9 (காரிகையின் கண்ணீர்)



மலைப்பகுதியில் அமைந்திருந்த கானகத்தில் காற்று மட்டுமே மரங்களுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது. வேகமாய் காற்றடித்ததில் மரங்கள் சளசளக்கும் ஒலி மட்டுமே அந்த மாளிகையின் முன் வாயில் முற்றத்தில் உள்ள மண்டபத்தில் இருந்த அனைவரின் செவியையும் தீண்டிச் சென்றது. அந்த சத்தத்தைக் கிழிப்பது போல ஒரு ஜிப்சி வரவும் அனைவரின் கவனமும் திரும்பியது.

ஜிப்சி நிற்கவும் அதிலிருந்து மலை போன்ற உருவமைப்புடன் ஒருவனும் அவனது அடிபொடிகளும் இறங்க அவர்களின் நடுவில் மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கியபடி இறங்கினாள் சஹானா. பயணத்தின் பெரும்பான்மை நேரங்கள் அழுகையிலேயே கடந்திருக்க வேண்டும். முகம் கோவைப்பழமாய் சிவந்து போய் கலங்கி இருந்தது. அவர்களின் நடுவே சிறுதுரும்பு போலக் காட்சியவளித்தவளின் கண்கள் அங்கே நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்திருந்த சர்வேஸ்வரைக் கண்டதும் தீயைக் கக்கத் தொடங்கியது.

அவனோ இதெல்லாம் எனக்கு பழக்கம் தானடி என்ற அலட்சியத்துடன் ஏளனமாக நகைத்தபடி "வெல்கம் பேப். ஜர்னி நல்லபடியா இருந்துச்சா?" என்று கேட்டபடி எழுந்தவன் தனது டிசர்ட்டை இழுத்துவிட்டபடி அவளருகே வந்தான்.

சஹானாவின் கரங்கள் இயலாமையில் இறுகிப் போய் அவளது சுடிதாரின் துப்பட்டாவை இறுக்கமாய் பற்றி கசக்குவதை கண்டபடி தனது ஆட்காட்டிவிரலால் அவளது இறுகிப்போன கரத்தைச் சுட்டிக்காட்டி

"சனாவுக்குப் பயங்கர கோவம் போல. கை நரம்புலாம் தெளிவா தெரியுதே. என்னை அடிக்கனும் போல இருக்கா? கம் ஆன், ஸ்லாப் மீ" என்றபடி அவன் கன்னத்தைத் தொட்டுக் காட்ட

"என் குடும்பத்த என்ன பண்ணுன சர்வா?" என்று நெருப்புக்கங்குகளாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

சர்வேஸ்வர் எதுவும் அறியாதவன் போல விழித்து "உன்னோட குடும்பத்த நான் என்ன பண்ணேன் பேப்? ஈவன் ஐ டோண்ட் நோ கூ தே ஆர். என்னை போய் வில்லன் ரேஞ்சுக்கு வச்சு பேசுறியே டார்லிங்?" என்று எகத்தாளம் கலந்த குரலில் கேட்டவன் அவள் காதருகே குனிந்து

"இன்னும் அவங்கள உயிரோட தான் விட்டு வச்சிருக்கேன். இதுக்கு மேல அவங்க உயிரோட இருக்கிறதும், மேல போறதும் உன் கைல தான் இருக்கு" என்று வன்மம் நிறைந்த குரலில் பேசவும் சஹானாவின் அடிவயிற்றுக்குள் பிசைந்தது.

"ராட்சசன்"

அவன் காது படவே பற்கள் நெறிபட முணுமுணுத்தவள் "என்னால உன்ன மாதிரி ஒரு ராட்சசனை சகிக்க முடியாதுடா. உன்னால முடிஞ்சத பாரு"என்று சவால் விடவும் சர்வேஸ்வரின் நெற்றி யோசனையில் சுருங்கியது. கண்கள் பளிச்சிட்டது.

"என்னால என்ன முடியும்னு உனக்கு ஒரு டெமோ காட்டவா?" என்று சிரித்தபடியே வினவியவனை கேள்வியாய் நோக்கினாள் அவள்.

சர்வேஸ்வர் மாளிகையின் வலப்புறம் ஓடியபாதையை நோக்கியபடி "வம்சி அவனை இழுத்துட்டு வா" என்று கர்ஜிக்க அவனது குரலில் அவளுக்கே ஒரு முறை தூக்கி வாரிப்போட்டது.

என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைப்புடன் காத்திருந்தவள் அங்கே ஒரு ஆஜானுபாகுவான மனிதன் இன்னொருவனை இழுத்து வருவதைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள். அந்த இன்னொருவனின் முகம் அடிபட்டு வீங்கியிருந்தது. மற்றபடி உள்காயங்கள் இருக்கலாம். அவனால் நடக்க முடியவில்லை.

அவனை இழுத்துவந்த ஆஜானுபாகுவான வம்சி அவனை சர்வேஸ்வரின் காலடியில் தள்ள அவனை தன் கால்களால் எட்டி உதைத்து தள்ளினான் சர்வா. அந்த மனிதனின் முகம் வலியில் சுருங்க சஹானாவுக்கு அவன் மீது இரக்கத்தோடு சேர்ந்து அவன் நிலையை எண்ணி அழுகையும் சுரந்தது. சாலையில் நாய் அடிபட்டால் கூட அன்றைய தினம் முழுவதும் அழுகையில் கரையும் குணத்தினளான பெண்மகளுக்கு சக மனித உயிர் கண்ணெதிரே வதைபடுவதைக் காணும் போது அழுகை சுரந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இத்தனை நாட்கள் ஆள் வைத்து அவளைக் கண்காணித்த சர்வேஸ்வருக்கு அவளுக்கு இந்த சுபாவம் தெரியாமாலா இருக்கும்? அதனால் தான் அவன் இந்த மனிதனை எட்டி உதைத்ததே.

சஹானாவின் வாயிலில் இருந்து விம்மல் ஒளி எழும்புவதைக் கேட்டபடி "ராட் எங்க வம்சி?" என்று கேட்டான் சர்வேஸ்வர். வம்சி உடனே ஒரு இரும்புக்கம்பியை நீட்டவும் கம்பியை வாங்கியவன் அதை விரல்களால் வருடியபடியே

"இவன் என்ன பண்ணான் தெரியுமா பேப்? என் கம்பெனில ஒர்க் பண்ணி, என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு, என் ரைவல் கம்பெனிக்கு ஸ்பையா வேலை பாக்குறான். இவன மாதிரி துரோகிய உயிரோட வச்சிருந்து என்ன பலன்?" என்று கேட்டபடி இரும்புக்கம்பியை தரையில் கிடந்தவனை நோக்கி ஓங்கினான்.

சஹானா பதறியவளாய் ஓடிச்சென்று அவனது கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டு "வேண்டாம் சர்வா. பாவம் அவர். ஏற்கெனவே அடி பலமா இருக்கு. செத்துருவார்டா" என்று கண்ணீர் மல்க கூறவும் அவனது கரம் மெதுவாக இறங்கியது.

நிதானமாக அவளை நோக்கி "சாகட்டும்னு தான் அடிக்கப் போறேன் பேப். துரோகிகளுக்கு இந்த உலகத்துல வாழ தகுதி இல்ல" என்று சாதாரணமாகச் சொல்லிவிட சஹானாவுக்கு மனம் பொறுக்கவில்லை.

"யார் வாழனும் யார் சாகனும்னு டிசைட் பண்ற ரைட்ஸ் உனக்கோ எனக்கோ இல்ல சர்வா. அத ஆண்டவன் தான் தீர்மானிக்கனும். இவர விட்டுரு, பாவம். இவருக்குனு குடும்பம், மனைவி இருக்கலாம். அவங்க எல்லாரும் இவர் வருவார்னு இவருக்காக காத்திருப்பாங்க சர்வா. ஒரு குடும்பத்தோட அடிப்படையே அந்த வீட்டோட ஆண் தான். இவர எதாவது பண்ணி ஒரு குடும்பத்த தவிக்க விட்டுடாத. ப்ளீஸ்" என்று கண்ணீருடன் இறைஞ்சினாள் அவள்.

"இவர் இல்லனா அந்த குடும்பம் மூனாவது மனுசங்க ஆதரவுல தான் இருக்கனும். அடுத்தவங்க ஆதரவுல வாழுறது எவ்வளவு பெரிய கொடுமைனு எனக்கு நல்லா தெரியும். அந்த கொடுமை இவரோட குடும்பத்துக்கு வரவேண்டாம் சர்வா. ப்ளீஸ் விட்டுரு" என்று கெஞ்சவும் மனம் இரங்கி சர்வேஸ்வர் அந்த இரும்புக்கம்பியை தூக்கி எறிந்தான்.

யாருடைய கட்டளைக்கும் அடிபணியாதவன் இன்று அவனது உயிராய் எண்ணுபவளின் கண்ணீரின் முன்னே அடிபணிந்தான். அவனுக்குத் துரோகம் செய்த அந்த ஊழியனை மன்னித்துவிட்டான் சர்வேஸ்வர்.

"வம்சி இவன ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போ. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் வீட்டுல விட்டுட்டு வா" என்று கட்டளையிட அந்த வம்சி அடிப்பட்டவனை எழுப்பிவிட அந்த மனிதன் சஹானாவிடம் கரம் கூப்பினான்.

"தேங்ஸ் மேடம். பணத்துக்கு ஆசைப்பட்டு நான் இத பண்ணல. நான் டெண்டர் டீடெய்ல் சொல்லாம இருந்தா என் ரெண்டு வயசு பொண்ண கொன்னுடுவேனு மிரட்டுனாங்க. என் பொண்ணு தான் எங்க உலகமே. வேற வழி தெரியல. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி பாவியா நிக்குறேன். நீங்க வராம போயிருந்தா பொணமா போயிருப்பேன்" என்று சொல்லிவிட்டு அவள் காலில் விழ சஹானா பதறிப் போய் பின் வாங்கினாள்.

குனிந்து அந்த மனிதனை எழுப்பிவிட்டவள் மௌனமாய் அவன் வம்சியுடன் செல்வதை பார்த்தபடி நின்றாள். இந்த ஒரு நிகழ்ச்சி போதும், சர்வேஸ்வரின் கோபத்துக்கு யாருமே தப்ப முடியாது என்பதற்கு. இதற்கு மேலும் இவனிடம் வாதாடினால் இந்த மனிதனுக்கு உண்டான நிலை தான் தன் மாமா குடும்பத்துக்கும் என்பதை புரிந்துகொண்டாள்.

இது அவள் முடிவெடுக்கும் நேரம். யோசித்துப் பார்த்தால் இவனைப் போல இரக்கமற்றவனுடன் தனது வாழ்க்கை நிச்சயம் நல்ல முறையில் செல்லாது என்பது. இருந்தாலும் வேறு வழி இல்லையே என்று எண்ணி மருகும் போது அன்னை தந்தையின் நினைவு வந்தது.

"நீங்க இருந்திருந்தா எனக்கு இப்டி ஒரு நெலமை வந்திருக்குமா?" என்று யோசித்தவள் கேவ ஆரம்பிக்க அது அழுகையாக உடைப்பெடுத்தது. அவளின் அழுகைச்சத்தம் மாளிகையினுள் இருந்த தயானந்தன் மற்றும் கலாவதியின் செவியில் விழ விசாகா பெற்றோரிடம் "சஹா வந்துட்டா. இந்த ராட்சசன் அவளை என்ன பண்றானு தெரிலயே" என்று பதறிக்கொண்டு மாளிகையின் முன்வாயில் மண்டபத்தை நோக்கி ஓடினாள்.

அங்கே கலைந்த கூந்தலும் நலுங்கிய உடையும் சோர்ந்த முகமுமாய் அழுது அரற்றுபவளைக் கண்டதும் மனம் பொறுக்காது அணைத்துக் கொண்டாள் விசாகா. கூடவே காதலிப்பதாகச் சொல்லிவிட்டு அவளை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறானே ராட்சசன் என்று சர்வேஸ்வரை திட்டித் தீர்க்கத் தொடங்கினாள்.

தயானந்தனும் கலாவதியும் அங்கே வந்தவர்கள் சஹானாவைக் கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சஹானா மாமாவைக் கண்டதும் அவரைக் கண்ணீருடன் அணைத்துக் கொள்ள கலாவதியோ

"இப்ப எதுக்கு ஊளு ஊளுனு அழுற? நாங்க கல்லு மாதிரி நல்லா தான் இருக்கோம். இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் இந்த தம்பிக்கு என்ன கொறைனு நீ இப்டி பிடிவாதம் பிடிக்கிற சஹா? கண்ணுக்கு லெச்சணமான பையன், அரண்மனை மாதிரி வீடு, ஏழு தலைமுறைக்கு சொத்து. யாருக்கு கிடைக்கும் இப்டி ஒரு ராஜவாழ்க்கை? ஒழுங்கா அவர கட்டிக்கிட்டு வாழ பாரு" என்று இலவச அறிவுரையை வழங்கினார்.

சஹானாவுக்கு அவரது அறிவுரை காதில் தீயள்ளி வீசியது போல இருந்தது.

"இல்லத்த, இவன் என்ன பண்ணானு உங்களுக்கு தெரியாது. இவன் என்னை..." என்றவளை இடைமறித்தவர் கணவரிடம்

"அவ சின்னப்பொண்ணு, அவளுக்கு விவரம் போதாதுங்க. நம்ம தான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லனும்" என்று அதட்டல் போட்டுவிட்டு சஹானாவின் கையைப் பற்றினார்.

சர்வேஸ்வரிடம் அவளை இழுத்துச் சென்றவர் "தம்பி உங்களுக்கு இவள பிடிச்சிருக்குனா நாங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டோம். எங்களுக்கும் எங்க வீட்டுப்பொண்ணு வசதியா வாழனும்னு ஆசை இருக்காதா? நீங்க உங்க வீட்டு ஆளுங்களோட பொண்ணு கேட்டுவாங்க. பெரியவங்க பேசி ஒரு முடிவு பண்ணுறோம்" என்று சொல்ல சர்வேஸ்வர் இல்லையென்று தலையசைத்து மறுத்தான்.

விசாகாவுக்கும் தயானந்தனுக்கும் அவனது செய்கை குழப்பத்தை தான் உண்டாக்கியது. இவன் என்ன தான் சொல்ல வருகிறான் என்று புரியாது விழித்தனர்.

சர்வேஸ்வர் கலாவதியை ஆராய்ச்சிப்பார்வை பார்த்துவிட்டு "நானும் என் வீட்டுப்பெரியவங்க சம்மதத்தோட தான் சனாவ மேரேஜ் பண்ணிக்க ஆசைப்பட்டேன். ஆனா இவ பண்ண காரியம் இருக்கே அதுக்கு அப்புறமும் நான் இவள நம்ப தயாரா இல்ல. இவள உங்களோட அனுப்பி வைக்கவும் தயாரா இல்ல. அதனால நீங்க என்ன பண்ணுறிங்க இவள இங்க விட்டுட்டு நீங்க எல்லாரும் கிளம்புங்க. இனி சனா என்னோட தான் இருப்பா" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கலாவதியின் கரத்திலிருந்து மெதுவாக உருவினான்.

தனது கரத்துக்குள் அவளது கரத்தைப் பொதிந்து கொண்டான். இனி அவளது கரத்தை விடும் எண்ணம் இல்லை என்பது அதிலேயே தெரிய சஹானாவுக்கு அவனது கரத்தை உருவிக் கொண்டால் நலம் என்று தோணாமல் இல்லை.

மெதுவாக கரத்தை உருவிக்கொள்ள முயன்றவளை அவனது கூரியவிழிகள் வெட்ட அமைதியானாள். அவளது காதில் "கையை உருவிட்டு ஓடலாம் போல இருக்கா சனா? இனி நீ அப்டி போகனும்னு நினைச்சா உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன். அதோ நிக்கிறாங்களே அவங்கள உயிரோட விட மாட்டேன். நான் பொய் சொல்ல மாட்டேன். சொன்னா செய்வேன்" என்று அழுத்தத்துடன் கூறியபடி நின்றான்.

சஹானாவுக்கு எல்லாம் கைமீறிவிட்டது என்பது புரிந்தது. சிலையாய் சமைந்து நின்றாள் அவள்.

விசாகா வேகமாக அவள் அருகில் வந்தவள் அவள் கையை சர்வேஸ்வரிடம் இருந்து பிடுங்க முயன்று தோற்றாள். சர்வேஸ்வர் மாளிகையை நோக்கி "வம்சி"என்று மீண்டும் கர்ஜிக்க வம்சி வீட்டினுள் இருந்து வந்தான்.

அவன் கையில் புத்தம் புது ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று படபடத்தது. அதை வாங்கிய சர்வேஸ்வர் கலாவதியிடம் சென்று அவரது கையில் திணித்துவிட்டு "இனிமே உங்க குடும்பத்தோட நிழல் கூட என் சனா மேல படக்கூடாது. உங்க புருசனையும் மகளையும் கூட்டிட்டு போயிடுங்க. சஹானானு ஒருத்தி இருந்தாங்கிறத மறந்துடுங்க" என்று சொல்லவும் மூவரும் திடுக்கிட்டனர்.

கலாவதி என்ன தான் சஹானாவை பிடிக்காது என்றாலும் அவரும் ஒரு பெண்ணின் தாய் தானே. அவர் மறுப்பாய் சொல்ல வரவும் அவரை ஏறிட்ட சர்வேஸ்வர் "இப்ப இங்க இருந்து நீங்க போகலனா உங்க உயிருக்கு நான் உத்திரவாதம் இல்ல. இங்க இருந்து போனதுக்கு அப்றமா போலீஸ் கேஸ்னு சுத்துனாலும் ஒரு யூஸும் இல்ல" என்று சொல்லிவிட்டு சஹானாவைக் கையோடு இழுத்துக்கொண்டு மாளிகையை நோக்கிச் சென்றான்.

"இவங்கள வீட்டுல விட்டுரு வம்சி" என்று ஆணையிட்டுவிட்டு சஹானாவுடன் மாளிகைக்குள் நுழைந்தவன் கதவைத் தாழிட அன்று தான் இந்த பரந்த மாளிகைக்குள் சிறைவைக்கப்பட்டாள் சஹானா.

அதன் பின் நடந்த நிகழ்வுகள் நாம் முன்னரே பார்த்தது தான். எப்படி அவள் அனுமதி இன்றி சஹானா சிறைபிடிக்கப் பட்டாளோ அதே போல அவளது அனுமதியும் விருப்பமுமின்றி சர்வேஸ்வருடன் அவளது திருமணமும் முடிந்தது.

பழைய நிகழ்வுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவளின் மார்பில் அழகாய் மின்னியது மஞ்சள்சரடில் தொங்கிய பொன்தாலி. இனி என்ன என்ற யோசனையில் அந்த காரிகையின் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது. அப்போது "சனா"என்ற சர்வேஸ்வரின் குரல் காதில் விழ வில் நாணாய் உடல் விறைத்தாள் சஹானா.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8