அத்தியாயம் 5

 




சொர்க்கலோகமோ என கண்டவர் மயங்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த திருமண மண்டபம். மணமகன் பிசிசிஐயின் முக்கிய அதிகாரியான விஷ்ணுவர்தன் என்பதால் அந்த வட்டாரத்திலிருந்து முக்கிய நபர்கள் வருகை தந்திருந்தனர்.

அத்துடன் மணமகள் நிஹாரிகாவின் கல்லூரித்தோழிகள் தோழர்களும் வருகை தர அந்த மண்டபம் உற்சாகக்குரல் ஒலிக்க இரு பக்கத்து உறவினர்களின் வருகையாலும் நிறைந்திருந்தது.

மணமகளும் மணமகனும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பக்கத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. 

மணமேடையில் மணமக்களுக்கு பின்னே நின்ற மித்ரவிந்தாவும் சம்யுக்தாவும் மணமேடை அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திருப்பதி ஏழுமலையானும் பத்மாவதி தாயாரும் பின்னணியில் சிலாரூபமாக நிற்க மணமேடையின் முற்பக்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மணமேடை முழுவதும் பொன்னால் செய்யப்பட்டது போல விளக்குவெளிச்சத்தில் மின்ன அதில் அமர்ந்திருந்த மணமக்கள் பொற்சிலைகளாக மின்னினர்.

அச்சமயத்தில் கிரிக்கெட் போர்டின் முக்கிய அதிகாரிகள் வர அவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய இளம் வீரர்களும் வருகை தந்தனர். மணமகனின் முகம் அவர்களைப் பார்த்ததும் மலர்ந்து போனது.

அப்போது எதேச்சையாக மித்ரவிந்தாவின் கவனம் மணமேடைக்கு எதிரே செல்ல அங்கே வந்த கிரிக்கெட் அணியினரின் நடுநாயகமாக சாம்பல் வண்ண பேண்ட், சாம்பல் வண்ண ப்ளேசர் அதனுள் வெண்ணிற சட்டையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்திருந்த முகுந்தைக் கண்டதும் அவள் அறியாமல் அவளின் மனம் அவனது கம்பீரமான ஆண்மை மிளிரும் நடையை ரசித்தது.

அவளின் கண்கள் இடைவிடாது நோக்கியதாலா அல்லது டெலிபதியாலா என்று தெரியவில்லை, அடுத்த வினாடி முகுந்தின் கண்கள் மணமேடையில் மணமக்களுக்குப் பின்னே நின்று கொண்டிருந்த மித்ரவிந்தாவைக் கண்டுவிட்டது.

அவளைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. இது வரை அவளைக் கண்ட பொழுதுகளில் எல்லாம் மாடர்ன் உடைகளிலேயே பார்த்துப் பழகியிருந்தவன் இன்று முதல் முறை அவளின் புடவை தரிசனத்தில் கண்களை அவள் மீதிருந்து எடுக்கும் வழியறியாது தவித்தபடி முன்வரிசை இருக்கைகளில் அமர்ந்தான்.

மித்ரவிந்தா அவன் நடந்து வந்து முன்வரிசையில் கால் மேல் போட்டு டாம்பீகமாக அமர்ந்ததை பார்த்துவிட்டு கண்ணிமைக்காது தவமிருக்க அடுத்த வினாடி சம்பந்தமேயின்றி அவனுக்கும் தனக்குமான பீனிக்ஸ் மால் சந்திப்பு அவளது மனக்கண்ணில் விரிந்து செவிகளில் அவனது ஹஸ்கி குரல் ஒலிப்பது போன்ற பிரமை வேறு தோன்றிவிட முகம் சிவப்பதை தடுக்க முடியாமல் போராடி தோற்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க நல்ல முகூர்த்தத்தில் விஷ்ணுவர்தன் நிஹாரிகாவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி அவளை தனது மனவாட்டியாக அங்கீகரித்துக் கொண்டான்.

அடுத்து அவர்களில் சம்பிரதாயப்படி 'தம்ப்ராலு' என்ற அரிசி தூவும் நிகழ்வுக்காக இருவரும் தயாராயினர். மாறி மாறி அரிசியைத் தூவிக்கொண்ட காட்சி காண்பவர் கண்ணைக் கவர அச்சம்பிரதாயம் இனிதே நிறைவுற்றது.

அதன் பின்னர் இன்னும் சில சடங்குகளுக்குப் பின்னர் பரிசுப்பொருளை மணமக்களிடம் கொடுத்து போட்டோவுக்குப் போஸ் கொடுத்தபடியே உறவினர்கூட்டமும் விஐபிக்களும் வந்து சென்று கொண்டிருந்தனர்.

முகுந்த் மித்ரவிந்தாவை விழுங்குவது போல பார்க்க அவளோ அவ்வளவு ஜனத்திரளுக்கு மத்தியின் அமர்ந்தபடி தன்னைக் கண்ணால் கபளீகரம் செய்பவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் பரிசுப்பொருளை நீட்டிவிட்டு துரிதமாக அங்கிருந்து வெளியேறத் துடித்தாள்.

ஆனால் அவளும் சம்யுக்தாவும் மணமக்களுக்குப் பரிசளித்து புகைப்படம் எடுத்துவிட்டுக் கீழே இறங்கவும் அதே கணத்தில் முகுந்த் தனது அணியின் சக பிளேயர்களுடன் மேடை ஏறவும் சரியாக அமைய அவனைக் கடந்து சென்ற போது அவளின் விரல்கள் அவனது கரங்களுடன் உராய்ந்தது.

சில நிமிடத்தீண்டலில் உண்டான சிலிர்ப்பு இருவருக்குள்ளும் மின்சாரம் போல தோன்றி மறைந்த அடுத்த நொடியே "எனக்காக அந்த ஃப்ளவர் வாஷ் பக்கத்துல வெயிட் பண்ணு. நான் வந்துடுறேன். ஐ வாண்ட் டு டாக் டு யூ" என்றவனின் முணுமுணுப்பு அவள் காதில் இன்பநாதமாக விழுந்தது.

எவ்வளவு உரிமையுடன் தனது காதில் முணுமுணுக்கிறான் இவன். தைரியம் தான் என மனதுக்குள் அலுத்துக்கொண்டவள் சம்யுக்தாவை சாப்பிட அனுப்பிவிட்டுத் தனியே அலங்கார பூக்குவளை அருகில் சென்று அவனுக்காக காத்திருந்தாள்.

அவனும் வந்து சேர்ந்தான். வரும் போதே கண்களில் ரசனை மின்ன உதடுகளில் முறுவல் பூக்க மனமெங்கும் அவளின் தேவலோகக்கன்னி போன்ற அழகு உண்டாக்கிய மையல் பேரலையாய் எழுந்து அடங்க அதைச் சிறிது கூட மறைக்க விரும்பாதவனாய் வந்து அவளருகே நின்றான்.

மித்ரவிந்தா அவனது கண்களில் மின்னும் மயக்கத்தில் வெட்கி சிவந்து போனவள் "என்ன சொல்லனும்னு என்னை வெயிட் பண்ண வச்சீங்க?" என்று மிடுக்காக கேட்டாள்.

முகுந்த் அவளது பேரழகு உண்டாக்கிய அதிர்ச்சியில் பாதாதி கேசமாய் அவளை ரசித்தபடியே "உன்ன என் கூட அழைச்சிட்டு போக உன்னோட பெர்மிசன் கிடைக்குமா?" என கேட்டு வைக்க மித்ரவிந்தா முதலில் திகைத்தாலும் பின்னர் அடக்கமாட்டாமல் நகைக்க ஆரம்பித்தாள்.

தன்னை அழைத்துச் செல்ல தன்னிடமே அனுமதி கேட்பவனை கண்டு நகைக்காமல் வேறு என்ன செய்வதாம்.

சிரிக்கும் போது அவளின் செவ்விதழ்கள் விரிந்து முத்துக்களை ஒத்த அவளின் பற்கள் மின்ன அந்த மூரலில் மயங்கிய மாயவன் சுற்றம் மறந்து அரக்குவண்ண பட்டுப்புடவையினூடே தெரிந்த அவளின் சந்தனவண்ண வெற்றிடையைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான்.

மித்ரவிந்தா அவன் மீது மோதி நின்றவள் உடலெங்கும் ஓடிய சிலிர்ப்பை அனுபவித்தவளாக அவனது தொடுகையிலும் அருகாமையிலும் மெய்மறந்து நிற்க முகுந்த் அவளிடமிருந்து வீசிய நறுமண திரவியத்தின் மணமும் தலையில் சூடியிருந்த மல்லிகையின் நறுமணமும் கலந்த சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பளிச்சென மின்னிய கேமராவின் பிளாஷ் இருவரையும் சுயநினைவுக்கு கொண்டு வர அவசரமாக அவனிடமிருந்து விலகிய மித்ரவிந்தா தன்னை சமாளித்தபடியே கண்கள் சீற்றம் காட்டி முறைத்தாள்.

"பப்ளிக் பிளேஸ்ல இப்டியா நடந்துப்பீங்க?" என்று புலிக்குட்டியாக சீறியவளை மென்னகையுடன் நோக்கினான்.

"நான் டச் பண்ணுனது உனக்கு பிடிக்கலனா அப்பயே சொல்லிருக்கலாம். பட் யூ டிண்ட். உனக்கு என்னோட அருகாமை பிடிச்சிருக்குங்கிறதுக்கு இத விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது ஹனி" என்றவனின் பேச்சில் மித்ரவிந்தாவின் இதயம் வெளியே வருமளவுக்குத் தடதடவென வேகமாக துடித்தது.

அவள் வெட்கம் கெட்டுப் போய் இவனது தொடுகையிலா மெய்மறந்து தொலைக்க வேண்டும். இப்போது இவனை எப்படி எதிர்கொள்வது?

படபடத்த இதயத்துடன் கண்ணிமைகளைப் பட்டாம்பூச்சிகளைப் போல அடித்துக் கொண்டபடியே "நீங்க உங்க இஷ்டத்துக்கு அர்த்தம் எடுத்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல மிஸ்டர்" என்றாள் வருவித்துக் கொண்ட மிடுக்கான குரலில்.

என்ன தான் முயன்றாலும் முடிவில் குரல் கொஞ்சலாக மட்டுமே ஒலிக்க தனது இதயமும் நாவும் தனக்கு ஒத்துழைக்க மறுப்பதை புரிந்துகொண்டு அமைதியானாள் மித்ரவிந்தா.

இவை அனைத்தையும் ரசித்து முடித்த முகுந்த் "எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ஹனி. உன்னோட படபடக்குற கண்ணுல ஆரம்பிச்சு புடவையோட நுனி விலகுனா தெரியுற கொலுசு வரைக்கும் எல்லாமே பிடிச்சிருக்கு. அன்னிக்கு தியேட்டர்ல கோவிச்சுட்டு போன உன்னோட திமிரும் பிடிச்சிருக்கு" என பேசியபடி தனது வலியகரத்தின் நீண்டவிரல்களுடன் அவளின் வெண்டைப்பிஞ்சு விரல்களை பிணைத்துக் கொண்டான்.

"இது மட்டும் ராஜா காலமா இருந்திருந்தா உன்னை கிட்னாப் செஞ்சிட்டு போயிருப்பேன். ஆனா இது கலி காலமா போயிடுச்சே. வாட் கன் ஐ டூ? இப்ப கூட ஒன்னும் கஷ்டமில்ல. நீ ஓகே சொன்னா இப்பயே உன்னை தூக்கிட்டுப் போயிடுவேன்" என்றான் தாபத்துடன்.

மித்ரவிந்தா இது வரை தனது தந்தையைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் இவ்வளவு நெருக்கத்தில் அனுமதித்ததில்லை. அவனது அருகாமை அவளுக்குள் படபடப்பை உண்டாக்கிய சமயத்தில் அவனது ஆளுமை நிறைந்த பேச்சும் தோற்றமும் ஒருவித பாதுகாப்பு உணர்வையும் உண்டாக்கியது.

ஏனோ அவனது அருகாமை அவளுக்கும் பிடித்திருக்க அவளது பார்வை கனிய ஆரம்பித்தது.

அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டவனான முகுந்த் "டு யூ லெட் மீ டு கிட்னாப்?" என்று குறும்புத்தனமாக கேட்டு அவளை அதிர வைக்க மித்ரவிந்தா உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.

"ஆசை தான் உனக்கு. பிளீஸ் கொஞ்சம் நிக்கிறீயா?" என்று அவனது மார்பில் கை வைத்து தள்ளும் போதே அவளது கரங்கள் அவனது கரத்தில் சிறைபட அவனிடம் கையை விடுவிக்க போராடினாள் அவள்.

"கைய விடனும்னா நான் சொல்லுறதுக்கு ஒத்துக்கனும்" அவன் நிபந்தனை விதிக்க என்னவென கேள்வியுடன் அவனை பார்த்தாள் மித்ரவிந்தா.

"என் மம்மிக்கு பட்டுசேலைனா உயிரு. நீ என்னோட நாளைக்கு டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வரனும். ரெண்டு பேரும் சேர்ந்து மம்மிக்கு ஷாரி வாங்குவோம்" என்று சொல்ல மித்ரவிந்தாவின் சிரம் சம்மதமென அசைந்தது.

அதற்குள் அணியின் வீரர்கள் முகுந்தை அழைக்க அவன் மித்ரவிந்தாவை மையலாக நோக்கியபடி தனது கரத்தில் சிறை பட்டிருந்த அவளது பொற்கரத்தில் முத்தமிட்டான்.

"நெக்ஸ்ட் டைம் கன்னத்துல தான் கொடுப்பேன்" என்று சொல்லி கண்சிமிட்டலோடு விடை பெற்றவனின் உதடுகள் உண்டாக்கிய மாயாஜாலத்தில் கரைந்தபடி கரங்களை வருடியவளாகப் பித்து பிடித்தவளைப் போல் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா.

அவளுக்குப் பித்து தான் பிடித்து விட்டது! அதுவும் காதல் பித்து. இதற்கு மருந்தென்று ஒன்று உண்டென்றால் அது காதலனின் கனிவு சொட்டும் விழிகளும், காதல் ததும்பும் அருகாமையும் மட்டுமே.

அவள் சிலை போல நின்ற விதத்தைக் கண்டு அவளருகில் வந்து நின்ற சம்யுக்தா ஆச்சரியத்துடன் பார்த்தபடி அவளின் தோளில் தட்ட மித்ரவிந்தா என்ற சிலைக்கு உயிர் வந்தது.

"ஹான் என்னடி சொன்ன?" என திருதிருவென விழித்தவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சம்யுக்தா "டைம் ஆச்சு. வீட்டுக்கு போகலாமானு கேட்டேன்" என்று சொல்லவும் அசடு வழிந்தபடி அவளுடன் கிளம்பினாள்.

வீட்டுக்கு வந்த பிறகும், புடவையிலிருந்து குர்திக்கு மாறிய பிறகும், தலையலங்காரத்தை கலைத்த பிறகும் ஒவ்வொரு முறையும் முகுந்தின் நினைவு எழுந்து அவளை இம்சித்தது.

மதியம் நகர்ந்து மாலை கடந்து இரவும் மலர்ந்தது. இரவின் தனிமையில் அவன் கரத்தில் அளித்த முத்தம் நினைவுக்கு வர "நெக்ஸ்ட் டைம் கன்னத்துல தான் கொடுப்பேன்" என்று சொன்னவனின் கண்சிமிட்டல் மனதுக்குள் வந்து சென்றது.

"வான் வருவான் வருவான்" என பாடல் இசைத்து அவளது போன் யாருடைய அழைப்போ வருகிறது என்பதை அவளுக்கு உணர்த்த போனை எடுத்தவள் முகுந்தின் பெயரைக் கண்டதும் நாணப்புன்னகையுடன் அட்டெண்ட் செய்தாள்.

"ஹலோ"

மறுமுனை அமைதி காக்கவும் ஒருவேலை கால் கட் ஆகிவிட்டதோ என ஐயத்துடன் போனின் ஸ்க்ரீனை பார்க்க அதுவோ இன்னும் கால் கட் ஆகவில்லை என்று காண்பிக்க மீண்டும் "ஹலோ" என்றாள் அவள் ஒருவித படபடப்புடன்.

"ஹனி" என்ற முகுந்தின் செல்ல அழைப்பு கொஞ்சலுடன் வரவும் அவளுக்குள் பலவண்ண மலர்கள் இதழ் விரித்து மலர கூடவே அவள் மனதில் பொக்கிஷமாய் மறைந்திருந்த காதலும் மலர்ந்தது.

"ம்ம்ம்"

"என்ன பண்ற ஹனி?"

"நான் ஜன்னல் பக்கம் இருந்து நிலாவ பாக்குறேன். நீ?"

"நான் அஞ்சரையடி நிலா கூட பேசிட்டிருக்கிறேன்"

அவனது பதிலில் கிண்கிணியாய் அவள் சிரிக்க அந்தச் சிரிப்பை நேரில் கண்டு ரசிக்க வேண்டுமென்ற பேராவல் அவனுக்குள் பிரவாகமெடுத்தது.

"நீ நல்லா காமெடி பண்ற முகுந்த்"

"ஹேய் நான் சொல்லுறது உண்மை. உன்னோட மாசு மரு இல்லாத முகம் அப்டியே நிலா மாதிரி இருக்கு. அந்த நிலாமுகத்தை இப்பயே பாக்கனும் போல இருக்கு"

"ஐயையோ இப்பயேவா?"

"இப்பயே தான். ஏன் நான் உன்னை பாக்க வரக் கூடாதா ஹனி?" குரலில் அப்பாவித்தனத்தைக் கொட்டிக் கேட்ட விதத்தில் மெய்யாகவே மித்ரவிந்தா உருகித் தான் போனாள்.

"இப்ப வேண்டாம் முகுந்த். நாளைக்குத் தான் நேர்ல மீட் பண்ணப் போறோமே. அப்ப பாத்துக்கலாம்"

"ஹேய் அப்ப நீ என் கூட ஷாப்பிங் வர்றீயா?"

"அ...அ.... அது வந்து...."

"ப்ளீஸ் ப்ளீஸ். இல்லனு மட்டும் சொல்லி என்னோட லிட்டில் ஹாட்ட ஒடைச்சுடாத ஹனி. இப்ப தான் நீ வரேனு ஒத்துக்கிட்ட. பேச்சு மாறக்கூடாது"

"ம்ம். நான் யோசிக்கனும்"

"நாளைக்கு மானிங் ஷாப்பிங் போறதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் யோசிப்ப? நீ மட்டும் நாளைக்கு மானிங் வரலனா..."

"வரலனா?"

"வரலனா நானே வந்து உன்னை அழைச்சிட்டு போவேனு சொல்ல வந்தேன் ஹனி. நீ சீரியசா எதுவும் யோசிக்காத"

அவன் சமாளித்த விதத்தில் மீண்டும் அவள் வெள்ளி சதங்கையாய் சிரித்து வைத்தாள்.

"சிரிச்சே என் பொறுமைய சோதிக்கிறாளே" என அவன் புலம்ப அதற்கும் சிரிப்பே பதிலாக வந்தது.

"நல்லா சிரி. அப்டியே நல்லா தூங்கு. நாளைக்கு முழுக்க நீ என் கூட தான் இருக்கனும். திஸ் இஸ் மை ஆடர்"

ஆணையிட்டாலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய அவளுக்கும் பிடித்திருக்கவே அவனுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டாள் மித்ரவிந்தா.

"அப்ப நாளைக்கு மானிங் பாக்கலாம். வரப்ப நான் உனக்கு போட்டுவிட்ட ஜூவெல் செட் போட்டுக்க ஹனி. எனக்கு அதுல உன்னை பாக்கனும் போல இருக்கு" என்று அன்புக்கட்டளை வேறு போட்டுவிட்டு போனை வைத்தான் அவன்.

மனதில் இனம்புரியா இன்பவெள்ளம் கரை புரண்டோட சென்ற சந்திப்பில் முறுக்கிக் கொண்டு போனவள் இம்முறை கனிந்து உருகியதை தனது வெற்றியாக எண்ணி கொண்டாடியபடியே நாளைய தினத்தை அவளுடன் எவ்வாறு செலவிடலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து போனான் முகுந்த். மித்ரவிந்தா என்ற பேரழகி அவனிடம் உருகி நின்றதில் உண்டான கர்வம் ஏன் தான் அவளது கவனத்தை தன்புறம் திருப்ப இவ்வளவு பிரயத்தனப்படுகிறோம் என்ற கேள்விக்கு உண்டான பதிலை ஆராயாமல் விட்டது காலத்தின் பிழையே!

Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8