அத்தியாயம் 3

 

ஒரு மனிதனுக்குக் கெட்டநேரம் வந்துவிட்டால் அனைத்துமே கெட்டதாக முடியும் என்பார்கள். வைதீஸ்வரனின் நிலை அதற்கு உதாரணமாகிப்போனது.


 நண்பரின் தூண்டுதலால் தொழிலில் அகலக்கால் வைத்து நொடிந்துபோனவருக்கு அடுத்த இடியாக இறங்கியது ஆராவமுதனின் மகன் இமயவரம்பன் ஆழினியைத் திருமணம் செய்யமுடியாதென மறுத்த தகவல்.


அதை ஆராவமுதனே அவரிடம் கூறினார்.


“என் மகன் அழகுக்கும் அறிவுக்கும் அவனுக்கேற்ற ஒருத்தி பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றான் வைத்தி. ஆழினியை போல வெறுங்கையோட வீட்டுக்கு வர மனைவி அவனுக்குத் தேவயில்லனு சொல்லிட்டான். நீ ஆழினிக்கு வேற வரன் பார்த்துக்க”


ஊரைக் கூட்டி ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடத்திய பிறகு இப்படி கூறினால் என்ன செய்வார் அவரும்?


தொழில் தப்பித்து விட்டது என்று நினைத்தும் மகிழ முடியவில்லை. தொழிலில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட புகழ்வேந்தனின் நிபந்தனை அவரின் நெஞ்சை அறுத்தது.


தொழிலா மகளுடைய வாழ்க்கையா என குழம்பிப்போனவராக வீட்டுக்கு வந்தவர் தமயந்தியிடம் ஆராவமுதன் கூறிய செய்தியைச் சொன்னது தான் தாமதம் அவர் ஓவென அழ ஆரம்பித்தார்.


“என் தங்கத்துக்கு ஏன் இப்படி ஒரு நிலமை? அவ யாருக்கும் கெடுதல் நினைக்காதவ. நிச்சயித்த கல்யாணம் நின்னதுனு கேள்விப்பட்டா இனிமேல் யார் அவளைக் கல்யாணம் செஞ்சிப்பாங்க? ஏன் பேயறைஞ்ச மாதிரி நிற்கிறீங்க? வாயை தொறந்து பேசுங்க”


கணவரை உலுக்கி எடுத்தார் தமயந்தி. வைதீஸ்வரனோ சோர்ந்து போய் தொப்பென சோஃபாவில் உட்கார்ந்தார்.


“புகழ்வேந்தனை பார்த்தேன் தமயா”


தமயந்தியின் அழுகை நின்று போனது. அவரது முகத்தில் பரபரப்பும் எரிச்சலும் ஒன்றாக வந்து அமர்ந்தது.


“அந்த வெறும்பயலை பற்றி இப்போ என்ன பேச்சு?” என சிடுசிடுத்தார்.


வைதீஸ்வரனோ “அவன் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுத்த பழைய புகழ்வேந்தன் இல்லை தமயா. பெரிய இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர். என்னை மாதிரி பழந்தின்னு கொட்டை போட்ட எத்தனையோ பிசினஸ்மேன்களுக்கு முதலீடு பண்ற பணமுதலை. நம்மளை விட பலமடங்கு பணம் அவன்ட்ட புலங்குது தமயா. நம்ம கம்பெனியை அவன் தான் காப்பாற்ற போறான்” என்றார்.


தமயந்தியால் அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை. சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னர் பைத்தியக்காரன் போல ஆழினியின் பின்னே காதல் ஊதல் என்று சுற்றிய காசுக்கு வழியில்லாத பயல் இப்போது பணமுதலையா?


“நம்ம தொழிலுக்குப் பணம் கொடுக்க அவன் ஒத்துக்கிட்டான். அதுக்குப் பிரதிபலனா அவன் ஆழினியை கல்யாணம் செஞ்சுக்க விரும்புறான்”


இதையும் தமயந்தியால் சுத்தமாக நம்பமுடியவில்லை. ஆழினியால் அவன் அடைந்த அவமானமும் இழந்த மரியாதையும் உறவுகளும் அவனை எப்படி இம்முடிவுக்கு வரவைத்தன?


கணவரிடமே அதை கேட்டாலோ “காதல்னு வந்துட்டா ஆண்கள் எதையும் மனசுல வைச்சுக்க மாட்டோம் தமயா. நம்ம மகளை அவனால மறக்க முடியலை. அதனால எனக்கு செக் வச்சு அவளைச் சொந்தமாக்கிக்க நினைக்கிறான்” என்றார்.


தமயந்தி சில நிமிடங்கள் யோசித்தார். பின்னர் தீர்மானத்துக்கு வந்தார்.


“புகழ்வேந்தன் கிட்ட சம்மதம் சொல்லிடுங்க” என்றார்.


வைதீஸ்வரன் தலையாட்டினார்.


உடனே புகழ்வேந்தனின் காரியதரிசி செங்குட்டுவனின் போனுக்குக் கால் போட்டார்.


“வேந்தன் சொன்ன நிபந்தனைக்கு நானும் என் குடும்பமும் சம்மதிக்கிறோம் தம்பி. அவரோட அப்பா அம்மாவை அழைச்சிக்கிட்டு முறைப்படி பெண் கேட்டு வரச் சொல்லுங்க”


“ரொம்ப சந்தோசம் சார். நான் பாஸ்ட்ட சொல்லிடுறேன். நீங்க சம்மதிக்கிற மாதிரி நடிச்சு எங்க முதுக்குக்குப் பின்னாடி குழி தோண்டுற வேலை எதுவும் செய்யாதீங்க. பாஸ் பழைய புகழ்வேந்தன் இல்லை. நீங்க கவனமா இருக்கணுமேனு சொல்லுறேன். மறந்துடாதீங்க”


செங்குட்டுவன் சொன்னதை தமயந்தியிடம் கூறிய வைதீஸ்வரன் எப்படி ஆழினியிடம் இமயவரம்பனின் முடிவை சொல்வதென திகைத்தார்.


“அதை பற்றி கவலைப்படாதீங்க. ஆழி நம்ம பொண்ணு. சொன்னா புரிஞ்சிப்பா. நான் அவ கிட்ட பேசுறேன்” என்று தைரியம் சொன்னார் தமயந்தி.


சொன்னதோடு மட்டுமன்றி ஆழினியிடம் இமயவரம்பன் தங்களது நிலை தாழ்ந்ததும் அவளை மணக்க மறுத்த தகவலை கூறியும் விட்டார். ஆழினி அதற்கு அழுவாள்,கோபம் கொள்வாள் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


ஆழினியின் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! அமைதி! என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு என திகைத்தவர் தமயந்தியே!


“மனசு வலிச்சா அழுதுடு ஆழிம்மா” என தமக்கை பெற்ற ரத்தினத்தின் மோவாய் தொட்டு ஆறுதல் கூறினார் அவர்.


ஆழினியோ “இப்போ தான் சித்தி மனசுக்கு நிம்மதியா இருக்கு. இமயனை என்னால கல்யாணம் செஞ்சுக்கமுடியாதுனு நானே சொல்றதா இருந்தேன். அவனும் அவன் அப்பாவும் செஞ்ச துரோகத்தை அப்படியே விடப்போறாரா அப்பா?” என்று கேட்டாள்.


தமயந்தியோ “என்ன செய்ய சொல்ற கண்ணு? அவனையும் அவன் அப்பன்காரனையும் நம்மால என்ன செஞ்சுட முடியும்?” என வயிற்றெரிச்சலோடு பேசினார்.


“சரி, அப்போ நம்ம கம்பெனியோட நிலமை? அதை அப்படியே விட்டுடலாமா? மீனாட்சி கன்ஸ்ட்ரக்சனோட நிலமை என்ன? அதுக்கு ஆராவமுதனும் இமயவரம்பனும் பதில் சொல்லனும் சித்தி”


தமயந்தி ஆழினியின் தோளைப் பற்றி அமைதிப்படுத்தினார்.


“நமக்கு உதவ ஒரு புண்ணியவான் வந்திருக்கிறார் ஆழிம்மா. அவர் நம்ம தொழில்ல முதலீடு செய்றதா உன் அப்பாக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்”


“யார் சித்தி அவர்? அப்பாவோட ஃப்ரெண்டா?”


“புகழ்வேந்தன் தம்பி”


ஆழினி யாரோ சவுக்கால் அடித்தது போல துடித்து எழுந்தாள்.


“வேந்தனா? அவன் எப்படி இதுக்குள்ள வந்தான்? அப்பா அவன் சொன்னதுக்குச் சம்மதிச்சிட்டாரா?”


“நீ ஏன் டென்சனாகுற ஆழி? அந்த தம்பி நம்ம கம்பெனில முதலீடு செய்யப்போறான். உன் அப்பாவோட நண்பர் மூலமா அவனைப் பற்றி தெரிய வந்து அவரே போய் மீட் பண்ணியிருக்கிறார். அவனும் சம்மதிச்சிட்டான்”


“அவன் இதுக்கு ஏதாவது நிபந்தனை போட்டானா சித்தி?”


ஆழினி இவ்வாறு கேட்டதும் தமயந்தி திடுக்கிட்டார். அவன் விதித்த நிபந்தனை பற்றி இவளுக்குச் சொன்னால் ஆடி தீர்ப்பாளே என்ற பயம். அவன் நிபந்தனை விதிப்பான் என இவள் எங்ஙணம் சிந்தித்தாள்?


ஆழினியோ பதட்டத்தின் உச்சத்தில் இருந்தாள். ஒரேநாளில் அவள் வாழ்க்கையில் தான் எத்துணை பெரியமாற்றம்?


தன்னை நாசம் செய்துவிட்டு தந்தையிடம் தொழில் ஒப்பந்தம் பேசியவனை அவள் மனம் அடியோடு வெறுத்தது. கூடவே பழைய புகழ்வேந்தன் எவ்வளவு நல்லவன் என யோசிக்கவும் செய்தது.


பழைய சம்பவங்களை நினைத்தவளுக்கு அதனுடன் இன்னும் சில சம்பவங்களும் நினைவுக்கு வர கடினப்பட்டு அதிலிருந்து வெளியே வந்தாள்.


தமயந்தி கணவரிடம் ஆழினியின் நிலை பற்றி விளக்கினார். அவரோ மறுநாள் புகழ்வேந்தன் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சோடு திருமணத்தைப் பற்றியும் பேச தங்கள் வீட்டுக்கு வருகிறான் என்ற செய்தியைக் கூறினார்.


“ஆழி அந்த நேரத்துல எதுவும் தப்பா பேசிடக்கூடாது” என்ற கவலை வேறு.


கணவரின் நிலமை தமயந்திக்கு நன்றாகப் புரிந்தது. பாவம்! இரண்டு முறை நெஞ்சுவலியிலிருந்து மீண்ட மனிதர். தொழில் மட்டும் ஒடிந்து போனால் அவர் மரண அடி படுவார். அதை நினைக்கும்போதே தமயந்திக்கு வலித்தது.


தமக்கை மீனாட்சிக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் வந்து தொலைத்தது.


அவள் போய்விட்டாள், நானல்லவா திண்டாடுகிறேன் என கடுப்போடு நினைத்தவர் எப்பாடுபட்டேனும் கணவரின் சொத்தைக் காப்பாற்றியாகவேண்டுமென சபதம் ஏற்றார்.


டின்னரின் போது ஆழினியிடம் புகழ்வேந்தன் வரப்போவதை மெதுவாக கூற அவள் முகத்திலோ கிஞ்சித்தும் உணர்ச்சியில்லை. கடனே என சப்பாத்தியை விழுங்கிவிட்டு பெட்ரூமுக்குள் போய்விட்டாள்.


மெத்தையில் சரிந்தவளின் மனதில் அலைக்கழிப்புகள்! புகழ்வேந்தன் செய்த காரியத்தை தந்தையிடம் கூறிவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் மகள் எந்த தந்தையிடமும் சொல்லக்கூடிய காரியத்தையா அவன் அவளுக்குச் செய்திருக்கிறான்?


கண்களை மூடினால் உறக்கம் வர மறுத்தது. தன்னை படுக்கையில் தள்ளி மிரட்டியவனின் முகமே கண்ணுக்குள் வந்தது. வீட்டுக்கு கிளம்பும் முன்னர் அவன் முத்தம் கொடுத்த இதழ் அமிலம் பட்டது போல எரிந்தது.


என் பெண்மையைக் களவாடிய கயவனை இவர்கள் நாளை கடவுளாய் பார்ப்பார்களே என பெண்ணவள் ஊமையாய் கதறி இரவைக் கழித்தாள்.


மறுநாள் காலையில் தமயந்தி வீட்டு வேலையாட்களை பம்பரமாக சுழல வைத்துக்கொண்டிருந்தார்.


சமையல் எல்லாம் தடபுடலாக தயாரானது. ஆழினி எதிலும் கலந்துகொள்ளாமல் தனது ரூமே கதியென கிடந்தாள்.


பத்து மணி போல வீடு பரபரப்பானது.


“வாங்க வாங்க” தமயந்தி யாரையோ வரவேற்பது கேட்டது. வந்தவன் யாரென தெரிந்ததும் அவள் உடல் விறைத்துப்போனது.


அப்படியே அமர்ந்திருந்தவளை தமயந்தி வந்து அழைத்தார்.


“ஹாலுக்கு வா கண்ணு. அப்பா கூப்டிடுறார்”


உணர்வற்ற சிலையாய் எழுந்தவள் எப்படி படியிறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.


ஹாலில் கிடந்த அரியாசனம் போன்ற சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அரசனுக்குரிய கம்பீரத்தோடு அமர்ந்திருந்தான் புகழ்வேந்தன். அவனது ஷூ கால்களை மட்டும் பார்த்தவாறு சோஃபாவில் தந்தைக்கு அருகில் அமர்ந்தாள் ஆழினி.


“நான் சொன்ன நிபந்தனைய ஆழினிட்ட சொல்லியாச்சா?”


நிபந்தனை என்றதும் ஆழினி விலுக்கென நிமிர்ந்தாள். அவள் தலையை உயர்த்தியதும் கண்ணில் பட்டதென்னவோ புகழ்வேந்தனின் வதனம் தான்.


பெண்ணவளைப் பார்த்ததும் சிருங்காரப்புன்னகையை ஈந்தவன் கருப்பு கண்ணாடியை மூக்கு வரை இழுத்துவிட்டு அளவிடும் பார்வையை வீசினான்.


“நலமா ஆழினி தேவி?”


கேள்வியில் நக்கலும் நையாண்டியும் கொட்டிக் கிடந்தது. ஆழினிக்குள் கோபம் பிரவாகம் எடுத்து பாய ஆயத்தமானது.


புகழ்வேந்தன் வைதீஸ்வரனிடம் “நாளைக்கு என் அம்மா தங்கச்சி ரிலேசன் முறைப்படி ஆழினியை பெண் கேட்டு வருவாங்க. கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கான்ட்ராக்ட் சைன் செஞ்சுடலாம்” என்றான்.


திருமணமா? அதுவும் இவனுடனா?


பெண்ணவளின் மனம் அதிர்ந்தது. அவளின் அதிர்ச்சி கப்பிய வதனம் புகழ்வேந்தனுக்குப் பரிபூரண திருப்தியை அளித்தது.


“ஏன் இவ்வளவு ஷாக் ஆழினி? உன் சித்தியே விளக்கம் சொல்லுவாங்க”


கோபமும் அதிர்ச்சியுமாக சித்தியைப் பார்த்தாள் ஆழினி.


தமயந்தியோ “உனக்கு பார்த்த மாப்பிள்ளை இவர்தான் ஆழிம்மா. நம்ம பிசினசுக்குப் பணமும் கொடுக்கப்போறார்” என்றார் உணர்வற்ற குரலில்.


“இவனா? இவனையா நான் கல்யாணம் செஞ்சுக்கணும்? பைத்தியமா சித்தி உனக்கு?”


கோபாவேசத்தோடு எழுந்தாள் ஆழினி.


அக்கா மகளின் ஆவேசத்தால் கொஞ்சம் நஞ்சமிருக்கும் சொத்துக்களையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் பீடிக்க அவளை அதட்டினார் தமயந்தி.


“வாயை மூடு டி. சின்னப்பொண்ணாச்சே பக்குவம் வந்ததும் மாறிடுவானு நெனைச்சா நீ மாறுற மாதிரி தெரியலை. உனக்கு நானும் உன் அப்பாவும் முடிவு செஞ்ச மாப்பிள்ளையை வேண்டாம்னு மறுத்தால், உனக்கு இந்த வீட்டில இடமில்லை”


சித்தியின் என்றுமில்லாத உக்கிரத்தால் பேச்சிழந்து போனாள் ஆழினி. வெறுப்போடு அரியாசன சோஃபாவில் உட்கார்ந்திருந்த புகழ்வேந்தனை பார்த்தாள்.


அவளது வெறுப்பை போலவே இப்போது அவன் கண்களிலும் வெறுப்பு சொட்டியது. அந்த கண்கள் இரையின் உதிரத்தை ருசி பார்க்க காத்திருக்கும் வேங்கையின் விழிகளை நினைவுறுத்தியது.


ஆழினி தனக்குள் பொங்கிய பயத்தை மறைத்துக்கொண்டு மேசை மீது வைத்திருந்த பழத்தட்டுகளை தூக்கி எறிந்தாள்.


“இவனை எந்த காலத்திலயும் நான் கல்யாணம் செஞ்சுக்கமாட்டேன்”


கோபத்தோடு கத்தி தீர்த்துவிட்டு தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.


அவளது கோபத்தால் தர்மசங்கடத்துக்கு ஆளான வைத்தீஸ்வரன் புகழ்வேந்தனிடம் கை கூப்பி மன்னிப்பு வேண்டினார்.


“சின்னப்பொண்ணு தெரியாமல் பேசிட்டா. என்னை மன்னிச்சிடுங்க தம்பி. உங்களை மருமகனாக்கிக்க எனக்கு கொடுத்து வைக்கலை”


புகழ்வேந்தன் திமிராய் பார்த்தான் அவரை. அலட்சியத்தோடு சிகரை பற்ற வைத்து புகையை ஊதினான்.


“மிச்சம் இருக்கிற சொத்து உங்க கைவசம் இருக்கனும்னா செல்வி ஆழினி திருமதி ஆழினி புகழ்வேந்தனா மாறியாகனும். உங்க தொழிலுக்கு முதலீடு வேணுமா வேண்டாமா? முடிவு உங்க கையில. வரட்டுமா தமயந்தி அம்மா?”


வார்த்தையில் இருந்த மரியாதை செயலில் இல்லை. பெரியவர்களை பார்த்து கோணலாக சிரித்தவாறு வெளியேறினான் புகழ்வேந்தன்.


முகத்தில் இருந்த சிரிப்பு மனதில் இல்லை. ஆழினியின் திமிர் இன்னும் அடங்கவில்லை என்ற உண்மை அவனை உன்மத்தம் கொள்ள செய்தது.


அகம்பாவம் பிடித்த ஆழினிக்குத் தக்க பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அவனது நான்காண்டு கால வைராக்கியம். அவளால் அவன் இழந்தது எப்பேர்ப்பட்ட உன்னதமான உறவை? அதற்கு அவளுக்கு வலிக்க வலிக்க பதிலடி கொடுக்க வேண்டாமா?


நேற்றைய சம்பவத்துக்குப் பிறகு அவள் அடங்கியிருப்பாள் என்று எண்ணியது எவ்வளவு பெரிய பிணக்கு. ஆழினியைப் போல பணத்திமிர் பிடித்தவர்கள் அவ்வளவு எளிதில் மாறமாட்டார்கள்.


சே! வெறுப்போடு நினைத்துக்கொண்டவன் அவளை எப்படியெல்லாம் பழி தீர்க்கலாமென யோசித்தவாறே காரில் பயணித்தான். திருமணம் அதற்கான உரிமத்தை வழங்கும் என்பது அவனது எண்ணம்.


அன்று நான் துடித்தது போல என்னுடன் வாழும் ஒவ்வொரு நாளும் உன்னைத் துடிக்க வைப்பேனடி பெண்ணே என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டவன் காயம்பட்ட சிங்கமாய் அவளை வேட்டையாட ஆயத்தமானான்.


________


அடுத்த பதிவு நாளை


Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8