5 (யாரோ ஒருவன்)

 



சர்வேஸ்வர் சஹானாவின் மனதுக்குள் புகுவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவளோ அவனது சதுரங்க ஆட்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட கோட்பாடுகளுடன் உலாவினாள்.

ஒரு பெண்ணுக்குப் பிடித்தவை என்ற பட்டியலில் கட்டாயம் இடம்பெறுபவை என சிலவற்றை இவ்வுலகம் பொதுப்படையாகச் சொல்லியிருக்கிறது. அவற்றை வைத்து அவள் மனதை வெல்லலாம் என்று எண்ணியவன் போட்டக் கணக்குகள் அனைத்துமே சஹாவின் முன்னே ஒன்றுமில்லாது போய் விட்டது.

அவன் அவளுக்கென அனுப்பும் அனைத்துப் பரிசுப்பொருட்களும் சஹானாவின் கைப்பட்ட அடுத்த நொடியே குப்பைத்தொட்டியை முத்தமிட்டன. இவையனைத்தையும் சிசிடிவி கேமரா வழியே காணும் ஒவ்வொரு முறையும் அவனது கர்வம் உடையும். கூடவே தனக்கேத்தவள் தான் இவள் எனும் பெருமிதமும் உண்டாகும்.

அது எப்படி இந்தப் பெண்ணுக்கு எதன் மீதும் ஆசையில்லாது இருக்கும் என்ற ஆச்சரியமும் அவனுள் எழும்.

ஆனால் சஹானா சளைக்காது அவன் அனுப்பிய அனைத்தையும் நிராகரித்தாள். இது குறித்து ஹாசினி அங்கலாய்த்தால்

யாரு எவர்னு தெரியாம எப்டி ஹாசினி நான் அவன் அனுப்புன திங்சை யூஸ் பண்ணுவேன்? முதல்ல இதெல்லாம் எனக்கு அனுப்பி வைக்க அவன் யாரு? நான் என்னோட சின்ன உலகத்துல சிம்பிளான வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கேன்என்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்?” என்று பதிலடி கொடுத்துவிடுவாள்.

சர்வேஸ்வர் இம்முறை அவளுக்குஎஸ்என்ற ஆங்கில எழுத்து லாக்கெட்டுடன் ஒரு பிளாட்டினம் செயினைப்  பரிசாக அனுப்பிவைத்திருந்தான். வழக்கம் போல சஹானா பரிசு பொருள் வந்த பார்சலை பிரித்தவள் ஊதாநிற வெல்வெட் பெட்டியைத் திறந்ததும் அதில் எஸ் என்ற எழுத்துடன் கூடிய ப்ளாட்டின செயினைப் பார்த்ததும் வாயடைத்துப் போனாள். அதைக் கையில் தூக்கிப் பார்க்கும் போதே லாக்கெட்டில் பதிக்கப்பட்டிருந்த பொடி வைரங்கள் வெட்டி ஜொலித்தன.

அதை அவள் ஆர்வத்துடன் பார்வையிட சர்வேஸ்வர் வெற்றிமிதப்பில் புன்னகைக்க ஆரம்பித்தான். அதே நேரம் சஹானாவின் இதழ்க்கடையில் ஒரு நொடி ஒரே ஒரு நொடி வழக்கமான கேலிப்புன்னகை எட்டிப்பார்க்க சர்வேஸ்வரின் நெற்றியில் சிந்தனைக்கோடுகள்.

இம்முறையும் அந்தப்பெட்டியை கையில் எடுத்துச் சென்று குப்பைத்தொட்டியில் வீசவும் சர்வேஸ்வருக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது.

டேமிட்!” என்று கத்தியபடி எழுந்தவன் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியை எட்டி உதைத்தான் கோபத்துடன். வேகமாகப் போனை எடுத்தவனின் விரல்கள் செய்தியை தட்டச்சு செய்யத் தொடங்கின.

அங்கே சஹானா ஹாசினியிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்க அவளின் செல்பேசி செல்லமாய் சிணுங்கி தன்னை கவனிக்குமாறு அழைத்தது. இந்நேரத்தில் யார் என்று புருவம் சுழித்தவாறே செல்பேசியை நோக்கி சஹானா அதிலிருந்த செய்தியைப் படித்ததும் யாரவன் என்று சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினாள்.

பேப் உனக்கு செயின் டிசைன் பிடிக்கலயா? நான் வேணா வேற டிசைன்ல அனுப்பி வைக்கவா?”

யாரோ ஒருவன் தன்னை நித்தமும் கண்காணிக்கிறான். பரிசுப்பொருளை அனுப்பி வைத்து தனது தன்மானத்துடன் விளையாடுகிறான். அதோடு அவனுக்கு தனது எண்ணும் தெரிந்திருக்கிறது. ஆனால் தனக்கு அவன் யாரென்றே தெரியவில்லை. யார் அந்த யாரோ ஒருவன்?

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் வந்தது. சர்வேஸ்வர் புன்சிரிப்புடன் குழந்தை போல கண்ணை உருட்டி சுற்றியுள்ளவர்களை சந்தேகப்பார்வை பார்க்கும் சஹானாவை சிசிடிவி கேமராவில் பார்ப்பதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

கண்ணின் கருமணிகள் விழியின் இரு கோடிக்கும் உருளும் அழகு தான் என்ன! யோசனையில் சுழித்திருந்த அவளது புருவங்களும், இறுகியிருந்த இதழ்களும் அவளை இன்னுமே பேரழகியாக காட்டியது.

அவனது கைகள் அடுத்தச் செய்தியைத் தட்டச்சு செய்தது.

அழகான பொண்ணுங்க யோசிக்கிறப்போ பேரழகா தெரிவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இன்னிக்குத் தான் நேரா பார்க்குறேன் பேப்

கணினியில் கண் பதித்திருந்தவள் இரண்டாவது செய்தியைப் பார்த்ததும் கொதிநிலைக்குச் சென்றாள். படபடவென்று தொடுதிரையில் அவள் விரல்கள் தட்டச்சு செய்யத் தொடங்கியது.

யூ ராஸ்கல் நேர்ல வர தைரியம் இல்லாம எங்கேயிருந்தோ என்னை கண்காணிக்குறதுக்கு உனக்கு வெக்கமா இல்லயா? இனிமே உன் கிட்ட இருந்து எதாவது கிப்ட் வந்துச்சுனா அதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்

அவளது எச்சரிக்கையைத் தாங்கி வந்த செய்தியைப் படித்ததும் சர்வேஸ்வரின் இதழில் புன்னகை நெளிந்தது.

அவளது முகத்தைத் திரையில் பார்த்தவனுக்கு அதில் இருந்த கோபமும் அவளது மூக்குநுனிச்சிவப்பும் இன்னும் அவள் மீதான பித்தை அதிகமாக்க அடுத்த கட்டமாகப் பரிசளிக்க யோசித்தான் அவன்.

சஹானா செல்பேசியைத் தொப்பென மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை தன்னைச் சூழ்ந்துள்ள ஆண்களை உளவுப்பார்வை பார்த்தாள். யாவரும் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்க தான் தேவையின்றி சக ஊழியர்களைச் சந்தேகிக்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி மேலிட கணினியில் கண் பதித்தாள்.

மாலை வரை இதே அலைபாயும் மனநிலை தான் அவளுக்கு. மாலையில் கிளம்பும் போது அவளது அத்தை வரும் போது காய்கறி வாங்கி வருமாறு பணிக்கவே சரியென்று சொல்லிவிட்டு சொன்னபடி காய்கறி வாங்கிக் கொண்டு தான் வீடு திரும்பினாள்.

அத்தை அதையே ஆயிரம் குறைகள் சொல்லித் தான் வாங்கினார்.

வெண்டக்கா முத்தலா இருக்கு போல”, “தக்காளி பழுத்த பழமா வாங்க மாட்டியா?”, “வெங்காயம் பாரு ஈரமா இருக்கு

இது வழக்கமாக மாமாவுக்கு கிடைக்கும் மண்டகப்படி. இம்முறை ஒரு மாறுதலுக்குச் சஹானா அதற்கு இலக்காகி விட்டிருந்தாள்.

சஹானா அதை ஒரு நமட்டுச்சிரிப்புடன் கேட்டுவிட்டு தனது அறைக்குள் நுழைந்தாள். குளியலறைக்குச் சென்று உடம்பை கழுவிவிட்டு இரவுடை அணிந்ததும் புத்துணர்ச்சியாக உணர்ந்தாள்.

விசாகா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவளுக்கு அழைத்ததில் திடீரென்று இன்று இரவுப்பணி போட்டுவிட்டதாகச் சொன்னவள் கலாவதியிடம் சொல்லிவிடுமாறு கூறி இணைப்பைத் துண்டித்தாள். விசாகா இருந்தால் தான் வீடே கலகலப்பாக இருக்கும். அவள் இல்லையென்றதும் அத்தை சமையலை சீக்கிரமே முடித்துவிட்டு டிவியில் சரணாகதி ஆகிவிட்டார். மாமா வழக்கம் போல நித்ராதேவியுடன் மல்லுக்கட்ட போய்விட்டார்.

சஹானா மட்டும் தனித்துவிடப்படவே அவளுக்கு உறக்கம் பீடிக்கவில்லை. தனிமையில் மனதில் இவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டிருந்த சந்தேகபூதம் தலை விரித்தாடியது.

யார் அவன்? எனக்கே தெரியாமல் என்னைத் தொடருபவன். சம்பந்தமின்றி பரிசுப்பொருளாக அனுப்பிக் குவிப்பவன். என் அலுவலகத்தில் கூட என்னைக் கண்காணிக்கும் அதிகாரம் படைத்தவன். அவன் ஏன் என்னை இப்படி கண்காணிக்க வேண்டும்?

இதையெல்லாம் யோசிக்கும் போதே ஏதோ ஒரு மாயக்கரம் அவளைச் சுற்றி வளைப்பது போன்ற மாயை. மாயக்கரம் என்றதும் சஹானாவுக்குச் சட்டென்று காரணமேயின்றி சர்வேஸ்வரின் நினைவு வந்தது.

விசாகா அவனுக்குக் கொடுத்த ஆகா ஓஹோ பில்டப்புகளை வைத்து அவனது ஆடையை நாசம் செய்ததற்கு தன்னை தண்டித்துவிடுவானோ என்றெல்லாம் பயந்தாள் சஹானா. பெரிய தண்டனை இல்லையென்றாலும் கல்லூரி முதல்வர் அறை வரை இழுத்தால் கூட போதும். இத்தனை வருடம் கல்லூரியில் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயர் நாசமாகி இருக்கும்.

ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. அவன் வேறு என்னென்னவோ சொன்னான் தானே! யோசித்தவளுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனைப் பற்றி எண்ணியதும் அவளது நினைவுக்கு வந்தது என்னவோ ட்ரிம் செய்த தாடியுடன் கூடிய அவனது முகமும், கண்ணில் உணர்ச்சிகளை காட்டாதவாறு மறைத்து போட்டிருந்த கருப்புக்கண்ணாடியும் தான்.

ஆறடிக்கு குறையாத உயரம். ஆகிருதியான தேகம். அழுத்தமான குரல். இவ்வளவுக்கு மேல் அவள் கவனத்தில் பதியவில்லை. நான் பெரிய இவனாக்கும் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாது ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபரும் அவர்கள் கல்லூரி மேலாண்மை உறுப்பினருமான அவன் தான் செய்த தவறை பெரிதுபடுத்தாது சென்றது கூட அவளுக்குப் பிடித்திருந்தது.

அவள் யாரை பற்றி எண்ணிக்கொண்டிருந்தாலோ அவனே அவளுக்கு செய்தியை அனுப்பிவைத்தான். ஆனால் அவளுக்கு அவன் தான் என்பது தெரியாதது தான் பரிதாபம்.

செல்பேசியை எடுத்து நோக்கியவள் அந்த யாரோ ஒருவனின் எண் தான் என்றதும் அசட்டையாகத் தூக்கியெறிய போக ஆனால் ஏதோ ஒன்று அவ்வாறு செய்யாதே சஹானா என்று அவளைத் தடுக்க தொடுதிரையில் கண்பதித்தாள்.

ஐ மிஸ் யூ பேப். எட்டுமணிநேரம் கண்டினியஸா உன்னை பாத்துட்டு இப்ப உன்னை பாக்க முடியலனதும் ஒரு மாதிரி இருக்கு. இப்பவே உன்ன எங்கயாவது ஆளில்லாத இடத்துக்குக் கடத்திட்டு போயிடலாமானு யோசிக்கிறேன்

படிக்க படிக்க அவளுக்கு இரத்தம் கொதித்தது. இவனுக்கு என்ன திண்ணக்கம் என்று பல்லைக் கடித்த சஹானாவுக்கு கண்ணுக்குத் தெரியாத அந்த நல்லவன் கையில் கிடைத்தால் கொன்று விடும் அளவுக்கு வெறி.

அதே வெறியுடன் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

இன்னொரு வாட்டி நீ என்னை பேப்னு கூப்டாத. எனக்கு எரிச்சலா இருக்கு. யார்டா நீ? கொஞ்சம் கூட தைரியமில்லாம ஒரு பொண்ணுக்கு முகம் காட்டாம மெசேஜ் அனுப்புற? தேவை இல்லாம நீ என்னைச் சீண்டுற. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதுல உன்ன நெனைச்சு டென்சன் ஆக தனி டைம் ஸ்லாட் ஒதுக்க முடியாது

கையில்லாத வான நீல வண்ண பனியனும் கருப்பு ஷார்ட்ஸும் அணிந்து நீச்சல்குளத்தில் கால் நனைத்தபடி ஸ்காட்சை அருந்திக் கொண்டிருந்தவனின் நவீன ரக ஆப்பிள் ஐபோன் சஹானாவின் செய்தி வந்திருப்பதாக அறிவிப்பு கொடுக்க கண்ணாடி க்ளாசை கீழே வைத்துவிட்டுச் செல்பேசியை நோக்கினான்.

அவளது கோபாக்கினியுடன் வந்திருந்த செய்தியைப் படித்ததும் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான்.

நாட் பேட் பேப். உனக்கு என் அளவுக்கு இல்லாட்டியும் கோவம் கொஞ்சம் வருது. ஆனா திமிர் தான் கொஞ்சம் ஜாஸ்தி. நான் அனுப்புன காஸ்ட்லி பெர்பியூம், டயமண்ட் ரிங், ப்ளாட்டினம் செயின் எல்லாத்தையும் குப்பைத்தொட்டிக்குத் தாரை வார்த்த உன்னோட திமிர் கூட எனக்கு பிடிச்சிருக்கு பேப். உன்னோட அழகு, அறிவோட சேத்து அந்த திமிரும் எனக்கு மட்டுமே வேணும் சனா

சொன்னவனின் குரலில் இருந்த தீவிரத்தன்மை சஹானாவுக்குப் புரிந்திருந்தால் தான், வரும் நாட்களில் கொஞ்சம் கவனமாக இருந்து சர்வேஸ்வர் விரித்த வலையிலிருந்து தப்பியிருப்பாளே.

சர்வேஸ்வர் அவளது செய்தி வந்த திருப்தியில் நீச்சல்குளக்கரையிலிருந்து எழுந்தவன் அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்தான். சஹானாவும் அவனிடமிருந்து செய்தி வராததைப் பார்த்து விட்டு கண்ணயர ஆரம்பித்தாள்.

ஆழ்ந்த உறக்கம் தான் கிடைக்கவில்லை. ஏதேதோ முடிவற்ற கனாக்கள். பதிலற்ற வினாக்கள். கூடவே மெத்தையில் அங்குமிங்குமாக புரண்டு புரண்டு பார்த்தவளுக்கு அதிகாலையில் ஒரு கனவு வந்தது.

அதில் சர்வேஸ்வரின் கைப்பிடியில் சஹானா நிற்பது தெரியவும் அடித்துப் பிடித்து எழுந்தாள் சஹானா. கடிகாரத்தில் நேரம் பார்க்க அது அதிகாலை நான்கு மணி என்று காட்டியது. சம்பந்தமின்றி அவனுடன் ஏன் தனக்கு கனவு வரவேண்டும் என்ற கேள்வியோடு அதிகாலை கனவு பலிக்கும் என்பார்களே என்ற கலக்கமும் சேர அன்றைய பொழுது அவளுக்கு விடிந்தது.

அலுவலகத்துக்கு வந்தவளின் கையில் அழைப்பிதழை திணித்தாள் நிதித்துறையில் கணக்காளராக வேலை செய்யும் ஹேமா.

இன்னும் டூ டேய்ஸ்ல மேரேஜ் சஹா.  நீ இங்க வந்து கொஞ்சம் நாள் தான் ஆகுது. ஆனா உன்ன பாத்ததும் எனக்கு என் தங்கச்சி நினைவு தான் வருது. நீ கண்டிப்பா வரனும். இது என்னோட அன்புக்கட்டளை

அவளிடம் முறுவலித்து தான் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்துவிடுவதாக உறுதியளித்து அனுப்பிவிட்டு தனது வேலையில் மூழ்கியவளை ஆபிஸ் பாயின் குரல் கலைத்தது.

மேடம் உங்களுக்கு இன்னிக்கும் ஒரு பார்சல் வந்திருக்கு

அவ்வளவு தான்! சஹானாவுக்கு வந்த கோபத்துக்கு அவளிடம் மட்டும் பார்வையில் பஷ்மம் ஆக்கும் சக்தி இருந்திருந்தால் இந்த அலுவலகம் பற்றி எரிந்திருக்கும். ஹாசினியின் அனுமதி பெற்றுக்கொண்டு வரவேற்பறைக்குச் சென்றவளின் கண்ணில் பட்டது அந்த பார்சல்.

கடுங்கோபத்துடன் அதை பிய்த்தவளைப் பார்த்து உள்ளே இருந்து சிரித்தது ஒரு அழகான விவாஹா பட்டுப்புடவை. அவளது பால்வண்ணமேனிக்கு ஏற்றபடி அடர்சிவப்பு வண்ணத்தில் அழகாய் மின்னியது அப்புடவை. புடவை என்னவோ அழகு தான். ஆனால் அதை அனுப்பிவைத்தவன் மனதிலுள்ள எண்ணங்கள் தவறாயிற்றே!

இரண்டாவது யோசனை ஏதுமின்றி அதை குப்பைத்தொட்டியில் வீசச் சென்றவளைத் தடுத்து நிறுத்தியது செல்பேசியின் சிணுங்கல். ஒரு கையில் புடவை இருந்த அட்டைபெட்டியுடன் செல்பேசியை நோக்கியவள் இது அந்த யாரோ ஒருவன் எண் என்று தெரிந்ததும் மறுயோசனையின்றி அழைப்பை ஏற்று கோபத்தில் எரிமலைக்குழம்பு போல எழுந்த வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாள்.

ஹூ ஆர் யூ இடியட்? யாரை கேட்டு எனக்கு கிப்ட் மேல கிப்டா அனுப்புற? அம் ஐ யுவர் ஒய்ப்? இஷ்டத்துக்கு புடவை எடுத்து அனுப்புற. நீ யாருடா எனக்கு புடவை அனுப்புறதுக்கு?”

சொல்லிவிட்டு மூச்சுவாங்கியவளின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறி அடங்கியது. ஆனால் மறுமுனையில் இருந்தவன் மிகவும் இலகுவாக பதிலளித்தான்.

இந்த உலகத்துல உனக்கு ஒருத்தன் புடவை அனுப்பனும்னா அதுக்கான முழுத்தகுதியும் அதிகாரமும் எனக்கு மட்டும் தான் இருக்கு பேப்

கட்டளையிடும் அழுத்தமான மறுக்க முடியாத குரல். இதை எங்கேயோ கேட்டிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் யோசித்தால் இந்த திமிர் பிடித்த யாரோ ஒருவனுக்கு பதிலடி கொடுக்க இயலாதே!

இன்னொரு வாட்டி பேப்னு சொல்லாத. எனக்கு அருவருப்பா இருக்கு. நேர்ல வந்து பேச தைரியமில்லாத கோழை, நீ எனக்கு புடவை எடுத்து தந்தா அது எனக்கு அசிங்கம் தான். இன்னொன்னு சொல்லவா? அந்த புடவை என்னை விட உனக்கு நல்லா இருக்கும். புரியலயா? உன்னை மாதிரி போன்ல தைரியம் காட்டுற கோழைக்கு ஏத்தது அந்த புடவை தான்

கடைசியில் அவள் அவனை தைரியமற்ற ஆண்மகன், புடவை கட்டிக்கொள் என்று மறைமுகமாகச் சொல்லியே விட்டாள்.

இதைக் கேட்டதும் சர்வேஸ்வரின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. போனால் போகிறது சின்னப்பெண் என்று விட்டால் இவள் தன்னை ஆண்மகனில்லை என்று சொல்லும் விதமாக புடவையை தனக்கேற்ற உடை என்கிறாள்.

ஏய் என்ன சொன்ன? தைரியம் இல்லாத கோழையா? அதுவும் நானா? இன்னும் ரெண்டு நாள், ரெண்டே நாள்ல உன் கண்ணு முன்னாடி வருவேன் சனா. அப்ப நான் உனக்கு தைரியமான ஆம்பளைனு ப்ரூவ் பண்ணுறேன்என்று கர்ஜித்துவிட்டு போனைத் தூக்கிவீச மறுமுனையில் சஹாவுக்கு போன் எதிலேயோ பட்டுச் சிதறும் சத்தம் கேட்டது.

புடவை இருந்த பெட்டியை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு தனது இருப்பிடத்துக்கு வந்தவளின் மனமெங்கும் எண்ணற்ற குழப்பங்கள். இந்தக் குரலை அவள் எங்கேயோ கேட்டிருக்கிறாள். ஆனால் எங்கே? நினைவுக்கு வரவில்லையே!

கூடவே அவனது கடைசிவார்த்தையானநான் உனக்கு தைரியமான ஆம்பளைனு ப்ரூவ் பண்ணுறேன்என்ற அந்த யாரோ ஒருவனின் குரலில் இருந்த கோபம் உள்ளுக்குள் குளிர்பரப்பியது.

சர்வேஸ்வர் சஹானாவின் வாய்த்துடுக்கும் அகம்பாவமும் எல்லையைக் கடந்துவிட்டதாக எண்ணி அடிபட்ட சிறுத்தையாய் அங்குமிங்கும் உலாவினான்.

என்னை ஆண்மகனா என்று கேட்க இவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டுமென கோபத்தில் குமுறியவன் இரண்டு நாட்கள் கழித்து சஹானாவை சந்திக்க செல்லும் தருணத்துக்காக அத்தனை கோபத்தையும் தேக்கி வைக்க ஆரம்பித்தான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8