அத்தியாயம் 4



டர்காயிஸ் நீல நிற ஆப் ஷோல்டர் கோல்ட் டாப்பும் வெண்ணிற ஜெகின்சும் அணிந்து தலையை பன்னாக போட்டபடி தயாரானாள் மித்ரவிந்தா. சம்யுக்தாவும் கருப்பு நிறத்தில் டாப் மற்றும் பளாசோ அணிந்து தயாராகியிருந்தவள் தனது புருவத்தைத் திருத்திக் கொண்டிருந்தாள்.

"இன்னுமா முடியல சம்யூ?" என்றபடி அவளது அறைக்குள் அடியெடுத்து வைத்த மித்ரவிந்தாவை முறைத்தாள் அவள்.

"உனக்கு நேச்சுரலாவே திக்கான ஐப்ரோ. எனக்கு அப்படியா?"


"சரி சரி. இதை சாக்கா வச்சு இன்னும் லேட் பண்ணாதே சம்யூ" என சலித்துக் கொண்டவளுடன் கிளம்பினாள் சம்யுக்தா.

மித்ரவிந்தா கேப் புக் செய்திருந்ததால் இருவரும் ஆட்டோ சவாரியின் அசவுகரியங்கள் எதுவுமின்றி வேளச்சேரியை அடைந்தனர்.

இருவரும் பீனிக்சை சென்றடைந்த போது கூட்டமே இல்லை. தோழியர் இருவரும் ஆச்சரியம் சூழ உள்ளே அடியெடுத்து வைத்தனர். அப்போது மாலின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் நடமாடினர்.

சம்யுக்தாவும் மித்ரவிந்தாவும் ஜனக்கடலில் திளைக்கும் அந்த மால் இன்று ஏன் காற்று வாங்குகிறது என புரியாது திருதிருவென விழித்தபடி தங்களுக்கு வேண்டிய சரும பராமரிப்பு பொருட்கள் விற்கும் பகுதியை அடைந்தனர்.

"க்ளாம் க்ளோ மாய்சுரைசர் நல்லா இருக்கும் மித்து. அதை வாங்குவோமா?"

"லாஸ்ட் டைம் அதை தான வாங்குனோம். என் ஸ்கின்னுக்கு செட் ஆகல சம்யூ. நான் வேற ப்ராண்ட் பாக்குறேன்" என்றாள் மித்ரவிந்தா.

அவளது சருமத்துக்கு ஒத்து வரக் கூடிய பிராண்டை தேடியவள் "லோட்டஸ் ஓகே" என இறுதி முடிவெடுத்து அந்த பிராண்டில் மாய்சுரைசர், சன்ஸ்கிரீன் என வாங்கி முடித்துவிட்டு சம்யுக்தாவுடன் இரண்டாவது தளத்துக்குச் சென்றாள்.

அத்தளத்தின் கேரட்லேன் என்ற ஜூவல்லரியிலிருந்து அவளை இரண்டு கண்கள் மையலுடன் நோக்குவதை அப்பேதை அறியவில்லை. தனது நித்திலங்களை ஒத்த வெண்பற்களைக் காட்டி புன்னகைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தவளின் எளிய தோற்றத்தில் மிளிர்ந்த அழகு கூட அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரனை அசர வைத்தது.

அவன் வேறு யாருமல்ல! நமது முகுந்த் தான். மித்ரவிந்தாவைக் காணத் தான் இவ்வளவு நேரம் அந்தக் கடையினுள் தவமிருந்தான் அவன். முரட்டு ஜீன்சும், சாம்பல் வண்ண போலோ நெக் டீசர்ட்டும் அணிந்திருந்தவன் அதன் மேலே அணிந்திருந்த வெண்ணிற மேற்சட்டையின் ஹீடியால் தலையை மூடியிருந்தான். பார்ப்பதற்கு ஸ்டைல் போல தெரிந்தாலும் உண்மையில் தன்னை யாரும் கவனித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அவ்வுடையை அவன் அணியக் காரணம்.

அவன் தன்னை கவனிப்பதை பற்றி எதுவும் அறியாத மித்ரவிந்தா தோழியுடன் கேரட்லேனுக்குள் நுழைந்த தருணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட அவளோ அடுத்த நொடி வந்துவிடும் என எண்ணியவளாய் தோழியின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டபடி நடந்தாள்.

ஆனால் அன்று ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் சில நிமிடங்களுக்குப் பின்னரும் வரவில்லை. மால் ஆரம்பித்த தினத்திலிருந்து இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

தோழியின் கையை இறுக்கமாக பற்றியிருந்த மித்ரவிந்தாவின் கரம் திடீரென இன்னொரு முரட்டுக்கரத்துக்குள் சிறைபடவும் அவள் "யார்?" என்றபடி பதறிவிட்டாள்.


ஆனால் அக்கரத்திற்கு சொந்தக்காரனின் விரல்கள் அவளது செவிமடலில் ஊர்ந்து பின்னர் கழுத்தில் நிலைக்கவும் கத்த வாயெடுத்த அடுத்த நொடியில் மின்சாரம் வந்துவிட்டது.

மித்ரவிந்தா தன்னைத் தீண்டிய கரங்களின் வெம்மையைத் தனது காதுமடல்களில் உணர்ந்து செவியைத் தொட்டுப் பார்க்க இவ்வளவு நேரம் கம்மல் அணியாத செவிமடல்களில் பட்டாம்பூச்சி வடிவ ஸ்டட் குடியேறியிருந்தது.

அனிச்சை செயலாக அவளது கரங்கள் கழுத்தைத் தடவ அங்கே பட்டாம்பூச்சி பெண்டெண்டுடன் பிளாட்டினச் செயின் ஒன்று அணிவிக்கப் பட்டிருந்தது.

அப்படி என்றால் அந்தக் கரங்கள் தன்னை தீண்டியது இதை அணிவிக்கத் தானா என கேட்டுக்கொண்டபடியே கடைக்குள் இருந்த பெண்களிடம் "எக்ஸ்யூஸ் மீ இதுக்கு யார் பில் போட்டாங்கனு தெரியுமா?" என வினவ அவர்களோ ஆச்சரியப்பார்வையுடன் அவளையும் அந்த அணிகலன்களையும் மாறி மாறி பார்த்தனர்.

ஆனால் பதிலளிக்கவில்லை. இத்துணை அமளி துமளிகளுக்குப் பின்னர் தான் சம்யுக்தா தோழியின் கழுத்திலும் காதிலும் மின்னிய பட்டாம்பூச்சிகளில் வெட்டி அடங்கிய வைரங்களை கவனித்தாள்.

"வாவ். மித்து ரொம்ப அழகா இருக்குடி. அது எப்டி ஜீபூம்பானு சொல்லுறதுக்குள்ள பவர் கட், பவர் வந்ததுக்கு அப்புறம் இந்த ஜூவெல்ஸ் உன் கிட்ட இருக்கு. சிண்ட்ரெல்லா கதைல வர்ற மாதிரி யாரும் உன்னை வச்சு மேஜிக் டிரை பண்றாங்களா?" என கிண்டல் செய்து மித்ரவிந்தாவின் பார்வை எனும் கனலில் வாலண்டியராக வந்து பொசுங்கிப் போனாள்.

"நீ இங்கயே இரு. நான் வெளிய யாராவது நிக்குறாங்களானு பாத்துட்டு வரேன்" என்றபடி விரைந்தவள் அந்த தளத்தைப் பார்வையால் அலசத் தொடங்கினாள்.

சந்தேகப்படும் படி யாரும் அவள் கண்களில் அகப்படவில்லை. பார்வையால் சல்லடை போட்டு சலித்து சளைத்தவளின் செவியில் "ஹாய் ஹனி. ப்ளீஸ் மூவ் எ லிட்டில்" என்ற ஹஸ்கி குரல் விழவும் மெல்லிதாய் அதிர்ந்து விலகியவள் பிடிமானமின்றி சரியத் துவங்க அவளது இடையை வளைத்து நிறுத்தியது ஒரு ஆடவனின் கரம்.

மித்ரவிந்தா தனது கயல்விழிகளைச் சுழற்றி அவனைப் பார்த்துவிட்டு அதிர்ந்தாள்.

இவன் கிரிக்கெட் ப்ளேயர் அல்லவா. அவளுக்குக் கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை தான். ஆனால் வழக்கமாக டிவி பார்க்கும் அனைவருக்கும் இவனைத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கார் என்ஜினுக்கு ஊற்றும் ஆயிலில் இருந்து இளைப்பாறுதலுக்கு அருந்தும் குளிர்பானம் வரை அனைத்து விளம்பரங்களிலும் அவன் இடம்பெற்றிருப்பான். அப்படி இருக்க அவனைத் தெரியாமல் போக வாய்ப்பேது!

ஆயினும் தொலைக்காட்டி பெட்டியில் "எனது சக்தியின் ரகசியம்" என்று சொல்லிவிட்டுப் புன்னகைக்கும் அந்த அதிரடி ஆட்டக்காரனை இவ்வளவு அருகில் பார்த்த அதிர்ச்சியில் இருந்தவளுக்கு ஒரு வேளை தனக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என்றெல்லாம் கூட தோணியது.

ஆனால் பூரண அதிர்ச்சி திகைப்பு எல்லாம் அவளுக்கு மட்டும் தான் போல. அந்த அதிர்ச்சிக்குக் காரணமானவனான சுழற்பந்து வீச்சாளன் புன்னகை முகத்துடன் தனது விழிகளில் அவளைச் சிறை பிடித்துக் கொண்டிருந்தான்.

தாங்கள் இருக்கும் நிலையை அறிந்து அவள் வேகமாக விலக "ஏன் இவ்வளவு வேகமா விலகுற ஹனி? கூல்" என்று அவளை பிடித்து நிறுத்தினான்.

மித்ரவிந்தா அவனது கண்களை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தாள். ஏனோ அவை அவளது இதயத்தைக் கொக்கி போட்டு இழுப்பது போன்ற உணர்வை அவளுக்குள் தோற்றிவிப்பது போன்ற மாயை.

கண்களை இறுக மூடித் திறந்தவள் அதிர்ச்சியில் பேச வார்த்தை எழாது தவித்தபடியே "நீ... நீங்க... முன்னா" என்று வார்த்தைகளை தந்தி எந்திரம் போல உச்சரிக்கவும் முகுந்துக்கு அவளது அதிர்ச்சியும் தவிப்புமான வார்த்தைகள் எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.

"நான் முன்னாவே தான் ஹனி. அதுல உனக்கு டவுட் எதுவும் வேண்டாம்" என்றவன் தனது ஹூடியை இறக்கி விட்டதும் அவள் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தது.

அந்த அழகைக் காண கண் கோடி இல்லையே என்ற கவலை முகுந்தின் மனதில் தோன்றியது அக்கணத்தில்.

"நீ இவ்வளவு ஷாக் ஆக வேண்டிய அவசியமில்ல ஹனி. நான் முன்னா தான். எனி ஹவ் நான் கிரிக்கெட்டர்னு உனக்குத் தெரிஞ்சிருக்கிறதால தான் என்னோட நிக்நேம் உனக்கு தெரிஞ்சிருக்கு. ரெகுலரா கிரிக்கெட் பார்ப்பியா?"

மித்ரவிந்தா அவனது கேள்வியில் திகைத்து பல்வேறு முகபாவனைகளுக்கு மாறிப் பின்னர் இல்லவே இல்லையென மறுத்துத் தலையசைத்தாள். அதில் அவனது முகத்தில் ஏமாற்றம் பரவியது என்னவோ உண்மை. ஆனால் பரவிய வேகத்தில் அது மறைந்தும் போனது.

தனது ஜீன்ஸ் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்துக் கொண்டு தலையைச் சரித்து அவளை பார்த்தான்.

"அப்ப நான் யார்னு எப்டி கண்டுபிடிச்ச?"

"டிவிய போட்டா எல்லா ஆட்லயும் நீங்க தானே இருக்கிங்க. அப்ப உங்கள எப்டி தெரியாம இருக்க முடியும்?"

"குட். அப்ப நான் எதுக்கு இங்க வந்தேனு சொல்லட்டுமா?"

அவள் புதிராக விழிக்கவும் தனக்கே உரித்தான ஆளுமையான சிரிப்பை உதிர்த்தவன் அவளது பதிலை எதிர்பார்த்தான். ஆனால் மித்ரவிந்தாவால் விழிக்க மட்டுமே முடிந்தது.

"நான் உன்னை தேடி தான் வந்தேன். நீ எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கனு உனக்குத் தெரியாதுல்ல. அதை விடு. உனக்கு இந்த செயின், ஸ்டட் பிடிச்சிருக்கா?"

கூரியவிழிகளால் அவளை அளவிட்டவன் தான் கேட்ட கேள்விக்கு அவள் திருதிருவென விழித்ததை பார்த்து ரசித்தபடியே புருவம் உயர்த்தினான்.

"அப்ப நீங்க தான் பவர் கட் டைம்ல" என்றவளின் பேச்சில் குறுக்கிட்டவன்

"எஸ். அது நானே தான். உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு பவர் கட் பண்ணி இதை உனக்குப் போட்டுவிட்டேன். பிடிச்சிருக்கா?" என வினவினான்.

மெல்லிய கிசுகிசுப்பும் இல்லாமல் உரத்தச் சத்தமுமில்லாமல் உரிமையானவர்களிடம் பேசும் கொஞ்சும் தொனி அந்த குரலில் வியாபித்திருந்தது.

அதை கேட்ட போது அவனது விரல்கள் தனது செவிமடலையும் பின் கழுத்தையும் வருடுவது போன்ற பிரமையில் ஒரு வினாடி உடல் சிலிர்ப்பதை உணர்ந்தாள் மித்ரவிந்தா.

"இப்டி நடந்துகிட்டது ரொம்ப தப்பு. யார்னு தெரியாத பொண்ணைத் தொட்டு இந்த மாதிரி..."

அவனது பார்வை வீச்சில் பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள் அவள்.

"எனக்கு உன்னை நல்லா தெரியும். நேத்து ஒரு ஓல்ட் லேடிக்கு அடிபட்டப்ப என்னை மாப்ட இருந்து காப்பாத்துனது நீ தான். அந்த நன்றிக்கடனுக்குத் தான் இந்த கிப்ட். இப்ப சொல்லு பிடிச்சிருக்கா?"

தயக்கத்துடன் அவனை பார்த்தபடியே தலையாட்டி வைத்தவள் தோழி தன்னை தேடுவதை கண்டு செல்ல விழைய முகுந்த் வேகமாக அவளது பாதையை மறைத்தான்.

மித்ரவிந்தா என்ன என்பது போல பார்வையால் கேள்விக்கணை வீசவும் கைகளை சரணாகதி போல உயர்த்திக் காட்டினான்.

"நான் உனக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேனே. அதை தீர்த்துக்க எனக்கு ஒரு வாய்ப்பு குடுக்க மாட்டியா ஹனி?"

குரலில் இருந்த உருக்கமா அல்லது அவளை அளவிட்ட அவனது பார்வையா எதுவோ ஒன்று அவளை அவனது வேண்டுகோளுக்குச் சம்மதிக்க வைத்தது.

"சொல்லுங்க. எப்டி உங்க நன்றிகடனை தீர்க்க போறிங்க" மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனிடம் வினவினாள் மித்ரவிந்தா,

"இந்த ஒரு ஈவினிங் என் கூட ஸ்பெண்ட் பண்ணு. தட்ஸ் இனாப்"

அவனது பதில் செவியில் விழுந்து மூளைக்குள் சென்று அதற்கான அர்த்தத்தை சீர்தூக்கிப் பார்த்த பின்னர் மித்ரவிந்தாவின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த அசட்டைத்தனம் விடைபெற்று மெல்லிய சினம் துளிர்த்தது.

அவளின் மொழுமொழு நாசியும் ஆப்பிள் கன்னங்களும் செந்நிறத்தைப் பூசிக்கொண்டன. அதை வெட்கமென முகுந்த் நினைக்க அதற்கு மாறாக அவளது விழிகள் தணலாய் ஜொலித்த பின்னர் தான் அது கோபம் என்பதை கண்டுகொண்டான் அந்தக் கலியுக முகுந்தன்.

இந்த மாதிரி அனலைக் கக்கும் விழிகளை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. அவன் சிரித்தாலே மதிமயங்கி அவனது ஆட்டத்துக்கேற்ப ஆடும் பொம்மைகளை மட்டும் கடந்து வந்தவனுக்கு சுயமரியாதையும் நிமிர்வும் கொண்ட மித்ரவிந்தாவின் சினம் சுவாரசியமாகவும் புதுமையாகவும் இருந்தது.

எனவே அதை ஆவலுடன் ரசிக்க ஆரம்பித்தான் அவன். ஆனால் மித்ரவிந்தாவுக்கு அவனது இந்த ரசனைப்பார்வை இன்னும் சினத்தை மூட்டவும் பாம்பின் சீறலுடன் அவளது குரல் வெளிப்பட்டது.

"உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டிருக்க? என்னை பாத்தா அந்த மாதிரி பொண்ணுனு தோணுதா? ஆள் பாக்க டீசண்டா இருந்தா மட்டும் போதாது, பேசுற வார்த்தையும் நாகரிகமா இருக்கனும். மரியாதையா என் வழிய விட்டு ஒதுங்கிடு. உன்ன மாதிரி சீப்பான ஆள் முன்னாடி நிக்கவே எனக்கு உடம்பு கூசுது"

விழிகள் கக்கிய அனலை விட அதிகபட்ச அனலை செவ்விதழ்கள் உதிர்த்த வார்த்தைகள் உடுத்தி வந்திருக்க அந்த வெம்மை கூட அவனது உள்ளத்துக்கு கதகதப்பை ஊட்டி அவனது இதழில் புன்னகையை உறைய வைத்தது.

"நீ சொல்லுற மாதிரி உன்ன 'அந்த' மாதிரினு நெனைக்கல. நான் இந்த ஈவினிங்கை என் கூட ஸ்பெண்ட் பண்ணுனு சொன்னதுக்கு அர்த்தம் நீ இப்ப இருக்குற மால்ல சினிஃப்ளக்ஸ் இருக்கு. அதுல ஒரு மூவி பாத்துட்டு இன்னிக்கு டின்னருக்கு நான் உன்னை ட்ரீட் பண்ணுறேங்கிறது மட்டுமே. டின்னருக்கு அப்புறம் உன்ன எதுவும் பண்ணுற ஐடியா எனக்கு இந்தச் சமயத்துல இல்ல"

"இதெல்லாம் நீ எதுக்கு பண்ணனும்? நான் ஒன்னும் அவ்வளவு பெரிய உதவி பண்ணலயே"

"உஃப். நீ பண்ணுன உதவி உனக்கு வேணும்னா சின்னதா இருக்கலாம். ஆனா அப்ப நீ மட்டும் வரலனா நான் கட்டாயம் ஹெல்மெட்டை கழட்டிருப்பேன். அந்த மாப்ல யாராவது ஒருத்தர் அத வீடியோ எடுத்து சோஷியல் மீடியால வைரல் ஆக்கியிருப்பாங்க. கிரிக்கெட் வீரரின் அலட்சியம்னு நியூஸ் சேனல் எல்லாமே இத பெரிய இஸ்யூ ஆக்குவாங்க. இவ்வளவு நாள் நான் காப்பாத்தி வச்ச குட்நேம் ஸ்பாயில் ஆயிருக்கும்"

மூச்சு விடாமல் அவன் சொன்னதில் தனது உதவி பெரியது தான் போல என நம்பியவள் வேறு வழியின்றி அவனது நன்றிகடன் தீர்க்கும் நிகழ்வுக்கு ஒத்துக்கொண்டாள்.

ஆனால் சம்யுக்தா அவளைத் தேடவும் முகுந்திடம் கண் காட்டி விட்டு அவளை நோக்கி விரைந்தாள்.

"யஷ்வந்த் வந்திருக்கான் சம்யூ. நான் போய் பாத்துட்டு வர்றேன். நீ வீட்டுக்குக் கெளம்பு. என்னோடதுக்கும் பில் போட்டு எடுத்துட்டுப் போயிடுடி" என்று சொல்லவும் சம்யுக்தா அதை வாங்கி வீட்டுக்குச் சீக்கிரமாக வந்துவிட சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும் முகுந்திடம் வந்து நின்றவள் கிளம்பலாமா என கேட்க அவன் தனது ஜீன்சின் பாக்கெட்டில் கைவிட்டபடி அவளுடன் நடந்தான். இருவரும் பட்டர் பாப்கார்ன் பக்கெட்டுடன் சினிஃப்ளக்சினுள் நுழைந்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.

முகுந்தின் ஹூடி அவனது முகத்தை யாரும் காணாது காப்பாற்றியது. இருவரும் அருகருகே அமர்ந்து மூவி பார்க்க ஆரம்பித்தனர். மித்ரவிந்தாவின் கவனம் என்னவோ படத்தில் தான் இருந்தது. ஆனால் முகுந்த் தன்னருகில் அமர்ந்திருந்த ஆரணங்கின் மீதல்லவா கண்ணாய் இருந்தான்.

படத்தை அவள் ரசிக்க அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான். எத்துணை அழகு இவள்! எவ்வித செயற்கைப்பூச்சுமின்றி அவளது முகம் இவ்வளவு பேரழகாக ஜொலிக்கிறதே!

கிள்ளத் தூண்டும் கன்னக்கதுப்புகள் ஆப்பிளாய் மின்னியது. அவ்வபோது சிரிப்பில் மின்னும் இதழ்கள் ஸ்ட்ராபெர்ரியாய் விரிந்தது. நெற்றியோ பிறைநிலவாய் ஒளி வீசியது.

திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு அவள் சிரிக்க வேறு செய்யவும் முகுந்தால் அவனைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. இவ்வளவு அருகில் அவன் மனதை ஆட்சி செய்யும் மடந்தை அமர்ந்திருக்க அவனோ ஒன்றும் செய்யவாளாதவனாக கைகளைக் கட்டிக் கொண்டு கடனே என திரையை வெறித்துக் கொண்டிருக்கிறான்.

நினைக்கும் போதே நெஞ்சை பிளந்து கொண்டு பெருமூச்சு ஒன்று வெளியேறியது. அவனருகில் அமர்ந்திருந்த மித்ரவிந்தா பெண்களுக்கே உரித்தான உணர்வு மேலிடவும் சட்டென திரும்பியவள் அவனது பார்வை தன்னைத் தழுவியிருப்பதை உணர்ந்து செய்வதறியாது திகைத்தாள்.

முகம் சூடாகி இரத்தவண்ணம் கொள்வதை அவளால் உணரமுடிந்தது. முகுந்தும் அந்த குருட்டுவெளிச்சத்தில் செந்நிறம் கொண்ட அவள் கன்னத்தை ரசித்தபடி அவள் பக்கம் சாய்ந்தவன் அவளது செவியில் மெதுவாய் பேசத் தொடங்கினான்.

"நீ ரொம்ப அழகு ஹனி. நான் பாத்த பொண்ணுலயே உன்ன மாதிரி ஒரு கார்ஜியஸ் கேர்ள் யாரும் கெடயாது. கார்ஜியஸ்னு சொல்லுறது கூட கம்மி தான். ஐ ஹாவ் ஃபாலன் ஃபார் யுவர் சிம்பிளிசிட்டி"

ரசனையும் தாபமுமாய் மொழிந்தவனின் குரலில் மித்ரவிந்தாவுக்குப் புல்லரித்தது.

அவன் கண்களில் மின்னிய ஆர்வம் கலந்த ரசனை அவளை இயல்பாக இருக்கவிடாமல் தொந்தரவு செய்யவே "என்னாச்சி? ஏன் இப்டி பாக்குற நீ?" என்று வினவினாள்.

"எனக்கு இந்த மூவி பிடிக்கல. நம்ம கெளம்பலாமா?"

அவனது கேள்வியில் திகைத்தவள் இடைவேளை வந்ததும் எழுந்தவனுடன் தானும் எழுந்து கொண்டாள். முகுந்த் அவளது கரத்தைப் பிடித்து வெளியே அழைத்து வந்ததும் தனது கையை நாசூக்காக அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.

"நான் கெளம்புறேன் சார். இதுக்கு மேல என்னால உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. உங்க நன்றிக்கடன் தீர்க்கும் நிகழ்வு இதோட முடிஞ்சு போச்சு. குட் பை" என்றவள் நிற்காமல் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

அதை நம்ப இயலாதவனாய் பார்த்தபடி நின்றான் முகுந்த். இது வரை அவன் கண்ட பெண்கள் அனைத்தும் அவனுடன் ஒட்டிக்கொண்டே திரிவதை தங்களுக்குக் கிடைத்த வரமாக எண்ணிக் கொள்வது தான் வழக்கம்.

ஆனால் இவளோ கிடைத்த வரத்தை தூக்கி எறிகிறாளே! இத்தனை நாட்கள் அவனுள் உருவேற்றப்பட்டிருந்த 'முன்னா தி கிரேட்' என்ற பிம்பம் மித்ரவிந்தாவின் செய்கையால் தூள் தூளாக நொறுங்க தனது முதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக நின்றான் முகுந்த்.




Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8