அத்தியாயம் 1




சென்னை சேப்பாக்கம் மைதானம்

ஸ்டேடியம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி. இது வரை நடந்து முடிந்த தொடர்களில் இரு அணிகளும் சம வாய்ப்புக்களுடன் முன்னிலை வகிக்க இன்றைய போட்டி தான் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கப் போகிறது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சரத் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தான். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயிரைக் கொடுத்து விளையாடி முன்னூறு ரன்களை எடுத்திருந்தனர். எட்டு விக்கெட் இழப்புக்கு முன்னூறு ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருக்க இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

ஆட்டம் சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்க இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளித்து இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் கடைசிப்பந்து மட்டும் மிச்சமிருக்கும் போது எடுத்த ரன்கள் இருநூற்று தொண்ணூற்று ஒன்பது. அந்த ஒரு பந்தில் தான் இரு அணிகளின் வெற்றி தோல்வியும் இருந்தது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் அதை வெறுமெனே அடித்து ஓடி ஒரு ரன் எடுத்தாலும் அவர்கள் தான் வெற்றி பெறுவர் என்ற நிலை. அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் சரத் சர்மா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று பெயர் வாங்கிய சுழற்பந்து வீச்சாளனான அவனைக் களமிறக்கினான்.


இரு அணிகளின் ரசிகர்களும் நகம் கடித்துக் கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்று திக்திக்கென்ற மனநிலையும் வைத்தக் கண் அகற்றாமல் மைதானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அப்போது தனது கடல் நீல வண்ண ஜெர்சியின் காலரை பின்னோக்கி இழுத்துவிட்டபடி அவன் மைதானத்தில் இறங்கி நடக்க, ஸ்டேடியம் எங்கும் "முன்னா! முன்னா!" என்ற ரசிகர்களின் ஆனந்தக்கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது.

கிரிக்கெட் வீரனுக்கே உரிய கட்டுமஸ்தான தேகம். ஆறடியை மிஞ்சிய உயரம். ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் பார்ப்பதற்கு வட இந்தியனைப் போல தோற்றமளித்தாலும் அக்மார்க் தமிழன் அவன். அடங்காமல் நெற்றியில் புரளும் அவனது அடர்சிகை சிங்கத்தின் பிடரிமயிறை நினைவுறுத்தியது. 

அவனது கூரியவிழிகளில் கணக்கீடுகள் ஓடிக் கொண்டிருந்தது. பந்து பொதிந்திருந்த உள்ளங்கையால் தனது தாடையைத் தடவியபடி கிரிக்கெட் பிட்சை அடைந்தான் இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளனும் ஆல்ரவுண்டருமான இருபத்தேழு வயது முகுந்த் ரவீந்திரன். அவனது தாயார் வைத்த செல்லப்பெயரான முன்னா இன்று அவனது ரசிகர்களாலும் கொண்டாடப்படும் அவனது பெயர் சுருக்கம் தான்.

இங்கிலாந்து பேட்ஸ்மேனின் நீலநிற விழிகள் முகுந்தை நோக்க மாறாக முகுந்தின் கண்களோ அம்பெய்திய அர்ஜூனனுக்கு மரக்கிளையில் உள்ள பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போல ஸ்டம்பை மட்டுமே குறி வைத்திருந்தது.


பேட்ஸ்மேனுக்குப் பின்புறம் விக்கெட்கீப்பராக நின்று கொண்டிருந்த கேப்டன் சரத் சர்மாவுக்குக் கண்சிமிட்டலைச் சைகையாக அளித்தவன் ஓடிவந்து வீசிய பந்து இங்கிலாந்து பேட்ஸ்மேனின் மட்டையைத் தீண்டாது ஸ்டம்பில் பட்டு அதைத் தெறிக்க வைக்க அம்பயர் ஒரு விக்கெட் போய்விட்டது என அவரது சமிக்ஞை மொழியில் சொல்லவும் மைதானத்தில் இந்தியவீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த நொடியே அறிவிப்பாளர் "இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு இருநூற்று தொண்ணூற்று ஒன்பது ரன்கள் என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் தோற்றது" என அறிவிக்க அரங்கமெங்கும் இந்தியக்கொடிகளுடன் ரசிகர்களின் ஆரவாரக்கூச்சலுக்கிடையே கேப்டன் சரத் சர்மா மற்றும் ஸ்பின்னர் முகுந்தின் பெயர் தாரக மந்திரம் போல ஒலிக்க ஆரம்பித்தது.

அனைத்து வீரர்களும் முகுந்தை சூழ்ந்து கட்டி அணைத்துக் கொள்ள சரத் சர்மா அவனிடம் வந்தவன் "வெல்டன் மை பாய்" என்று சொல்ல

"தேங்க்யூ மை டியர் கேப்" என்றவன் அவனைக் கட்டிக் கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் சரத் சிங் கோப்பையை அணியின் இளம்வீரர்கள் வசம் ஒப்படைக்க அவனது தோளில் கை போட்டபடி முகுந்த் நிற்க மற்ற அனைவரும் ஒன்றாய் சேர்ந்து கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.

அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து உடை மாற்றும் அறைக்குச் சென்ற போதும் அவர்களின் உற்சாகம் குறையவில்லை. 

அப்போது கதவைத் தட்டிய கிரிக்கெட் போர்டின் ஊழியர் கேப்டனின் மனைவி அவருக்காக காத்திருப்பதாகச் சொல்ல அந்த அறையிலிருந்த இளம் வீரர்கள் கேப்டனைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.

அவனும் அவர்களின் கேலிக்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்துவிட்டு உடை மாற்றினான். அனைவரும் வெளியே வர அங்கே சரத் சர்மாவின் மனைவி சோனாக்ஷியும் அவனது ஒன்றரை வயது மகனும் அவனுக்காக காத்திருந்தனர்.

அவளைப் பார்த்ததும் "ஹவ் ஆர் யூ சோனா பாபி?" என்ற நலம்விசாரிப்புகளுடன் இளம் வீரர்கள் கேப்டனையும் அவளையும் சூழ்ந்து கொள்ள அவர்களின் ஒன்றரை வயது மகன் சந்தீப் முகுந்தின் தோளில் அமர்ந்திருந்தான்.

அந்த அணியின் வீரர்கள் அனைவருக்கும் கேப்டன் மீதும் அவனது மனைவி மீதும் மிகுந்த மரியாதை. அவளுக்கும் அவர்களிடம் நல்ல நட்புறவு இருக்கவே மலர்ந்த வதனத்துடன் அவர்களின் கேள்விக்கணைகளுக்குப் பதிலளித்தபடியே அவர்களின் கேலிக்கிண்டல்களை அவர்களுக்கே திருப்பிவிட்டாள்.

அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் அவர்களுக்கென புக் செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்தனர். வெளியே நிருபர்களின் கூட்டம் முண்டியடிக்க கேப்டன் சரத் சர்மா அனைவருக்கும் பதிலளிக்க ஆரம்பித்தான்.

நிருபர்களின் பார்வை சந்தீபை தூக்கிக் கொண்டு நின்ற முகுந்தின் மீது படவே அவன் "நோ மோர் கொஸ்டீன்ஸ் ப்ளீஸ். எதுவா இருந்தாலும் கேப் பதில் சொல்லுவார்" என்று அவனுக்கே உரித்தான மறுக்க முடியாத கணீர் குரலில் சொல்லிவிட அவனை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்ததுடன் நிறுத்திக் கொண்டனர்.

ஏனெலில் அவன் கேப்டன் சரத் சர்மாவைப் போல பொறுமைசாலி அல்ல. ஏடாகூடமாய் கேள்வி கேட்ட நிருபர்களிடம் அவனும் அலட்சியமும் திமிருமாகவே நடந்து கொள்வான். 

அதிலும் அவனது சொந்தவாழ்க்கை பற்றிய கிசுகிசுக்களும் தோண்டித் துருவும் கேள்விகளுக்கும் அவனது பதில்கள் வெகு அலட்சியமாகவே வந்து விழும். எனவே நிருபர்கள் புகைப்படத்தோடு ஒதுங்கிக் கொண்டனர்.

அதன் பின்னர் அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்ப முகுந்த் மட்டும் சரத் சர்மாவிடம் பேச ஆரம்பித்தான்.

"என்னோட பீச் ஹவுசுக்குக் கிளம்புறேன் கேப். பார்ட்டி ஈவினிங் தான? அப்ப வந்து உங்களோட சேர்ந்துக்கிறேன்"

"எங்களோட லஞ்ச் சாப்பிட்டுக் கிளம்பலாமே முன்னா" இது சோனாக்ஷியின் வேண்டுகோள்.

"இன்னைக்கு நைட் டின்னரை உங்களோடவும் கேப் கூடவும் தான் ப்ளான் பண்ணிருக்கேன் சோனா பாபி. நவ் ஐ ஹேவ் டு கோ தேர். கொஞ்சம் சில் பண்ணிட்டு வரேன்" என்றவனை சரத்தும் சோனாக்ஷியும் சிரித்த முகமாக வழியனுப்பி வைத்தனர்.

முகுந்த் தனது அறைக்குத் திரும்பியவன் பீச் ஹவுசுக்குப் போனில் அழைத்துத் தனது காரை ஹோட்டலுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டான். கூடவே பணியாட்களுக்கு விடுமுறை அறிவித்தவிட்டு உடை மாற்றத் தொடங்கினான்.

சாம்பல் வண்ண ஹென்லே டீசர்ட்டும் கருப்பு நிற ஜீன்சும் அணிந்து கால்களில் அதே கருப்புநிறத்தில் போட் ஷூவை திணித்துக் கொண்டான். தனது உடமைகளை எடுத்துக் கொண்டவன் செக் அவுட் செய்துவிட்டு ஹோட்டல் லாபியை அடைந்து சாவியை ஒப்படைத்தான்.

செல்லும் முன்னர் ஹோட்டலின் வரவேற்பு பெண்ணுக்கு ஒரு கண்சிமிட்டலைப் பரிசாக கொடுத்துவிட்டு அவனுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற மெர்சிடிஸ் மேபாக்கில் அமர்ந்தான்.

அதைக் கிளப்பியவன் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள அவனது பீச் ஹவுசுக்குச் செல்லும் வழியில் காரை விரட்டினான்.

அப்போது செல்போன் சிணுங்க யாரென தொடுதிரையை நோக்கியவன் அழைத்தது அவனது அன்னை ரோஷிணி என்றதும் குறுநகையுடன் காதின் ப்ளூடூத்தை அழுத்தினான்.,

"கங்கிராட்ஸ் முன்னா. இன்னைக்கு உங்க டீம் வின் பண்ணிடுச்சுனு இப்ப தான் நியூஸ் சேனல்ல பாத்தேன். ஐ அம் ரியலி ப்ரவுட் ஆஃப் மை சன். லவ் யூ பேட்டா" என்றார் அவனது அன்னை.

மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றின் தலைமைப்பதவியிலிருக்கும் அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால் தனது மைந்தனுக்காக அந்த விளையாட்டை ஆர்வத்துடன் ரசிப்பார்.

அவர் மட்டுமல்ல, அவரது கணவரும் மஹாராஷ்டிராவின் மிகப்பெரிய பங்குவர்த்தனை நிறுவனத்தின் நிறுவனருமான ரவீந்திரனும் அவ்வாறே. இருவரும் தங்களின் ஒற்றை மைந்தனின் சந்தோசத்தை மட்டுமே குறிக்கோளாக கருதும் ரகத்தினர்.

வேண்டிய பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடுகளத்தில் வியர்வை சிந்த விளையாடும் கிரிக்கெட்டில் மைந்தனது மனம் பிரேமை கொண்ட போது அவனது சந்தோசத்துக்காக ஒத்துக்கொண்டனர்.

அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் முகுந்த் தனது பிடிவாதத்திலிருந்து பின்வாங்கியிருக்க மாட்டான். அவனைப் பொறுத்தவரை கிரிக்கெட் மட்டையும் பந்தும் அவனது முதல் காதல். அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் அவனுக்குக் கிடையாது. கிரிக்கெட்டில் மட்டும் தான் இப்படி என்றில்லை. இயல்பிலேயே எதன் மீதாவது ஆசை கொண்டால் அதை அடையும் வரை ஓயமாட்டான்.

அடைந்த பின்னரோ அந்தப் பொருளுக்கு ஏகபோக உரிமையாளன் என பிரகடனப்படுத்திக் கொள்வான். இந்தக் குணம் அவனோடு ஒட்டிப் பிறந்தது.

காலப்போக்கில் கிரிக்கெட் மீதான அவனது பிரேமை தீராக்காதலாக உருவெடுத்து அவன் இந்திய அணியில் இடம் பிடித்தபோது அவனை விட அதிகம் மகிழ்ந்தவர்கள் அவனது பெற்றோரே.

"தேங்க்யூ மாம். என்னை தமிழ்ல பேசுனு கண்டிக்கிற நீங்களே ஹிந்தில பேசுனா என்ன அர்த்தம்?" என அன்னையை மடக்க

"உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமாடா? எனி ஹவ், எப்ப மும்பைக்கு ஃப்ளைட் ஏறப் போற?" என அவர் வினவ

"இன்னும் ஒன் வீக் கழிச்சு தான் மாம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேனே" என்றான் அவன்.

"ஓகே முன்னா. டேக் கேர். நான் சொல்லுறது புரியுதுல்ல?" என்றவர் கொக்கியோடு கேள்வி கேட்க

அவனோ "டோண்ட் ஒரி மாம். நீங்க டாடிய பாத்துக்கங்க. டாக் யூ லேட்டர். பை" என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

அன்னை சொன்னதன் அர்த்தம் விளங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இந்த ஜென்மத்தில் அவனுக்கு இல்லை. 

வாழ்க்கை வாழ்வதற்கே எனும் பட்சத்தில் அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழாமல் எதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளைப் பூட்டிக் கொள்ள வேண்டும்!

அதிலும் அவன் முகுந்த் ரவீந்திரன். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு இளம்பெண்ணின் கனவு நாயகன் அவன். அவனது ரசிகைகளில் எத்தனை பேர் அவனுக்காக மட்டும் கிரிக்கெட் பார்க்கின்றனர் என்பதை அவனது ஒவ்வொரு இன்ஸ்டகிராம் நேரலையின் போது பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அத்தோடு அவனது ஆண்மை கலந்த அழகில் மயங்காத பெண்களே இல்லை எனும் போது தானாக வந்து அவனை அணுகும் எந்தப் பட்டாம்பூச்சியையும் அவன் நிராகரித்தது இல்லை. 

இதனாலேயே அவனைப் பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் உலா வருவது சகஜமாகி விட்டது. ஆனால் ஒன்று அவனை நாடி வரும் எந்தப் பட்டாம்பூச்சிக்கும் தன்னை முழுவதுமாய் பட்டா போட்டுக் கொடுக்கும் எண்ணமோ, அல்லது வாழ்நாள் முழுமைக்கும் உரிமைக்காரியாக அங்கீகரிக்கும் எண்ணமோ அவனுக்கு இல்லை.

அவனது இந்த இலகு வாழ்க்கை பெற்றோருக்கு கவலையை உண்டாக்கினாலும் தானாக மாறிவிடுவான் என்ற நம்பிக்கை. கூடவே சரத் சர்மா திருமணமாகி மனைவி குடும்பம் குழந்தையென வாழ்வதைச் சுட்டிக் காட்டுவர்.

ஆனால் முகுந்தோ "கேப் எப்பயுமே கிரேட் தான் மாம். பட் நான் கேப் இல்லயே. என்னோட லைப் ஸ்டைலுக்கு மேரேஜ் செட் ஆகாது" என்று தோளைக் குலுக்கிவிட்டு சென்று விடுவான். அத்தோடு ஒரே பெண்ணோடு வாழ்நாள் முழுவதும் குப்பை கொட்டுவதில் அவனுக்குப் பிரியமில்லை என்றும் திறந்த மனதுடன் சொல்லிவிடுவான்.

இன்று வரை இந்த வாழ்க்கை முறை அவனுக்குச் சலிக்கவில்லை. என்று சலிக்கிறதோ அன்று பெற்றோர் சொன்னதை போல திருமணம் என்ற ஆயுள் தண்டனையை ஏற்க அவன் தயாராவான். 

இதோ அவனது பீச் ஹவுஸ் வந்துவிட்டது. அவனுக்கு மட்டுமே சொந்தமான எல்லை இப்போது ஆரம்பிக்கிறது. அங்கே அவனைத் தவிர வேறு யாரும் வருவதற்கு அனுமதி இல்லை. 

மதியநேரம் முடிந்து மாலை நெருங்கும் நேரம். காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனது முகத்தில் மோதிய கடல் காற்று இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தைத் தளர்த்தியது.

கூந்தலைச் சிலுப்பியபடி பீச் ஹவுசுக்குள் நுழைந்தவன் தனது கட்டளைக்கேற்ப பணியாட்கள் சென்றுவிட்டதை மனதுக்குள் மெச்சியபடியே தரைத்தளத்திலுள்ள தனது அறையை அடைந்தான்.

மூன்று பக்கம் சுவரும் ஒரு பக்கம் முழுக்க முழுக்க கண்ணாடியாலும் அமைந்த அந்த அறையிலிருந்து பார்த்தால் பொன்மணல் பரப்பும் அதைத் தொட்டு விளையாடும் நீலக்கடலில் நுரை பொங்கும் அலைகளும் கண்ணுக்கு விருந்தாக அமையும்.

அதை ரசித்தபடியே குளியலறைக்குள் நுழைந்தவன் குளிர்நீரில் குளித்துவிட்டு கையில்லாத வெள்ளை நிற டீசர்ட்டும் அதே வெள்ளை நிறத்தில் ஷார்ட்சும் அணிந்து கொண்டு அக்கடாவென சோபாவில் சரிந்தான்.

சிறிது நேரம் டீவி பார்த்துப் பொழுதை நெட்டித் தள்ளியவன் மாலை வந்து விடவே வீடியோ கேமை விளையாடத் தொடங்கினான். அப்போது செல்போன் சிணுங்கவும் போனை நோக்கியவன் அழைத்தவளின் பெயரைப் பார்த்ததும் புன்னகையில் உதடு வளைய போனை காதுக்குக் கொடுத்தான்.

"ஹலோ பேபி ஹவ் ஆர் யூ?" என்றவனுக்கு மறுமுனையில் இருந்து கொஞ்சல் மொழியுடன் பதில் வந்தது.

"ஐ அம் நாட் டூயிங் வெல் முகுந்த். ஐ மிஸ் யூ டியர். எனக்கு உங்களை பாக்கனும் போல இருக்கு. லாஸ்ட் டைம் டோர்னமெண்டுக்கு நீங்க வந்தப்ப நம்ம ஸ்பெண்ட் பண்ணுன நைட்ட இப்ப வரைக்கும் என்னால மறக்க முடியல முகுந்த்" என்றவளின் கிறக்கமான குரலில் சிரித்தவன்

"சில் சாயா பேபி. நான் பீச் ஹவுஸ்ல தான் இருக்கேன். இன்னும் ஒன் வீக் சென்னைல தான் இருக்கப் போறேன்" என்றதும் மறுமுனையில் இருந்தவள் பரபரப்படைந்தாள். 

இன்னும் அரை மணி நேரத்தில் தான் அங்கிருப்பேன் என வாக்களித்தவள் அழைப்பைத் துண்டிக்கவும் முகுந்த் தாடையைத் தடவி சிரித்துக் கொண்டவன் உடனே சரத் சர்மாவுக்கு அழைத்து இன்று இரவு பார்ட்டிக்குத் தன்னால் வர முடியாது என தகவல் சொல்லிவிட்டான்.

அவளை அவன் முதலில் சந்தித்தது ஷாம்பூ விளம்பரப் படப்பிடிப்பில். அவனைச் சந்தித்ததும் அவனுக்காகவே கிரிக்கெட் பார்ப்பதாகச் சொல்லி தாஜா செய்து அவனது நட்பு வட்டாரத்தில் நுழைந்தாள். அவனுடன் ஒட்டிக்கொள்ள முயன்றவளிடம் "ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்" என்பதை முகுந்த் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டான்.

அதற்கெல்லாம் சம்மதித்த பின்னர் தான் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். இருவருக்குமே இதில் தவறு இருப்பதாக இந்நாள் வரை தோன்றியதில்லை.அவனுடன் சேர்ந்திருப்பதால் விளம்பரப் படவுலகில் இப்போது சாயா தான் மகாராணி. அதே போல சாயாவுடன் இருக்கும் சமயங்கள் அவனுக்கு ஒரு இளைப்பாறுதல். இவ்வாறு இருவருக்குமிடையே உள்ள உறவு 'கிவ் அன்ட் டேக் பாலிசி' போல் தான்.

பின்னர் வீடியோ கேமில் மூழ்கியவனுக்கு நேரம் போனதும் தெரியவில்லை. அந்தச் சாயா என்பவளிடம் பேசியதும் நினைவில் இல்லை.

விளையாட்டில் மூழ்கியிருந்தவனின் கன்னத்தில் திடீரென உதட்டுச்சாயத்தின் பிசுபிசுப்புடன் கூடிய முத்தம் ஒன்று வைக்கப்பட அவள் வந்ததை உணர்ந்தவன் திரும்பிப் பார்க்க அங்கே நின்றவள் சாயாவே தான்.

பால் வண்ண மேனியின் அழகை இன்னும் அதிகரிக்கும் பேபி பிங்க் நிற ஆஃப் ஷோல்டர் கிராப் டாப்பும் நீலநிறத்தில் ஜீன்ஸ் ஷார்ட்சும் அணிந்தவளின் சந்தன வண்ண இடை அழகும் இருக்கிற அழகை மிகைப்படுத்திக் காட்டும் அவளது ஒப்பனையும் முகுந்துக்கு புன்னகையை வரவழைத்தது.

அவள் அவனருகே அமர்ந்து அவனது கன்னத்தை வருடியபடியே "ஐ மிஸ் யூ முகுந்த்" என்று தாபத்துடன் உரைக்க அவளது விழிகள் கையற்ற பனியனுக்கு வெளியே தெரிந்த அவனது புஜங்களில் படிந்தது.

"ஒவ்வொரு தடவை பாக்குறப்பவும் இவன் மட்டும் எக்ஸ்ட்ரா ஹாண்ட்சம்மா தெரியுறானே" என்றவளின் ஏக்கப்பெருமூச்சில் அந்த பீச் ஹவுசின் சென்ட்ரல் ஏசி கூட தகிக்க ஆரம்பித்தது.


ஆனால் அதை எல்லாம் யோசிப்பதற்கு முன்னர் முகுந்தின் உதடுகள் அவளது உதடுகளைக் கவ்விக் கொள்ள அவனது விரல்கள் அவளது கிராப் டாப்புக்கும் ஷார்ட்சுக்கும் இடையே தெரிந்த சந்தனவண்ண இடையில் ஊர்வலம் வர ஆரம்பித்தது.

அப்படியே அவளுடன் அறைக்குள் சென்றவன் மஞ்சத்தில் அவளை இட்டு முழுவதுமாக ஆளத் தொடங்கினான். 

அந்த இரவில் வழக்கம் போல துளி கூட காதல் என்பது இல்லாத வெறும் காமமும் வேட்கையும் மட்டுமே நிறைந்த இருவரின் உடல்கள் மட்டும் கூடிச் சங்கமித்துக் கொண்டன.

கூடலாய் கழிந்த இரவின் களைப்பில் காலையில் நேரம் கழித்து விழித்த சாயா முகுந்தைத் தேட அவனோ உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெற்று மார்பில் வியர்வை வழிய ஷார்ட்சுடன் அவனது அறைக்கு வந்தான்.

அவனது அக்மார்க் மேக்னடிக் புன்னகயை வீசி "குட்மானிங் பேபி" என்றவனின் சிரிப்பு மீண்டும் அவளுக்குள் தாபத்தை விதைக்க மனமோ இது வாழ்நாள் முழுவதும் நீளவேண்டுமென அவளை நச்சரிக்க ஆரம்பித்தது.

"முகுந்த் நம்ம ஏன் மேரேஜ் பண்ணிக்க கூடாது?" என்றவளின் கேள்வியில் முதலில் திகைத்தவன் பின்னர் அடக்கமாட்டாமல் நகைக்க ஆரம்பித்தான்.

சாயா அதில் குழம்பி விழிக்க அவனோ "எனக்கு மேரேஜ்ல இஷ்டமில்லனு உனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் இப்பிடி கேட்டா என்ன அர்த்தம் பேபி?" என வினவ

"நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல கம்பேட்டபிளிட்டி இருக்கு முகுந்த். என்னால உங்கள பிரிஞ்சு இருக்க முடியும்னு தோணல" என்றாள் அவள் மையலுடன்.

ஆனால் அவனோ "ஆனா நான் ஒன்னும் உன்னோட ஃபர்ஸ்ட் பார்ட்னர் இல்லயே. உன்னோட லைப் ஸ்டைலுக்கு மேரேஜ் செட் ஆகாது பேபி. அதே மாதிரி என்னையும் மேரேஜ்ங்கிற சிறைக்குள்ள அடைக்கப் பாக்காத. அண்ட் ஒன் மோர் திங் இனிமே உனக்கும் எனக்கும் எந்த கனெக்சனும் இல்ல. இது தான் இந்த பீச் ஹவுசுக்கு நீ வந்த கடைசி முறை. இனிமே உன்னோட காலடி இங்க படவே கூடாது" என்றவன் அவளுக்கென வாங்கி வந்த பிளாட்டினத்தில் வைரக்கற்கள் பதித்திருந்த கழுத்தணி அடங்கிய வெல்வெட் பெட்டியை அவளிடம் திணித்தான்.

அவள் இவ்வளவு நேரம் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டு வைரங்களின் ஜொலிப்பில் வாயைப் பிளந்துவிட்டு "வாவ் ரொம்ப அழகா இருக்கு முகுந்த். நம்மளோட பிரிவை கூட இவ்வளவு அழகா நீங்க சொன்ன விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. எனி ஹவ் எப்பயுமே நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம். அதுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே" என்று கேட்க அவன் இல்லையென மறுப்பாய் தலையசைத்துவிட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் கிராப் டாப்பும் ஷார்ட்சுமாய் வந்தவள் தனது கைப்பையில் வெல்வெட் பெட்டியை வைத்தபடியே புன்னகை முகத்துடன் அவனிடமிருந்து விடை பெற்றாள். இனி அவளுக்கு இங்கே என்ன வேலை! இன்று விளம்பரத்துக்கான ஷூட்டிங் வேறு இருக்கிறது என அவளது வேலை நினைவில் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் சென்ற பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட முகுந்த் "இனிமே கேர்ள்ஸ் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் முன்னா. இல்லனா உன்னையும் மேரேஜ் ஜெயில்ல தள்ளிடுவாங்க" என்று சொல்லிக் கொண்டான்.

பின்னர் குளித்து உடை மாற்றியவன் வழக்கம் போல சென்னைக்கு வந்தால் ராயல் என்பீல்டை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவதற்கு தயாரானான். கூடவே தலைக்கவசம் வேறு. யாரும் அடையாளம் கண்டுகொண்டு கூட்டம் போட்டுவிடக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் தான்.

ராயல் என்ஃபீல்டுடன் பீச் ஹவுசை விட்டு வெளியேறியவனைப் பார்த்து அவனது தலைவிதி கேலியாகச் சிரித்தது. இன்னும் சில நிமிடங்களில் அவனது தலையெழுத்தையும் இயல்பையும் மாற்றியமைக்கப் போகிறவளை அவன் சந்திக்கப் போகிறான் அல்லவா! 

அத்தோடு காதலும் கல்யாணமும் ஆகவே ஆகாது என்று சூளுரைப்பவன் அவள் மீது கொண்ட காதலில் பைத்தியம் ஆகப் போவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துவிட்டது அவனது தலைவிதி.




Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8