அத்தியாயம் 6
இரவின் கனவுகள் கொடுத்த முகச்சிவப்புடன் எழுந்து அமர்ந்தாள் மித்ரவிந்தா. அவளருகில் படுத்திருந்த சம்யுக்தா எப்போதோ எழுந்துவிட்டாள் என்பதை சமையலறையில் விசிலடிக்கும் பால் குக்கரின் சத்தம் அவளுக்கு உணர்த்திவிட்டது.
மித்ரவிந்தா படுக்கையிலேயே அமர்ந்துவிட்டவள் கண் மூடி நேற்றைய சம்பவங்களை மீண்டும் ஒரு முறை யோசிக்க ஆரம்பித்தாள். அவள் கண் முன்னே முகுந்தின் ஆளுமை நிறைந்த முகம் வரவும் அவளறியாமல் நாணம் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது.
எவ்வளவு இயல்பாக தனது கரத்தை வருடினான். தனது காதுகளில் முணுமுணுத்தது, இடையோடு சேர்த்து அணைத்தது, அடுத்த முறை கன்னத்தில் தான் என முன்னறிவிப்பு செய்தது என ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பார்த்துவிட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள்.
இக்கால இளைஞிகளுக்கே உரித்தான காலையில் எழுந்ததும் போன் முகத்தில் விழிக்கும் பழக்கத்திற்கு மித்ரவிந்தாவும் விதிவிலக்கு அல்லவே. போனை எடுத்தவளின் மனதை ஏற்கெனவே தன் வசப்படுத்தியிருந்த முகுந்தின் பெயரை கூகுள் தேடுபொறியில் போட்டு பார்க்க அவனைப் பற்றிய தகவல்களுடன் சிற்சிற போட்டோக்களையும் கூகுள் கடை பரப்பியது.
அவன் நீலநிற ஜெர்சியில் அணி வீரர்களுடன் நிற்கும் புகைப்படங்களை ஆவலுடன் ரசித்தவள் அங்கே நின்ற அனைவரை விடவும் முகுந்த் மட்டும் எதோ ஒரு விதத்தில் தனித்து தெரிவதாக எண்ணியபடி அடுத்தடுத்த புகைப்படங்களைக் காணும் ஆவலுடன் ஸ்கிரால் செய்தாள்.
அடுத்தடுத்த புகைப்படங்களில் சரத் சர்மா, சோனாக்ஷி நின்றிருக்க அவர்களுடன் முகுந்த் நின்றிருந்தான். அடுத்ததில் பெற்றோருடன், இன்னும் சிலவற்றில் கேசுவல் வியரில் பைக்குடன் நின்றிருந்தான்.
மித்ரவிந்தாவுக்கு அவனது புகைப்படங்களைக் காண காண திகட்டவில்லை. ஆனால் சில புகைப்படங்களைக் கண்ட போது அவள் மனம் கலங்கிவிட்டது.
அதில் எல்லாம் முகுந்த எதாவது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருந்தான். இன்னும் சில புகைப்படங்களோ முத்தமிடுவது போல இருந்தன.
"முகுந்த்னு வச்ச பெயருக்கு பொருத்தமா நடந்துக்கிறான். எத்தனை கேர்ள்ஸ்? ஒருவேளை இவங்களை மாதிரி தான் என்னயும் நெனைச்சிருப்பானா? என்னோட அனுமதி இல்லாம அத்தனை பேர் இருக்குற மண்டபத்துல என்னை ஹக் பண்ணுனப்ப நான் ஃபீல் பண்ணுன லவ்வ அவன் ஃபீல் பண்ணிருப்பானு நெனைச்சேனே. ஆனா அப்டி நெருக்கமா அணைக்கிறது அவனுக்கு ரொம்ப சாதாரணம்னு இந்த போட்டோக்கள் சொல்லுது. அவன் சாதாரணமா பழகுறதை நான் தப்பான கண்ணோட்டத்தில பாக்குறேனா? அவன் வளர்ந்த இடத்துல இப்டி அணைக்கிறது, கிஸ் பண்ணுறது சாதாரணமா கூட இருக்கலாம். ஆனா எனக்கு அப்டி இல்லை. ஒரு வயசுக்கு மேல அப்பா அண்ணனை தவிர வேற எந்த ஆணையும் பக்கத்துல நெருங்க விடாத ஆட்கள் பின்னணியில வளந்த நானா இப்டி வெக்கமே இல்லாம முன்ன பின்ன தெரியாத ஆணோட அணைப்புல உருகி நின்னேன்? இல்ல. ஒரு தடவை நடந்த தப்பு இனிம நடக்காது. நான் முகுந்த் கூட இன்னிக்கு போக போறது இல்ல, இனி எப்பயும் போக மாட்டேன்"
சொல்லும் போதே உள்ளே வலித்தது. ஆனால் முளையிலே கிள்ளிவிடுவது நல்லதல்லவா. அவளது வட்டாரத்தில் இந்தளவுக்கு ஒரு ஆணோடு நெருங்கி பழகவேண்டுமென்றால் அவன் அந்தப்பெண்ணுக்கு பேசிமுடிக்கப்பட்ட மணமகனாகவோ கணவனாகவோ மட்டுமே இருக்க முடியும்.
ஆனால் முகுந்தின் பழக்கவழக்கங்கள் அவ்வாறில்லை போல. குறைந்தபட்சம் கூகுள் காட்டியவரை அவனது பழக்கவழக்கங்கள் அவளுடையதிலிருந்து முற்றிலும் முரண்பட்டு இருக்க அவனை இனி தள்ளி வைக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அத்தோடு எதிர்காலமற்ற தனது காதலை தனக்குள் பூட்டி வைத்து கொண்டாள் மித்ரவிந்தா.
சில நிமிடங்கள் யோசனையில் கழிய அவளது கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. ஆனால் இந்த சின்ன வலிக்கு பயந்தால் நாளை பெரிய ஏமாற்றம் தரும் வலியை எதிர்கொள்ள நேரிடுமே. அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் தன் மனதிலிருந்து முகுந்தை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு தனது போனிலிருந்த அவனது எண்ணையும் அழித்து விட்டாள்.
சம்யுக்தா பார்த்தால் கட்டாயம் தான் அழுததை கண்டுகொள்வாள் என வேகமாக குளியலறைக்குள் மாற்றுடை டவல் சகிதம் புகுந்து கொண்டாள். பல் துலக்கி முகம் கழுவியவள் ஷவரின் பூத்தூவலில் நனைந்து மனதின் ஏமாற்றங்களை கரைக்க முயன்றாள்.
வெறும் தண்ணீரோடு போக கூடியவையா அந்த ஞாபகங்கள். ஆனாலும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. குளித்து உடைமாற்றிவிட்டு தனது முகத்தைக் கண்ணாடியில் கண்ட போது முகம் சற்று தெளிந்ததை போல மித்ரவிந்தாவுக்குத் தோன்றியது.
இப்போது வெளியே சென்றால் சம்யுக்தா கண்டுகொள்ள மாட்டாள். முகம்,கண்கள் ஓகே. ஆனால் குரல் ஙஞண நமன போடுகிறதே. முடிந்த வரை வாய் விட்டு பேசாமல் உம் என்ற ஒற்றை வார்த்தையில் உரையாடலை நகர்த்தினாள்.
சம்யுக்தாவிற்கு சந்தேகம் எழவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நிம்மதியுடன் கல்லூரிக்குப் புறப்பட்டாள் மித்ரவிந்தா.
அவளின் மனதிற்குள் வலி இருந்தாலும் கல்லூரி வளாகமும் படிப்பின் மீதிருந்த இயற்கையான ஆர்வமும் அவளை அந்த வேதனையை ஒதுக்கிவிட்டுப் புன்னகைக்க வைத்தன.
வகுப்புக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக போனை அணைத்துவைத்தவள் அதன் பின்னர் பேராசிரியர் வந்து விட பாடத்தில் கவனமானாள்.
படிப்பார்வமிக்க அந்த கன்னிகைக்கு கணிதத்தின் மீதிருந்த காதல் அவளது மனதுக்குள் காளை அவன் மீதுண்டான காதலை விடவும் வலியது என்பதாலோ என்னவோ அதன் பின்னர் முகுந்தின் நினைவுகள் அவள் மனமெனும் கரையைத் தீண்டவில்லை.
அல்ஜிப்ராவும் டோபாலஜி அன்ட் ஜியாமெட்ரியும் அவள் சிந்தையைத் தன் வசம் இழுத்துக்கொண்டதில் முகுந்த் என்பவனின் நினைவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
💝💝💝💝💝💝💝💝💝💝
முகுந்த் மிகவும் உற்சாகத்துடன் தயாராகி இருந்தான். மித்ரவிந்தாவை புடவை வாங்க வரச் சொல்லிவிட்டான். அவள் எப்படி வருவாள் எங்கே வருவாள் என்பதை எல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. அவனது மனமெங்கும் முதல் சந்திப்பில் தன்னிடம் முறுக்கிக் கொண்டவளை இப்போது படிய வைத்து தான் போடும் தாளத்துக்கேற்ப ஆட வைத்துவிட்ட சந்தோசமே நிறைந்திருந்தது.
அதிலும் நேற்றைய இரவின் பேச்சுக்களில் அவளது நாணம் வழிந்த குரலும், கொஞ்சலான மறுப்புகளும், கிண்கிணி சிரிப்பும் அவனை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தன.
பெண்களையே அறியாதவன் அல்ல அவன். எத்தனையோ இரவுகளில் அவன் தோள் வளைவுகளில் புதைந்த முகங்கள் அளித்த மகிழ்ச்சியை விட தொலைவில் இருந்தாலும் ஒற்றை புன்னகையில் தன்னை ஆட்டுவித்த மித்ரவிந்தா தந்த மகிழ்ச்சியே அவன் மனதில் இனித்தது.
என்னிடம் மயங்கிய பெண்களிடம் நடந்து கொள்வது போல ஏன் என்னால் மித்ரவிந்தாவிடம் நடந்துகொள்ள முடியவில்லை? அவளின் கண்கள், சந்திரவதனம், ஆரஞ்சு சுளை உதடுகள் என அனைத்தும் மயக்கமூட்டுவதாக இருந்தாலும் அவளை அணைக்கவேண்டும், முத்தமிட வேண்டும் என்று தோன்றுகிறதே அன்றி ஏன் மற்ற பெண்களிடம் நடப்பது போல கட்டில் சுகம் ஒன்றே பிரதானம் என கூடிக் களிக்க தோன்றவில்லை?
எத்தனையோ சிந்தனைகள், எண்ணற்ற கற்பனைகளுடன் அவளுக்குப் போனில் அழைத்தவனுக்கு அவள் போனை சுவிட்ச் ஆப் செய்திருப்பதாக பதிவு செய்திருந்த தகவல் வரவும் இவ்வளவு நேரம் இருந்த மயக்கம் மொத்தமும் வடிய குழப்பம் அவன் மனதில் சூழ்ந்தது.
எதுவும் பிரச்சனையாக இருக்குமோ என வாட்சப்பை பார்த்தவனுக்கு மித்ரவிந்தாவின் படம் தெரியவில்லை. அவள் தான் அவனது எண்ணை அழித்து விட்டிருந்தாளே. அதைப் புரிந்துகொள்ள அவனுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை.
ஆனாலும் பைத்தியம் போல மீண்டும் மீண்டும் அவளது எண்ணுக்கு அழைத்தவனுக்கு ஒரே பதில் மீண்டும் மீண்டும் வர மெதுவாக அவனுக்குள் சினம் முகிழ்த்தது.
நேற்று இரவு நன்றாக பேசி தன்னுடன் புடவை எடுக்க வர சம்மதித்தவளுக்கு திடீரென என்னவாயிற்று? அவன் அவளிடம் மிகவும் நாகரிகமாகத் தானே நடந்து கொண்டான். அப்படி இருந்தும் ஏன் அவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள்? அவள் எப்படி தான் அழைத்தும் வராமல் தன்னை அலட்சியம் செய்யலாம்?
இந்த முன்னாவின் கடைக்கண் பார்வை கிட்டாதா என நகரின் பேரழகிகள் எல்லாம் தவமிருக்க அவனது எண்ணமெங்கும் மித்ரவிந்தாவையே சுற்றி சுற்றி வந்தது. தன்னை அவள் அலட்சியப்படுத்திவிட்டாள் என்று கோபம் கொண்டவன் அந்த கோபத்தை டீபாய் மீது காட்டி உதைக்க அதன் மெல்லிய கண்ணாடி மேற்பரப்பு சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.
சிகையைக் கோதி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் "காட் இந்த பொண்ணு என்னை பைத்தியம் ஆக்குறா. முன்னா ரிலாக்ஸ். இது நீயே இல்ல. உனக்கு என்னாச்சி? ஆப்டர் ஆல் ஒரு பொண்ணு போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சதுக்கு இவ்வளவு கோவம் அவசியமா? அவ உன்னை வேணும்னு அலட்சியப்படுத்துறா. உன்ன சீண்டுறா. நீ இழுத்த இழுப்புக்கு வர மாதிரி நடிச்சு அவளோட இழுப்புக்கு உன்னை மாத்த முயற்சிக்கிறா. யோசிடா. நல்லா யோசி" என்று தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டவன் தனக்கு எதிரே பெரிய கண்ணாடிகதவுகளின் வழியே தெரிந்த கடலை பார்த்தபடி வெல்வெட் கவுச்சில் பொத்தென அமர்ந்தான்.
சீறும் கடலைப் போலவே அவனது மனமும் சீறியது. பின்னர் மெல்ல மெல்ல கோவம் வடிந்த பின்னர் யோசிக்க ஆரம்பித்தான்.
தான் இது வரை சந்தித்த பெண்களைப் போல அல்ல மித்ரவிந்தா. அவளின் கண்களில் உண்மை இருக்கிறது. அதில் கனிவும் அன்பும் மட்டுமே கலந்திருப்பதை அவன் அறிவான். அப்படிப்பட்ட பெண் சந்தித்து சில நாட்களே ஆன ஆணுடன் அதிலும் அவன் ஒரு செலிபிரிட்டி என்கிற போது எப்படி சகஜமாகப் பழகுவாள்?
அவள் பணத்துக்கோ ஆடம்பரத்துக்கோ மயங்கும் வகையறா இல்லை என்பதை முதல் சந்திப்பில் அவனது நன்றிக்கடன் தீர்க்கும் படலத்தில் விளக்கி விட்டாள்.
அத்தோடு அவளுக்கு அவன் மீது பிடித்தம் இருப்பதுவும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் ஏன் மித்ரவிந்தா அவனை தவிர்க்கிறாள்?
அது அவளின் இயல்பான குணமாக இருக்கலாம். அல்லது திமிராக கூட இருக்கலாம். இல்லை என்றால் எட்டாக்கனியாக தன்னை காட்டிக்கொள்ளும் எண்ணமாக கூட இருக்கலாம்.
என்ன? எட்டாக்கனியா?
ஒரு நிமிடம் முகுந்தின் இதயம் நின்று துடித்தது. ஆம். எட்டாக்கனியே தான்.
தங்களுக்குப் பிடித்தமானதை அடைவதில் ஆண்களுக்கு இருக்கும் பிடிவாதத்தில் ஆயிரம் மடங்கு கொண்டவன் முகுந்த். அப்படிப்பட்டவனிடம் எட்டாக்கனியாக தன்னை காட்டிக் கொண்டால் அவனது எண்ணத்தையும் மனதையும் ஆட்சி செய்யலாம் என்ற திட்டத்துடன் அவள் இப்படி நடந்துகொள்கிறாள் என தானே ஒரு முடிவுக்கு வந்தான் முகுந்த்.
அவனது உதடுகள் எள்ளலுடன் வளைந்தது.
"நீ என்னை இன்னும் தெளிவா புரிஞ்சுக்கல ஹனி. என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண பொண்ணுங்களால என்னை மறக்கவே முடியாது"
கர்வத்துடன் சொல்லிக்கொண்டு தனது ஏமாற்றத்தைக் கரைக்க வீடியோ கேமில் மூழ்கினான் அவன். இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு மித்ரவிந்தாவே நாளை அவனுக்கு அழைப்பாள் என்பது அவனது அதீத நம்பிக்கை.
ஆனால் அடுத்தடுத்து நாட்கள் பறக்க மித்ரவிந்தா முகுந்தை அழைக்கவோ தேடவோ செய்யாமல் அவளது படிப்பில் கண்ணாகி விட்டாள். அவளது காதல் வெறும் கானல் என்பதைப் புரிந்துகொண்டு எதிர்காலமற்ற கனவுகளில் காலத்தைக் கடத்தாது படிப்பை பற்றிக்கொண்டாள் அவள்.
அவளின் இச்செய்கை முகுந்தின் மனதில் அவளை எப்படியாவது தன்னிடம் மயங்கி நிற்க செய்ய வேண்டுமென்ற எண்ணமாகிய தீக்கு இன்னும் நெய் ஊற்றுவது போல அமைந்துவிட்டது.
கடந்த மூன்று நாட்களில் அணி வீரர்களுடன் ஊர் சுற்றுவது, உல்லாசமாக நாட்களை கடத்துவது என இருந்தாலும் மித்ரவிந்தாவின் முகமே அவனது மனமெங்கும் ஊர்வலம் வந்தது. மூன்றாம் நாளின் முடிவில் அவன் தன்னையே கேட்டுக்கொண்டான்.
"நீ முன்னா தானா? உன்னை ஒரு பொண்ணு இவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தியும் சும்மா இருக்குற"
மொத்தத்தில் இத்தனை நாட்கள் அவனுள் உருவேற்றப்பட்டிருந்த 'முன்னா தி கிரேட்' என்ற பிம்பம் மித்ரவிந்தாவின் செய்கையால் தூள் தூளாக நொறுங்க அவளிடம் ஏற்பட்ட தனது இரண்டாவது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக நின்றான் முகுந்த்.
ஆனால் அதை அப்படியே விட்டுவிடுவது அவனது பழக்கம் இல்லை.
தன்னை இவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தும் மித்ரவிந்தாவே தன்னிடம் உருகி நிற்க வேண்டும். தன்னை பார்க்காமல் அவளது நாட்கள் நகரவில்லை என புலம்ப வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு நிஹாரிகாவின் ஞாபகம் வரவே அவனது உதடுகளில் புன்னகை பூத்தது.
"நீ என்னை ரொம்ப சீண்டிட்ட ஹனி. இதுக்கான பதிலடிய நான் சீக்கிரம் குடுப்பேன். இந்த நாலூ நாளா எனக்கு பைத்தியம் பிடிக்க வச்ச முதல் பொண்ணுங்கிற பெருமைய நீ அடைஞ்சிருக்கலாம். ஆனா அது ரொம்ப நாள் நீடிக்காது ஹனி. நானே உன்னை தேடி வரேன்" என்று மர்மமாக சொல்லி புன்னகைத்தவன் விஷ்ணுவர்தனுக்கு போனில் அழைத்து நிஹாரிகாவிடம் மித்ரவிந்தாவைப் பற்றி பேசவேண்டுமென சொன்னான்.
நிஹாரிகா மகிழ்ச்சியுடன் அவனிடம் தோழியைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டாள்.
யாராலும் கட்டுப்படுத்த முடியாத முகுந்துக்கு தன் தோழியின் மீது கண் என்றால் அவளுக்கு பெருமை தானே. அத்தோடு மித்ரவிந்தாவின் அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்தாள் அவள். தமிழகத்தின் மலையக கிராமத்தில் பிறந்த மித்ரவிந்தா இந்தியாவே கொண்டாடும் கிரிக்கெட் வீரனுக்கு எல்லாவுமாய் ஆகப்போகிறாள் என்றால் அவளுக்கு மகிழ்ச்சி இருக்காதா?
அந்த மகிழ்ச்சியுடன் மித்ரவிந்தாவைப் பற்றி ஏ டூ இசட் அனைத்தையும் கூறியவள் "அவ கொஞ்சம் டிரெடிசனல் டைப். டிரசிங் தான் மாடர்னா இருக்கும். நீங்க மும்பை பழக்க வழக்கத்தை அவள்ட எதிர்பாக்க முடியாது முகுந்த் சார். மற்றபடி மித்ரவிந்தா இஸ் எ டைமண்ட்" என்றாள் பெருமிதமாக.
அவள் பேசி முடித்ததும் போனை வைத்த முகுந்த் "இனியும் உன்னால என்ட இருந்து தள்ளி போக முடியாது ஹனி" என்று சொல்லிவிட்டு தனது காந்தப்புன்னகையை இதழில் ஒட்டவைத்துக் கொண்டான்.
Comments
Post a Comment