6 (நீயா நானா)
பட்டுச்சேலை சரசரக்க கூந்தலில் மல்லிகை சூடி அழகிய தேவதை மண்ணில் வந்துவிட்டாளோ எனும் அளவுக்கு பேரழகியாய் அந்த திருமணமண்டபத்துக்குள் நுழைந்தாள் சஹானா. உடன் ஹாசினியும் இருக்க மணமேடையில் மணமகனுடன் இரகசியம் பேசிக் கொண்டிருந்த ஹேமா இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு புன்னகைக்க அவளை நோக்கி முறுவலித்த இருவரும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு இளம்பெண் தாம்பளத்தில் மாங்கல்யம் மற்றும் அர்ச்சதைப்ப்பூக்களுடன் வர இருவரும் அர்ச்சதையை எடுத்துக் கொண்டனர்.
கெட்டிமேளம் முழங்க நாதஸ்வரத்தின் மங்கலநாதம் இனிமையாய் எழ செல்வி ஹேமா திருமதி ஹேமாவாக மணமகன் கையால் மாங்கல்யம் வாங்கிக் கொள்ள ஹாசினியும் சஹானாவும் அர்ச்சதை தூவி அவர்களை ஆசிர்வதித்தனர். திருமணச்சடங்குகள் முடிவடைய மணமக்களுக்குப் பரிசுப்பொருளை இருவரும் நீட்ட ஹேமா தனது கணவனிடம் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். பின்னர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இருவரையும் ஹேமாவின் அன்னை கட்டாயமாக மாலையில் நடக்கும் வரவேற்புக்கு வரவேண்டும் என்று அன்பாய் கட்டளையிட இருவரும் சிரித்த முகமாய் சரியென்று ஒப்புக்கொண்டனர்.
"நம்ம நியூ பாஸ் கூட ஈவினிங்க் ரிசப்சனுக்குத் தான் வர்றேனு சொல்லிருக்காராம். நான் இது வரைக்கும் அவர பாத்ததே இல்ல சஹா. பட் நீது பாத்திருக்காளாம். செம ஹேண்ட்சம்னு சொன்னா. அதனால ஈவினிங்க் கொஞ்சம் ஹாட்டா ரெடியாகுறோம். சரியா?"
சஹானா என்னையும் ஏன் கூட்டு சேர்க்கிறாய் என்று புருவம் உயர்த்தி வினவ
"நீ இல்லாம நான் மட்டும் தனியா வந்தா நல்லா இருக்காதுடி. அங்க பாரு அந்த ஆன்ட்டிக்கு என்ன ஏஜ் இருக்கும்? அதுவே இவ்ளோ பெரிய முதுகு வச்ச ஜாக்கெட், சின்ன ப்ளீட்ஸ்னு அமர்க்களம் பண்ணுது. நமக்கு என்ன? இப்போ போட்டா தான் உண்டு சஹா. அவங்களோட ஏஜ்ல நீயோ நானோ ஹாட்டா ட்ரஸ் பண்ண முடியுமா?" என்று கேட்டுவிட்டு அசட்டையாக தோளைக் குலுக்கியவளை சஹானா குழப்பமாய் ஏறிட்டாள்.
ஏனென்றால் வரவேற்புக்கு அவள் அணியப்போவது லெஹங்கா தான். அதில் 'ஹாட்'டாக அணிய என்ன இருக்கிறது? நம் ஊர் தாவணி போல தானே என்று எண்ணமிட்டவளுக்கு ஹாசினியின் வீட்டுக்குச் சென்ற பின்னர் தான் அந்த லெஹங்காவின் அழகு தெரிந்தது.
தங்கநிறத்தில் சோளியுடன் இளஞ்சிவப்பு வண்ண பாவாடை மற்றும் அதே பொன்னிறத்தில் தாவணியுடன் கூடிய லெஹங்கா அது. அதன் தங்க நிற சோளியின் பின்புறத்தில் ஒரு விரல்கடை அளவுக்கு மட்டுமே துணி இருக்க மேல்முதுகில் இரண்டு கயிறுகள் முடிச்சுப் போட வசதியாக இருந்தது.
ஹாசினி சொன்னது போல இது அவளுக்கு பிரமாதமாக தான் இருக்கும் என்று எண்ணமிடும் போதே அவள் அந்த லெஹங்காவை சஹானாவின் கையில் திணித்தாள்.
"இது உனக்கு. அந்த மிண்ட் கலர் லெஹங்கா எனக்கு" என்று சொல்லிவிட்டு அதற்கு பொருத்தமாக பொன்னிறத்தில் பெரிய கம்மல்களை தேட தொடங்கினாள்.
சஹானா தயக்கத்துடன் "ஹாசினி இது ரொம்ப காஸ்ட்லி லெஹங்காவா இருக்கும் போல. நான் இத உடுத்திட்டுப் போய் டேமேஜ் பண்ணிட்டேன்னா என்ன பண்ணுறது?" என்று சொல்லிவிட்டு யோசனையுடன் உதடு கடிக்க
"போடாமலே வச்சிருந்தாலும் அது டேமேஜ் தான் ஆகும் சஹா. இது எனக்கு சேர மாட்டுதுடி. அதுவுமில்லாம இது உனக்காகவே தைச்ச மாதிரி இருக்கு. இத போட்டா நீ அப்சரஸ் மாதிரி அழகா இருப்ப"
அதன் பின்னர் மறுத்துப் பேசி ஹாசினியை வருத்தம் கொள்ள வைக்க அவள் விரும்பவில்லை.
இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஹேமாவின் வரவேற்புக்குச் செல்ல தயாராயினர். ஹாசினி அழகாக தயாராக சஹானாவும் தயாரானாள் சில பல குறைகளுடன்.
"இந்த ஸ்லீவ் ரொம்ப சின்னதா இருக்கு ஹாசினி. இடுப்பு தெரியுதுடி. கொஞ்சம் தாராளமா துணி வச்சு தைச்சா தான் என்ன? இத டிசைன் பண்ணுனவன் மட்டும் என் கையில மாட்டுனா ' சிக்கனத்தை காசுல காட்டு. இப்பிடி தைக்கிற துணியில காட்டாத'னு சொல்லி அவனை கொட்டிருவேன்"
அவள் என்ன தான் சொன்னாலும் அந்த லெஹங்கா அவளுக்கு அமர்க்களமாக இருந்தது என்பது தான் உண்மை. இளஞ்சிவப்பு பாவாடையும் பொன்னிற மெல்லிய தாவணியும் அவளது அழகைத் தூக்கிக் காட்டியது. கூந்தலை அழகாக 'ஹீட் அயர்னால்' நேராக்கியிருந்தவள் அதை தோளில் பரத்தி விட்டாள்.
"இது கொஞ்சம் முதுகை மறைக்கும்"
பின்னர் ஹாசினி தேர்ந்தெடுத்த பெரிய கம்மல்களை காதில் தொங்கவிட்டு நெற்றியில் ஒற்றை கல் பொட்டை ஒட்டிய பின்னர் கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு அது தான் தானா என்ற ஆச்சரியம்.
மெல்லிய மேனியைப் பொன்னிற தாவணி தழுவியிருக்க அந்த மெல்லிடையாளுக்குத் தன் அழகில் சிறிது கர்வம் கூட வந்தது அக்கணம்.
ஆனால் அவளுக்குத் தொல்லை கொடுக்கும் அந்த யாரோ ஒருவன் சொன்ன இரண்டு நாட்கள் கணக்கு அன்றோடு முடிவுக்கு வந்ததை அவள் மறந்துவிட்டிருந்தாள். இரண்டு நாட்களாக அவனிடமிருந்து செய்திகளோ பரிசுகளோ அழைப்புகளோ இல்லாதிருக்க அவன் தன்னை மறந்திருப்பான் என்று கணக்கு போட்டிருந்தது அவளின் மனம்.
எவனோ ஒருவன், நேரம் போகாமல் பரிசளித்து தன்னை அவனது வலையில் விழ வைக்க முயன்று முடியாமல் தோற்று ஓடிவிட்டான் என்று மட்டும் எண்ணிக்கொண்டாள். மறந்தும் கூட இந்நிகழ்வைப் பற்றி வீட்டினரிடம் மூச்சு கூட விடவில்லை.
சும்மாவே கலாவதிக்கு சஹானா என்றால் ஏழாம்பொருத்தம். இதில் அவளை ஒருவன் இவ்வாறெல்லாம் தொந்தரவு செய்வது தெரிந்தால் அவ்வளவு தான். நீயாச்சு உன் வேலையாச்சு, பேசாமல் வீட்டுக்குள் இரு என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதோடு அவள் அவனது விலையுயர்ந்த பரிசுகளைப் புறக்கணித்து குப்பையாக வீசியதை கேள்விப்பட்டால் அவருக்கு இதயத்துடிப்பு நின்று போய்விடும்.
ஆடை ஆபரணங்கள் மீது பற்றுள்ள சராசரி நடுத்தர வர்க்கத்து பெண்மணி. என்ன செய்வது ஆசைகள் மனிதர்களை நியாய அநியாயங்களைப் பற்றி சிந்திக்க விடுவதில்லையே. தான் இன்று வீடு திரும்ப தாமதமாகும் என்று மாமாவுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு ஹாசினியுடன் வரவேற்பு நடக்கும் மண்டபத்துக்குச் செல்ல டாக்சியில் ஏறினாள் சஹானா.
அழகான மாலை வேளையில் இருளைப் பூசிக்கொண்ட வானில் நட்சத்திரங்கள் மினுங்க ஆரம்பிக்கும் நேரம் வரவேற்புக்கு மண்டபம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹேமா Weds ரவிசந்திரன் என்ற பெயர்கள் மலர்களால் அலங்கரிகப்பட்டிருக்க அதைச் சுற்றி மின்விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.
அதை ரசித்தவாறே இருவரும் உள்ளே நுழைந்தனர். மேடையில் மணமக்கள் அன்றைய நிகழ்வின் நாயகன் மற்றும் நாயகியாக மாறி புன்னகைத்த வண்ணம் மற்றவர்களை வரவேற்ற படியே தங்களுக்குள் ஏதோ இரகசியப்பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
சஹானாவும் ஹாசினியும் அவர்களை நோக்கி புன்னகைக்க ஹேமா அவர்களின் உடையைச் சுட்டிக்காட்டி 'சூப்பர்' என்று சைகைமொழியில் சொல்ல இருவரது முகத்திலும் வெட்கப்பூக்கள் பூக்கத் தொடங்கியது.
இருவரும் வெள்ளைத்துணியால் மூடப்பட்டு சிவப்புவண்ண ரிப்பன் கட்டப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள மெல்லிசை ஒலித்து அவர்கள் மனதைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்தது. அப்போது ஏதோ பரபரப்பான குரல்கள் மண்டபத்தினுள் ஒலிக்க அந்நேரம் பார்த்து சஹானாவுக்கு விசாகாவிடம் இருந்து செல்பேசியில் அழைப்பு வரவே காதில் வைத்தபடி "சொல்லு விசாகா என்ன விசயம்" என்று கேட்டபடி ஒதுங்கினாள்.
மெல்லிசை தான் என்றாலும் பேசும் போது எழுந்தால் அதுவும் இடையூறு தான். விசாகாவிடம் பேசி முடிக்கும் வரை யாரோ வராதவர் வந்ததை போல மண்டபமே அல்லோகலப்பட்டதை ஓரக்கண்ணால் கவனித்தவள் வந்தவன் யாரென்றும் கவனிக்கவில்லை. அவன் மேடையில் நின்றபடி அவனது லேசர்விழிகளால் இவளைக் கூறுபோட்டதையும் கவனிக்கவில்லை.
அவள் ஆற அமர பேசி முடித்து ஹாசினியின் அருகில் வந்து அமரும்போது அவள் கன்னத்தில் வைத்தபடி கண்ணில் நட்சத்திரங்கள் ஜொலிக்க கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.
"ஏய் ஹாசினி என்னாச்சுடி?" என்று சஹானா நாலைந்து முறை உலுக்கியதும் தான் இவ்வுலகிற்கு இறங்கிவந்தாள் அவள்.
"ஒன்னும் ஆகல சஹா. நம்ம எம்.டிய பாத்தேன்டி. வாட் எ மேன்? மனுசன் சும்மா டக்கரா இருக்காருடி. ஒரு அப்ளிகேசன் போடலாம்னு பாத்தா அவரோட பார்வை என் மேல பட்டா தான" என்று குறைபட்டவளின் தலையில் செல்லமாக குட்டினாள் சஹானா.
"நான் இன்னும் அவர பாக்கல. பாத்ததுக்கு அப்றமா ரெண்டு பேரும் சேந்து அப்ளை பண்ணுவோம்"என்று சொல்லிவிட்டு அவளுக்கு ஹைபை கொடுத்தாள்.
"அப்போ எம்.டி சார் உன்னோட அப்ளிகேசனை தான் கன்சிடர் பண்ணுவார். அதுவும் இன்னிக்கு உன்னை பாத்திருக்கணும். மனுசன் இந்த அழகிய மிஸ் பண்ணிட்டார்" என்று ஏக்கப்பெருமூச்சுடன் சொல்ல சஹானா வெள்ளிச்சதங்கை போல நகைக்க ஆரம்பித்தாள்.
அப்போது ஒரு சிறுமி அவளிடம் ஓடி வந்தாள். அவள் கையிலிருந்த செல்பேசியை சஹானாவிடம் நீட்டிவிட்டு "அக்கா உங்க கிட்ட பேசணுமாம்"என்று உரைத்தவள் சட்டென்று ஓடிவிட சஹானாவும் ஹாசினியும் திகைத்தனர்.
சஹானா விழிக்கும் போதே ஹாசினி தொடுதிரையைக் காட்டி "யாரோ லைன்ல இருக்காங்கடி. என்னனு கேளு" என்று சொல்லவும் வேகமாக செல்பேசியைக் காதுக்குக் கொடுத்தாள்.
"ஹலோ யாருங்க?"
"உன் கிட்ட நான் சொன்ன ரெண்டு நாள் டைம் முடிஞ்சு போச்சு பேப். நான் சேலையில எப்டி இருப்பேனு பாக்க ஆசையா இல்லயா சனா?"
அந்தக் குரலில் சஹானா உடலின் ஒவ்வொரு அணுவும் உறைந்து போனது. இவன் இன்னும் அந்த புடவை விசயத்தை மனதில் வைத்து பேசுகிறானே என்ற யோசனை அவள் முகத்தில் சூழ்ந்தது.
"இப்போ நான் உன்னை பாத்துட்டு தான் இருக்கிறேன். இந்த பிங்க் வித் கோல்டன் கலர் லெஹங்கால நீ எவ்வளவு அழகு தெரியுமா? உன்னை பாத்ததும் மூச்சு விட மறந்துட்டேன். இப்ப வரைக்கும் மூச்சுக்கு ஏங்குறேன். நீ வந்து பாத்தா பொழைப்பேனோ என்னவோ?"
அதிரடியாய் ஆரம்பித்து ஹஸ்கி குரலில் முடித்தவனை சஹானாவின் விழிகள் தேட ஆரம்பித்தது.
"என்னை பாக்கணுமா பேப்? அப்போ மண்டபத்தோட டெரசுக்கு வா" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இன்றோடு இவனுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என எண்ணியவள் ஹாசினியிடம் சொல்லிக்கொண்டு மண்டபத்தில் மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினாள்.
ஏறும்போதே தனியாக வந்திருக்கக் கூடாதோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால் முகத்தைக் காட்ட பயந்த அந்தக் கோழைக்குத் தான் ஒருத்தியே அதிகம் என்று அலட்சியமாக சிரித்தபடி விரல் நுனிகளால் தரையில் புரளும் லெஹங்காவைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு வந்து விட்டாள்.
மொட்டைமாடியில் காற்று சில்லென்று அவள் மேனியைத் தழுவிச் செல்ல அவனைத் தேடியவளுக்கு முதுகு காட்டியபடி க்ரீம் நிற முழுக்கைச்சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டபடி கருநீல வண்ண பேண்ட்டில் கால்களில் பளபளக்கும் கருப்பு நிற ஷூக்களுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த யாரோ ஒருவன்.
"நீ வந்துட்டியா பேப்?" என்று கேட்டவனின் குரலில் சஹானாவுக்குப் பிசிறு தட்டியது. எங்கேயோ கேட்ட குரல்! புருவம் சுருக்கி அவள் யோசிக்கும் போதே திரும்பினான் அவன், சர்வேஸ்வர். அவனைக் கண்டதும் சஹானாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய செவ்விதழ்கள் லேசாய் விரிந்து முத்து நிரல்களை ஒத்த அவளது பல்வரிசை அழகாய் தெரிந்தது.
இவனா! இவனா தனக்கு பரிசுப்பொருட்களை அனுப்பி வைத்தது, தனது சம்மதமின்றி தன்னை கண்காணிப்பது! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் செய்வதையும் செய்து விட்டு இப்படி ஸ்டைலாக நிற்பான் என்று எண்ணும் போதே சஹானாவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.
சர்வேஸ்வர் அழுத்தமான காலடிகளுடன் சஹானாவை நெருங்கியவன் ஒவ்வொரு அடிக்கும் அவளது அழகு அவனைத் தூக்கி அடிப்பதை அனுபவித்தபடி அவளை நெருங்கினான். இருவரின் மூச்சுக்காற்றும் ஒருவரை ஒருவர் தீண்டும் தூரத்தில் நின்றிருந்தனர் இருவரும்.
சஹானாவின் விழிகள் அனலை கக்க, அதற்கு மாறாய் சர்வேஸ்வரின் விழிகள் அவளை பாதாதிகேசமாய் அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கியது. அவனது பார்வையின் வீச்சை தாங்காது அவளது உடல் நடுங்கத் தொடங்கியது.
"இப்டி கேவலமா பிஹேவ் பண்ண உங்களுக்கு அசிங்கமா இல்லயா மிஸ்டர்? முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு இப்டி கிப்ட் அனுப்புறது, அவளை கண்காணிக்கிறது இதெல்லாம் செய்ய உங்களுக்கு வெக்கமா இல்லயா?"
கனல்விழியால் சுட்டெரித்தபடி அவள் பேச ஆரம்பிக்க சர்வா அதை ரசித்தபடி நின்றவன் அலட்சியமாய் தோளை குலுக்கிவிட்டு
"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சனா. உன்னை எனக்கு சொந்தமாக்கிக்கனும்னு நான் எவ்வளவு மெனக்கிடுறேன் தெரியுமா? பேசுறப்போவே அனலைக் கக்குற இந்த கண்ணுல என் மேல இருக்கிற காதலை பாக்கணும்னு உள்ளுக்குள்ள ஒவ்வொரு அணுவும் துடிக்குது சனா" என்று உருகியவனின் கரங்கள் அவளை இடையோடு சேர்த்து தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
திடும்மென அவன் அப்படி அணைப்பான் என்று எதிர்பாராதவளோ அவனிடம் இருந்து விலக எத்தனிக்க அவனது கரங்களோ அவளைச் சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டது. சஹானாவுக்கு அந்த கணத்தில் தன்னை சுற்றி வளைக்கும் மாயக்கரம் இது தான் என்பது புரிந்தது.
அவளது பூமேனியைத் தழுவியிருந்தவன் "ஐ வாண்ட் யூ சனா. இப்பவே நீ எனக்கு வேணும்" என்று சொன்னதோடு மறு யோசனை ஏதுமின்றி அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான்.
சஹானாவுக்கு அவன் அணைத்த அதிர்ச்சியே இன்னும் முழுவதுமாய் விலகாத நிலையில் அதிரடியாய் இதழணைத்தது இன்னும் பெரிய அதிர்ச்சியை அளித்தது. திமிறியபடி அவனிடமிருந்து விலக முயன்றவளை எளிதாகச் சமாளித்தவன் அவள் இதழில் ஒரு போர்க்களம் நடத்திவிட்டு தான் ஓய்ந்தான்.
சஹானா மூச்சுக்கு ஏங்கவும் அவளது இதழை பாவம் பார்த்து விடுவித்தவனின் கண்களில் காதல் கொட்டிக் கிடக்க சஹானாவுக்கோ தனது அனுமதியின்றி இதழணைத்தவனின் மீது கொலைவெறி தாண்டவமாடியது. தன்னை சமனப்படுத்தியவள் அவனைத் தள்ளிவிட்டு நலுங்கியிருந்த தாவணியைச் சரிசெய்தபடியே அவனை தீப்பார்வை பார்த்தாள்.
சர்வேஸ்வர் அந்த தீப்பார்வையை ஒதுக்கியவன் "ஐ லவ் யூ சனா" என்று ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு மீண்டும் அவளது இடையைப் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டான். சஹானா அவனது கைகளை தட்டி விட முயன்றபடியே
"இப்டி நடந்துக்க உனக்கு வெக்கமா இல்ல? ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை பாக்குறது கூட சட்டப்படி குத்தம். நீ.. நீ என்னை" என்றவளின் குரலோடு சேர்ந்து இதழும் நடுங்க சர்வேஸ்வரின் கரங்கள் அவளது வெற்றிடையில் அழுத்தமாய் பதிந்தது.
"நான் உன்னை உன்னோட சம்மதம் இல்லாம கிஸ் பண்ணிட்டேன். அவ்வளவு தானே. இதுக்கு ஏன் இவ்வளவு கோவம் சனா? நான் உன்னை லவ் பண்ணுறேன். நீ எனக்கு வேணும். நீ எனக்கு கெடைக்கிறதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் சனா" என்றவனின் குரலில் அலட்சியத்தோடு தீவிரத்தன்மையும் கொட்டிக் கிடந்தது.
"யாரோ ஒருத்தனை நீ மேரேஜ் பண்ணிக்க போற. அந்த யாரோ ஒருத்தன் இடத்துல நீ இனிமே என்னை வச்சி யோசிக்க பழகிக்க. உன் வாழ்க்கையில என்னை தவிர எந்த ஆணும் வர மாட்டான். வந்தா அவனை எப்டி என் வழியில இருந்து விலக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றவன் அவளை மீண்டும் காதலுடன் நோக்கி அவளது இதழை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள சஹானா அவனை விலக்க முயன்று ஓய்ந்து தோற்றாள்.
அவனே விடுவித்த பின்னர் அவனை ஏறிட்டவளுக்கு தன்னை எண்ணி அவமானமாக இருந்தது. ஒரு ஆணின் பலத்துக்கு முன்னால் தனது தைரியம் கையாலாகாத்தனமாக உருமாறி விட்டதோ என்ற கேள்வியுடன் அவனை வெறித்தவளின் கரம் பளாரென்று அவன் கன்னத்தில் அழுத்தமாக அறைந்தது.
"நல்லா கேட்டுக்க. என் வாழ்க்கையில யாரோ ஒருத்தன் வரலாம். ஆனா அந்த யாரோ ஒருத்தன் நீயா இருக்க முடியாது மிஸ்டர் சர்வேஸ்வர். உன்ன மாதிரி கேவலமான ஜென்மத்தை நான் எப்பவுமே காதலிக்க மாட்டேன். உன் முயற்சி எதுவுமே ஜெயிக்காதுடா" என்று அழுத்தம் திருத்தமாக உரைத்துவிட்டு நின்றாள்.
சர்வேஸ்வர் கண்ணில் ஆர்வம் மின்ன "வாவ். ஐயாம் இம்ப்ரெஸ்ட். அழகான பொண்ணுங்க கோவப்படுறப்ப பேரழகு. அதுவும் நீ சும்மாவே பேரழகி. இன்னிக்கு கோவத்துல உன் முகம், மூக்கு சிவந்து இன்னும் அழகியா மாறிட்ட. உன்னோட இந்த திமிரு இருக்குல்ல அது தான் என்னை போட்டு பாடாபடுத்துது. உன்னை விட்டுடக் கூடாதுனு என்னை உசுப்பேத்தி வேடிக்கை பாக்குது. பாக்கலாம் நீயா நானானு. நான் இது வரைக்கும் என் வாழ்க்கையில தோத்தது இல்ல" என்று பிடிவாதமாய் உரைத்தான்.
சஹானா அலட்சியத்துடன் "இனிமே தோக்க பழகிக்க சர்வா. ஏன்னா நான் உன்ன மாதிரி ஒருத்தன் கிட்ட தோக்க மாட்டேன்" என்றாள் உறுதியாக.
இருவரும் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கும் ஆசையுடன் மோதிக்கொள்ள விதி இவர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
Nice
ReplyDeletethank you💕
Delete