அத்தியாயம் 2



ஜெய் முரளீ ஸ்ரீதரா

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

கோவிந்த மாதவா கோபாலா கேசவ

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேணு விலோலா ராதே ஷ்யாம்

விஜய கோபாலா ராதே ஷ்யாம்

யாதவா மாதவா கோபாலா கேசவ

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

பாண்டுரங்கா ராதே ஷ்யாம்

பண்டரிநாத ராதே ஷ்யாம்

ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேங்குழல் ஊதும் கிருஷ்ணனின் முன்னே கண் மூடி அமர்ந்து மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பேரழகு காரிகை.

ஆம்! அவள் பேரழகியே தான். கருநிற அருவியைப் போன்ற அவளது சுருண்ட கூந்தல் இடையைத் தாண்டி தரையைத் தீண்டிக் கொண்டிருந்தது. கூர்நாசி இல்லையென்றாலும் அவளது மொழுமொழு நாசியின் நுனியும் கன்னங்களும் இயல்பிலேயே சிரித்தால் சிவக்கும். இதழ்களோ எவ்வித செயற்கையான உதட்டுச்சாயங்களின் உபயமுமின்றியே சிவந்து ஜொலிக்கும்.

நடுத்தரமான உயரம் கொண்ட மெல்லிய மேனியாளின் பொய்யோ எனும் இடை அவளது நடனப்பயிற்சியால் அவளுக்குக் கிடைத்த பரிசு. குயிலைப் பழிக்கும் இந்த இனியக் குரலோ அவளது அன்னையிடம் இருந்து வாரிசுரிமை மூலம் கிடைத்த சொத்து.

அந்த இருபத்திமூன்று வயது பேரழகு பெட்டகத்தின் நாமம் மித்ரவிந்தா. தமிழகத்தின் மலையோர மாவட்டத்தில் பிறந்தவள் படிப்புக்காக சென்னையில் தங்கியிருந்தாள். கணிதத்தில் முதுகலை முடித்திருந்தவள் இந்த வருடம் எம்.பில் படிப்பில் கால் பதித்திருந்தாள். அவளுக்குக் கல்லூரியில் பேராசிரியை ஆக வேண்டும் என்பது சிறுவயது கனவு. அதற்காக தான் இவ்வளவு தூரம் வந்து மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவளது தாயார் சந்திரமதியும் தந்தை ஹரிசந்திரனும் அவளை உள்ளூரில் இருக்கும் கல்லூரியில் படிக்க வைக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் நம் மித்ரவிந்தா பிடிவாதத்துக்குப் பெயர் போனவளாயிற்றே! எப்படியோ இருவரையும் சமாளித்துவிட்டுச் சென்னைக்குப் புலம்பெயர்ந்து விட்டாள்.

முதலில் இந்த மாநகரம் அவளுக்கு மருட்சியைக் கொடுத்தது. ஆனால் அங்கே அவளுக்குக் கிடைத்த தோழியான சம்யுக்தாவின் நட்பு மித்ரவிந்தாவுக்குத் தனி தைரியத்தைக் கொடுத்ததால் அவளது கல்லூரி நாட்கள் இனிமையாய் கழிந்தன. அதன் விளைவு கடந்த ஐந்து வருடங்களில் இந்தப் பெருநகரத்தின் அனைத்து அதிசயங்களும் அவளுக்கு சாதாரண காட்சிகளாய் மாறிவிட்டன.

அதன் உச்சபட்ச நாகரிக வளர்ச்சியையும், கலாச்சார மாற்றத்தையும் முதலில் வாயைப் பிளந்து முகத்தைச் சுளித்துக் கொண்டு பார்க்கும் மித்ரவிந்தாவுக்கு இப்போதெல்லாம் அவை இயல்பு தானே என தோண ஆரம்பித்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

நடை, உடை, செயலபாடுகள், உணவுப்பழக்கம் என அனைத்திலும் இப்போது அவள் கடைந்தெடுத்த சென்னைவாசி ஆகிவிட்டிருந்தாள். ஆனால் மனதளவில் இன்னும் மலையகத்தின் இளவரசியாகத் தான் இருந்தாள். அங்கே அவளது பெற்றோர் கற்றுக் கொடுத்த ஒழுக்கம் சார்ந்த அடிப்படையான விசயங்கள் எதுவும் அவளுக்கு மறக்கவில்லை. அதனால் தான் இந்தப் பெருநகரத்தின் இளைஞனில் எவனும் அவளுக்கு கனவு கண்ணனாகத் தோற்றமளிக்கவில்லை.

மொத்தத்தில் அப்பெருநகரத்தின் நாகரிகம் என்ற நீரோட்டத்தில் கலந்தாலும் அவள் படிக்க வந்ததை நினைவில் நிறுத்தி படிக்க மட்டுமே செய்தாள். சம்யுக்தாவுக்குப் புறநகர் பகுதியில் அவளது பெற்றோர் வாங்கிக் கொடுத்திருந்த இல்லத்தில் இருவரும் சேர்ந்து தங்கிக் கொண்டனர்.

அப்பகுதியின் அமைதியும் நெரிச்சலற்ற தன்மையும் அவளுக்கு வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

அதுவும் காலை நேரத்தில் அருகிலிருக்கும் பூங்காவில் இருந்து கேட்கும் பறவைகளின் கீச்சொலிகள் தான் அவளைப் பொருத்தவரை திருப்பள்ளியெழுச்சி பாடல்.

பின்னர் குளித்து உடைமாற்றுவாள். மித்ரவிந்தா என்று பெயர் வைத்ததாலோ என்னவோ கண்ணன் மீது கொள்ளை பிரியம் அவளுக்கு. சம்யுக்தா கூட அடிக்கடி சொல்வாள் "மித்ரவிந்தாவோட கதை தெரியுமா உனக்கு? லார்ட் கிருஷ்ணாவ நீ இவ்வளவு லவ் பண்றதால அவரே வந்து உன்ன கடத்திட்டுப் போகப் போறார் மித்து. இப்ப இல்லனாலும் இது வருங்காலத்துல நடக்க தான் போகுதுடி" என்று.

அதை கேட்டு வெள்ளிச்சதங்கை ஒலித்தது போல சிரிப்பவள் "எப்டியும் கலியுகத்துல அவர் அவதாரம் எடுத்தாகனும் இல்லயா? அதுக்கு நான் ஒரு கருவியா இருந்துட்டுப் போறேன்டி சம்யூ" என்றபடி கடந்துவிடுவாள்.

அன்றைய தினமும் அவளது பஜனை முடிந்து எழுந்தவளை மணக்க மணக்க சன்ரைஸ் காபியுடன் எதிர்கொண்டாள் சம்யுக்தா. மித்ராவை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு காபி கோப்பையை நீட்டினாள்.

"நான் மட்டும் பையனா பிறந்திருந்தா கண்டிப்பா உன்ன தான் கட்டிப்பேன்டி"

மித்ரா காபியை ஒரு மிடறு அருந்தியவள் குறும்பாக தோழியை நோக்கினாள்.

"இப்ப மட்டும் என்னடி? நானே உன்ன கட்டிக்கிறேன்" என்றபடி காபி கோப்பையை டீபாய் மீது வைத்துவிட்டு சம்யுக்தாவை சுற்றி வளைத்துத் தழுவிக் கொண்டாள்.

அவளின் அணைப்பில் களுக்கென நகைத்த சம்யுக்தா "போதும்டி மித்து. பாசம் ஓவர் ஃப்ளோவுல போகுது"என கேலியாய் சொன்னபடி மோடாவில் அமர்ந்து கொண்டாள்.

"இன்னிக்கு லைப்ரரி போறேனு சொன்னியே மித்து. ரெடியாகலயாடி?"

"ரெடியாக என்னடி இருக்கு? இதோ சல்வார் போட்டுட்டேன். ஹேர் இன்னும் ஈரமா இருக்கு. மெஸ்ஸி ப்ரைட் போட்டுட்டு பிந்தி வச்சிட்டு கெளம்பறது மட்டும் தான் பாக்கி"

மீண்டும் சம்யுக்தாவிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

"நோ பவுண்டேசன், நோ கன்சீலர், நோ ஹைலைட்டர். ஆனாலும் ஜொலிக்குற. இந்த அழகோட ரகசியம் உங்க ஊர் மலைக்காத்தா?"

"இருக்கலாம். எனக்கு சென்சிடிவ் ஸ்கின் வேற. அதனால நான் ஹெவியா காஸ்மெடிக்ஸ் யூஸ் பண்றதில்ல சம்யூ. ப்ளெயின் ஃபேஸா விட்டு பழகிட்டேன்டி. இப்ப டால்கம் பவுடர் போட்டா கூட பெயிண்ட் அடிக்குற மாதிரி தோணுது. அதனால தான் அதயும் விட்டுட்டேன்"

பேச்சுவாக்கில் காபியை அருந்தி முடித்தவள் சொன்னது போலவே கூந்தலை பக்கவாட்டில் வழிய விட்டுக் கொண்டாள். புருவமத்தியில் சிறியதாக கருப்பு பொட்டு, அத்தோடு இதழில் ஸ்ட்ராபெரி லிப் பாம்! அவ்வளவு தான். நமது கதாநாயகியின் முக அலங்காரம் முடிந்துவிட்டது.

ஹேண்ட் பேக்கை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டவள் தனது ஹீல்சில் காலை நுழைத்தபடி ""அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ரா டேவிட் அன்ட் ரிச்சர்ட் புக் தானேடி. பாத்து எடுத்துட்டு வர்றேன். பட் இந்த வாரம் புக் இருக்குதோ என்னவோ" என சந்தேகத்துடனே கிளம்பி வீட்டை விட்டு வெளியேறினாள்.


நேரே பேருந்து நிலையத்துக்குச் சென்று பேருந்துக்காக காத்திருந்தாள். வழக்கமான நேரத்துக்கு வர வேண்டிய பேருந்து அன்று மித்ராவின் பொறுமையை மிகவும் சோதித்துவிட்டது. உதட்டைக் கடித்தபடி அவள் காத்திருக்கும் போது விருட்டென புயல்வேகத்தில் சென்ற ராயல் என்பீல்ட் ஒன்று சடன் பிரேக்கிட்டு கிறீச்சிட்டபடி நின்றது.

ஏனெனில் அந்த பைக்குக்கு சொந்தக்காரன் தூரத்தில் வரும் போதே ஹாரன் அடித்ததை கவனியாத வயோதிகப் பெண்மணி சாலையைக் கடக்க முற்பட்டார். பைக் காரனோ கண் இமைக்கும் நேரத்தில் அவர் அருகில் வந்துவிட்டான். அவர் அந்த அதிர்ச்சியில் கீழே சரிந்துவிட அவருக்கும் பைக்கின் டயருக்கும் மயிரிழை அளவு இடைவெளி தான் இருந்தது.

ஆனால் அவன் திறமையான ரேஸர் போல சடன் பிரேக்கிட்டு நிறுத்தியதால் அவனது வாகனத்தால் அவருக்கு எந்தக் காயமும் உண்டாகவில்லை. ஆனால் சரிந்து விழுந்தவருக்கு கைகளில் காலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க அதில் உதிரம் சொட்டவும் கூட்டம் கூடிவிட்டது.

அனைவரும் அந்த இருசக்கர வாகனத்தின் உரிமைக்காரனைத் திட்டத் தொடங்கியிருந்தனர். நடந்த அனைத்துக்கும் சாட்சியாக இருந்த மித்ரவிந்தாவுக்கு அந்த தலைக்கவசம் அணிந்தவனைக் காணும் போது பச்சாதாபம் பிறந்தது.

ஆனால் மக்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டிருந்தவன் சாதாரணமானவன் இல்லையே! இப்போது அவன் தலைக்கவசத்தைக் கழற்றினால் நாளை சமூக ஊடகங்களில் அவனது வீடியோ தான் வைரல் ஆகும். ஏன் என்றால் அந்த ராயல் என்பீல்டில் தலைக்கவசத்துடன் அமர்ந்திருந்தவன் நமது முகுந்த்.

ஏன் சரத் சர்மாவும் சோனாக்ஷ்யும் அடிக்கடி கவனமாக இருக்கும்படி சொல்கிறார்கள் என்பது அவனுக்கு இப்போது புரிந்தது. தன்னைப் பற்றிய செய்திகளுக்காக அலையும் சும்மாவே அசையும் மூனாந்தர தொலைக்காட்சிகளின் வாயில் அவன் இப்போது இந்த விபத்தை ஏற்படுத்தி அவலை அல்லவா அள்ளி போட்டிருக்கிறான்!

'சாலையில் சுழற்பந்து வீச்சாளாரின் கவனக்குறைவால் மூதாட்டி படுகாயம்' என்ற செய்தியைத் தலைப்புச்செய்தியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது தலைக்கவசத்தைக் கழற்றினால் அவன் பொதுமக்களைச் சந்திக்கவேண்டும். அவன் மீது தவறில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கும் வழிமுறை எதுவும் அவனுக்கு அகப்படவில்லை.

வேறு வழியில்லை! இது நாள் வரை கிரிக்கெட் உலகில் கட்டிக் காப்பாற்றிய தனது பெயருக்கு இந்தக் களங்கம் வந்து தான் தீர வேண்டும் போலுள்ளதே என்ற பெருமூச்சுடன் விருப்பமின்றி அவனது கரங்கள் தலைக்கவசத்தைக் கழற்ற போன தருணத்தில் தான் அந்தத் தேவதை கூட்டத்தினரிடையே புகுந்தாள்.

தேவதையா? ஆம்! தேவதையே தான். கார்க்கூந்தல் கரிய நீர்வீழ்ச்சியாக வழிய எலுமிச்சை வண்ணமும் வெண்ணிறமும் கலந்த முழுநீளக்கை வைத்த சுடிதார் கழுத்திலிருந்து கால் வரை மூடி அவளது உடலின் வளைவுகளை அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்க முகப்பூச்சு என்றால் என்னவென கேட்கும் இயற்கையிலே ஜொலிக்கும் சந்திரவதனத்துடன் கூட்டத்தினரிடையே திடீரென உதயமானவளை தேவதை என்று அவன் எண்ணியது நியாயம் தானே.



அவளது வதனத்தைக் கண்டவனின் விழிகள் மூடுவேனா என மறுத்தது. கண்கள் மட்டுமல்ல, அவன் செவிகளும் பாக்கியம் செய்துள்ளன என்பதை அடுத்தச் சில நொடிகளில் அவளது குரலைக் கேட்டதும் உறுதி செய்து கொண்டான் முகுந்த்.

"அவர் மேல எந்த தப்பும் இல்ல. தூரமா வர்றச்ச அவர் ஹாரன் அடிச்சார். பாட்டிக்கு அது கேக்கல. அவங்க ரோடை கிராஸ் பண்ணுனத பாத்து அவர் சடன் பிரேக் போட்டுட்டார். பாட்டி தடுமாறுனதுல தான் விழுந்துட்டாங்க"

தேனில் குழைத்து சர்க்கரையில் புரட்டியெடுத்ததை போன்ற இனிமை சொட்டும் அந்த குரலில் தனக்குள்ளும் ஒருவித இனிமை பரவுவதை உணர்ந்தவன் அவளின் ஆளைக் கொல்லும் அழகை ரசிக்கவா அல்லது இதயம் கவ்வும் இந்த இனியக்குரலை ரசிக்கவா என மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் விழிகள் என்னவோ தனக்காக ஜனக்கூட்டத்திடம் வாதாடுபவளையே பாதாதிகேசமாக ரசனையுடன் தழுவி படம் பிடித்துக் கொண்டன. அழகு என்பது அரைகுறை ஆடையில் உடலை வெளிக்காட்டுவது, முகத்தின் மீது ஒரு இன்ச் அளவுக்கு முகப்பூச்சைப் பூசுவதும் தான் என பார்த்துப் பழகியிருந்தவனுக்கு அதெல்லாம் இல்லையடா என்று தலையில் மடேர் என அடித்துப் புரிய வைத்திருந்தாள் அந்த ஆரணங்கு பெண்.

"மெதுவா எழுந்திரிங்க பாட்டி. என் கைய புடிச்சுக்கங்க. மெல்ல" என்று சொன்னவாறு அந்த பாட்டிக்குக் கை கொடுத்து எழுந்திருக்க உதவியவாறே தன் எதிரே நிற்பவன் தலைக்கவசத்தின் வழியே தன்னை அணுவணுவாக ரசித்துக் கொண்டிருப்பதை அறியாதவளாக நின்றாள் மித்ரவிந்தா.

அந்த மூதாட்டியின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டபடி முகுந்தை நெருங்கியவள் அவனுக்கு ஏதோ அவசரம் போல, அதனால் தான் தலைக்கவசத்தைக் கழற்றாது நிற்கிறான் என்று நினைத்துவிட்டாள்.

அந்த தலைக்கவசத்தின் கண்ணாடி வழியே தெரிந்த கூரியவிழிகளின் காந்தப்பார்வையில் ஒரு நொடி மெய் மறந்து நின்றாள். தன்னை பார்க்கும் அந்த ஜோடிக் கண்கள் தனது மேனியைத் துளைத்து இதயத்துக்குள் ஊடுருவ விரும்புகின்றவோ என ஒரு கணம் தோன்ற கூட செய்தது.

"ச்சே. இப்ப தான் முதல் தடவை பாக்குற ஒரு மனுசனை என்ன மாதிரி யோசிக்குறேன் நான்? என்னாச்சி எனக்கு? ஒரு வேளை நான் நினைக்குற மாதிரி அந்த பார்வை எக்ஸ்ரே பார்வையா இல்லாம சாதாரண பார்வையா இருக்கவும் வாய்ப்பு இருக்கு"

தனக்கு தானே மானசீகமாக அறிவுரை சொல்லிக் கொண்டு அவனிடம் பேசத் தொடங்கினாள் மித்ரவிந்தா.

"உங்களுக்கு எமர்ஜென்சினா நீங்க கெளம்புங்க சார். நான் இவங்கள ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போயிடுறேன்"

தான் சாலையோரத்தின் நின்று கொண்டிருக்கும் நிலை அப்போது தான் அவன் மனதில் பட்டது. உடனே சுதாரித்துக் கொண்டான் முகுந்த். ஆனால் இந்த பேரழகியை விட்டு நீங்குவேனா என அவனது மனம் அடம்பிடித்தது.

அவள் யார்? பெயர் என்ன? ஊர் என்ன? அவளது வீடு இருக்குமிடம் எது? அவள் படிக்கிறாளா வேலை செய்கிறாளா? என தாறுமாறாக சிந்திக்க ஆரம்பித்த அவனது மூளையும் பரபரத்தது.

இது வரை எந்த அழகியும் அவனது மூளையையோ மனதையோ வசப்படுத்தியது இல்லை. இந்த உணர்வானது அவனது இத்தனை வருட வாழ்வில் அவன் அனுபவித்தறியாத உணர்வு. முதல் பார்வையில் அவ்விரண்டையும் திக்குமுக்காடச் செய்யும் இவளை அத்துணை எளிதில் அவனால் விட முடியுமா என்ன!

அதிலும் பேசும் போதே மலரும் வதனமும், குறுஞ்சிரிப்பு மிளிரும் கயல்விழிகளும், ஜொலிக்கும் செவ்விதழ்களும் கண்ட மாத்திரத்திலேயே அவள் மீது அவன் கொண்ட ஈர்ப்பை உறுதி செய்துவிட அந்நிமிடம் அவளைத் தன்வசப்படுத்தியே தீரவேண்டுமென்ற எண்ணம் அவனது மூளைக்குள் உதயமாகி வெகு தீவிரமாக உரு பெற்றது.

ஆனால் அது சாத்தியம் இல்லை. இதோ இவள் இப்போது கிளம்பிவிடுவாள்! அதற்குள் எதாவது செய்ய வேண்டுமென அவன் யோசிக்கும் போதே அவள் அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவை மறித்து ஏறிக்கொண்டாள்.

முகுந்த் ஒரு முடிவுக்கு வந்தவனாக அந்த ஆட்டோவைத் தனது ராயல் என்பீல்டில் பின் தொடர்ந்தான். ஆட்டோ நகரின் பிரபல மருத்துவமனை முன்பே நிற்க அதிலிருந்து முதலில் இறங்கிய மித்ரவிந்தா அந்த மூதாட்டியிடம் கைநீட்டி அவர் இறங்கியதும் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

முகுந்த் தனது ராயல் என்பீல்டை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மறக்காமல் தலைக்கவசத்துடன் உள்ளே நுழைந்தான். ரிசப்சனில் ரெடிமேட் புன்னகையுடன் "எஸ் சார். வாட் கென் ஐ டு ஃபார் யூ?" என்று கேட்ட பெண்ணிடம் தனது மனதை கவர்ந்த பெண்ணையும் அந்த மூதாட்டியையும் பற்றி பேச ஆரம்பித்தான்.

"இப்ப ஒரு பொண்ணு வந்தாளே, அவளோட டீடெய்ல்ஸ் கொஞ்சம் கெடைக்குமா?"

ரிசப்ஷனிஸ்ட் அவனை சந்தேகமாக நோக்கிவிட்டு "நோ சார். நாங்க எங்க பேஷண்ட் பத்தியோ அவங்க கூட வரவங்க பத்தியோ யாருக்கும் தகவல் குடுக்க மாட்டோம்" என்றாள் பிடிவாதக்குரலில்.

முகுந்த் ஒரு நொடி என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான். ஆனால் அந்த பேரழகிக்காக எதையும் செய்யலாம் எனும் போது இந்தத் தலைக்கவசத்தை அகற்றி தான் யாரென அறிமுகப்படுத்திக் கொள்வது ஒன்றும் பிரமாதம் இல்லையே என யோசித்தபடி தலைக்கவசத்தை மெதுவாக அகற்றினான்.

ரிசப்ஷனிஸ்ட் அவனது முகத்தைக் கண்டதும் வாயைப் பிளந்தாள்.

"ஓ மை காட். முன்னா சார் நீங்களா? நான் உங்களுக்கு பெரிய ஃபேன் தெரியுமா? உங்கள நேர்ல பாத்தது உண்மையா பொய்யானு கூட தெரியலயே"

அவளின் படபடப்புக்கு வழக்கம் போல காந்தப்புன்னகையை உதிர்த்தான் கன்னியர் மனம் கவரும் மாயக்கண்ணன் அவன்.

"ஷ்ஷ். சைலண்ட். யாரும் என்னை கவனிக்கிறதுக்கு முன்னாடி நான் வந்த வேலைய முடிக்கனும்னு நெனைக்கிறேன்"

"என்ன வேலைனு சொல்லுங்க சார். நான் முடிச்சு தரேன்"

"சிம்பிள். அந்த ஓல்ட் லேடி கூட வந்த பொண்ணோட டீடெய்ல் வேணும்"

ரிசப்ஷனிஸ்ட் ஒரு நொடி தயங்கியவள் பின்னர் மடமடவென அவளைப் பற்றிய தகவல்கள் அடங்கிய அனுமதிச்சீட்டை வேகமாக யாரும் கவனிக்கும் முன்னர் பிரிண்ட் எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"தேங்க்யூ சோ மச் யார். ஷால் வீ டேக் அ செல்பி?" என்று கேட்டவனிடம் ஆர்வமாக தலையாட்டியவள் அவனருகே வர அவளுடன் செல்பி எடுத்துக் கொண்டான் முகுந்த்.

"ஓகே. மறுபடியும் தேங்க்ஸ். அண்ட் உங்க ஹாஸ்பிடல் ரிசப்ஷன் நம்பர் கெடைக்குமா?" என அதையும் கேட்டு வாங்கிக் கொண்டான்.

ரிசப்ஷனிஸ்டிடம் ஒரு கண்சிமிட்டலோடு விடை பெற்றவனின் தலையை மீண்டும் அலங்கரித்தது தலைக்கவசம். அத்தலைக்கவசத்தின் கண்ணாடி வழியே கையிலிருந்த பிரிண்ட் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டை அவனது கண்கள் ஆராயத் தொடங்கியது.

அதில் நோயாளியின் பெயர் கிருஷ்ணம்மாள் என்று அச்சாகியிருந்தது. அதன் கீழே அவரது செல்போன் எண் இருந்தது. சலிப்புடன் உச்சு கொட்டியவனின் கண்கள் அடுத்து அனுமதிப்பவரின் இடத்திலிருந்த அந்தப் பேரழகியின் பெயரைக் கண்டதும் நீண்டநாள் தவத்துக்கான வரம் கிடைத்ததைப் போல அவனது கண்கள் விரிந்தது.

உதடுகளோ ரசனை கூட்டி அவளது பெயரை உச்சரித்தது.

"மித்ரவிந்தா"

பெயரைச் சொல்லும் போதே சென்னையில் அடிக்கும் வெயிலின் உஷ்ணம் காணாமல் போய் இமயமலை சாரலில் நிற்பது போன்ற ஜில்லென்ற உணர்வில் திளைத்தான் முகுந்த். அந்த பெயர் ஒன்று மட்டும் போதுமே, அவள் தனக்கானவள் என்பதை உணர!

அவனது தாயார் சிறுவயதில் சொன்ன புராணக்கதையின் படி மித்ரவிந்தா என்பவள் கண்ணனின் எட்டு மனைவியரில் ஒருத்தியாவாள். அவளுக்கு நடக்கவிருந்த விருப்பமற்ற திருமணத்திலிருந்து அவளைக் காக்க ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அவளைக் கவர்ந்து சென்றார் எனவும் பின்னர் அவளைத் தனது ஐந்தாவது மனைவியாக மணந்து கொண்டார் எனவும் பாகவத புராணத்திலுள்ள கதையை தாயார் சொல்ல அவனும் கேட்டிருக்கிறான்.

அந்த முகுந்தன் தனது மித்ரவிந்தாவுக்குத் தன் மீதிருந்த அளப்பரிய காதலைக் காக்க அவளைக் கவர்ந்து தனது மணவாட்டி ஆக்கிக் கொண்டான்; இந்த முகுந்தனோ தனது மித்ரவிந்தா தனக்கு கிடைப்பதற்காக எதையும் செய்ய இப்போதே தயாராகி விட்டான்.

அனுமதிச்சீட்டில் இருந்த அவளது பெயரை ஒருவித மயக்கத்துடன் தடவிப் பார்த்தவன் தனது வாலட்டில் அதை பத்திரப்படுத்திவிட்டு ராயல் என்பீல்ட் நிற்கும் பார்க்கிங் பகுதிக்குச் சென்றான். அடுத்த சில நொடிகளில் அந்த ராயல் என்பீல்ட் அவனது கரங்கள் பட்டதும் பறக்க தொடங்கியது.

அந்தக் கலியுக முகுந்தனது மனமறியாத மித்ரவிந்தாவோ தனது தோழியின் கூற்றுப்படி ஒருவனது கட்டுப்பாட்டில் அடங்குவது வெகு சீக்கிரத்தில் உண்மையாகப் போவதை அறியாதவளாக வயோதிகப்பெண்மணிக்கு கீழே விழுந்ததில் காலில் சற்று பலத்தக் காயம் என்பதை மருத்துவர் சொல்லக் கேட்டு சோகத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

"ஈவினிங்க் வரைக்கும் இவங்க அப்சர்வேசன்ல இருக்கட்டும். ஏஜ்ட் பீபிளுக்கு இப்டி அடிபடுறத அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியாது மித்ரா மேடம். நீங்க போய்ட்டு ஈவினிங்க் வாங்க. அது வரைக்கும் அவங்களுக்கு குடுத்த மருந்தோட வேகத்துல அவங்க தூங்கட்டும்"

மருத்துவருக்குச் சரியென தலையாட்டிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறியவளை ரிசப்ஷனிஸ்ட் ஏக்கப்பெருமூச்சுடன் பார்த்ததை மித்ரவிந்தா கவனிக்கவில்லை.

மாலையில் வந்து பாட்டியைப் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவளாக ஆட்டோவை மறித்தவள் நூலகத்துக்குச் செல்லும் படி சொல்லிவிட்டு அதில் அமர்ந்தாள்.

எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்து தலைக்கவசத்தின் இடையே தோன்றி அவளை ஸ்கேன் செய்த விழிகளின் வந்து நின்றது.

என்ன பார்வை அது? தனது ஐந்தரையடி உயரத்தையும் அணுவணுவாய் ரசித்த அம்மாதிரியான பார்வையை அவள் இது வரை எதிர்கொண்டதில்லை. அதில் இருந்த உணர்வு தான் என்ன? ஏதோ உரிமைக்காரன் தனது உடமையைக் காணும் உணர்வு தான் அதில் இருந்தது. ஆனால் இந்த ஐந்து வருட பெருநகர வாழ்க்கையில் அவளைத் தன் உடமைப்பொருளாக கருதும் அளவுக்கு அவள் யாருக்கும் இடமளித்தாள் இல்லையே.

அப்படி இருக்க அந்த தலைகவசமணிந்த மனிதன் யார்? அவனது பார்வை ஏன் தனது நாடிநரம்புகளில் சிலிர்ப்பை ஓடச் செய்கிறது?

எந்தக் கேள்விக்கும் விடை தெரியவில்லை அவளுக்கு. விடை தெரியாத கேள்விகளின் சுவாரசியம் மற்ற எதற்கும் இருப்பதில்லையே. எனவே பெருமூச்சுடன் தலைக்கவச மனிதனை மறக்க முயன்றாள் மித்ரவிந்தா.




Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8