15 (உன் பாதி நானடா)




காதல் என்பது சிலருக்கு இனிய கனவு போல நினைத்தாலே தித்திக்கச் செய்யும் அழகான சம்பவங்களுடன் அவர்களின் வாழ்க்கைக்குள் நுழையும். சிலருக்கோ அது ஒரு அதிரடி விபத்தாக தினமொரு மோதலும் பொழுதொரு வாக்குவாதமுமாக அனல் பறக்கும் நிகழ்வுகளோடு ஆரம்பிக்கும்.

சஹானாவும் சர்வேஸ்வரும் இதில் இரண்டாம் ரகம். அவனது கர்வமும் அவளது பிடிவாதமும் இருவரையும் திருமணத்துக்குப் பின்னரும் இணைகோடுகளாகப் பிரித்திருக்க அந்த பிரிவை நீக்கும் கருவியாக அமைந்தது சர்வேஸ்வர் சஹானாவின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான காதல் மட்டுமே!

அந்த காதலால் தான் சர்வேஸ்வர் மீதிருந்த வெறுப்பையும் தாண்டி அவனது அருகாமையில் சஹானா மெய்மறந்து போனாள். அந்தக் காதலால் தான் அவள் மீது இருந்த சினம் எல்லாம் அவனுக்கு கற்பூரம் போல காற்றில் கரைந்து மாயமானது. பெரும் சமுத்திரத்தையொத்த அந்தக் காதலுக்கு முன்னே சஹானாவின் பிடிவாதமும், சர்வேஸ்வரின் கர்வமும் சிதைந்து ஒன்றுமில்லாது போய்விட்டது.

அந்த ஒரு இரவில் ஆரம்பித்த அவர்களின் இல்லறம் வரும் இரவுகளிலும் காதலுடன் தொடர சஹானாவுக்குச் சர்வேஸ்வர் புதியவனாகத் தெரிய ஆரம்பித்தான். ஒரு வேளை மஞ்சள்கயிற்று மேஜிக் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என அவளது மனசாட்சி ஒரு புறம் கேலி செய்தாலும் இரவில் அவனது அருகாமையில் உருகிப் போவது, காலையில் அவன் செய்யும் குறும்புகளில் சிவந்து போவது எல்லாம் சஹானாவுக்கே பிடித்து இருந்தது.

அவனற்ற தனிமைகளில் அவனது செல்லச்சீண்டல்களும், இடையை வருடும் விரல்களின் ஸ்பரிசமும், தோள்வளைவில் தாடை பதித்து நின்று அவளது கன்னத்தில் முத்திரை பதிக்கும் போது நாசியை நிறைக்கும் அவனது ஆப்டர் ஷேவிங் லோசன் மற்றும் பெர்பியூம் கலந்த வாசனையும் சஹானாவை வெட்கப்படுத்தி வேடிக்கை பார்க்கும்.

அவனுடன் இருக்கும் நேரங்களில் தான் இருவருக்கும் வெளியுலகம் பற்றிய சிந்தனை எழுவதே இல்லையே!

சஹானாவின் மாற்றம் இத்தகையது என்றால் சர்வேஸ்வரின் மாற்றம் இதற்கு சற்றும் குறைவானது இல்லை.

கடுமையே உருவானவனை அவனது மனையாளின் நெருக்கம் சற்று இளக்கியிருந்தது. எதையும் அடாவடியாய் அடைந்து பழக்கப்பட்டவனுக்கு இப்போதெல்லாம் பொறுமையும் மென்மையும் பழக்கப்பட்டுவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் பூவை விடவும் மெல்லிய பூம்பாவை தானே! எங்காவது மலரால் பாறையை உடைக்க முடியுமா? ஆனால் இங்கே சர்வேஸ்வர் என்ற பாறையை சஹானா என்ற மலரானது தேவைக்கேற்ப உடைத்து தனது காதலால் அழகிய சிற்பமாக மாற்றிவிட்டதே!

ஆந்திராவில் இருந்து திரும்பிய ஒரு வாரத்தில் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதேயில்லை.

அதிகாலை நேரங்கள் செல்லக்குறும்புகளோடு விடியும். குளியல் கூட காதலோடு தான் முடியும். அலுவலகம் சென்று விட்டால் சஹானாவின் கவனம் வேலையில் பதிந்துவிடும். சர்வேஸ்வருக்கு அது ஒன்று மட்டும் தான் அலுவலகம் என்றில்லை. எனவே அந்த அலுவலகத்துக்கு வருகை தரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவனும் தொழிலில் மூழ்கிப் போனான்.

இடையிடையே ஆந்திராவிலிருந்து குடும்பத்தினர் அழைத்துப் பேசுவர். சர்வேஸ்வரின் தாயார் ஆர்வமாக ஏதேனும் நல்லச்செய்தி உண்டா என கேட்கும் போது சஹானாவுக்கு அடிவயிற்றில் குறுகுறுப்பு உண்டாகும். அந்தப் பெண்மணியின் ஆசை நிறைவேறும் நாளுக்காக அவரோடு அவளும் ஆவலுடன் காத்திருந்தாள்.

கணவனின் காதல் தனக்கு மட்டும் தான் என்பதில் அவளுக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் கிடையாது. ஆனால் எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது. ஒருவேளை ஆரம்பநாட்களில் அவன் காட்டிய வில்லன் முகம் அவளுக்குள் இந்தத் தயக்கத்தை உண்டாக்கி விட்டதோ என்ற சந்தேகமும் அவளுக்குள் இருந்தது.

என்ன தான் சர்வேஸ்வரின் அருகாமையில் உருகினாலும், அவனது இதழணைப்புகளும், இறுகிய அணைப்புகளும் அவளை நெகிழ்த்தி அவனோடு சங்கமிக்க வைத்தாலும் அவளால் அவனுடன் இயல்பாக ஒன்ற முடியவில்லை.

அவனது அருகாமையில் வெட்கிச் சிவப்பவளால் தனது இதயத்துக்குள் அவன் மீதான உணர்வுகளின் அடுத்த நிலைக்குச் செல்ல இயலாது போகவே சஹானா குழப்ப மேகத்துக்குள் தள்ளப்பட்டாள்.

ஒரு வேளை தான் வெறும் உடல் தேவைக்காக வளைந்து கொடுக்கிறோமோ என யோசித்தவளுக்குத் தன்னை எண்ணி அருவருப்பு சூழ்ந்து விட்டது என்னவோ உண்மை! ஆனாலும் அவளால் சர்வேஸ்வரின் அருகாமையைத் தவிர்க்க முடியவில்லை.

"சர்வா எனக்கு என்னமோ செய்வினை வச்சிட்டான் போல. அவனை பாத்தாலே பிடிக்காம இருந்த எனக்கு இப்ப அவன் இல்லாம பொழுதே போக மாட்டுது. அவனோட சிரிப்பு, பார்வை, அப்பப்ப கன்னத்துல குடுக்குற கிஸ் இதெல்லாம் எனக்குள்ள ஏதோ ஒரு மேஜிக்கல் ஃபீலை உண்டாக்குது. அவன் தொட்டா நான் ஏன் இப்டி உருகிப் போறேன்? அவன் தொட்டா செத்துப் போயிடுவேனு சொன்ன பழைய சஹானா எங்க போனா?"

தன்னைத் தானே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் குழம்பிப் போனவள் அதே கேள்விகளைச் சர்வேஸ்வர் வசம் வீசினாள்.

மனைவி வீசிய கேள்விக்கணைகளை பொறுமையாகச் சேகரித்தவன் அவளைத் தனது கரவளையத்துக்குள் கொண்டு வந்தான். அவனது அணைப்புக்குள் வாகாக அடங்கிப் போனவளை உச்சி முகர்ந்தவன் அவளது கண்ணோடு கண் நோக்கி விட்டு "இதுக்கெல்லாம் ஒரே பதில் தான் பேப். நீயும் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட" என்று காதல் வழியும் குரலில் மொழிய சஹானா அவளது கயல்விழிகளை மலர்த்தி அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

"எஸ். யூ ஆர் இன் லவ் வித் மீ. முன்னாடியெல்லாம் நான் உன்னை நெருங்கினாலே உன் கண்ல ஒரு வெறுப்பு தெரியும். நீ என்னை கொன்னுடுவேனு கூட அடிக்கடி மிரட்டுவ. ஆனா இப்போயெல்லாம் நீ நிறைய மாறீட்ட சனா. அதுக்குக் காரணம் ஒன்னு என்னோட காதலா இருக்கலாம். இல்லனா உனக்கு என் மேல வந்த காதலாவும் இருக்கலாம். எது எப்பிடி இருந்தாலும் நீ என் கூட இருந்த எல்லா தருணங்கள்லயும் உன் கண்ல நான் பாத்தது உண்மையான காதல் மட்டும் தான். நீ மனரீதியாவும் உடல்ரீதியாவும் ரொம்ப ஸ்ட்ராங்கானவ சனா. உன்னை உருக வச்சது காதல் மட்டும் தான். அதனால நீ என்னென்னவோ நினைச்சு மனசை குழப்பிக்காத பேப்" என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு செவ்விதழிலும் மென்மையாக தன் இதழை ஒற்றியெடுக்க சஹானாவுக்கு இத்தனை நாட்கள் இருந்த குழப்பம் அகன்றது.

தெளிவாகப் புன்னகைத்தவாறே நிமிர்ந்தவளுக்குத் திடீரென வாட்டமுண்டானது. அதைக் கண்டு சர்வேஸ்வரின் விழிகள் கேள்வியாக விரிய அவளே காரணத்தையும் கூறினாள்.

"நான் ஒன்னு கேட்டா நீ கோவப்படாம பதில் சொல்வியா சர்வா?"

"என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவையில்ல சனா. என்ன வேணாலும் கேளு"

சஹானா அவனது வார்த்தைகளில் தைரியம் பெற்றவளாகி "எனக்கு என் மாமா ஃபேமிலிய பாக்கனும் சர்வா" என்றாள் மெதுவாக.

சர்வேஸ்வர் அவளை கூரிய விழிகளால் ஏறிட அவனது உதடுகள் இறுகிப் போனது. அதைக் கண்டதும் "வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிடுச்சு போல. என் வாழ்க்கைல இனிமே அவங்கள பாக்க முடியாதுங்கிறது தெளிவா தெரிஞ்சு போச்சு" என வெதும்பியபடியே நின்றாள்.

அவள் கணவனோ"போய் தூங்கு பேப். டைம் ஆகுது" என்று மட்டும் உணர்வற்ற குரலில் சொல்லிவிட்டு அகன்றான்.

அதன் பின்னர் அவனிடம் வாதிட அவளுக்குத் தைரியம் இல்லை. எனவே அவன் சொன்னது போலவே உறங்கச் சென்றுவிட்டாள்.

எப்போது அவன் வந்து உறங்கினான் என்பதை அவள் அறியாள். காலையில் எப்போதும் போல அவனது அணைப்பில் தான் கண் விழித்தாள். வழக்கம் போல எழுந்தவளை இறுக அணைத்துக் கொண்டான் சர்வேஸ்வர்.

சஹானாவால் அவனைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவனிடம் இருந்து விலக முயன்றவளைத் தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டவன் "சனா பேப்கு என் மேல கோவம் போல. இந்த கோவம் போகனும்னா ஒரு வழி இருக்கு" என்றபடி அவளை நெருங்கினான்.

சஹானா கண்களை இறுக மூடிக்கொள்ள அவளை தனது கரங்களில் அள்ளிக்கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்தான். அவனது மனைவி என்னவோ ஏதோவென பதறி விழித்தவள் குளியலறைக்குள் நிற்பதைக் கண்டதும் கேள்வியாய் அவனை பார்த்தாள்.

"நார்மலா நீ கோவப்பட்டா ரொம்ப சூடாயிருவ பேப். அதான் உன்னை சில் பண்ணலாம்னு இங்க தூங்கிட்டு வந்தேன்" என்றவன் பேசிக்கொண்டிருக்கும் போதே ஷவரைத் திறந்துவிட்டான்.

சஹானா அவனது பேச்சைக் கவனித்தவள் திடீரென பூஞ்சாரலாக தண்ணீர் விழவும் திடுக்கிட்டு விழிக்க அதற்குள் ஷவரின் சிதறல்கள் அவளை நனைத்துவிட்டது.

தண்ணீரில் நனைந்தவளின் எழில் வளைவுகள் அவன் கண்ணுக்கு விருந்தாக நீரின் குளிர்ச்சியால் நடுங்க தொடங்கியவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் சர்வேஸ்வர்.

நீர்த்துளிகள் அவள் நெற்றியிலிருந்து வழிந்து நாசி கடந்து நாடி தழுவி கழுத்தை நனைத்து செல்வதைப் பார்த்து பெருமூச்சு விட்டவன் "இன்னிக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும். இல்லனா..." என மையலுடன் பேசியவன் அவளது செவிக்குள் தான் செய்ய நினைத்ததை சொல்லிவிட சஹானா இறுக்கம் தளர்ந்து நாணத்தில் சிவந்து போனாள்.

அவனது இதழ்கள் குர்தாவை தாண்டி இடையில் செய்யும் குறும்புத்தனங்கள் அவளை நெளிய வைக்க சிரமப்பட்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். பின்னர் மார்பில் கை வைத்து அவனை வேகமாகத் தள்ளியவள் "ஒழுங்கா குளிச்சிட்டு வா. நானும் குளிச்சிட்டு ஆபிசுக்கு ரெடியாகனும்" என்று அதட்டிவிட்டு வெளியேற முயல அவளது இடையை வளைத்து அணைத்துக் கொண்டான் சர்வேஸ்வர்.

"தனித்தனியா குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு ஒன்னா குளிக்கலாமே பேப்" என்று குறும்புத்தனம் மிளிரும் குரலில் சொன்னவன் சொன்னதை நிறைவேற்றியும் விட்டான்.

செல்லச்சீண்டல்களுடன் குளியல் முடிய இருவரும் அலுவலகம் செல்ல தயாராக சஹானா வழக்கம் போல கம்பெனி கேபிற்கு காத்திருக்க சர்வேஸ்வர் அவளைத் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினான்.

அவளது மறுப்புகள் அனைத்தும் அவனது பிடிவாதத்தின் முன்னே தோற்றுப்போயின.

எதுவும் பேசாமல் அவனது மெர்சிடிஸ் மேபாக்கில் அமர்ந்தவள் கார் எங்கே செல்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அதற்கு மாறாக தீவிரமாக சாலையைக் கவனித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த சர்வேஸ்வரை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தாள்.

கார் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றதில் அது எங்கே செல்கிறது என்பதைக் கவனிக்கத் தவறியவளுக்குக் கார் நின்றதும் பார்வை வெளிப்புறத்தை நோக்கிய போது தான் வந்திருப்பது மாமா வீடு இருக்கும் இடத்துக்கு என்பதே புரிந்தது.

ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிய இதழில் முறுவலை ஒட்டிக் கொண்டபடி காரை விட்டு இறங்கினான் சர்வேஸ்வர். காரைச் சுற்றி வந்தவன் மனைவிக்குக் காரை திறந்துவிட்டான்.

"வா பேப். உன்னோட மாமா ஃபேமிலி உனக்காக வெயிட் பண்ணுறாங்க" என்று சொல்ல சஹானாவுக்கு அவன் சொல்வது உண்மையா பொய்யா என்பது புரியாது விழித்தாள்.

இதற்கு மேல் இவளிடம் விளக்குவதை விட நேரில் அழைத்துச் சென்று காட்டுவதே சிறந்தது என்று எண்ணியவனாக அவளது கையைப் பற்றி வெளியே இழுத்தான். சஹானா அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்து வெளியே வந்து நின்றாள்.

"போலாமா?" என்று கேட்டபடி அவளின் தோளை உரிமையோடு அணைத்துக் கொண்டவன் ரேபானை கண்ணில் மாட்டியபடி நடந்தான்.

அவன் சொன்னது போலவே விசாகா வழி மீது விழி வைத்து காத்திருந்தாள் சஹானாவுக்காக

"சஹா" என்றபடி அணைத்துக் கொண்டவளின் கண்களில் கண்ணீர் லேசாக மின்னியது.

"எப்டி இருக்க சஹா? நேத்து தான் அண்ணா கால் பண்ணார். அப்பயே எனக்கு சந்தோசமா இருந்துச்சுடி. அப்பாவும் அம்மாவும் உங்களுக்குனு தடபுடலா ஏற்பாடு பண்ணிருக்காங்க" என்று அத்தனை நாட்கள் பேசாத அனைத்தையும் படபடவென கொட்டித் தீர்த்தாள்.

மனைவியை அவள் உரிமையுடன் அணைத்திருப்பதை சிறு பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சர்வேஸ்வரின் விழிகளுக்கு அத்தை மகளைக் கண்டதால் மனைவியின் முகத்தில் மின்னிய சந்தோசமும் தப்பவில்லை.

அவள் முகம் பூவாக விகசிக்க அவனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும்

விசாகா பேசிக்கொண்டிருக்கும் போதே "என்னம்மா விசாகா வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கவங்களை வெளியே நிறுத்தி வச்சு பேசுற?" என்றபடி தயானந்தன் ஆனந்தத்துடன் அங்கே வர அவருடன் கலாவதி கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார்.

சஹானாவுக்கு மாமாவைக் கண்டதில் ஆனந்தம் தான். ஆனால் அதை விட தன்னிடம் முகம் காட்டும் அத்தை இப்போது ஆரத்தியுடன் வருவது பேரானந்தத்தைக் கொடுத்தது.

சர்வேஸ்வர் செய்த அதிரடியும் அதன் பின்னர் சஹானா அழுது ஓய்ந்ததையும் கண்ட தினத்திலேயே கலாவதிக்கு மனதில் ஒரு நெருடல் உண்டாகிவிட்டிருந்தது.

அவரும் ஒரு பெண்பிள்ளைக்கு தாயார் தானே. எனவே தினந்தோறும் அவளுக்குக்காக கடவுளிடம் வேண்டுதல் வைத்துக்கொள்வார்

திடீரென முந்தைய இரவில் சர்வேஸ்வர் கணவருக்கு அழைக்கவும் என்னவோ ஏதோ என பயந்தவர் மறுநாள் காலையில் தானும் சஹானாவும் அவர்களைச் சந்திக்க வருவதாகச் சொல்லவும் நிம்மதியுற்றார்.

"ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க" என ஆணையிட்ட கலாவதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டுச் செல்ல தயானந்தன் தங்கை மகளின் கணவனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார்.

அவர்களின் பின்னே கலாவதியும் வந்துவிட விசாகா சஹானாவைத் தன்னுடன் தனது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.

பெரியவர்களுடன் தனித்துவிடப்பட்ட சர்வேஸ்வர் நடந்து முடிந்த சம்பவங்களை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவன் தயானந்தனின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

"ஐயாம் ரியல்லி சாரி சார். உங்க ஃபேமிலிய நான் ரொம்ப அவமானப்படுத்திட்டேன். அப்ப நான் சனா மேல இருந்த கோவத்துல யோசிக்காம நிறைய முட்டாள்தனம் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க"

இதற்கு முன்னே மன்னிப்பு கேட்டுப் பழக்கமில்லாத காரணத்துடன் அவனது தமிழும் சுமார் ரகம் தான் என்பதால் தயானந்தன் அவனை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டார்.

கூடவே கலாவதியிடமும் பணக்கட்டை நீட்டி அவரது மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டான்.

அவர்கள் ஹாலில் பேசிக்கொண்டிருக்கும் போது விசாகா சஹானாவிடம் அவளது ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

"சஹா உன்னோட புகுந்தவீட்டுக்காரங்க எப்டிப்பட்டவங்க? உங்க மேரேஜ் பத்தி அவங்க எதுவும் சொல்லலையாடி?"

"அவங்க எல்லாருமே ரொம்ப நல்ல மாதிரிடி. சர்வாவோட தாத்தா பாட்டியை பார்த்தாலே தெரியும், தே ஆர் மேட் ஃபார் ஈச் அதர்னு. அவ்வளவு அன்னியோன்யம், அவ்வளவு அன்பு. அத்தை மாமா, பெரியத்தை பெரிய மாமா, லோகேஷ் மாமா, அனுபமாக்கா எல்லாருமே ரொம்ப அன்பானவங்க. பாரம்பரியமான குடும்பம், அவங்களுக்கு அந்தக் கிராமத்துல நல்ல மரியாதை இருக்குடி"

மூச்சுவிடாது புகுந்தவீட்டாரைப் புகழ்ந்து தள்ளிய சஹானாவின் பேச்சை மனநிறைவுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் விசாகா.

அதன் பின்னர் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விருந்தோம்பல் ஆரம்பித்தது. எப்போதுமே சோம்பிக் கிடக்கும் தனது அத்தையா இத்தனை தினுசு உணவுவகைகளைச் சமைத்தது என சஹானாவே ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

சர்வேஸ்வரோ உணவை ஒரு பிடி பிடித்தவன் அவ்வபோது ஹாஸ்யமாய் கொஞ்சுதமிழில் பேசி அனைவரையும் சிரிக்க வைக்க அந்தக் காட்சியைக் கண்டவளுக்கு சந்தோசத்தில் கண்ணீர் வந்துவிட்டது.

இந்த நாள் தனது வாழ்வில் வருமா என்று கூட அவள் யோசித்திருக்கிறாள். ஆனால் வந்துவிட்டது.

எவ்வளவு சந்தோசத்துடன் வந்தார்களோ அதே அளவு சந்தோசத்துடன் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

கிளம்பும் முன்னர் தயானந்தனிடம் பேசிய சர்வேஸ்வர் "கூடிய சீக்கிரமே நீங்க என் ஃபேமிலிய மீட் பண்ணனும். நானே அதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். அதோட இன்னொரு முக்கியமான வேலையும் பாக்கி இருக்கு. அதையும் ரெண்டு குடும்பத்து பெரியவங்களும் இருக்கப்ப தான் செய்ய முடியும்" என பொடி வைத்து பேசிவிட்டு விடை பெற்றான்.

நிறைந்த மனதுடன் காரில் அமர்ந்த சஹானா தன்னருகில் அமர்ந்தவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள். அவன் எதிர்பாரா சமயத்தில் தனது இதழ்களை அவன் கன்னத்தில் புதைத்தவள் "தேங்க்யூ சோ மச் சர்வா. இன்னிக்கு நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஐயாம் வெரி ஹாப்பி டு பீ யுவர் பெட்டர் ஹாப். எஸ், உன்னோட சரிபாதிடா நான்" என்று ஆனந்தக் கண்ணீருடன் உரைத்தாள்.

அவளின் கணவனோ "பாதி மட்டும் இல்லை பேப். என்னோட முழு உருவமும் நீ தான். உனக்கு மட்டும் தான் நான் சொந்தம். உனக்கான அங்கீகாரத்தை நான் முறைப்படி வாங்கி தருவேன்" என்று சபதமிடுவது போல உரைத்தவன் அதே வேகத்துடன் அவளின் இதழை முற்றுகையிட்டு தனது காதலின் தீவிரத்தைப் புரியவைத்தான்.

மொத்தத்தில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் காதல் பறவைகளாக மாறி வாழ்க்கை வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தனர்

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8