அத்தியாயம் 13
செங்குட்டுவன் வைதீஸ்வரனின் வீட்டைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். புங்கைவனத்துக்குச் செல்லும் முன்னர் புகழ்வேந்தன் அவரது நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு பணித்துவிட்டு போயிருந்தான். எனவே கடந்த மூன்று வாரங்களாக அலுவலகப்பணியுடன் இதையும் செய்து வருகிறான் செங்குட்டுவன். வைதீஸ்வரனுக்கும் மீனாட்சியின் குடும்பத்திற்கும் நெருக்கமான ஒருவர் மீனாட்சியின் மரணத்துக்கு வைதீஸ்வரனும் தமயந்தியும்தான் காரணமென கூறியதால் இந்த கூடுதல் கவனிப்பு. செங்குட்டுவன் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் வைதீஸ்வரனுக்கும் ஆழினிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவனிடம் உடனுக்குடன் சொல்லிவிட்டார்கள். அதை வைதீஸ்வரனிடம் பகிர்ந்தவன் “ஆழினி மேடம் அங்க வந்துடுவாங்களோனு டென்சன்ல அந்தாளு ஊரை காலி செய்றதா சொல்லிருக்கிறார். உங்களை நெனைச்சு பயப்படுறதால மட்டும் இப்படி செய்யல சார். உண்மை தெரிஞ்சதுனால பயந்து ஓடுறார்னு தோணுது” என்றான். “அந்தாளு வீட்டு மதில் சுவரை தாண்டக்கூடாது. மீறி தாண்டுனா பொணமாதான் தாண்டனும்” இதுவே புகழ்வேந்தன் கொடுத்த கட்டளை. செங்குட்டுவனும் சில பவுன்சர்களோடு வந்து நின்றான்.