டால் போதுமென சாப்பாட்டை அள்ளிப் போட்டுக் கொண்டவள் வேகமாக கை கழுவி விட்டு அவர்களின் அறைக்கு சென்றுவிட்டாள்.

சர்வேஸ்வர் அவளின் பரபரப்பையும் சலனத்தையும் ஒருவித உற்சாகத்துடன் வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டவன் டின்னருக்கு பின்னர் வழக்கம் போல சிறிது நேரம் தோட்டத்தில் நடைபோட்டான்.

அன்று பௌர்ணமி. பால்நிலவு தனது வெளிச்சத்தால் பூமிப்பெண்ணை குளிப்பாட்டிக் கொண்டிருக்க தோட்டத்தில் விருட்சங்களில் உள்ள பட்சிகள் படபடவென இறக்கைகளை அடித்தபடி தனது இணையுடன் கூடிக் கழித்தன.

நிலவின் குளிர்ந்த ஒளியை ரசித்தபடி தனது ஆறடி மேனியைத் தீண்டிய வாடைக்காற்றுக்காக கைகளைத் தனது மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டான்.

வெள்ளியை உருக்கியது போன்ற ஒளியைச் சிந்தும் பால்நிலா! கூடவே சிலிர்ப்பை உண்டாக்கும் வாடைக்காற்று! இந்நேரத்தைத் தன்னவளுடன் சேர்ந்து ரசித்துக் களிக்க அவன் மனம் ஏங்கியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இப்போது இல்லை.

நேரம் செல்ல மேகப்போர்வைக்குள் நிலாப்பெண் ஒளிந்து விளையாடிய அழகை போதும் போதுமென்ற அளவுக்கு கண்டு திளைத்தவன் பெருமூச்சுடன் எழுந்து வீட்டுக்குள் சென்றான்.

அவன் அறைக்குள் நுழைந்த நேரம் சஹானா தனது இரவுடையான வெள்ளை நிற குர்தாவின் பின் கொக்கிகளைப் போட சிரமப்பட்டுக் கொண்டிருக்க சர்வேஸ்வரின் பார்வை அவளின் பால்வண்ண வெற்று முதுகை தழுவியது.

அறையின் கதவைச் சாத்தவும் அந்தச் சத்தம் கேட்டு அவள் திரும்பினாள். இப்போது கொக்கி மாட்டாத அந்த குர்தா அவளின் தோளைத் தாண்டி நழுவி விழுந்தது.

இவ்வளவு நேரம் அனுபவித்த இனிய இரவு அவனுள் இளக்கத்தை உண்டாக்கியிருக்க காதல் கொண்ட மனம் அவளின் அழகை ஆராதிக்கும் எண்ணத்தோடு அவளை நெருங்க சொல்லி முரண்டியது.

மெதுவாக அடியெடுத்து வைத்தவனின் கண்கள் என்ன பேசியதோ சஹானா அந்த கண்களை மட்டும் நோக்கியவள் தன்னை நோக்கி வருபவனை சலனத்துடனே எதிர்கொண்டாள்.

அதற்குள் அவள் அருகில் நெருங்கிவிட்டவனின் மூச்சுக்காற்று தணலாய் தகிக்க அவனது விழிகளோ தன்னவளை தாபத்துடன் ஏறிட்டது. சஹானா அவனது மூச்சுக்காற்றின் வெம்மையை உணர்ந்து விழிகளை மலர்த்தி அவனை பார்க்க சர்வேஸ்வர் அவளது வதனத்தைத் தனது கரங்களில் ஏந்தினான்.

அப்போது தான் குளித்திருந்தாள் போல! அவளிடமிருந்து வீசிய லேவண்டர் யாட்லே சோப்பின் நறுமணமும் மூங்கிலை ஒத்த வெற்றுத்தோள்களும் சர்வேஸ்வருக்குள் மறைந்திருந்த காதல் கணவனை உசுப்பிவிட அவளின் இதழை நோக்கிக் குனிந்தான் அவன்.

ஆனால் வழக்கம் போல அவனை விலக்கித் தள்ளாமல் அவனது இதழ் அணைப்பில் கரைய ஆரம்பித்தாள் சஹானா. அன்றைய தினம் முழுவதும் பார்வையால் அவன் கொடுத்த அவஸ்தைகளை விட இந்த இதழணைப்பு இன்னும் அவஸ்தையாய் போய்விட அவனது அருகாமையை அவள் மனம் நாடியது என்னவோ உண்மை!

அத்தோடு தான் சொன்னதற்காக தனது வேலை விவகாரத்தில் அவன் தலையிடாதது வேறு அவளை நெகிழ்த்தியிருந்தது.

சர்வேஸ்வரோ தன்னவளின் இந்த அமைதி கொடுத்த இன்ப அதிர்ச்சியோடு அவளின் சம்மதத்துடன் தான் சுவைக்கும் முதல் இதழணைப்பு என்பதால் உண்டான ஆனந்தமும் சேர்ந்து கொள்ள மீண்டும் மீண்டும் அவளின் இதழை நாடினான்.

மொத்த காதலையும் அவளின் இதழில் காட்டி ஓய்ந்தவன் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற சஹானாவுக்குள் ஒளிந்திருக்கும் பெண்மை வெட்கி நாணியது.

பெண்ணின் வெட்கத்தில் ஆணின் கர்வம் முழுமை பெறும்! அதை போல சஹானாவின் வெட்கத்தில் தனது காதல் மீது உண்டான கர்வத்துடன் அவளைத் தனது கரங்களில் ஏந்தி மஞ்சத்தில் கிடத்தியவன் அத்தனை நாள் காதலையும் ஒட்டுமொத்தமாக அனுபவிக்கும் எண்ணத்துடன் அவளுடன் சங்கமித்தான்.

அவனது இறுகிய அணைப்பிலும் அவன் காட்டிய காதலிலும் திக்குமுக்காடிய சஹானா தன்னவனுடனான தனது மணவாழ்க்கையின் அரிச்சுவடியை அவனிடமிருந்து கற்க ஆரம்பித்தாள்.

அந்தப் பெண் மலருக்கு பள்ளியறை பாடம் கற்றுக் கொடுத்த அந்த ஆண் வண்டு தனது வாழ்நாள் முழுமைக்குமான காதலை ஒற்றை இரவில் மலருக்குப் புரிய வைத்துவிட முயன்று மஞ்சத்தைப் போர்க்களமாக மாற்றியது.

வன்மையும் மென்மையுமாய் நீண்ட கூடலுக்குப் பின் சஹானா எப்போது உறங்கினாள் என்பதை அவள் அறியாள்! அவளை உறக்கத்திலும் விலகவிடாமல் அணைத்திருந்த அவள் கணவனும் அறியான்!

மறுநாள் விடியலில் இருவரும் துயில் கலைந்த நேரம் சஹானாவால் அவனை நேருக்கு நேர் பார்க்க இயலவில்லை. இத்தனை நாட்கள் அவனிடம் சவால் விட்டது, சபதம் போட்டது எல்லாம் ஒரே ஒரு இரவில் மாறி அவனது தொடுகையில் உருகி கரைந்து இப்போது அவன் அணைப்பிலேயே இருப்பதை எண்ணி அவள் வியந்தாள்.

வேகமாக விலக முற்பட்டவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்ட சர்வேஸ்வரின் ட்ரிம் செய்திருந்த தாடியின் உரோமங்கள் அவளின் வெற்றுத்தோளில் கூச்சத்தை உண்டாக்கியது.

அவனது உதடுகளோ அவளின் செவிமடலைக் கொஞ்சி விளையாடியது. அடுத்து அவளின் கன்னத்தில் இளைப்பாறியது.

"இவ்வளவு அவசரமா எங்க போக போற பேப்? என் கூட கொஞ்சம் நேரம் தூங்கு" என்றவனின் தாபம் வழியும் குரலே அவனுக்கு உறங்கும் எண்ணமெல்லாம் இல்லை என்பதை அவளுக்குப் புரியவைத்துவிட்டது.

அதனால் சுதாரித்து எழப் போனவளை மீண்டும் காதலுடன் முற்றுகையிட்ட அந்த மாயக்கள்வன் அவளுடன் மீண்டும் காதல் போரில் ஈடுபட்டு பகலை இரவாக்கினான். அவன் காட்டிய காதலில் உருகி குழைந்த சஹானாவும் கணவனின் அருகாமையில் தன்னைத் தொலைத்து அவனுள் புதைந்தாள், சர்வேஸ்வரின் சஹானாவாக!

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8