அத்தியாயம் 6

 

அத்தியாயம் 6


மருத்துவமனையில் இமயவரம்பனை அனுமதித்த புகழ்வேந்தனின் ஆட்கள் அவனை அங்கிருந்து கண்காணித்துக்கொண்டனர். அவனுக்கு நினைவு திரும்பியதும் தனக்கு தெரிவிக்குமாறு கட்டளை போட்டிருந்தான் புகழ்வேந்தன்.

சரியாக ஐந்து மணி நேரங்கள் கழித்து அவனுக்குச் சுயநினைவு வரவும் உடனடியாக புகழ்வேந்தனுக்குத் தகவல் பகிரப்பட புயல்வேகத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் இமயவரம்பனிடம் ஏன் ஆழினியைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றாய் என வினவினான்.

இமயவரம்பன் வாயைத் திறப்பேனா என சாதிக்கவும் அருகில் கிடந்த ட்ரேயில் இருந்து சர்ஜிக்கல் நைஃபை எடுத்து அவன் கழுத்தில் வைத்தான் புகழ்வேந்தன்.

கழுத்து நரம்புகள் புடைக்க “ஏன் ஆழினிய ஹோட்டலுக்கு வர சொன்ன? உண்மைய சொல்றியா? உன் கழுத்தை ஒரே சீவா சீவிட்டுப் போகவா?” என்று கர்ஜிக்க, அவனோ “வேண்டாம். நான் சொல்றேன் நான் சொல்றேன்” என அலறினான்.

அதற்குள் உள்ளே வந்த நர்ஸ் “யார் சார்  நீங்க? பேசண்டை ஏன் டிஸ்டர்ப் பண்றிங்க?” என்க, புகழ்வேந்தனோ சர்ஜிக்கல் நைஃபை அவரை நோக்கி காட்டி “அரைமணிநேரம் எங்களை டிஸ்டர்ப் செய்யாம வெளிய போங்க சிஸ்டர். இல்லனா இவன் நிலமை உங்களுக்கு வரலாம்” என்க, அவரோ “ஹாஸ்பிட்டல்ல வந்து ரவுடித்தனம் பண்றிங்களா?” என சீற, புகழ்வேந்தன் தனது ஆட்களுக்கு கண் காட்டினான்.

உடனே அவரை வெளியே இழுத்துச் சென்றார்கள் அவர்கள்.

புகழ்வேந்தனின் மிரட்டலில் பயந்து போயிருந்த இமயவரம்பனோ “என்னை ஒன்னும் செஞ்சிடாதிங்க. ஆழினியோட அப்பா வைதீஸ்வரன் தான் இப்படி செய்ய சொன்னார்” என்றான் நடுங்கியவாறு.

அவன் சொன்ன செய்தியில் புகழ்வேந்தனின் மூளை கொஞ்சம் நிதானித்தது. ஒருவேளை இவன் பொய் சொல்கிறானோ என்று சந்தேகப்பட்டவன் சர்ஜிக்கல் நைஃபை அவனது கழுத்தில் இறுக்கினான்.

“பொய் சொன்னா ஒரே ஒரு அறுப்பு. அப்பறம் டேரக்ட் டிக்கெட் டு எமலோகம். எப்படி வசதி?” என்று கேட்டான் ஏளனமாக.

இமயவரம்பனோ பயத்தின் உச்சத்தில் இருந்தான்.

“உண்மைய தான் சொல்றேன். வைதீஸ்வரன் அங்கிள் தான் இதை செய்ய சொன்னார்” என்றான் அச்சத்தோடு.

புகழ்வேந்தனோ “என்ன காரணம்?” என்க, அவனோ “அவங்க கம்பெனி மீண்டுருச்சுனா, அதுவும் அவங்க சொத்து முழுக்கவும் ஆழினியோட கல்யாணத்துக்கு அப்பறம் அவளோட புருசனுக்குப் போயிடும்னு மீனாட்சி ஆன்ட்டியோட உயில் எழுதி வச்சிருக்காங்க. அவங்க கம்பெனி உங்க கைக்கு வரக்கூடாதுனு ஆழினியை என்னை தனியா சந்திக்க சொல்லி கட்டாயப்படுத்துனார் அங்கிள். தனிமைல அவ கிட்ட உருக்கமா பேசி ரகசிய கல்யாணம் செஞ்சுக்க சொன்னார். அப்படி செஞ்சு உங்க முகத்துல கரியை பூச ஆசைப்பட்டு இந்த திட்டத்தை போட்டது வைதீஸ்வரன் அங்கிளும் தமயந்தி ஆன்ட்டியும்” என்றான்.

“இதுல அவங்களுக்கு என்னடா லாபம்?”

“என்னை கல்யாணம் செஞ்சா மீனாட்சி குரூப் கம்பெனி அவங்க கட்டுப்பாட்டை விட்டு போகாதுனு அங்கிள் சொன்னார்”

புகழ்வேந்தன் சர்ஜிக்கல் நைஃபை ட்ரேயில் வீசினான். என்ன ஒரு திருட்டு புத்தி இந்த வைதீஸ்வரனுக்கு. எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் என்னுடன் நிச்சயம் செய்த பெண்ணை இவனிடம் அனுப்புவார். சொத்துக்காக மகளை வேற்று ஆணின் தனியறைக்கு அனுப்பும் இவரெல்லாம் என்ன தந்தை!

காறி துப்ப தோன்றியது அவனுக்கு. வைதீஸ்வரன் தமயந்தியிடம் ஏதோ தப்பு உள்ளது. அதை கண்டுபிடிக்கவேண்டும். யார் கண்டார்கள், அந்த தப்பு கூட ஆழினியை பழிவாங்க அவனுக்கு உதவியாக இருக்கக்கூடுமே!

“வரேன் மாவய்யா. உங்க தில்லாலங்கடித்தனத்தை வச்சே உங்க பொண்ணுக்கு செக் வைக்கிறென்” என மனதுக்குள் கறுவியவன் “அந்த உயில் விவரத்தை யார்ட்ட கேட்கலாம்?” என்று இமயவரம்பனிடம் கேட்க, அவனோ “அவங்க குடும்ப வக்கீல் வேணுகோபால்ட்ட கேக்கலாம். எனக்கு தெரிஞ்ச எல்லாம் சொல்லிட்டேன். ப்ளீஸ் என்னை விட்டுருங்க” என்று மன்றாடினான்.

புகழ்வேந்தனின் இதழ்க்கடையில் ஏளன முறுவல்.

“இனி ஆழினிங்கிற பெயரை கூட நீ உச்சரிக்க கூடாது” என்று மிரட்டிவிட்டு ரூமிலிருந்து வெளியே வந்தான்.

அங்கே நர்ஸ் மிரட்சியோடு நிற்க அவரை விடும்படி தனது ஆட்களுக்குக் கட்டளை போட்டவன் “இவனை கண்காணிக்கிறதை நிறுத்த வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

பர்வதம்மும் குமுதினியும் திருமண வேலைகளில் பிசியாகிவிட, புகழ்வேந்தனோ செங்குட்டுவனை வைத்து ஆழினியின் குடும்ப வக்கீல் வேணுகோபாலை பற்றி விசாரித்தான்.

வைதீஸ்வரன் தமயந்தி இருவரும் தாங்கள் போட்ட திட்டம் தவிடுபொடியாகிவிட்டதே என்ற எரிச்சலோடு திருமண வேலகளை கவனித்தனர்.

இதற்கிடையே ஒரு நாள் வேணுகோபாலை சந்தித்தான் புகழ்வேந்தன்.

ஆழினியை மணக்கப்போகிறவன்  என்ற தகவல் முன்பே அவருக்குக் கிடைத்திருந்தது. எனவே அவனை இன்முகத்துடன் வரவேற்றார் அவர்.

“ஆழினிக்கு உங்களை மாதிரி நல்ல கணவன் அமையப்போறதை நெனைச்சா சந்தோசமா இருக்கு புகழ்வேந்தன். உங்க கல்யாணம் முடிந்த கையோட சொத்து கம்பெனி சம்பந்தப்பட்ட டாக்குமெண்டை உங்கவசம் ஒப்படைக்கலாம்னு காத்திருந்தேன். நீங்களே இங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்”

“எனக்கு வைதீஸ்வரன் தமயந்தியம்மா மேல சில சந்தேகங்கள் இருக்கு. எதுக்கு மீனாட்சியம்மா சொத்தை அவங்க பொண்ணு மேல எழுதாம அவ கணவருக்கு சேரனும்னு எழுதி வச்சாங்க? உங்களால விளக்கம் சொல்ல முடியுமா சார்?”

எடுத்ததும் மாமனார் மீது சந்தேகம் என்றவனைத் திகைப்பாய் பார்த்தவர் சில கருப்பான உண்மைகளை அவனிடம் மறைக்காமல் கூறினார் வேணுகோபால். அதை கேட்ட புகழ்வேந்தனின் முகத்தில் உணர்ச்சிக்கொந்தளிப்பு.

“ஆழினிக்கு அவ அப்பா மேல் பாசம் அதிகம். மீனாட்சியம்மாக்கு அது தெரியும். அதனால தான் அவளை கல்யாணம் செஞ்சுக்க போற புருசன் பெயரில சொத்து எழுதி வச்சாங்க. உங்க கல்யாணம் முடிஞ்சு அதை ரெஜிஸ்டர் செஞ்சதும் இந்த சொத்து ரெஜிஸ்ட்ரேசன் முடிஞ்சிடும்” என்று முடித்தார் அவர்.

புகழ்வேந்தனின் மனம் கூட்டிக் கழித்து கணக்கு போட்டுப் பார்த்தது. மீனாட்சியம்மாவின் வரலாறும், அவர் சொத்தை தனக்கு எழுதி வைத்ததும் ஒருவகையில் அவனது திட்டத்திற்கு பலம் தான் என்று எண்ணியவன் வேணுகோபாலனிடம் விடைபெற்றான்.

தனது பங்களாவுக்கு வந்தவன் அங்கே அன்னையும் தங்கையும் குதூகலமாக கல்யாண வேலைகளில் ஆழ்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவனுக்காக அந்த வீட்டில் தனியாய் இருக்கும் பகுதிக்குச் சென்றான். அது கிட்டத்தட்ட தனிவீடு போல.

அவனுக்கென பிரத்தியேக ஜிம், உணவு சமைக்கும் வசதி, மினி பார், நீச்சல்குளமென அனைத்து வசதிகளும் இருந்தன அங்கு. தங்கையும் தாயாரும் இருக்கும் வீட்டில் குடிக்க கூடாதென்ற எண்ணத்தால் தனியே தனக்கென ஒரு அறையை கட்டியிருந்தான். கிட்டத்தட்ட தனியாய் மினி பங்களா போல இருக்கும் அந்த இடத்தை குமுதினி ‘வேந்தனின் அரண்மனை’ என்பாள் கேலியாக.

அங்கே வந்து சேர்ந்தவனின் மனமெங்கும் வேணுகோபாலனின் வார்த்தைகளே ஒலித்தன.

திருமணம் மட்டும் முடிந்தால் ஆழினிக்குச் சொந்தமான அனைத்தும் அவனுடைமைகள். அவளையும் சேர்த்து. இந்த பணமும் செல்வாக்கும் இருக்கும் திமிரில் தானே அன்று அவ்வளவு பெரிய அநியாயத்தைச் செய்தாள். அதே பணத்தை வைத்து அவளுக்கு மரண அடி கொடுக்கிறேன் என சூளுரைத்தவன் ஆழினியின் நினைவால் உண்டான கோபத்தைத் தீர்க்க நீச்சல்குளத்தில் நீந்த ஆரம்பித்தான்.

ஆழினியின் வீட்டில் அவள் உயிரற்ற ஓவியமாய் நடமாடினாள். திருமணத்துக்கு நகை வாங்க, புடவை எடுக்கவென தமயந்தி காட்டிய போலி உற்சாகம் கூட அவளுக்கு இல்லை.

புகழ்வேந்தனின் காதலை மறுதலித்த ஒரே காரணத்துக்காக அவள் தனது பெண்மையை அவனிடம் இழந்துவிட்டாள். இன்னும் சில நாட்களில் தன்னுடைய வாழ்க்கையையும் இழக்கப்போகிறாள்.

அவனை மணமுடிக்க மறுத்தால் தூங்கில் தொங்குவேன் என இரண்டு நாட்களாக மிரட்டும் தந்தை அவளுக்குப் புதியவராக தெரிந்தார்.

இமயவரம்பனிடம் உண்மையைத் தெரிந்து கொண்டதும் புகழ்வேந்தன் அவரை அழைத்து மிரட்டியதை வைதீஸ்வரனால் மறக்க முடியுமா! ஆழினினியை திருமணம் செய்துவைக்காவிட்டால் வைதீஸ்வரனையும் தமயந்தியையும் கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன் என்று கொலைமிரட்டல் அல்லவா விடுத்திருந்தான்.

உயிர்பயமும் பணத்தாசையும் கொண்ட மனிதருக்கு மகளைப் பற்றிய கவலை மறைந்து போனது. அவனை மணக்கமாட்டேன் என்றவளிடம் தற்கொலை செய்துவிடுவேன் என்று பயம் காட்டி வைத்திருக்கிறார் மனிதர்.

இதோ அதோவென திருமண நாளும் வந்துவிட நல்ல சுப முகூர்த்தத்தில் ஆழினியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் புகழ்வேந்தன்.

கையாலாகாத்தனத்தோடு அவன் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கிக்கொண்டவளுக்கோ மணமேடை மயானமேடையாக தோன்றியது.

திருமண மண்டபத்திற்கே திருமண பதிவாளர்களை வரவழைத்திருந்தான் புகழ்வேந்தன். தாலி கட்டியதும் கையொப்பமிட்டு திருமண பதிவு சான்றிதழை வாங்கிக்கொண்டவன் வேணுகோபாலனிடம் அதை நீட்டியதும் வைதீஸ்வரனுக்கு மாரடப்பு வந்துவிட்டது.

“ஏன் மருமகனே அவர் கிட்ட மேரேஜ் சர்டிபிகேட்டை கொடுத்திங்க?” என்றவரிடம், “இதை கொடுத்தா தானே சொத்தும் கம்பெனியும் என் வசம் வரும்” என்றான் புகழ்வேந்தன்.

வேணுகோபால் சொத்து கம்பெனி தொடர்பான டாக்குமெண்டை அவனிடம் ஒப்படைத்தார்.

தமயந்தி ஐயோ ஐயோவென வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டார். ஆழினியோ இவனுக்கு ஏன் எங்கள் சொத்து போகிறதென புரியாமல் நின்றாள்.

புகழ்வேந்தனோ வைதீஸ்வர்ன் முன்னே அந்த டாக்குமெண்ட்களை விசிறி காட்டியவன் “இனி மீனாட்சி குரூப் ஆப் கம்பெனி என்னுடையது. ஆழினி மாதிரி தேவதையை எனக்காக பெற்று கொடுத்ததற்கு கிப்டா நீங்க அந்த கம்பெனில ஷேர்ஹோல்டரா இருக்கலாம். வருமானம் வரும். ஆனா” என்று நிறுத்தினான்.

“ஆனா என்ன மாப்ளை? என்னனு சொல்லுங்க” என பதறினார் தமயந்தி.

“இதோட உங்களுக்கும் ஆழினிக்குமான தொடர்பு முடிஞ்சுது. இனிமே அவ திருமதி புகழ்வேந்தன். எந்த நிலமையிலயும் அவளை சந்திக்க நீங்க முயற்சி பண்ணக்கூடாது. அப்படி செஞ்சிங்கனா…” மீண்டும் அவன் நிறுத்த வைதீஸ்வரனுக்கு இரத்த அழுத்தம் உயர்ந்தது.

“அப்படி செஞ்சிங்கனா வருமானம் போய் சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வரும். இந்த நிபந்தனை இப்ப இருந்தே அமுலுக்கு வரதால நீங்க ரெண்டு பேரும் இந்த நிமிசமே கல்யாணம் மண்டபத்தை விட்டு வெளிய போங்க” என கர்ஜித்தான் புகழ்வேந்தன்.

ஆழினியின் கண்களில் ஆறாய் கண்ணீர் பெருகியது.

“அப்பாஆஆ! சித்திஈஈஈ”

அவர்கள் பின்னே ஓடப்போனவளின் கையை இறுக்கமாக பிடித்து நிறுத்தினான்.

“இனிமே நோ அப்பா நோ சித்தி., நீ வேந்தனோட மனைவி. அது மட்டும் தான் உனக்கு நினைவு இருக்கனும். புரிந்ததா?”

பர்வதம் ஓடோடி வந்து மகனிடம் இது நியாயமில்லை என்று வாதிட்டார்.

“நமக்கு இவளால நடந்த அநியாயத்துக்கு முன்னே இது ஒன்னும் பெரிசில்லைம்மா. இனிமே இவளுக்கும் அவங்களுக்கும் எந்த உறவும் கெடையாது. இதை நீங்களும் நியாபகம் வைச்சுக்கோங்க” என்று அன்னைக்கும் கட்டளை போட்டான் அவன்.

ஆழினி கழுத்தில் தாலியேறிய நேரத்தில் தந்தையின் உறவு போனதை எண்ணி அங்கேயே மடிந்து அமர்ந்து அழுது துடித்தாள்.

இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது. தந்தைக்கும் தனக்குமான உறவு இனி அவ்வளவு தான் என்றால் தான் அனாதை ஆகிவிட்டோமா?

அழுதழுது ஓய்ந்தவளின் முன்னே வந்து நின்றான் புகழ்வேந்தன்.

“அழுது நாடகம் போட்டது போதும் ஆழினி. கெளம்பு” என்றான்.

ஆழினி அழுகையில் சிவந்த விழிகளோடு அவனை பார்த்தாள். மனமெங்கும் வேதனை மண்டியிருந்தது. இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் வருமே ஒரு தைரியம், அது ஆழினிக்கு வந்தது.

“வரமுடியாது” என்றாள் அவள்.

புகழ்வேந்தனின் கை அவளது மறுப்பில் இறுகியது. வேஷ்டியை மடித்து கட்டியவன் மடிந்து அமர்ந்திருந்தவளைத் தனது கைகளில் ஏந்திக்கொண்டான்.

“என்னை விடு” என்று திமிறியவளிடம் “விடுறேன், நம்ம பங்களாக்குப் போன பிறகு” என்று உல்லாசக்குரலில் சொல்லிவிட்டு அவளைத் தூக்கிக்கொண்டு திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினான் புகழ்வேந்தன்.

பர்வதமும் குமுனிதியும் அவனைத் தொடர்ந்து சென்றனர். அவர்களை செங்குட்டுவனோடு காரில் செல்லுமாறு கூறிவிட்டு தனது காரில் ஆழினியை ஏற்றினான் புகழ்வேந்தன்.

அவனது முகத்தைப் பார்க்க பிடிக்காமல் வெளியே பார்த்து கண்ணீர் விட ஆரம்பித்தாள் ஆழினி.

அவளது மார்பில் கிடந்த தாலியை கர்வத்துடன் பார்த்தவாறு காரை ஓட்டிய புகழ்வேந்தன் “இன்னிக்கு அழுது தீர்த்துடாதே ஹனி. இனி வாழ்க்கை முழுக்க அழுகனுமே. அதுக்கு கண்ணீர் மிச்சம் வைச்சுக்க” என்றான் புகழ்வேந்தன்.

அவனை வெறுப்போடு பார்த்தவள் பேசப் பிடிக்காமல் வெளியே பார்க்க அவளது கன்னத்தை இழுத்து பிடித்து முத்தமிட்டவன் நினைத்தது வரிசையாக நடந்த சந்தோசத்திலும் பழிவெறியிலும் காரை பங்களாவுக்கு ஓட்டினான்.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8