2 (முதல் சந்திப்பு)
காலை நேரம்!
பங்களாவைச் சுற்றியிருந்த தோட்டத்திலிருந்து பறவைகளின் கானம் காதை இதமாக வருட துயில் கலைந்தாள் சஹானா. மெத்தைக்குள் புதையுண்டிருந்த பூமேனியாளுக்கு அதிலிருந்து எழுந்திருக்கும் எண்ணம் இல்லை. ஆனால் எவ்வளவு நேரம் தான் புரண்டுகொண்டிருப்பாள். மெதுவாக விழிகளை மலர்த்தி அறையை நோட்டமிட்டவளுக்கு சர்வேஸ்வர் அங்கில்லை என்று தெரிந்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தாள். இரவின் நினைவுகள் அவளை வதைக்க தொடங்கியது.
இரவு அவளை கரத்தில் ஏந்தியபடி வந்தவன் படுக்கையில் அவளை அமர்த்திவிட்டு தனது கரங்களால் அவளுக்கு அரணிட்டபடி அமர்ந்தான். அவளது சீறும் கயல்விழிகளும், துடிக்கும் நாசியும், கோபத்தில் சிவந்திருந்த வதனமும் அவனது ரசனையைத் தூண்ட ஒற்றைவிரலால் அவளது முகவடிவை அளந்தபடியே
"நீ சொன்னது சரி தான் பேப். உன்னை தனியாளாக்கி கிட்னாப் பண்ணி கல்யாணம் பண்ணுனது வரைக்கும் சரி தான். ஆனா உன்னை வலுக்கட்டாயமா தொட நான் எப்போவுமே நெனைச்சது இல்ல. எனக்கு நீ வேணும். ஆனா நீயா விரும்பி என்னை ஏத்துக்கனுமே தவிர உன் விருப்பமில்லாம உன்னை தொடுறதுக்கு நான் விரும்பல. ரெண்டு நாளா நீ நடந்த பிரச்சனையால நீ ரொம்ப டயர்ட் ஆயிருப்ப. தூங்கு. எதுவா இருந்தாலும் மார்னிங் பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
சஹானா அவனை ஏளனத்துடன் ஏறிட சர்வாவுக்கு அது அமைதிக்கு பதில் எரிச்சலையே கொடுத்தது.
"நானா விரும்பி உன்னை ஏத்துக்கிறது உன்னோட கனவுல மட்டும் தான் நடக்கும் சர்வா. இது ஒன்னும் உன்னோட பிசினஸ் டீல் இல்ல நீ நினைச்சதும் காசை எறிஞ்சதும் வேலை நடக்கிறதுக்கு. திருமணம் ஒரு புனிதமான பந்தம். அதுல ஒரு பொண்ணு முழுசா நம்புறவன் கிட்ட தான் மனசளவுலயும் உடலளவுலயும் நெருங்குவா. உன்னை மாதிரி ராட்சசன் கிட்ட விரும்பி வரதுக்கு எனக்க்கு பைத்தியம் எதுவும் பிடிக்கல சர்வா. இப்போ மட்டும் இல்ல எப்பவும் நான் உன்ட நெருங்கமாட்டேன். உன்னையும் என்னை நெருங்கவிடமாட்டேன்" என்று மூச்சிறைத்தவாறு சொன்னவளுக்கு அவன் ஏளனமான உதட்டுவளைவுடனானா சிரிப்பை மட்டும் பதிலாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் சென்ற சில நிமிடங்களில் படுக்கையில் விழுந்தவளுக்கு சுயப்பச்சாதாபத்தில் கண்ணீர் பெருகியது. யாருமின்றி தனித்து அனாதையாய் உணர்ந்தது அவளது மனது. சொன்னதை செய்துவிட்டான் ராட்சசன் என்று சர்வேஸ்வரை சபித்தது.
அப்படியே உறங்கிப்போனவள் தான் காலையில் இப்படி மெத்தையின் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறாள். அவள் இன்னும் பட்டுப்புடவையிலேயே இருக்க சர்வா அவனது பிரைவேட் ஜிம்மிலிருந்து கையற்ற கறுப்பு நிற பனியனும் கருப்பு நிற ட்ராக் பேண்டும் அணிந்து வியர்வை வழிய வந்தவன் ஒப்பனை ஏதுமின்றி அறையின் கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே எட்டிப்பார்க்கும் சூரியக்கதிர்களில் குளித்தபடி அழகுச்சிலையாக அமர்ந்திருந்த மனைவியைக் கண்டதும் அவளது அழகை விழுங்கியபடி அவளருகே வந்தான்.
"குட் மார்னிங் பேப்" என்றபடி அவளருகில் கிடந்த இடத்தில் சாய்ந்தபடி அவளைப் பார்க்க சஹானா முகத்தைச் சுளித்தபடியே எழுந்தவள் குளியலறைக்குள் சென்று விட்டாள். அங்கே சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு அவள் திரும்பிய போதும் கைகளை தலைக்கு கொடுத்து படுக்கையில் சாய்ந்தபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தவனை ஒரு பொருட்டாக மதியாது படுக்கையில் அருகில் சென்றவளை இடையோடு வளைத்து தன் மேல் போட்டுக்கொண்டான் சர்வேஸ்வர்.
சஹானா கோபத்தில் முகம் சிவக்க பேச முன்வந்தவள் அவனது விரல்கள் இடையில் செய்த குறும்பில் நெளியத் தொடங்கினாள். அவளது இடையெனும் வீணையை மீட்டியவனின் விரல்களுக்கு அதிலிருந்து விடுபடும் எண்ணமில்லை போல.
தனக்கு மிக அருகாமையில் தெரிந்த அவளது ஆரஞ்சு சுளை இதழ்கள் என்னை தீண்டித் தான் பாரேன் என்று அவனுக்கு சவாலிடுவது போல தோன்றியது சர்வாவுக்கு. இவள் தான் எத்துணை அழகு. தான் இது வரை கண்ட பேரழகியெல்லாம் இவளிடம் பிச்சை வாங்கினால் கூட அவர்கள் இவள் முன் சாதாரணமாகத் தான் தோற்றமளிப்பர் என்று எண்ணமிட்டபடி விரல்களால் அவளது கூந்தலை அலைய சஹானா அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.
தன்னை வளைத்திருக்கும் அவனது கரங்களையும் இடையை வருடும் விரல்களையும் தடுக்க முயன்று தோற்றவளின் முகம் சிவந்துவிட சர்வா இதற்கு மேல் அவளை சோதிக்க வேண்டாமென பெருந்தன்மையாய் அவளை விடுவித்தான்.
தன்னிடமிருந்து வேகமாய் விலகி நிற்பவளை கவனித்தபடி "நான் உன்னை தொட மாட்டேனு சொன்னதும் ஒரேயடியா தொடாம இருப்பேனு நினைச்சியா பேப்? சாரி சனா. நான் அவ்வளவு நல்லவன் இல்ல. உன்னை மாதிரி ஒரு அழகிய பக்கத்துல வச்சுக்கிட்டு இவ்வளவு கண்ணியமா நடந்துக்கிறதே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது பேப். ரொம்ப நாளுக்கு சோதிக்காம சீக்கிரமா என்னை காதலிக்க ஆரம்பிச்சிடு. இல்லனா நான் இந்த கண்ணியத்தையும் தூக்கிப் போடுற நிலமை வரலாம்" என்று ஏக்கம் கலந்த குரலில் சிறிது அழுத்தத்தை கலந்து சொல்ல சஹானா வெடுக்கென்று நிமிர்ந்தாள்.
சர்வா படுக்கையிலிருந்து எழுந்தவன் டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
சஹானாவுக்கு அவன் சொன்ன வார்த்தைகள் மனதை வருத்த அங்கிருந்து வெளியேறி அந்த பங்களாவின் முன்னே இருந்த தோட்டத்தில் தஞ்சம் புகுந்தாள். அடர்ந்த மரங்களுடன் ஆதவனின் கதிர்களைக் கூட அவளைத் தீண்ட அனுமதிக்கவில்லை அந்த தோட்டம். கிட்டத்தட்ட அவனைப் போலவே என்று எண்ணும் போது அவளுக்கு உள்ளுக்குள் கசந்தது.
என்ன இடம் இது. சீதை சிறை வைக்கப்பட்ட அசோகவனம் போல எங்கெங்கும் மரங்களும் செடிகளும் மட்டுமே கண்ணுக்கு தட்டுப்பட மருந்துக்கு கூட மனிதர்கள் இல்லை. இரண்டு நாட்களாக இங்கே தான் அடைபட்டுக் கிடக்கிறாள்.
அவளை சிறை வைத்த இந்த ராட்சசனும் தான். அவளை இங்கே அழைத்து வந்த போது இல்லையில்லை இழுத்து வந்த போது அவன் முகத்தில் இருந்த கர்வமும் அலட்சியமும் இப்போதும் அவளுக்கு நினைவில் இருந்தது.
இவை எல்லாவற்றுக்கும் பிள்ளையார்ச்சுழி போட்ட நாள் இன்றிலிருந்து சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவளது கல்லூரியில் நடந்த பல்கலைகழகங்களுக்கு இடையேயான கலைவிழா நடந்த நாள்.
அன்று தான் முதன் முதலில் சர்வேஸ்வரின் பார்வையில் அவள் பட்டாள். இன்று வரை அவள் துர்பாக்கியமாக கருதும் தருணம் அதுவே தான். அந்த நாளுக்கே அவளும் பயணப்பட்டாள்.
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி…
அன்றைய கலைநிகழ்ச்சிக்காக கல்லூரியை அழகுப்படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் மாணவ மாணவிகள் பட்டாம்பூச்சிகளைப் போல வண்ண உடைகளில் வலம் வர மற்றொரு புறம் கல்லூரி நிர்வாகத்தினரும் விரிவுரையாளர்களும் கல்லூரி தாளாளர் மற்றும் தலைமை விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
இறுதியாண்டு மாணவிகள் சிலர் கலையரங்கத்துக்குச் செல்லும் வழியில் ரங்கோலியாலும் பூக்கோலங்களாலும் அழகுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி அந்த பத்து மணி வெயிலை பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கோலம் போட்டுக் கொண்டிருக்க அவள் அருகில் இருந்தவளோ
"சஹா சீக்கிரம்டி. சீப் கெஸ்ட் வர நேரம் ஆய்டுச்சு. இன்னும் கோலம் முடியலயானு மேம் வேற கத்திட்டு போயாச்சு. போதும் சஹா. எழுந்துரு. வெயில் கூட ஓவரா அடிக்க ஆரம்பிச்சிருச்சு பாரு" என்று அறிவுரை சொல்ல சஹானா நிமிர்ந்தாள்.
அவள் சந்திரவதனத்தில் ரங்கோலிக்காக கையில் எடுத்த வண்ணங்கள் ஆங்காங்கே தீற்றியிருக்க அவளது பால்வண்ண முகத்தில் அந்த வண்ணங்கள் கூட அழகாய் தான் தெரிந்தன. அவளுக்கு அறிவுரை சொன்ன தோழியிடம் அழகாய் புன்னகைத்தவாறே
"பினிசிங்க் வேலை தான் நடக்குது விசு. இன்னும் பைவ் மினிட்ஸ்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கோலத்தில் கவனம் வைத்தாள்.
அவள் சொன்னபடி கோலம் முடியவும் விருட்டென்று எழுந்தவள் திருப்திப்பட்டுக் கொண்டு சட்டென்று திரும்பி அவள் பின்னே நின்று கொண்டிருந்த ஆஜானுபாகுவான வாலிபன் மீது மோதிக் கொண்டாள்.
அவள் மோதியதில் வண்ணக்கோலமாவின் நிறங்கள் அவனது வெண்ணிற சட்டையில் வானவில்லின் நிறங்களை பதிக்க சீற்றத்துடன் அவளை பார்த்தவன் தன்னெதிரே வெள்ளை வண்ண சுடிதாரில் முகத்தில் ஆங்காங்கே வண்ணக்கலவையுடன் நின்ற அப்சரசை கண்டதும் பேச்சிழந்தான்.
அவள் தயங்கியபடி தன் முட்டைக்கண்ணை விரித்து "சாரி சார்" என்று மிழற்றியதில் மூச்சிழந்தான். மன்னிப்பு கேட்டதும் ஒரு அழகிய புன்னகையை வீசி விட்டு அவள் ஓடி மறைந்தாள். அங்கே நின்ற மாணவியர் கூட்டத்தில் அவளை தேடி கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை.
தன் மீது மோதியவளின் அழகில் மெய் மறந்து அவன் நின்றிருக்க அவன் பின்னே வந்த பேராசிரியர் ஒருவர் "சர்வேஸ்வர் சார் ஆடிட்டோரியத்துக்கு போலாமா?" என்று கேட்டு அவனை சுயநினைவுக்கு வர வைத்தார்.
அவன் தலையைச் சரித்து ஆமோதித்தவன் அவருடன் நடைபோட்டாலும் அவன் மனம் முழுவதும் தன் மீது பூங்கொத்தாய் மோதி தனது உடையை வண்ணமயமாக்கிவிட்டுச் சென்றவளின் நினைவே.
ஆடிட்டோரியத்தை அடைந்தவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர அவனது உதவியாளன் அவனருகில் அமர்ந்தான். அவன் சர்வேஸ்வர் காதருகில் குனிந்தவன் "வேற ஷேர்ட் அரேஞ்ச் பண்ணவா சார்?" என வினவ தலையாட்டி மறுத்தவன் மனதிற்குள் "இது ஒரு ஏஞ்சல் குடுத்த கிப்ட். இதுக்கு அர்த்தம் குட்லக்னு கூட வச்சிக்கலாம்" என்று சொல்லிவிட்டு முறுவலித்தான்.
சிறிதுநேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அவன் கண்களும் மேடையில் பதிந்தது. மனமெங்கும் அந்த வெண்ணிற சுடிதார் அணிந்த பெண்ணே வலம் வந்தாள். அவளது புன்சிரிப்பும், குறும்பில் சுருங்கி விரிந்த கண்களும் அவள் குறித்த தேடலை அவனுக்குள் உருவாக்கிவிட்டது. அவள் இங்கே வந்திருப்பாளா என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவனின் கண்கள் மேடையில் பிரசன்னமான அவனது தேவதையைக் கண்டதும் மின்னியது.
அவள் தான். சற்று முன்னர் அவன் மீது மோதிய போது அணிந்திருந்த வெண்ணிற சுடிதாரில் வெண்புறாவாய் மேடையில் தோன்றியவள் வந்த அனைவரையும் தனது குயிலை ஒத்த குரலால் வரவேற்றுவிட்டு ஒரு புன்சிரிப்பை வீசி விட்டுச் சென்றாள். அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்திலும் அவளே நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மேடைக்கு வரவும் சர்வேஸ்வரின் இதயத்தில் இனிய பூகம்பம். அவளை ஆசையுடன் தழுவும் கண்களுக்கு கடிவாளமிடவோ அவளை குரல் கேட்கும் போது தானாய் மலரும் இதழ்களுக்கு பூட்டு போடவோ அவன் எண்ணவில்லை.
ஒரு வழியாக விழா முடிவுக்கு வர சர்வேஸ்வர் தனது உதவியாளனிடம் "இந்த ப்ரோகிராம காம்பியரிங் பண்ணுன கேர்ள் யாருனு விசாரி விவேக். எனக்கு அவளை பத்தி புல் டீடெய்ல் வேணும்" என்று கட்டளையிட உதவியாளனின் தலை தானாய் அசைந்தது.
ஆனால் அதற்கு அவசியமின்றி அவளே அவன் முன்னர் பிரசன்னமானாள் மீண்டும். விழா முடிந்து தாளாளரின் அறைக்குச் சென்ற சர்வேஸ்வர் அவனிடம் உரையாடிவிட்டு வெளியே வரும் போது மீண்டும் அவள் மீதே மோதிக் கொண்டான்.
அவள் "ஐயாம் சாரி சார். மறுபடியும் உங்க மேல மோதிட்டேன். ஆக்சுவலா நான் உங்க ஷேர்ட்ட அழுக்காக்கிட்டேன். அதனால தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்க வந்தேன். என்னை மன்னிச்சிடுங்க சார்" என்று சொல்லிவிட்டு காதை பிடித்து மன்னிப்பு வேண்ட அவள் மன்னிப்பு கேட்ட அழகில் அவளை அணைக்க பரபரத்த கரங்களை சிரமத்துடன் கட்டுப்படுத்தினான் சர்வேஸ்வர்.
தனது கருப்புக்கண்ணாடியைச் சரி செய்தபடி "இட்ஸ் ஓகே. ஒய்ட் ஷேர்ட் இப்ப கலர்புல்லா ஆனதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லனும் மிஸ்" என்று நிறுத்திவிட்டு அவளது பெயர் என்ன என்று கேள்வியாய் அவளை பார்க்கவும்
"ஐயாம் சஹானா" என்று புன்னகையோடு பதில் வந்தது அவளிடமிருந்தது.
அந்த நொடியே அவள் சர்வாவின் சனாவாக அவன் மனதில் ஒட்டிக் கொண்டாள். மீண்டும் அவள் மன்னிப்பு வேண்ட அவன் பெருந்தன்மையுடன் அவளது மன்னிப்பை ஏற்றுக் கொண்டான்.
"நீங்க என்னை மன்னிச்சிட்டிங்களா? ஓ மை காட். என் ஃப்ரெண்ட் உங்கள பத்தி ஏதேதோ சொல்லி என்னை பயமுறுத்திட்டா சார். உங்களுக்கு சின்ன விசயத்துக்கும் ரொம்ப கோவம் வரும், உங்க கிட்ட மோதுனவங்களை நீங்க சும்மா விடமாட்டிங்க, அப்டி இப்டினு என்னை ஓவரா பயமுறுத்திட்டா"
சர்வேஸ்வர் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவைத்தபடி அவளை அந்த கருப்புக்கண்ணாடி வழியே ஏறிட்டு
"உங்க ஃப்ரெண்ட் சரியா தான் கணிச்சிருக்காங்க. ஆனா இவ்வளவு அழகான பொண்ணு மேல என்னால கோவப்பட முடியலயே. இது என் வாழ்க்கையில நடந்த ஒரு ஸ்வீட் மொமண்ட். இதுக்கு நான் உனக்கு தேங்க்ஸ் தான் சொல்லனும்" என்று சொல்லிவிட்டு கருப்புக்கண்ணாடியை இறக்கி அவளை நோக்கி கண்ணை சிமிட்டிவிட்டு தன் உதவியாளனுடன் அங்கிருந்து சென்றான்.
அவனது கண்சிமிட்டலிலும் கருப்புக்கண்ணாடி வழியே தன்னை துளையிட்ட பார்வையிலும் சஹானாவுக்கு உள்ளுக்குள் ஜில்லிட்டது. ஏதோ ஒரு மாயக்கரம் தன்னை சுற்றி வளைப்பதாக உணர்ந்தவள் அத்துடன் அவனை மறந்து போனாள்.
ஆனால் அவ்வபோது அவனது கருப்புக்கண்ணாடியுடன் கூடிய முகம் அவள் கனவில் வந்து சஹானாவை தொந்தரவு செய்வது மட்டும் நிற்கவில்லை.
Nice
ReplyDeletethank you💕
Delete