அத்தியாயம் 9

 


அத்தியாயம் 9


புகழ்வேந்தனின் திருமண வாழ்க்கையின் முதல் நாள் என்பதால் தடபுடலாக காலையுணவைச் சமைக்க சொல்லியிருந்தார் பர்வதம். இட்லி தோசை பொங்கல் என்று ஒரு பக்கம் கமகமக்க, மறுபக்கம் பூரிக்கிழங்கு, சப்பாத்தி சென்னா மசாலா என மணம் கமழ்ந்தது.


டைனிங் டேபிளுக்கு வந்தவனிடம் ஆசையாக மருமகளை பற்றி கேட்டார் பர்வதம்.


“அவள் லேட்டா வருவாம்மா” என்று அவன் சொல்லும்போதே காலர் வைத்த அனார்கலி சுடிதாரோடு வந்தாள் ஆழினி.


நாகரிக உடை அணிந்தாலும் மறக்காமல் நெற்றியில் குங்கும திலகத்துடன் வந்த மருமகளை பார்த்ததும் பர்வதம் ஓடிச்சென்று அழைத்து வந்து மகனின் அருகில் அமர வைத்தார்.


ஆழினி குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள். மாமியார் பரிமாறிய சாப்பாட்டை அமைதியாகச் சாப்பிட்டாள்.


“இன்னும் கொஞ்சம் சட்டினி வைத்துக்கம்மா. வெறும் பொங்கல் சாப்பிட்டால் தொண்டையில் விக்கிக்கும்” என்று அன்பாக பரிமாறிய மாமியாரின் பாசத்தில் கண்ணிமைகள் நனைந்தது.


புகழ்வேந்தனோ அவளுக்கு நடந்த உபசரிப்பை விரும்பவில்லை. அதை குழைக்கும்விதமாக நக்கல் பேச்சை ஆரம்பித்தான்.


“ஓசி கல்யாணம், ஓசி சாப்பாடு. கலக்கிற ஆழினி”


விளையாட்டாக மனைவியிடம் பேசுவது போல அவனது பேச்சு தொனித்தாலும் அதில் இருந்த குத்தலை அறிந்த ஆழினி தவிப்புக்கு ஆளானாள்.


பர்வதம் மகனின் தோளில் அடிபோட்டார்.


“போதும்டா. மருமகள் பயந்துட போறா” என்றவர் “உனக்காக ஸ்பெஷலா பைனாப்பிள் கேசரி செய்ய சொன்னேன் ஆழிம்மா. உனக்கு அது ரொம்ப பிடிக்கும் தானே” என்றபடி கிண்ணத்தில் கேசரியை நிரப்பி கொடுத்தார்.


ஆழின் ஆவலுடன் சுவைக்க புகழ்வேந்தணோ “இவளுக்கு பைனாப்பில் கேசரி பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்மா?” என்று ஐயமாய் கேட்க, பர்வதமோ பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.


ஆழினி குனிந்த தலையை நிமிர்த்தியவள் “நான் அத்தட்ட நேற்று சொன்னேன் வேந்தன்” என்றதும் நிம்மதியுற்றார். ஆனால் புகழ்வேந்தன் நம்ப வேண்டுமே!


“உங்களுக்கு ஆழினியை முன்பே தெரியுமாம்மா?”


“என்ன… இ… இல்ல” தடுமாறிய பர்வதத்தை இப்போதும் அவரது மகன் நம்பவில்லை.


“நீங்க யாரையும் நம்ப மாட்டீங்களா?” என்று ஆழினி சொல்லவும் அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் “கல்யாணமான மாப்ளைக்கு விருந்து வைக்கிற சம்பிரதாயம் உன் அப்பாக்குத் தெரியாதா ஆழினி?” என்று கேட்க, ஆழினி மாமியாரைப் பார்த்தாள்.


“செங்குட்டுவனை அனுப்பி விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கனு சொல்லியாச்சு புகழ். சம்மந்தியம்மா முறைப்பைட் கால் செஞ்சு அழைப்பாங்க” என்றார் பர்வதம்.


புகழ்வேந்தன் ஏளனமாக சிரித்துவிட்டு “ஓ! கூப்பிட்டால் சரி” என்று சொல்லி அலுவலகம் கிளம்பினான்.


அலுவலகத்தில் புதுமாப்பிள்ளையான முதலாளி தேனிலவு செல்லாமல் அங்கு வந்ததை பற்றி குசுகுசுவென பேச்சு வர அதை கண்டுகொள்ளாது தனது கேபினுக்குள் நுழைந்தான்.


அங்கே செங்குட்டுவன் அவனுக்காக காத்திருந்தான்.


“குட்மார்னீங் பாஸ்” என்றவனிடம் முந்தைய தினம் வைதீஸ்வரனின் வீட்டுக்கு வந்த நபரை பற்றி விவரம் தெரிந்ததா என கேட்டான் புகழ்வேந்தன்.


“விசாரிச்சிட்டேன் பாஸ். அந்த ஆள் போலீஸ் ஆபிசர். நுங்கம்பாக்கம் ஸ்டேசன்ல ஏ.சி. நான்கு வருடத்துக்கு முன்னால் திருவான்மியூர்ல இன்ஸ்பெக்டரா இருந்தார்னு சொன்னாங்க”


திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் என்றதும் புகழ்வேந்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. “அவன் போட்டோ இருக்கா?” என்று செங்குட்டுவனிடம் கேட்டு வாங்கி பார்த்தான்.


பார்த்ததும் அவன் விழிகள் தீக்கோலங்களாகின. அந்த இன்ஸ்பெக்டர் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆழினி கொடுத்த திருட்டு புகாரில் புகழ்வேந்தனை கைது செய்து லாக்கப்பில் தள்ளி துன்புறுத்தியவனே தான்.


“திருட்டுநாயே, உண்மைய சொல்டா. பணக்காரபொண்ணுனு லவ் பண்ணுறது, அவ மாட்டேன்னு சொன்னதும் வீட்டுல திருடுறது. வாயைத் தொறந்து உண்மையை சொல்லு” என்று சொல்லி சொல்லி லத்தி உடையும் வரை அடித்தவனை அவ்வளவு எளிதில் புகழ்வேந்தன் எப்படி மறப்பான்.


கை நரம்புகள் புடைக்க கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டவன் “இவன் எதுக்காக வைதீஸ்வரனை பார்த்தான்? நம்ம ஏற்பாடு செஞ்ச ஆளு என்ன சொன்னான்?”” என்று கேட்டான்.


புகழ்வேந்தனி ஆணைப்படி செங்குட்டுவன் வைதீஸ்வரனின் பங்களாவில் தங்களுக்கு உளவு சொல்வதற்காக வேலையாள் போர்வையில் ஒருவனை அனுப்பியிருந்தான். அந்த ஆள் சொன்ன தகவல்படி ஏ.சி அங்கே வந்தது பணம் வாங்க.


“எதுக்குப் பணம் வாங்கினானாம்?”


“திருட்டுநகை பற்றிய உண்மைய உங்க மருமகனிடம் சொல்லவானு மிரட்டி பணம் வாங்கியதா நம்ம ஆள் சொன்னான் பாஸ்”


“என்ன  உண்மை?”


“மீனாட்சி அம்மாவுடய நகை திருடு போகலை. ஆனால் திருடு போனதா போலீஸ்ல பொய் புகார் கொடுத்திருக்காங்க. இப்போ நீங்களே அவருக்கு மருமகன் ஆனதும் உங்கட்ட உண்மையை சொல்லிடுவேன்னு மிரட்டி பணம் வாங்கியிருக்கிறான்”


அப்படி என்றால் மீனாட்சியின் நகை களவு போகவேயில்லை. தன் மீது பொய் புகார் அளித்திருக்கிறார்கள் வைதீஸ்வரனின் குடும்பம். இதுவும் ஆழினியின் வேலையாக இருக்குமோ?


சந்தேகம் என்ன சந்தேகம். அவளாக தான் இருப்பாள். பணத்திமிரில் இதை விட கேவலமான காரியத்தை செய்தவளுக்கு பொய் புகாரளிப்பது எல்லாம் ஜுஜூபி.


தனது சந்தேகமே உண்மையென நம்பி ஆழினியின் மீதான வெறுப்புக்கு இன்னொரு காரணத்தைத் தேடிக்கொண்டான் புகழ்வேந்தன்.


அவனால் வெறுக்கப்படும் ஆழினியோ தமயந்தியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.


“மதியம் உனக்கும் மாப்ளைக்கும் நம் வீட்டில விருந்து ஆழிம்மா. உன் அப்பா மாப்ளைட்ட பேசிடுவார். நீ அங்க சந்தோசமா இருக்கிறல்ல கண்ணூ?”


தமயந்தி அன்பாக கேட்டார்.


“நல்லா இருக்கிறேன் சித்தி. அத்த என்னை குமுதாவை மாதிரி அன்பா நடத்துறாங்க. குமுதா எனக்கு தங்கச்சி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறா”


“எல்லாரை பற்றியும் சொல்லிட்டு மருமகனை பற்றி ஒன்னுமே சொல்லமாட்றியே கண்ணு?”


ஆழினிக்குத் தொண்டை அடைத்தது. என்னை அடியோடு வெறுத்து உடல்தேவைக்கு மட்டும் என்னை உபயோகிக்கும் கணவன். அவனை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. சொன்னால் தேவையில்லாமல் சித்தியின் மனம் துன்புறும்.


“அவர் எல்லாரையும் விட என்னை அன்பா பார்த்துக்கிறார் சித்தி”


“வேந்தன் மாப்ளை வருங்காலத்தில் இவ்வளவு பெரிய பணக்காரரா மாறுவார்னு காலேஜ்ல தெரிந்திருந்தா அவர் காதலை ஏற்றிருப்பல்ல ஆழி?”


ஆழினி உடனே இல்லையென மறுத்தாள்.


“எனக்கு புகழ்வேந்தன் மேல அப்போவும் காதல் வந்திருக்காது சித்தி. பணத்திற்காக ஒருத்தனை காதலிக்கிறது ஆழினிக்கு அசிங்கம்” என்றாள்  பெண் நிமிர்வாக.


மறுமுனையில் தமயந்தியோ தலையிலடித்துக்கொண்டார். வேறு எதற்காக அந்த வெறும்பயலை காதலிப்பாளாம் இவள் என நொடித்துக்கொண்டவர் “அது உன் மனசு கண்ணு. அப்படியே என் மீனாட்சி அக்கா மாதிரி நீ” என்று வெளியே புகழ்ந்தார்.


அவளிடம் பேசிவிட்டு கணவரிடம் வந்து நின்றார்.


“ஆழினியை அவன் சந்தோசமா வைத்திருக்கிறானாம். பழசை எல்லாம் மறந்திட்டான் அவன். இனிமே நீங்க நிம்மதியா இருங்க மாமா”


வைதீஸ்வரனோ எரிச்சலானார்.


“அவன் எங்க மறந்தான்? கம்பெனி அதிகாரத்தைக் கைப்பற்றிட்டான். சொத்தையும் எழுதி வாங்கிட்டான். நீயும் நானும் ஆயுசுக்கு இதை அனுபவிக்கலாம். ஆனால் உரிமை கொண்டாட முடியாது. பணம் இருந்தும் பிச்சைக்காரன் நிலமைடி நமக்கு”


கணவர் டி போட்டதும் முகம் கறுத்தது தமயந்திக்கு.


“அவன் எதையும் மறக்கல தமயா. மறக்கவும் மாட்டான். அவன் நம்ம எல்லாரையும் பழி வாங்க திரும்பி வந்திருக்கான். அவன் வழில தடைக்கல்லா இருந்த இமயன் இப்போ எங்க இருக்கிறான் தெரியுமா?”


“எங்க?”


“ஹாஸ்பிட்டல்ல. உடைந்த எலும்பு சரியாக இன்னும் ஆறு மாதம் ஆகும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். அவனை இந்த நிலமைக்கு ஆளாக்கியவன் புகழ்வேந்தன்”


“ஏன்ங்க?”


“நான் இமயன்ட்ட ஆழினியை கவனிக்க சொல்லி அனுப்பியது தெரிந்து ஆள் வைச்சு அவனைத் தூக்கி சாகிற நிலைக்கு அடித்து துவம்சம் செய்திருக்கான். இப்ப சொல்லு, அவன் மாறிட்டானா? மாறலடி, கொஞ்சமும் மாறலை. அவனுக்கு மட்டும் நான்கு வருடத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் தெரிய வந்ததுனா நம்ம ரெண்டு பேரையும் நடுத்தெருவுக்கு அனுப்பிடுவான்”


“ஐயோ என்ன சொல்றீங்க?”


“பதறாதடி. அவன் எப்படி நம்மளை நம்ப மறுக்கிறானோ அதே போல ஆழினியையும் நம்பமாட்டான். அதனால பயப்படாதே”


“அப்படியா சொல்றீங்க? எனக்கு மனசு ஆறலைங்க மாமா. அவன் எல்லாமும் மறந்து ஆழினி மேல உள்ள மயக்கத்துல வந்திருப்பான்னு நெனைச்சேன். ஆழினியை வைத்தே அவன் பிடுங்கின சொத்தை அடைந்திடலாம்னு நான் போட்ட கணக்கு காந்தி கணக்கு தானா?”


“இப்படி புலம்புறதை விட்டு விருந்து சாப்பாடு தயாரானு பார். ஆழியும் அவனும் வந்துடுவாங்க” என்று தமயந்தியை விரட்டினார் வைதீஸ்வரன்.


அவர் சென்றதும் வைதீஸ்வரனின் குறுக்கு புத்தி  யோசிக்க ஆரம்பித்தது. எப்பாடுபட்டேனும் இந்த சொத்தையும் மீனாட்சி குரூப் நிறுவனத்தையும் புகழ்வேந்தனிடமிருந்து மீட்டாக வேண்டும்.


சாப்பாடு தயாரானதும் தமயந்தி புத்தாடை அணிகலன் என அணிந்து மகளையும் மருமகனையும் வரவேற்க தயாரானார்.


சிறிது நேரத்தில் ஆழினியோடு புகழ்வேந்தன் வரவும் போலி புன்னகையும் பொய் பாசமுமாக தமயந்தியோடு சேர்ந்து அவர்களை வரவேற்றவர் அடுத்து நிகழப்போகிற சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை.


காரணம் ஆழினியின் பார்வை வைதீஸ்வரனின் மீது படவில்லை. அது தமயந்தியிடம் தங்கியிருந்தது.


கணவனோடு ஜோடியாக நின்றவளுக்கு தமயந்தியின் தோற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தது.


சித்தியின் கழுத்தில் மின்னிய கெம்புக்கல் அட்டிகையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஆழினி.


அவளது அன்னை மீனாட்சிக்குச் சொந்தமான நகைகள் களவு போனதல்லவா! அதில் இந்த அட்டிகையும் உண்டு. அப்படி என்றால் களவு போன நகைகள் திரும்ப கிடைத்துவிட்டதா என்ற கேள்வியோடு சித்தியைப் பார்த்தாள்.


தமயந்திக்கு அவள் அட்டிகையைப் பார்த்துவிட்டாள் என்பது தெரிந்ததும் அசட்டுப்புன்னகை பூத்தார்.


“அம்மா நகை எல்லாம் கிடைத்திடுச்சா சித்தி? எப்போ கிடைத்தது?” என்க, தமயந்தியோ “நேற்று கிடைத்தது கண்ணு. நம்ம புகார் கொடுத்த ஸ்டேசன் ஏ.சி வீட்டுக்கு வந்து நகைகளை ஒப்படைத்தார் கண்ணு” என்றார்.


“என்ட்ட ஏன் சொல்லலை சித்தி?”


“நீ புகுந்த வீட்டில பொருந்தி வாழுற வரை உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு உன் அப்பா சொன்னாரு கண்ணு”


ஆழினியின் பார்வை அடுத்து தந்தையை வளைத்தது. அவரோ தடுமாறினார்.


வைதீஸ்வரன் தடுமாறியதும் புகழ்வேந்தனின் தொண்டை செருமல் சத்தம் கேட்டது. அது தன்னை கேலி செய்வதற்காக எழுந்த சத்தம் என புரிந்துகொண்ட ஆழினிக்கோ குற்றவுணர்ச்சியில் குரல் எழும்பவில்லை.


புகழ்வேந்தன் தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் கோப நெருப்பை வெளிக்காட்டாமல் “அந்த விவரத்தை சொல்ல தான் மாமா நம்ம விருந்துக்கு வரச் சொல்லியிருப்பார்னு நெனைக்கிறேன் ஆழி. உன் சித்தி கூட போய் உன் அம்மாவுடைய நகைகளை வாங்கிட்டு வா” என்று மனைவியிடம் கூற ஆழினியோ “அது எப்படி வேந்தன்?” என்று தடுமாற, புகழ்வேந்தனோ “உன்னை திருமணம் செஞ்சுக்க நான் வரதட்சணை வாங்கியதா நியாபகம் இல்லை ஹனி. இந்த நகை உனக்காக வரதட்சணையா இருக்கட்டுமே. என்ன மாமா, நான் சொன்னது சரி தானே?” என்று வைதீஸ்வரனின் கேட்டான்.


வைதீஸ்வரனுக்கு மாட்டிக்கொண்டோமே என்று இருந்தது. தமயந்திக்கோ கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கைவிட்டுப் போகிறதே என்ற வயிற்றெரிச்சலில் பேச்சு வரவில்லை.


“ஏன் நிற்கறிங்க அத்த? என் மனைவிக்கு உரிமையான நகை எல்லாம் எடுத்துட்டு வாங்க. நீயும் அவங்ககூட போ ஆழி. எந்த நகையும் மிஸ் ஆகிடக்கூடாது, அத்தை கழுத்தில போட்டியிருக்குற கம்புக்கெல் அட்டிகையையும் சேர்த்து” என்ற புகழ்வேந்தனின் கட்டளையிடும் குரலுக்குப் பணிந்து சித்தியோடு சென்றாள் ஆழினி.


அவர்கள் சென்றதும் வைதீஸ்வரனை அருவருப்பாக பார்த்தான் புகழ்வேந்தன்.


“சொந்த மகள்ட்ட ரெட்டைவேசம் போடுற அப்பன், பணத்திமிரால அடுத்தவங்க வாழ்க்கையை நாசம் செய்யுற மகள். இந்த கேவலமான காம்போ வேற எந்த குடும்பத்திலயும் இருக்காதுல்ல மாவய்யா” என்று வலதுபக்க புருவத்தை உயர்த்த, பயத்தில் வைதீஸ்வரனின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.


“ஏன் நகை திருடு போனதா போலீஸ்ல பொய் புகார் கொடுத்தீங்க வைதீஸ்வரன்?”


“அது… நான்” வைதீஸ்வரன் தடுமாற, புகழ்வேந்தனோ “உண்மையை சொன்னால் வீடாவது மிஞ்சும். இல்லைனா தெருக்கோடி தான்” என்றான்.


உடனே கைகூப்பியவர் “ஆழினிக்கு அந்த நகையைக் கொடுப்பதில என் மனைவி தமயந்திக்கு உடன்பாடு இல்லை. அதனால நகை திருடு போனதா நாடகம் போட்டோம். அதுக்கு முந்தைய தினம் நீங்க வீட்டுக்கு வந்ததால உங்க மேல சந்தேகப்பட்டா ஆழினி. அவ தான் போலீஸ்ல புகார் கொடுத்தா. நாங்க அதை எதிர்பார்க்கலை. இன்ஸ்பெக்டரை பேசி சரிகட்டுனோம்” என்றார்.


புகழ்வேந்தன் பெரியவர் என்றும் பாராமல் அவரது கழுத்தில் கை வைத்தவன் படிகளில் மனைவி இறங்கி வருவது பக்கவாட்டு பார்வையில் தெரியவும் விலக்கிக்கொண்டான்.


மீனாட்சிக்குச் சொந்தமான நகைகள் ஒரு பெட்டி நிறைய இருந்தன. வைரம் வைடூரியம் மரகதம் பச்சைக்கல் என்று அனைத்து விலையுயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டு பெட்டியைத் திறந்ததும் மின்னின நகைகள்.


ஆழினியிடம் பெட்டியைக் கொடுத்த தமயந்தி மருமகனின் பார்வையை உணர்ந்து கெம்புக்கல் அட்டிகையைக் கழற்றி அதையும் கொடுத்தார்.


புகழ்வேந்தன் மனைவியிடம் “எல்லா நகையும் சரியா இருக்குதா ஹனி? மிஸ் ஆச்சுனா போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்” என்று சொல்லவும் வைதீஸ்வரனும் தமயந்தியும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல விழித்தனர்.


ஆழினியோ திகைக்க, புகழ்வேந்தனோ “இதெல்லாம் ஒரிஜினலாலு சோதனை செய்யனும் ஆழினி. ஈவினிங் தங்க ஆசாரி ஒருவரை செங்குட்டுவன் அழைச்சிட்டு வருவான். குண்டுமணி தங்கம் கூட போலினு வந்துச்சுனா, உன் அப்பாவும் சித்தியும் களி திங்கனும். நியாபகம் வைத்துக்க” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.


“என்ன மாப்ளை சாப்டாம போறீங்க?” என்று கேட்ட வைதீஸ்வரனிடம், “உங்க வீட்டுல உட்கார்ந்து விருந்து சாப்ட நான் ஒன்னும் மானம் ஈனம் இல்லாதவன் இல்லை. கல்யாண மண்டபத்துல உங்களுக்கும் இவளுக்கும் சம்மந்தம் இல்லைனு சொன்னவன் விருந்துக்கு வர ஆசைப்படுறதா கேள்விப்பட்டதும் நீங்க சுதாரிச்சிருக்கணும் மாவய்யா. நான் வந்தது என் மனைவிக்கு உரிமையான நகைகளை வாங்குறதுக்காக. வாங்கிட்டேன், இப்போ கெளம்புறேன். இன்னும் எதையும் ஒளிச்சு வைத்திருக்கிறதா தகவல் கெடைச்சா மறுபடி வருவேன், ஆனா தனியா இல்ல. போலீஸோட” என்று சொல்லிவிட்டு ஆழினியின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அங்கிருந்து இழுத்துச் சென்றான் புகழ்வேந்தன்.


நகை போன வயிற்றெரிச்சலோடு வைதீஸ்வரனும் தமயந்தியும் நின்றார்கள்.


காரில் ஏறியதும் பின்னிருக்கையில் நகைப்பெட்டியை வைத்தாள் ஆழினி. அவளது முகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் கிடைத்த சந்தோசம் கொஞ்சமும் இல்லை.


காரை ஸ்டார் செய்தபடி “சாதாரண  பொண்ணுங்களே நகையைப் பார்த்தால் பூரிச்சு போயிடுவாங்க. நீ தலை முதல் கால் வரை பணத்திமிர் பிடிச்சவ. இவ்ளோ காஸ்ட்லியான நகை உனக்குச் சொந்தமானதும் தீபாவளியே கொண்டாடுவனு எதிர்பார்த்தானே ஆழினிதேவி” என்றான் புகழ்வேந்தன்.


ஆழினியோ வெளியே வெறித்தவாறு “வாழ்க்கையே இங்க கந்தல்கோலமா ஆகிடுச்சு. இதுல நகைய மட்டும் வைத்து பூரிச்சு என்னாகப்போகுது? என் அம்மாவோட உடைமை எனக்குச் சொந்தமான சந்தோசம் மட்டும் எனக்குப் போதும். இனி என் வாழ்நாளில் அந்த நகைகள் எதையும் நான் அணியப்போறதில்லை” என்றாள்.


புகழ்வேந்தனோ “ஏனாம்?” என்க, ஆழினியோ “தெரிந்தோ தெரியாமலோ இந்த நகைக்காக நீங்க அவமானப்பட நான் காரணமாயிட்டேன். அந்த குற்றவுணர்ச்சி ஒவ்வொரு முறை இந்த நகையை பார்க்கிற போதும் எனக்கு வரும் வேந்தன். ஒரு மனுசனை கொல்ல விசமெல்லாம் தேவையில்லை, அவனுடைய குற்றவுணர்ச்சியை கிளறுனாலே போதும். இப்போதைக்கு நான் சாக விரும்பலை” என்றாள்.


இப்போதைக்கு என்றால்? புகழ்வேந்தன் மனைவியைப் பார்த்தான். அவளோ அவனைப் பார்க்க வேண்டுமே. வலுக்கட்டாயமாக அவளது மோவாயைப் பற்றி திருப்பியவன்


“இப்போதைக்கு சாக விரும்பலைனா என்ன அர்த்தம்?” என்று கர்ஜிக்க, அவளோ “உங்க கூட வாழுற வாழ்க்கை என்னிக்கு முழு நரகமா மாறுதோ அப்போ நான் சாவை பற்றி முடிவெடுப்பேன். அப்படி நான் இறந்துட்டேன்னா, எனக்கு கோடிப்புடவை சாற்றுறப்போ என் அம்மா நகைகளையும் போட்டு விடுங்க வேந்தன்” என்றாள் உணர்வின்றி.


புகழ்வேந்தனின் கார் கட்டுப்பாட்டை இழக்க எப்படியோ சமாளித்து ஓரங்கட்டினான் அவன்.


ஆழினியோ எதையும் பேசாதவளைப்போல மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். புகழ்வேந்தனால் அவளுடைய வார்த்தைகளை சீரணிக்க முடியவில்லை.


என்னிடமே சாவை பற்றி பேசுகிறாளே என்ற கோபம். இத்துணை சீக்கிரம் தன்னுடன் வாழும் வாழ்க்கை அவளுக்கு கஷ்டமாகிறதா என்ற திகைப்பு.


“நான் ஆழினி. அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டேன். என்னை வெறுத்து பழிவாங்க நெனைக்கிற உங்களை மறுபடியும் காதலிக்க வைப்பேன். அந்த முயற்சில தோற்று போறப்போ கட்டாயம் நான் மரணத்தை நாடுவேன். முயற்சில தோற்று செத்துப்போறது தான் வீரம். நான் கோழையா சாக விரும்பலை வேந்தன்”


கம்பீரமாக உரைத்தாள் ஆழினி. புகழ்வேந்தனின் புருவங்கள் திகைப்பில் வளைந்தன.


“பார்க்கலாம் ஆழினிதேவி. அவ்வளவு சுலபத்தில் நீ செய்த அநியாயத்தை நான் மறந்துடமாட்டேன். உன் முயற்சி வாழ்நாள் முழுக்க தொடரட்டும்”


காரைக் கிளப்பியவன் வீட்டுக்கு வந்த போது அங்கே புதிதாக ஒரு நபர் வந்திருந்தார். அந்நபர் புகழ்வேந்தனை ஆழினியோடு பார்த்ததும் கோபம் கொண்டார். யார் அவர்?


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8