8 (மாயவலை)
சர்வேஸ்வர் அன்று காலையில் கண் விழிக்கும் போது உற்சாகமான மனதுடன் இருந்தான். இப்போதெல்லாம் அவனுக்கு உற்சாகத்துக்கு குறைவில்லை. கண்டதும் காதலில் விழுந்தவனுக்கு காதலி கண் முன் இருக்கும் பாக்கியம் கிடைத்துவிட்டால் உற்சாகத்துக்கு குறைவேது! அவனது விடியற்பொழுதுகள் சஹானாவின் எண்ணங்களுடன் ஆரம்பிக்கும். பகற்பொழுது முழுவதும் அவளை நோட்டமிடுவதில் கழியும். இரவுப்பொழுதுகளோ அவள் அருகில் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடன் முடியும்.
இதற்கிடையே தொழில்சாம்ராஜ்ஜியத்திலும் ஒரு கண்ணை வைத்திருந்தான் அவன். அவனது குடும்பத்தொழிலின் இரும்பு உருக்காலை தான் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் இப்போது போட்டிகள் வலுத்த நிலையில் அவனது நிறுவனத்தின் ஏலம் பற்றிய தகவல்களை போட்டி நிறுவனத்துக்கு யாரோ கசிய செய்துவிட அந்த ஏலம் கைவிட்டுப் போயிருந்தது. காலையில் உற்சாகத்துடன் எழுந்தவனின் செவியில் இச்செய்தி விழவும் கோபத்தில் காது மடல்கள் சிவந்தது. மெத்தையில் குத்திவிட்டு எழுந்தவனின் முகத்தில் ஆக்ரோசத்துக்குக் குறைவில்லை.
சில நொடிகளுக்கு முன்னர் அவன் கையிலிருந்து தூக்கி எறியபட்ட செல்பேசி படுக்கையில் தஞ்சமாகியிருக்க அதை எடுத்தவன் தன் உதவியாளனிடம் கொதிக்க ஆரம்பித்தான்.
"என்ன நடக்குது ரவி? ரெட்டி க்ரூப்புக்கு எப்பிடி டெண்டர் டீடெய்ல் போச்சு? அவனுக்கு அந்த டீடெயிலைக் கசிய விட்டது யார்? யாரா இருந்தாலும் இன்னிக்கு ஈவினிங்குள்ள எனக்கு அவன் உயிரோட இல்லங்கிற செய்தி வரனும். இல்லனா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்ல" என்று சிம்மக்குரலில் கர்ஜித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய சென்றான்.
கோபம் மிகுந்திருந்தவன் உடலில் வியர்வை ஆறாய் ஓட உடற்பயிற்சி உபகரணங்கள் ஒன்று விடாது உபயோகித்தவன் டம்பிள்சை கையில் வைத்து தூக்கிக் கொண்டிருந்தவனின் புஜத்தில் நரம்புகள் புடைத்தெழ இன்னும் உள்ளுக்குள் எரிமலையாய் சீறும் கோபம் குறையவில்லை. உதவியாளனிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தான் சர்வேஸ்வர். அதே நேரம் அவனது செல்பேசி சிணுங்கியது.
யார் அழைத்தது என்று பார்க்க அழைத்தது சஹானா என்று அறிந்ததும் அவனது கோபம் சற்று குறைந்தது. செல்பேசியைக் காதுக்குக் கொடுத்தபடி
"சொல்லு சனா பேப். என்னை ரொம்ப மிஸ் பண்ணுறியா? நீயே கால் பண்ணிருக்க?"
மறுமுனையில் கேலியான நகைப்பொலி கேட்க ஒரு நொடி அவன் நெற்றியில் சிந்தனைக்கோடுகள் உண்டாக
"நீ சிரிக்கிறது எனக்கு எப்பயுமே ரொம்ப பிடிக்கும் பேப். ஆனா இன்னிக்கு காரணமில்லாம நீ சிரிக்கிறது கேக்குறதுக்கு அவ்வளவு நல்லா இல்ல. என்ன மேட்டர்னு சொன்னா நானும் சிரிப்பேனே"
"நான் என்ன மேட்டர்னு சொன்னா உன்னோட முகத்துல இருக்கிற சிரிப்பு மறஞ்சு போயிடும் சர்வா. சிரிப்பு மட்டுமில்ல, எப்பயும் உன் முகத்துல ஒட்டியிருக்குமே ஆணவம், அகங்காரம், அலட்சியம் இது எல்லாமே போய்டும். ஆனா அத பாக்குறதுக்கு எனக்கு குடுத்து வைக்கலயே" என குரலில் எகத்தாளத்தைக் கொட்டி பேசிய சஹானா உச்சு கொட்ட சர்வேஸ்வருக்கு இன்னும் எதுவும் விளங்காத நிலை.
"நான் சென்னைய விட்டு போறேன். அதுவும் கண் காணாத இடத்துக்கு. இருபத்தி நாலு மணிநேரமும் என்னை கண்காணிச்சிக்கிட்டே இருக்கிற பணத்திமிர் பிடிச்ச ராட்சசன் கிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடச்சிடுச்சு. நான் எங்க போறேனு தெரிஞ்சா தான நீ என்னை கண்டுபிடிச்சு என் மேல லீகல் ஆக்சன் எடுப்ப? நான் எங்க போறேனு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. போறதுக்கு முன்னாடி உன் கிட்ட ஏன் சொல்லுறேன் தெரியுமா? நீ என்னை நினைச்சு பைத்தியம் பிடிச்சு சுத்துனா அந்த பாவம் என்னை வந்து சேரக் கூடாதுல்ல, அதுக்கு தான். நான் போறேன் சர்வா. குட் பை"
அழைப்பு துண்டிக்கப்பட்டது. சர்வேஸ்வரால் இதற்கு பின்னரும் கோபத்தை அடக்க இயலவில்லை. செல்பேசியை கடுஞ்சினத்துடன் தூக்கி எறிந்தவன் அது சுவரில் பட்டு சுக்கல் சுக்கலாக உடைய வெறியுடன் அறையில் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் தூக்கி வீசத் தொடங்கினான். அறை முழுவதும் போர்க்களம் போல காட்சியளிக்க எஜமானன் அறையில் சிலீரென்று பொருட்கள் நொறுங்கும் சத்தம் வீட்டு வேலைக்காரர்களின் செவியை எட்டியது.
ஆனால் மேலே அவனது அறையில் சென்று பார்க்க அச்சம். ஏனெனில் கோபம் வந்துவிட்டால் சர்வேஸ்வர் நரசிம்மமூர்த்தி தான். அவனது கோபாக்கினியில் சிக்கி வறுபட யாரும் விரும்பவில்லை.
சர்வேஸ்வர் தனது அறையின் உடைப்பட்ட கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவனது பிம்பம் அவனைக் கேலி செய்வது போல இருந்தது.
"கேவலம் ஒரு இருபத்திமூனு வயசு பொண்ணு உன்ன ஏமாத்திட்டு போயிட்டாளே சர்வா. உன்னால தொழிலையும் பாத்துக்க முடியல, சொந்த வாழ்க்கையையும் பாத்துக்கமுடியல. நீ ஒரு வெத்துவேட்டுடா" என்று சொல்லிவிட்டு அவனது பிம்பம் சத்தமாகச் சிரித்தது.
சர்வா கட்டுக்கடங்காத கோபத்துடன் பூஜாடியை எடுத்து கண்ணாடி மீது வீச அரை குறையாய் இருந்ததும் உடைந்து தரையில் சிதறியது. சினத்துடன் அடிபட்ட சிறுத்தையாய் அறைக்குள் உலவியவனின் காலில் ஏதோ இடிபட அதைத் தள்ளி வைக்க குனிந்தவனின் கரத்தை பதம் பார்த்ததும் கண்ணாடிச்சில்லு ஒன்று.
கையில் வழியும் செங்குருதியை அலட்சியப்படுத்தியவனுக்கு சஹாவின் ஏளனம் நிரம்பிய குரலையும் அவளது பேச்சிலிருந்த அமர்த்தலான தொனியையும் மறக்கவே முடியவில்லை. குருதி வழியும் கைகளை கோபத்துடன் நோக்கியவன்
"நீ என் ஈகோவ சீண்டி பாத்துட்ட சனா. இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும். என் காதலை அவ்வளவு சுலபமா நினைச்சு துச்சமா பேசுன உன்ன நான் அவ்வளவு ஈசியா என் கிட்ட இருந்து விலக விடமாட்டேன். இது வரைக்கும் சர்வாவோட காதலை மட்டும் தான பாத்துருக்க. இனிமே என் கோபத்தையும் பாப்ப. எல்லா பிரச்சனைக்கும் இன்னிக்கே முடிவு கட்டுறேன்" என்று குரலில் ஆறாச்சினத்துடன் உரைத்தவன் யாருக்கோ செல்பேசியில் அழைத்தான்.
"சென்னைல இருக்கிற பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன், ஏர்போர்ட்னு ஒரு இடம் விடாம தேடு. அவ எனக்கு வேணும். அவளோட மூச்சுக்காத்து கூட என் அனுமதி இல்லாம இந்த சென்னையோட எல்லைய தாண்டக்கூடாது. அவ கையில சிக்குனதும் பார்டர்ல இருக்கிற பங்களாக்கு கூட்டிட்டு போங்க. இன்னொரு விசயம், அவளுக்கு இதுல காயம் எதுவும் பட்டுட கூடாது"
அடுத்து அவனது உதவியாளன் அழைக்கவே
"என்னாச்சு? யார் ரெட்டி க்ரூபுக்கு ஹெல்ப் பண்ணுன கருப்பு ஆடுனு தெரிஞ்சுதா?"
"ஆமா சார். பைனான்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேலை செய்யுற ஒரு எம்ப்லாயி தான் இதுக்குக் காரணம்"
சர்வேஸ்வர் செல்பேசியைக் காதில் வைத்துக் கொண்டபடி ஆட்காட்டிவிரலால் புருவத்தை நீவியவன் உதடு கடித்து யோசித்துவிட்டு
"அவனை பார்டர் பங்களாக்கே கொண்டு வந்துடு. நான் கவனிச்சிக்கிறேன்" என்று சொன்னவனின் குரலில் கொலைவெறி தாண்டவமாடியது.
செல்பேசியை அணைத்தவன் இன்னும் அடங்கா சினத்துடன் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் அடியில் நின்றான். அவனது கொதிக்கும் தேகத்தை பூத்தூறலாய் தூவும் குளிர்நீர் தணிக்க முயன்றது.
தலையில் நீர் சொட்ட குளியலறையை விட்டு வெளியேறி உடை மாற்றிக் கொண்டவனது மனம் முழுவதும் சீக்கிரம் சஹானா தன் கையில் சிக்க வேண்டும் என்பதிலேயே இருக்க அவளே தன்னை தேடி வரும் வகையில் ஒரு திட்டத்தை அவன் மூளை தடாலடியாக யோசித்தது.
உடனே அதை செயல்படுத்த ஆரம்பித்தான். அடுத்த சில மணி நேரங்களில் அவன் அங்கிருந்து கிளம்பி சேஷாலம் மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில் அவனுக்கு இருக்கும் பங்களாவுக்குச் சென்றான். அது சேஷாலம் பகுதியில் உள்ள கோவிலில் நடக்கும் உற்சவங்களுக்கு வரும் போது அவனது குடும்பத்தினர் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை.
வனப்பகுதியில் இருப்பதால் நெடிதுயர்ந்த மரங்களும், மலைத்தொடர்களுமாய் இயற்கையன்னையின் அழகில் கதிரவனின் கதிர்கள் மதிமயங்கி அவளது பச்சையாடை மேனியைத் தழுவ முயன்று தோற்றுப்போகும்.
அதன் நடுநாயகமாய் கம்பீரமாய் ஆங்கிலேயே பாணி பங்களா ஒன்று இருந்தது. அதன் உப்பரிகை பகுதியில் தான் சர்வேஸ்வர் இப்போது கோபம் மாறாது நடை போட்டுக் கொண்டிருந்தான். அவனது உதவியாளன் சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கினான்.
அவன் வந்து சில நிமிட இடைவெளியில் சர்வேஸ்வரின் வலது கையான வம்சி இறங்கினான். அவனுடன் தலை குனிந்தபடி காரிலிருந்து இறங்கினர் தயானந்தன், கலாவதி மற்றும் விசாகா மூவரும். அவர்களை காணும் போது அவனது உதடுகள் ஏளனத்தில் வளைய
"இனி நீ எங்க ஒளிஞ்சிருந்தாலும் வந்து தான் ஆகனும் சனா. இல்லனா உன் அத்த, மாமா, உன் மாமாப்பொண்ணு மூனு பேரோட உயிருக்கும் நான் பொறுப்பு இல்ல" என்று சொல்லிவிட்டு பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி படிகளில் இறங்கினான்.
வீட்டின் முன்னே கல்லால் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் சாவகாசமாக தனது ஏலத்துக்கான தகவலை கசியவிட்ட ஊழியனையும் சஹானாவின் உறவினர்களையும் ஏறிட்டபடி கைகளை தலைக்கு அண்டை கொடுத்து இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டான். அவனது ஒவ்வொரு செய்கையிலும் அலட்சியமும் கர்வமும் தெரிய கோபம் அதில் இலைமறைக்காயாக இருந்தது தயானந்தனுக்குப் புரிந்தது.
அவன் யாரென்று தெரியாத அளவுக்கு ஒன்றும் அவர் பத்தாம்பசலி இல்லை. ஆனால் கலாவதிக்குத் தான் அவனைத் தெரியவில்லை. விசாகாவுக்கோ இந்த மனிதன் சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் கல்லூரிக்கு வந்திருந்தானே என்று அப்போது தான் நினைவுக்கு வந்தது.
சஹானா ஹைதராபாத் செல்வதாகச் சொன்னதற்கும் இவனுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் அவள் மனதில் எட்டிப்பார்த்தது. அவன் முகத்தில் தெரிந்த கோபத்தைக் காண அவளுக்குத் திகிலாக இருந்தது. தங்களை ஏன் அழைத்து வரச் சொல்லியிருப்பான் என்ற யோசனையும் மனதை ஆக்கிரமிக்க அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.
அவர்களை ஏறிட்டவன் "வாங்க வாங்க, ஏன் நிக்கிறிங்க? உக்காருங்க. ஜூஸ் குடிக்கிறிங்களா? காபி ஆர் டீ?" என்று வீட்டுமனிதனாக உபசரிக்க தயானந்தனுக்கு அது உவப்பாக இல்லை. ஆனால் கலாவதி அந்த வீட்டையும் அதன் பிரம்மாண்டத்தையும் கண்டு வாயைப் பிளந்தபடி நின்றவர் விசாகாவின் கையை இடித்துவிட்டு
"இது வீடு இல்லடி. அரண்மனை. ஒரு நாள் இருந்தாலும் இந்த வீட்டுல இருக்கனும். நம்ம சஹா குடுத்துவச்சவ" என்று சிலாகிக்க விசாகா அன்னையை முறைத்தவள்
"இப்ப மட்டும் உனக்கு அவ 'நம்ம சஹா'வாம்மா? அவளை கண்டாலே ஆகாது உனக்கு. ஆனா பேலசை பாத்துட்டு நீ வாயை பொளந்துருவியே" என்று கடிந்து கொள்ள அவர் முகவாயைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டார்.
தயானந்தன் சர்வேஸ்வரிடம் "தம்பி எதுக்காக இப்டி ரவுடி வச்சு எங்கள இங்க கூட்டிட்டு வர வச்சிருக்கிங்க?" என்று ஓய்ந்து போன குரலில் கேட்டார்.
அவர்கள் மூவரும் வம்சியுடன் காரில் ஏறும் போது பக்கத்துவீட்டினர் பார்த்த பார்வை அவருக்கு இப்போதும் தலைகுனிவாக இருந்தது. இந்த மனிதன் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்ற சந்தேகம் மகளைப் போலவே அவருக்கும் எழுந்தது.
சர்வேஸ்வர் தொண்டையைக் கனைத்துக் கொண்டவன் நிமிர்ந்து அவரை நோக்கிவிட்டு "இது எதுக்குமே நான் காரணமில்ல அங்கிள். உங்க மருமக சஹானா தான் காரணம்" என்று நிதானமாக உரைக்க மூவரும் அதிர்ந்தனர்.
இவன் என்ன தான் உளறுகிறான் என்று எண்ணமிடும் போதே ஒரு மாயவலை தங்களை சூழ்ந்திருப்பதை போல தோணியது அவர்களுக்கு. அதை விரித்த வேடனின் எதிரில் குழப்பத்துடன் நின்றிருந்தனர் மூவரும்.
Nice
ReplyDeletethank you💕
Delete