4 (சதுரங்க ராஜா)

 



கொடப்பகொண்டா கிராமம்..

கிருஷ்ணா நதி பாய்ந்தோடும் குண்டூர் பகுதியிலுள்ள கிராமங்களில் ஒன்று. சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் அம்சமாய் மூன்று சிகரங்களோடு கூடிய திரிகூடபர்வதம் எனும் மலையில் அக்கிராமத்தின் தெய்வமாகிய சிவன் லிங்க வடிவில் உறைந்துள்ளார். இப்பகுதியில் மகாசிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது.

அந்த கொடப்பகொண்டா கிராமத்தின் நடுநாயகமாய் பல ஏக்கரில் பிரம்மாண்டமாய் நின்றது ஒரு மாளிகை. அந்த கிராமத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்டவரான சர்வலோகேஸ்வரய்யாவின் வீடு அது. அதை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்று சொல்வதே சாலச் சிறந்தது. பெரிய முற்றத்தின் பக்கவாட்டில் ஒரு பக்கம் சிவப்பு மிளகாயை பணியாளர்கள் உலர்த்திக் கொண்டிருக்க மற்றொரு புறம் அங்கிருந்த கோசாலையிலிருந்து பால் கறந்து கொண்டு வந்தனர் சில பணியாளர்கள்.

இன்னும் சிலர் அந்த மாளிகையைச் சூழ்ந்திருந்த தோட்டத்தில் மலர்களை கொய்யும் பணியைச் செய்து கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் அந்த மாளிகையின் மிகப்பெரிய சமையலறையில் அறுசுவை உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

இன்று அந்த மாளிகையில் இன்று மிருத்யுஞ்சய ஹோமம் நடந்து கொண்டிருந்தது. மாபெரும் வேத விற்பன்னர்களும், புரோகிதர்களும் மந்திரங்களை பயபக்தியுடன் ஓதிக்கொண்டிருக்க ஹோமத்தின் நடுநாயகமாய் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்து ஹோமத்தை பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர் சர்வலோகேஸ்வரய்யா. அருகில் அவரது மனைவி உமாதேவி. அவருக்கேற்ற துணையாய் வெள்ளிக்கம்பி நரைகள் மின்னும் மங்கலகரமான முகத்துடன் வட்டவடிவ குங்குமத்துடன் பார்த்த உடன் கைகூப்பி வணங்கச் சொல்லும் தெய்வீக முகம்.

அவரது வலப்புறத்தில் அவரது மூத்தப்புதல்வரான ஆதிலிங்கரேஸ்வரனும் அவரது மனைவி கௌரியும் அமர்ந்திருக்க இடப்புறத்தில் அவரது இளைய மகன் ருத்ரேஸ்வரனும் இளைய மருமகள் கங்காவும் அமர்ந்திருந்தனர்.

மற்றபடி சர்வலோகேஸ்வரய்யாவின் மகள்கள் வைஜெயந்தி, உஷாந்தியோடு முறையே அவர்களின் கணவர்களான திம்மராஜூ மற்றும் சேஷய்யாவும் இருந்தனர். அவர்கள் பெற்ற புத்திரிகளான ரிதுபர்ணா, ருவந்திகாவும் அங்கே ஆஜராகியிருந்தனர்.

கூடவே இன்னும் சில உறவினர்கள் சூழ அந்த ஹோமம் ஜெகஜோதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதை கவனித்தபடியே மனைவி அனுபமாவோடு அமர்ந்திருந்தான் ஆதிலிங்கேஸ்வரன் கௌரி தம்பதியினரின் மகனான லோகேஸ்வர்.  அவர்கள் குடும்பத்தின் தொழிலான சமையல் மசாலா தயாரிக்கும் கம்பெனியை தனது மேலாண்மையில் வழிநடத்தி வரும் கம்பீரமான ஆண்மகன். அவன் பிறந்த பிரதேசத்துக்கே உரித்தான ஆஜானுபாகுவான உடலமைப்போடு காதல் பொங்கும் கண்ணோடு அவ்வபோது மனைவியைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவன் அவள் கரங்களை பற்றியபடி அமர்ந்திருந்தான்.

அவன் மனைவி அனுபமா ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் அசர வைக்கும் அழகுடன் கூடிய இனிய பெண். பார்த்த கணத்திலேயே லோகேஸ்வரின் மனதை கொள்ளை கொண்டவள். பெரியவர்கள் பார்த்து பேசி முடித்த திருமணம் தான். ஆனால் அவர்களுக்கிடையே உண்டான காதல் அதை இன்னும் பலமாக்கி இருந்தது. இருவரும் வீட்டுப்பெரியவர்களைப் போல மனமொத்த தம்பதியினராக வாழ வேண்டுமென மனதிற்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. இன்று வரை அதை கடைபிடித்தும் வருகின்றனர்.

அவனுக்கு எதிர்புறமாய் தனது வழக்கமான கம்பீரத்தோடு அமர்ந்திருந்தான் சர்வேஸ்வர். ருத்ரேஸ்வர் கங்காவின் ஒரே புதல்வன். சென்னையிலிருந்து நேற்று தான் திரும்பியிருந்தான். அவனது மனம் முழுவதும் சென்னையை சுற்றி வர தாத்தாவின் வற்புறுத்தலால் ஹோமத்தில் கலந்து கொண்டான்.

சர்வலோகேஸ்வரய்யா அவரது குடும்ப வாரிசுகளான பேரன்களின் நல்வாழ்வுக்கென நடத்தும் ஹோமம் இது. மிருத்ஞ்சய ஹோமத்தின் போது நாம் வேண்டிக்கொள்ளும் அனைத்தையும் ஈசன் நிறைவேற்றி வைப்பார், கூடவே மரணபயத்தை அகற்றி அறியாமையை போக்குவார் என வேதவிற்பன்னர்கள் கூற குடும்பத்தினர் அனைவரும் தத்தம் வேண்டுதல்களை அவர் முன் வைத்தனர்.

சர்வேஸ்வர் வேறு என்ன வேண்டுவான்? கண்ணைஇறுக மூடிக்கொண்டபடி "எனக்கு சஹானா வேனும். உங்களோட கணக்கு எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா நான் சஹானாவ யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன். அவ எனக்குத் தான். உங்களால முடிஞ்சா அவ எனக்கு கிடைக்கிறதுக்கு தடையா இருக்கிறவங்களை என் வழிய விட்டு ஒதுக்கி வைங்க. இல்லனா நான் அவங்கள உங்க கிட்ட அனுப்ப வேண்டியதா இருக்கும்" என்று சர்வலோகத்தையும் ஆளும் ஈசனுக்கே ஆணையிட்டான் அவன்.

ஹோமம் முடிந்து ஹோம பஸ்மத்தோடு குங்குமமும் வழங்கப்பட்டது. சர்வலோகேஸ்வரய்யா வேதவிற்பன்னர்களை கௌரவித்தவர் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை பரிமாறுமாறு வீட்டுப்பெண்மணிகளுக்கு கட்டளையிட ராஜபோக விருந்து ஆரம்பித்தது. விருந்தில் அவரும் தன் கையால் பரிமாறிய பிறகு தான் ஓய்ந்தார்.

அனைத்தும் முடிந்து வேதவிற்பன்னர்கள் விடைபெற்றனர். காலையிலிருந்து கேட்ட வேதமந்திரங்களின் ஒலி வீட்டில் ஒரு அமைதியான சூழலை உண்டுபண்ணியிருந்தது. சர்வலோகேஸ்வரய்யா ஓய்வாய் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டபடி மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

(அவர்களது உரையாடல் தெலுங்கில் இருந்தாலும் நமது வசதிக்காக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்)

"உன் சின்ன பேரன் என்ன சொல்லுறான் தேவிம்மா? வைஜெயந்தியும் மாப்பிள்ளையும் அவனுக்கும் ரிதுவுக்கும் முடிச்சு போடலாம்னு நெனைக்கிறாங்க"

"அவன் லோகேஷ் மாதிரி நம்ம சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிப்பானானு சந்தேகம் தான். அவன் அப்டியே உங்க பிரதிபிம்பம். அவனோட முடிவு தான் இதுல கடைசி"

மனைவி சொல்வதிலும் நியாயம் உள்ளது என்று யோசித்தார் சர்வலோகேஸ்வரய்யா. என்ன தான் இரு பேரன்களும் தனது பெயரை தாங்கியிருந்தாலும் சர்வேஸ்வர் தான் அவரது குணங்களையும் தாங்கியுள்ளான்.

அவரைப் போலவே எதிரிகளை எடை போடும் திறன், எங்கே அடித்தால் தனக்கு சாதகம் என்று கணக்கு போடும் தந்திரம், கூடவே நினைத்ததை நடத்திக் காட்டும் உத்வேகம் இம்மூன்றும் சர்வேஸ்வருக்கே உரித்தான குணங்கள்.

சிந்தனைவயப்பட்டவனாக சுற்றிய பேரனை அழைத்தவர் அவனது கம்பீரத் தோற்றத்தில் கர்வம் கொண்டவராய் "எப்போ உன் மகனை தூக்கி கொஞ்சுற பாக்கியத்தை எங்களுக்கு குடுக்க போற சர்வா? லோகேஷ் குடும்பஸ்தனா மாறிட்டான். எண்ணி பத்தே மாசத்துல அவன் அப்பாவா ப்ரோமோட் ஆயிடுவான். உனக்கு அந்த ஐடியா இருக்காடா?" என்று கேட்டவரிடம் முழங்காலிட்டு அமர்ந்தான் அவரது வார்ப்பான சர்வேஸ்வர்.

"எனக்கு பிசினஸ்ல நல்லது கெட்டது நெழிவு சுழிவு கத்து குடுத்தது நீங்க தான் தாத்தா. நீங்க சொல்லுறதெல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும். அதுக்கு சில வேலை பாக்கி இருக்கு தாத்தா. அத தான் பண்ணிட்டிருக்கேன்" என்று சொல்ல உமாதேவி தன் பேரனுக்கு நெட்டி முறித்தார்.

"இன்னும் ரெண்டு மாசத்துல பத்ராசலத்துல ராமநவமி. வழக்கம் போல நம்ம குடும்பத்தோட கலந்துக்கனும் சர்வா. வேலை அது இதுனு சென்னையில இருந்துடாதடா கண்ணா" என்று பேரனின் கன்னம் வருடி கொஞ்சினார் அவர்.

சர்வா சரியென்று ஒத்துக்கொண்டவன் தனது அறைக்குச் செல்ல காலெடுத்து வைக்க அதற்குள் அவனது கரத்தை யாரோ பற்றுவது போல தோண விருட்டென்று திரும்பி பார்க்க ரிதுபர்ணா மயக்கும் புன்னகையுடன் நின்றாள்.

"எப்பவும் பிசினஸ் வேலைனு பிசியா இருப்பிங்களே மாமா. இன்னிக்கு தான் உங்களை பாக்க முடிஞ்சுது. இப்பயாச்சும் என் கிட்ட பேச மாட்டிங்களா?"

அவளது கரத்தை உதறித் தள்ளிவிட்டு "எதுவா இருந்தாலும் நாலு அடி தள்ளி நின்னு பேசு. புரியுதா? உன் இஷ்டத்துக்கு வந்து கையை பிடிக்கிற? இதுவே ஒரு பையன் உன் கையை உன்னோட சம்மதம் இல்லாம பிடிச்சா என்னென்ன பேச்சு பேசுவ? ஆணோ பொண்ணோ சம்மதமில்லாம தொடுறது எனக்கு பிடிக்காத விசயம். என்னை தொடுறதுக்கு உரிமைப்பட்டவ ஒருத்தி மட்டும் தான். அவளை தவிர வேற எந்த பொண்ணோட மூச்சுக்காத்தும் என் மேல பட நான் அனுமதிக்க மாட்டேன். இத மனசுல வச்சுக்கோ ரிது. இல்லனா அடுத்த தடவை நீ செல்லம் கொஞ்சிட்டு வர உனக்கு தாத்தா வீடு இருக்காது" என்று எச்சரித்துவிட்டு அகன்றான்.

நேரே மாடியிலிருக்கும் தனது அறையை அடைந்தவனின் மனமெங்கும் சஹானா மட்டுமே வலம் வந்தாள். அவன் கணக்குப்படி இப்போது அவள் அவன் தீர்மானித்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென எண்ணியபடி விவேக்கை செல்பேசியில் அழைத்தான்.

"விவேக் சனா என்ன பண்ணுறா?"

"குட் மார்னிங் சார். மேடம் இப்ப இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுறாங்க. அவங்க ரொம்ப இண்டலிஜெண்ட் சார். நமக்கு இப்டி ஒரு எம்ப்ளாயி கெடைக்கிறதுக்கு நம்ம கம்பெனி குடுத்து வச்சிருக்கனும்"

விவேக் சொல்ல சொல்ல தன்னவளின் புத்திசாலித்தனத்திலும் தெளிவிலும் கர்வம் கொண்டவன் தான் அவள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதை பார்க்க வேண்டுமென சொல்ல விவேக் நேராய் நேர்முகத்தேர்வு நடைபெறும் அறைக்கே சென்றுவிட்டான்.

"எங்க எம்.டி இண்டர்வியூவை லைவ் கான்பரன்ஸ்ல பாக்கணும்னு ஆசைப்படுறார்"

அதன் பின்னர் சில நிமிடங்களில் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்தில் வீடியோ கான்பரன்சுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட சஹானாவின் முகம் நன்றாக தெரியும் வகையில் கேமராவை பொருத்தியிருந்தான் விவேக்.

கருப்பு நிற எளிய காட்டன் டாப்பில் வெண்தாமரையாய் ஜொலித்தவள் எப்போதும் போல எளிய அழகிலேயே அசரடித்தாள். பேசும் போது படபடத்த விழிகளும், அவ்வபோது ஸ்ட்ராபெர்ரி இதழ்களின் நடுவே வெண்முத்துக்களாய் மின்னிய பற்களும் கன்னத்தில் விழும் குழியும் சர்வேஸ்வரை மேலும் மேலும் அவளை காதலிக்கத் தூண்டியது.

காதில் அணிந்திருந்த ஆக்சிடைஸ்ட் சில்வர் ஜிமிக்கி அவள் கன்னத்தை தொட்டு விலக அக்கணம் அவனுக்கு அந்த ஜிமிக்கியின் மீது கோபம் வந்துவிட்டது. அதே சமயம் அந்த ஜிமிக்கியாய் தான் இருக்க கூடாதா என்ற எண்ணமும் அவனது காதல் கொண்ட நெஞ்சத்தில் உதயமானது.

நேர்முகத்தேர்வு முடிந்து அவள் அந்த அறையை விட்டு வெளியேற மடிக்கணினியின் திரையை மூடிவைத்தவன் இதற்கு மேல் பொறுக்க இயலாதவனாய் தாத்தாவிடம் சென்று தான் உடனடியாக சென்னைக்குத் திரும்ப வேண்டுமென சொல்லிவிட்டான்.

இருந்தாலும் அம்மா, பாட்டி, பெரியம்மா, அண்ணி என பெண்கள் யாரும் அவ்வளவு எளிதில் அவன் சென்னைக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. சர்வேஸ்வரும் அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்களை கொடப்பகண்டாவில் கழித்துவிட்டு மூன்றாம் நாள் மீண்டும் சென்னைக்குப் பயணமானான்.

அன்றைய தினம் தான் சஹானா அவளது புதிய கம்பெனியில் பணியிலமரும் நாள். அவள் செல்லப் போவது ஒரு மென்பொருள் நிறுவனம். சில நாட்களுக்கு முன்னர் தான் அதன் தலைமை ஆந்திர நிறுவனத்துக்கு மாறியது என்று கேள்விப்பட்டிருந்தாள் அவள். எனவே மேலாண்மையில் முக்கியப்பதவி வகிக்கும் அதிகாரிகள் அனைவரும் புதிய தலைமையை திருப்திப்படுத்தும் வேலையில் இறங்கிவிட சஹானாவுக்கு முதல் நாளே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.

அந்த வளாகம் முழுவதும் அவர்கள் நிறுவனத்துக்குச் சொந்தமானது தான். எஸ்.எல் கேம்பஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவ்விடத்தின் மையத்தில் மென்பொருள் பிரிவு இருந்தது. அது மிகவும் முக்கியப்பிரிவு என்பதால் மேலாண்மை இயக்குனர் அறையும் அப்பிரிவின் மேல்தளத்தில் இருந்தது. கூடவே அலுவலப்பணிகளை செய்யும் பிரிவு இரண்டாவது தளத்தில் இருந்தது,

சஹானா வேலை செய்யும் இடம் தரைத்தளத்தில் இருந்ததால் பெருங்குழப்பம் ஏதும் நிகழவில்லை. அவள் வேலை செய்யப்போகும் குழுவுடன் ஒரு அறிமுகம், பின்னர் அவளுக்கு பயிற்சி அளிக்கப்போகும் பெண்ணுடன் ஒரு அறிமுகம் என அரைமணிநேரம் செலவளிந்தது. அதன் பின்னர் அவளது பயிற்சியாளர் ஹாசினியுடன் வேலையில் அமர்ந்தவளுக்கு சிறிது நேரத்தில் அவள் காபடேரியா செல்லலாமா என்று கேட்ட பின்னர் தான் நேரம் ஆகிவிட்டதே கவனத்தில் பதிந்தது.

ஹாசினியுடன் அங்கே செல்ல எழுந்தவளை ஆபிஸ் பாய் ஒருவன் வந்து அழைத்தான்.

"உங்களுக்கு எதோ கொரியர் வந்திருக்கு சஹானா மேடம்"

சஹானா புருவம் உயர்த்திவிட்டு யோசித்த பின்னர் "சான்ஸ் இல்ல. இன்னிக்கு தான் எனக்கு இந்த ஆபிஸ்ல பர்ஸ்ட் டே. நான் இங்க ஒர்க் பண்ணுறது என் பேமிலி தவிர வேற யாருக்கும் தெரியாது, அதோட கொரியர் அனுப்புற அளவுக்கு எனக்கு யாரும் க்ளோஸ் இல்ல" என்று சொல்ல 

"என்னனு தான் பாத்துடுவோமே சஹா. ஒய் டோண்ட் வீ  கோ தேர்? கம் வித் மீ" என ஹாசினி அவள் மறுக்க மறுக்க கேளாது சஹானாவின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு செல்வது சிசிடிவி கேமரா வழியே சர்வாவின் அறைக்குள் இருக்கும் திரையில் தெளிவாகத் தெரிந்தது.

ஆம்! அவன் தான் அந்த மென்பொருள் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குனர். இங்கு வந்ததும் சஹானாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி அளிக்கவேண்டுமென விரும்பினான். அதை தான் கொரியர் வழியாக அனுப்பியிருந்தான். 

சஹானா அதைப் பிரித்து பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகளை பார்க்கும் ஆவலுடன் காத்திருந்தான். 

அங்கே சஹானா வரவேற்பரையில் வைத்திருந்த பார்சலை பிரித்துப் பார்க்க அதில் இளம் ரோஜா வண்ண  பெர்பியூம் பாட்டில் ஒன்றும் கூடவே ஒரு அழகான இதயவடிவ வாழ்த்து அட்டையும் இருக்க அந்த பாட்டிலை வரவேற்பரை மேஜையில் வைத்துவிட்டு அந்த வாழ்த்தட்டையை வாசிக்க ஆரம்பித்தாள்.

ஆங்கிலத்தில் அழகான கவிதைவரிகள். வாசிக்கும் போதே மனதை வருடும் வண்ணம் எழுதப்பட்டிருந்தது. முக்கியமாக அதில் பெயர் எதுவும் இல்லை.

சஹானா அதை பொறுமையாக வாசித்து முடித்துவிட்டு சற்றும் யோசிக்காமல் அந்த வாழ்த்து அட்டையை இரண்டாக கிழிக்க அவள் அருகில் நின்று கொண்டிருந்த ஹாசினி மட்டுமல்ல இக்காட்சியை திரையில் பார்த்துக் கொண்டிருந்த சர்வாவின் அருகில் நின்றிருந்த விவேக்கும் அதிர்ந்தான்.

அதிர்ந்தவனின் பார்வை சர்வாவை அளவிட மனமோ சஹானாவுக்காக வருந்த தொடங்கியது. அதே நேரம் சர்வேஸ்வர் முகம் கல்லாய் இறுக அடுத்து சஹானா என்ன தான் செய்யவிருக்கிறாள் என்று காண காத்திருந்தான்.

சஹானா அந்த பெர்பியூம் பாட்டிலை எடுத்துச் சென்று வரவேற்பரையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் அதையும் அந்த பார்சல் கவரையும் சேர்த்து வீசிவிட்டு அலட்சியத்துடன் ஹாசினியை அழைக்க அவளோ "அந்த பெர்பியூம் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா? இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டியே சஹா?" என்று வருந்த

"அதுக்குனு அத வாங்கிக்க சொல்லுறியா? யாரோ முகம் தெரியாதவன் எனக்கு நாலு வரியில எதோ கிறுக்கி அனுப்புவான், கூடவே ஒரு பெர்பியூம் பாட்டில வச்சா நான் அப்டியே மயங்கிருவேனு தப்புக்கணக்கு போடுவான். நான் அத கண்டுக்காம ஈனு இளிச்சிட்டு எடுத்துக்கனுமா? என் மாமா என்னை அப்டி வளக்கல. ஓசில கெடைக்குதுனு கண்டவன் அனுப்புனத நான் யூஸ் பண்ண மாட்டேன் ஹாசினி. லெட்ஸ் கோ" என்று உரைத்துவிட்டு அங்கிருந்து காபடேரியாவுக்குச் சென்றுவிட்டாள்.

இவையனைத்தையும் கண்ட சர்வேஸ்வரின் முகம் கோபத்தோடு சேர்த்து சஹானாவை மெச்சுதலாகவும் பார்த்தது. 

விவேக்கிடம் "நான் என்னவோ நெனைச்சேன் விவேக். ஆனால் சனா எனக்கேத்த ராணி தான். என்ன ஒரு ஆட்டிட்டியூட்! ஐ அம் இம்ப்ரெஸ்ட். செஸ்ல ராணிய கன்ட்ரோல் பண்ணிட்டா ஆட்டத்த நம்ம கைக்கு கொண்டு வந்துடலாம். இங்கயும் இந்த ராணிய கன்ட்ரோல் பண்ணிட்டா இந்த ராஜா தான் ஜெயிப்பான். ராணிக்கு செக் வைக்கிறேன், கூடிய சீக்கிரமே" என்றவன் நாற்காலியை உதைத்துவிட்டு நின்றான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8