அத்தியாயம் 2

 


“மாதுளை ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா. ஆழி ரொம்ப டயர்டா தெரியறா”


வேலைக்காரப்பெண் சைலஜாவிடம் சொல்லி அனுப்பினார் தமயந்தி. நண்பிகளுக்கு ட்ரீட் வைத்துவிட்டு வீடு திரும்பிய பெண் சிறகொடிந்த புறாவைப் போல அவளது ரூமுக்குள் போனதிலிருந்து தமயந்தியின் மனம் அடித்துகொண்டது.


எப்போதும் துறுதுறுவென இருக்கும் பெண்ணாயிற்றே. இன்று அவளுக்கு என்ன கவலை என்ற கேள்விகள் அலைமோத ஆழினியிடம் பேச முயன்றவருக்கு “என்னை கொஞ்சம் நேரம் தனியா இருக்கவிடுங்க சித்தி” என்ற பதிலே கிடைத்தது.


உடனே கணவருக்குப் போன் செய்து நிலவரத்தைக் கூறினார் தமயந்தி.


“ஆழினி இப்படி நொடிந்து போய் ரூமுல அடைந்து கெடக்குறது எனக்குச் சரியா படலை. நீங்க என்ன வேலையில இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு வாங்க” என்று வைதீஸ்வரனிடம் பேசியிருந்தார்.


வைதீஸ்வரனோ “நான் முக்கியமான பிசினஸ் மீட்டிங்கில இருக்கிறேன் தமயா. நீ ஆழினியை கவனிச்சுக்க” என்று சொல்லிவிட


தமயந்தியோ “நம்ம மகளை விட பிசினஸ் முக்கியமா உங்களுக்கு?” என ஆதங்கமாக கேட்க


“சீக்கிரம் வர முயற்சி செய்யுறேன் தமயா” என்று பேச்சை சுருக்கமாக முடித்தார் வைதீஸ்வரன்.


அவர் காலை கட் செய்ததும் தமயந்திக்கு கோபம் வந்துவிட்டது. “வர வர இந்த மனுசனுக்கு பொறுப்பில்லாமல் போயிடுச்சு” என்று தனக்குத் தானே பேசிகொண்டு ஆழினிக்கு ஜூஸ் எடுத்து வரும்படி சைலஜாவிடம் கட்டளை போட்டார்.


சைலஜா ஜூசுடன் வர மீண்டும் ஒரு முறை மகளின் ரூம் கதவைத் தட்டினார்.


“ஆழிக்கண்ணு, கதவைத் தெறடாம்மா. எவ்வளவு நேரம் ரூமுக்குள்ளயே அடைந்து கெடப்ப?”


உள்ளே இருந்து ஆழினி எந்த பதிலும் சொல்லவில்லை. வேலைக்காரப்பெண்ணை வேறு வேலையை கவனிக்குமாறு அனுப்பிவைத்துவிட்டு மீண்டும் பெண்ணிடம் சமாதானம் பேச ஆரம்பித்தார்.


“சித்தி சொன்னா ஆழ் கேட்பாள்ல. என்ன பிரச்சனைனு சித்திட்ட சொல்லுடா கண்ணம்மா”


தமயந்தியின் வெண்ணெய் பேச்சுக்குப் பலனாக ரூம் கதவு திறந்து ஆழினியின் முகம் தெரிந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் பதபதத்துப் போனார் தமயந்தி.


பாய்ந்து வந்து சித்தியைக் கட்டியணைத்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள் ஆழினி. தமயந்திக்கோ ஒன்றும் புரியவில்லை. தோழிகளைச் சந்திக்க புள்ளிமானாக துள்ளி குதித்து சென்ற பெண்ணுக்கு திடீரென என்னாயிற்று என்று அவரும் பயந்து போனார்.


ஆழினியோ அழுது ஓய்ந்தாளேயன்றி நடந்த எதையும் தமயந்தியிடம் வாய் திறந்து சொல்லவில்லை. சொல்லும் நிலையிலா அவளை புகழ்வேந்தன் நிறுத்தி வைத்திருக்கிறான். பாவி! சுயநினைவிழந்து கிடந்தவளை மனசாட்சியின்றி சூறையாடிவிட்டு அதை டாம்பீகமாக தண்டோரா போட்டானே!


நினைக்க நினைக்க உடலும் மனமும் எரிந்தது ஆழினிக்கு. மெய்யாகவே அக்னிபிரவேசம் செய்து எரித்துக்கொள்ளலாமா என்று எண்ணுமளவுக்கு அவளது நிலமை இருந்தது.


தமயந்தி என்னவென சொல்லாமல் அழுது கதறுபவளை அன்னைக்கே உரித்தான அரவணைப்பில் ஆறுதல் படுத்தினார்.


“ஒரு வாரத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு வயசுப்பொண்ணு எங்கயும் சுத்தக்கூடாதுனு தலைபாடா அடிச்சேன். கேட்டியா? இப்போ உனக்கு என்ன செய்யுதுனு கேட்டா கூட பதில் சொல்லமாட்டேங்கிறியே கண்ணு. அழாதடா, நீ அழுதா சித்திக்குத் தாங்குமா? அழுதா தீராத துன்பம் இல்லனு சொல்லுவாங்க. ஆனால் அழுதா மட்டுமே எந்த துன்பமும் தீராது கண்ணு. சித்தியை பார். கண்ணை தொடச்சுக்க”


தமயந்தியின் இதமான வார்த்தைகள் ஆழினியின் அழுகையை தடுத்து நிறுத்தியது. அழுது அழுது சிவந்திருந்த வதனத்தை கழுவிவிட்டு வரும்படி கூறினார் தமயந்தி.


ஆழினி முகம் கழுவிவிட்டு வந்ததும் அவளிடம் மாதுளை ஜூஸை கொடுத்தார்.


“குடி கண்ணு”


மறுப்பு கூறாமல் வாங்கி அருந்தினாள் ஆழினி. மடமடவென ஜூஸை காலி செய்துவிட்டு வெறும் க்ளாஸை சித்தியிடம் நீட்டினாள்.


“இப்பவும் என்னாச்சுனு சொல்ல மாட்டியா கண்ணு?”


அவளது பட்டுக்கூந்தலை வருடி கேட்டார் தமயந்தி. ஆழினி அவரது மடியில் படுத்துக்கொண்டாள்.


“முக்கியமான ஒன்னை தொலைச்சிட்டேன் சித்தி. என்னால அதை ஜீரணிக்க முடியலை”


“நீ தொலைச்சது வைரமா வைடூரியமா? எதுவா இருந்தாலும் திரும்ப வாங்கிக்கலாம் கண்ணு”


“இது வைர வைடூரியம் இல்லை சித்தி. அதை விட முக்கியமான ஒன்னு. ஒரு தடவை போச்சுனா போனது தான்”


முகம் கசங்க உரைத்தாள் பெண்ணவள். உதட்டைப் பிதுக்கி அழப்போனவள் அந்த உதட்டில் முத்தம் வைத்து அனுப்பிய புகழ்வேந்தனின் நினைவால் மீண்டும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


தமயந்தி அழுது தீர்ப்பவளை என்ன செய்து சமாதானம் பண்ணுவதென புரியாமல் சிலையாய் சமைந்துபோனார்.


வீட்டில் இத்தகைய சூழல் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறியாத வைதீஸ்வரன் ஹோட்டல் ப்ளூமூனில் முக்கியமான நபர் ஒருவருக்காக காத்திருந்தார்.


வைதீஸ்வரனின் முகமெங்கும் வேர்வை தனது முத்துகளை பதித்திருந்தது. அதை துடைத்து துடைத்து கைக்குட்டை ஈரமாகிப்போனது. ஏசி அறை தான். ஆனால் அவர் அடைந்த துக்கம் அவரை குளுமையை உணரவிடவில்லை.


பால்ய சினேகிதன், உயிர் நண்பன் என அவர் ஆழமாக நம்பிய ஆராவமுதன் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். கம்பெனி மூழ்கும் நிலை என்றதும் நைஸாக கழண்டுகொண்டார்.


“நானா உன்னை அந்த கம்பெனி கூட கூட்டு சேர சொன்னேன்? நீ ஏமாந்ததுக்கு நான் பொறுப்பாக முடியுமா வைத்தீ?” என்று கேட்டு செய்த துரோகத்தை மறைக்கப்பார்த்தார்.


அவரது மைந்தனோ ஒரு படி மேலே போய் “நான் தாய்லாந்துல இருந்து  இந்தியா வந்த பிறகு கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லைப்பா. இவரை மாதிரி ஆட்கள் கிட்ட நம்ம விலகி நிற்பது தான் நல்லது” என்று திருமணத்தையே நிறுத்திவிட்டான்.


அப்பனும் மகனுமாக சேர்ந்து தான் தாஸ்மஹால் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியோடு கூட்டு வைத்து புதிய கன்ஸ்ட்ரக்சன் ப்ராஜக்டை ஆரம்பிக்கும்படி வைதீஸ்வரனை தூண்டினார்கள்.


அவர்களது வற்புறுத்தலால் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் தாஸ்மஹால் கன்ஸ்ட்ரக்சனின் நிதிநிலமை மோசமாக இருந்ததை அறியாதவண்ணம் பார்த்துக்கொண்டார்கள் இருவரும்.


பிசினஸை பொறுத்தவரை பணத்தை ரொட்டேசனில் விடுவது வழக்கம். வைதீஸ்வரனும் முந்தைய புராஜக்டில் சம்பாதித்த மொத்த பணத்தையும் புதிய புராஜக்டில் கொட்டியிருந்தார்.


டெக் பார்க் கட்டினால் வாடகையே கோடிக்கணக்கில் வருமென ஆசை காட்டியவர்கள் ஆராவமுதனும் இமயவரம்பனுமே. இன்று தாஸ்மஹால் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மூழ்கியதும் பாதி புராஜக்டில் வேலை நின்று போக வங்கிக்கடன், நிதிநிறுவனங்களின் நெருக்கடியில் சிக்கிக்கொண்டார் வைதீஸ்வரன்.


மனைவி மகளிடம் கூட இதை சொல்ல முடியாத நிலை அவருக்கு. திருமண கனவுகளோடு இருக்கும் மகளின் மனதை அவர் உடைக்க விரும்பவில்லை. எப்பாடுப்பட்டாவது தொழிலை மீட்கவேண்டுமென போராடினார். போராடி போராடி தோற்றும் போனார்.


பேசாமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிடலாமா என்று யோசிக்கும்போது உண்மையான நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் ஒருவரின் தகவல் கிடைத்தது.


“சின்னப்பையன், ஆனா தொழில்ல கெட்டிக்காரன். சிட்டில நடக்குற பெரும்பான்மையான புராஜெக்டுகளுக்கு அவன் இன்வெஸ்ட் பண்றான். கட்டாயம் உன் கம்பெனிக்கும் இன்வெஸ்ட் பண்ணுவான். உன்னை பற்றி சொன்னதும் மீட் பண்ண சம்மதிச்சிட்டான். ப்ளூ மூன்ல அவனை மீட் பண்ணு வைத்தி. உன் கம்பெனி கையை விட்டுப் போகாது”


அந்த நண்பர் கொடுத்த நம்பிக்கையில் ஹோட்டலில் வந்து அமர்ந்தவர் சாப்பிட எதையும் ஆர்டர் செய்யவில்லை. மனம் நண்பனின் துரோகத்தால் மரண காயம் பட்டிருக்கும் வேளையில் வயிறு மட்டும் பசிக்குமா என்ன?


உதவியாளர் செங்குட்டுவன் காபி ஆர்டர் செய்யட்டுமா என்று கேட்டபோதும் மறுத்துவிட்டு இன்வெஸ்ட்மெண்ட் பேங்கருக்காக காத்திருந்தார் வைதீஸ்வரன்.


அவர்களது மேசை பக்கம் நிழலாடவும் யோசனை கலைய திரும்பியவர் அங்கே பழுப்பு வண்ண கோர்ட்சூட்டில் கம்பீரமாக வந்து நின்ற புகழ்வேந்தனை பார்த்ததும் பேச்சுமூச்சற்று போனார்.


அவனோ குளிர் கண்ணாடியை ஸ்டைலாக கழற்றினான்.


“நலமா மிஸ்டர் வைதீஸ்வரன்?” கேட்ட தொனியே எள்ளலாக இருந்தது.


தனது அடங்காத சிகையை ஜெல் வைத்து படிய வைத்திருந்தவன் கம்பீரமாக நடந்து சென்று எதிர்பக்கத்து சேரில் அமர்ந்த காட்சி பிடறி மயிர் அசைய சிங்கமொன்று ராஜநடை நடந்தது போல இருந்தது.


வைதீஸ்வரன் அவனை எதிர்பார்க்கவில்லை. மனிதர் வேர்த்து வழிந்தார்.


புகழ்வேந்தன் அவரை நிதானமாகப் பார்த்துவிட்டு சிகரை பற்றவைத்தான்.


அதன் புகையில் வைதீஸ்வரன் இருமினார். அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தனது காரியதரிசியையும் செங்குட்டுவனையும் அங்கிருந்து செல்லுமாறு கட்டளை போட்டான்.


அவர்கள் சென்றதும் சிகர் புகையை வளைய வளையமாக ஊதியவன் “பரம்பரை பணக்காரர் வைதீஸ்வரனோட செல்ல மகள் ஆழினி தேவி நலமா?” என்று கிண்டல் செய்ய


வைதீஸ்வரனோ “என் மகளுக்கு என்ன? நல்லா இருக்கா” என்று வருவித்துக்கொண்ட இலகு குரலில் பதிலளிக்க


“என்னை துடிக்க வச்சுட்டு அவ மட்டும் ‘நல்லா’ இருக்கலாமா மாவய்யா?” என வார்த்தைகளை இறுக்கமாக ஒப்பித்தான் புகழ்வேந்தன்.


தாடை இறுக, இடுங்கிய கண்களில் ஏதோ ஒரு வெறியோடு அவன் கேட்ட விதம் வைதீஸ்வரனை நடுங்க வைத்தது.


புகழ்வேந்தன் சிகரை உதட்டில் வைத்து இரு கரங்களையும் விரித்து “ஒன்னுமில்லாதவனா அன்னிக்கு ஓடுன புகழ்வேந்தன் இன்னிக்கு ஒன் ஆப் த பெஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கரா திரும்பி வந்திருக்கிறேன் மாவய்யா. சொல்லுங்க உங்களுக்கு நான் என்ன செய்யணும்?” என்று ஆணவத்தோடு கேட்டான்.


வைதீஸ்வரன் என்னவென சொல்லுவார்? மகள் பின்னே சுற்றினான் என ஆள் வைத்து அவனையும் அவனது குடும்பத்தையும் அடித்து நொறுக்கிய பாவத்துக்கு எப்படி மன்னிப்பு வேண்டுவார்? பெண்கள் என்று பாராமல் அவனது தாயாரையும் வயது வந்த தங்கையையும் கூட விட்டுவைக்காமல் இரத்தக்காயம் செய்தவரை எப்படி அவன் மன்னிப்பான்?


எதிரில் அமர்ந்திருப்பவனின் மூச்சிலேயே பழிவெறி தெரிகிறது. பயந்தவராக வைதீஸ்வரன் அமர்ந்திருக்க புகழ்வேந்தனே நடந்ததை கூற ஆரம்பித்தான்.


“அகலக்கால் வைத்து இப்ப சொத்து எல்லாத்தையும் இழந்து மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கலாமானு யோசிக்கிற நிலமையில இருக்கிறீங்க. ஆம் ஐ ரைட்? சந்தோசம், ரொம்ப சந்தோசம். என்னை அசிங்கப்படுத்துன உங்களை என் முன்னாடி இப்படி கூனி குறுக வச்ச கடவுளுக்கு எந்த மொழில நன்றி சொல்லுறதுனு புரியலை மாவய்யா. ஆனா ஆழினியோட அப்பா நீங்க. உங்களுக்கு உதவலைனா அவளை நான் நேசிச்சது பொய்யாகிடுமே. உங்க கம்பெனியோட டெக் பார்க் புராஜக்டுக்கு நான் பணம் இன்வெஸ்ட் பண்ணுறேன். இந்த புராஜக்ட் முடியுறவரைக்கும் உங்க கம்பெனியோட அதிகாரம் என் கையில இருக்கனும். சம்மதமா?”


வைதீஸ்வரன் மனதில் இத்தனை நாட்களாக இரும்பாக அழுத்திய பயம் ஓடிவிட்டது.


தன் முன்னே அமர்ந்திருப்பவனின் உயர்ந்த குணத்தின் முன்னே தான் மிகவும் சிறியவனாகிப்போனோமே என தன்னை தானே திட்டிக்கொண்டார். அவன் செய்த உதவிக்கு ஏதாவது பிரதியுபகராம் செய்யவேண்டுமென வைதீஸ்வரனின் மனம் ஆவல் கொண்டது.


“என்ன மாவய்யா பேச்சு மூச்சில்லாம இருக்கிறீங்க. எவ்வளவு பெரிய உபகாரம் பண்ணிருக்கிறேன் உங்களுக்கு. ஏதாவது பேசுங்க”


சிகர் புகை கூட இப்போது வைதீஸ்வரனுக்கு அசௌகரியமாகத் தெரியவில்லை.


"நான் பணமுடையில இருக்கிறேன். உயிர் நண்பனே துரோகியா மாறி நிற்கிற நிலமையில உங்க உதவியை எப்படி மறப்பேன்?" 


வைதீஸ்வரன் நன்றிப்பெருக்கில் பேசுவதை கேட்ட புகழ்வேந்தன் சிகரை ஊதினான். கண்களை மூடி நுரையீரலுக்குள் சிகரின் காட்டப்புகை உண்டாக்கிய எரிச்சலை அனுபவித்தவன் "இந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போறீங்க வைதீஸ்வரன்?"என்க


"நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றதுக்கு தயார். என்ன செய்யனும்? கட்டளை போடுங்க" என உணர்ச்சிவயப்பட்டார் அவர்.


கண்களை திறந்த புகழ்வேந்தனோ "உங்க தொழிலுக்கு நான் முதலீடு கொடுத்ததுக்கு ஈடா ஆழினியை எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுங்க" என்க


"ஆழினியா? என் மகளா? அவளை எப்படி?" என வைதீஸ்வரன் தடுமாற,


அவனோ "நான் கொடுத்த பணத்திற்கு ஈடான மதிப்பு அவளை தவிர வேற எந்த பொருளுக்கு இருக்கிறதா நினைக்கிறீங்க? மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கிற நிலமையிலையும் எனக்கு அவளை கல்யாணம் செஞ்சு வைக்க மனசு வரலையோ?" என்றான் எகத்தாளமாக.


வைதீஸ்வரன் அதை கேட்டு அவமானத்தில் தலைகுனிந்தார்.


புகழ்வேந்தனின் மனம் பழி தீர்க்க ஆரம்பித்த மகிழ்ச்சியில் கொக்கரித்தது.


அன்று அவனை ஓட ஓட விரட்டியவர்கள் இன்று அவன் முன்னால் தலைகுனிந்து நிற்கிறார்கள். கர்வத்தில் உதடு வளைய எழுந்தான் புகழ்வேந்தன்.


"ஆழினி எனக்கு சொந்தமானதுக்கு அப்பறம் உங்க கம்பெனிக்கு பணம் வரும். அவ இல்லைனா பணமும் இல்லை. முடிவு உங்க கையில். உங்களுக்கு ட்வன்டி ஃபோர் அவர்ஸ் டைம். அதுக்குள்ள முடிவை சொல்லுங்க. லேட் செஞ்சா காசு பணம் துட்டு மனி லேது மாவய்யா. இந்த புகழ்வேந்தனுக்கு காத்திருக்க பிடிக்காது"


கர்வத்தோடு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் புகழ்வேந்தன்.


ஹோட்டலை விட்டு வெளியேறி அவனது ஆடி காரில் அமர்ந்தவனிடம் காரியதரிசி அமலன் “இவர் நீங்க சொன்னதுக்கு சம்மதிப்பாரா பாஸ்? உங்கட்ட காசு வாங்கிட்டு மகளை கல்யாணம் செஞ்சு தரலினா என்ன செய்வீங்க?” என்று கேட்டான்.


அவனைப் பார்த்து புன்னகைத்த புகழ்வேந்தனோ “யாருக்கு வேண்டும் இந்தாளோட சம்மதம்? இந்தாளுக்கு உதவுனது நான் இன்னிக்கு அண்ணாந்து பார்க்கிற உயரத்துல இருக்கிறதை காட்டுறதுக்காக. ஐ வில் ப்ரிங் ஆழினி அண்டர் மை கண்ட்ரோல் அட் எனி காஸ்ட். அதுக்கான முன்னேற்பாடை நான் செஞ்சிட்டேன் அமல்” என்றான்.


“சூப்பர் பாஸ்.  இப்ப நம்ம எங்க போகனும்?”


“பீச் பங்களாவுக்கே காரை விடச் சொல்லு.  இன்னிக்கு கொஞ்சம் ஹார்ட்வொர்க் செஞ்சதால உடம்பு வலிக்குது. ரிலாக்ஸ் பண்ணியே ஆகணும்”


“அம்மா கால் பண்ணுனா என்ன சொல்ல சார்?”


“முக்கியமான 

மீட்டிங்கில இருக்கிறேன்னு சொல்லு அமல்”


கார் கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இருக்கும் அவனுடைய பீச் பங்களாவை நோக்கி சென்றது.


---------


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8